சிக்காத மனம்

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

திலகபாமா


தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய கண்களுக்குள் தெரிந்த இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில் இரு கண்கள் வந்து சிரித்து போனது. பல இடர்களை தாங்க வலிமை தந்த கண்களது.இதயங்களற்று இயந்திரமாகிப் போன மானிடர்கிடையில் என் இதயம் பூக்க செய்கின்ற கண்களது.இருக்கின்ற காதலை உணர்த்தமுடியாது, இல்லை உணர்த்தத் தேவையில்லை யென உணர்ந்தபடி போகிற அவசர உலகில் இன்னுமுமென்னை வருடிக் கொடுத்தபடி எனை சாகாமல் வைத்திருகின்ற கண்களது. பல நேரங்களில் அவள் வாழ்க்கை படகு காற்றைக் கிழித்துக் கொண்டு பயணப்பட தென்றலில் அசைந்து கொண்டிருந்த பாயது.

திரு விழாவிற்கு கட்டியிருந்த மைக்செட் அலறலில் அவள் மெளன மனம் விழித்துக் கொண்டது. அன்றும் இதே திருவிழா ஓலம்தான். அத்தை மகள் பாண்டிச் செல்வி என்கிற செல்வியும் இவளும் வருடம் ஒருமுறை பங்குனி மாத மாரியம்மன் திருவிழாவில் சந்திக்கிற சந்தோசங்களை சிந்தித்தபடி சிரிப்பும் பேச்சுமாக..

இன்றைய படிப்பு ,நாளைய வாழ்க்கை இப்படி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இருந்த கிராமத்து வாழ்க்கையில் இளமையே குளுமைதான். பெரியவர்கள் அறியாது கிசுகிசுத்தபடி மரக்கிளைகளில் ஆடும் சிட்டுக் குருவிகளாய் ஆடும் மனதுடன்.கடந்து செல்லும் ஒவ்வொரு பால்குடமோடு வாசல் வரை போய் பின் மச்சுக்குள் வந்து அடங்கினாலும் சிறகடித்து பறந்த மணங்களோடு மலரும் பூக்களாய்…..

பாட்டியின் 5 பிள்ளைகளின் குடும்பமும் சேர்ந்ததில் இருக்க படுக்க இடமில்லாது போன சின்ன பழங்காலத்து வீடு. ஆனால் எல்லோர் மனங்களும் விசாலமாய் இருந்ததனால் ஒருவரை ஒருவர் இடித்தபடி , ஆனால் புழுக்கமில்லாதுஇருந்த நேரம்.

எங்கள் சந்தோசம் காண மழை வந்தது. எங்கள் உள்ளங்களில் இருந்த பிரகாசம் கண்டு பொறாமையால் நின்று போனது மின்சாரம்.

கம்பி கேட்டு மட்டும் இழுத்து விட்டபடி பெண்கள் உள்ளேயும் ஆண்கள் வெளியேயும் படுத்தபடி பழங்கதைகள் அவரவர் வயதொத்தவர்களுடன் பேசியபடி

மழையில் நனைந்தபடி ஓடி வந்த உருவம் அவளையும் நனைத்துப் போடும் என்று அறியாது அவளும் செல்வியும் பள்ளிக்கதைகளும் ,கல்லூரிக்கதைகளுமாக….

உருவம் கண்டு தீக்குச்சி உரசி மெழுகுவர்த்தி பற்ற வைத்து அத்தை உயர்த்திப் பிடித்து என்ன தியாகு இந்நேரம் ? ‘ என கேட்க

‘காலேஜ் முடிஞ்சு கிளம்ப நேரம் ஆயிடுச்சு சித்தி, மழை வேற ‘

‘ சாப்பிட்டியா ? ‘

‘இல்லையே சித்தி ஒரே மழை எங்கேயும் இறங்க முடியலை ‘

படுத்திருந்த பெண்கள் தாண்டி வரமுடியாத நிலையில் சாப்பாடு பரிமாறல் வாசலிலேயே ஒரு ஸ்டூல் போட்டு

படுத்திருந்த தீபா, செல்வி தலைக்கு மேலே சாப்பாடு பாத்திரங்கள் பறந்தபடி பரிமாறப்பட்டு…

கேலி பேசி அழுத்துப்போயிருந்த இருவரும் வந்திருப்பது தீபாவிற்கு முறைப்பையன் என்றதும் மெல்ல செருகிக் கொண்டிருந்தகண்கள் பிரகாசமாக இருளில்ம் ஒளிர்ந்தது. கிசுகிசு பேச்சுக்கள் குலுங்கும் சில்லரை சிரிப்புகள்மீண்டும்…..

பேச்சிலிருந்து யார் எவர் என்று காதுகள் தீட்டியபடி கிரகித்துக் கொண்டனர், இதுவரை பார்த்திராத ஒரு தூரத்துச் சொந்தம், இருளில் இப்பொழுதும்காணமுடியாது தூங்கிப்போனார்கள்

காலை வேளையில் இரவு வெள்ளிகளைத் தொலைத்த வானமாய் இவர்களூம் நடந்தது மறந்தபடி வேலைகளில் ஆனால் புதிதாய் வானில் உதித்த பகலவனாய் அவன் எதிர் வந்த போது கூசும் கண்களுடன் நிலம் பார்த்தபடி மலர்ந்த தாமரையாய் அவள் ஏன் மாறினாள் ?

குதி போட்டபடி இருந்த அவளது நடை இப்பொழுது ஜதி போடும் நடனமங்கையின் பதிவுகளாய் ஏன் ஆனது ?எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்தியபடி இருந்த அவள் இப்பொழுது அவளை மறைத்துக் கொள்ள ஏன் இத்தனை பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறாள்சட்டென நிமிர்ந்து எதிராளியைப் பார்க்கும் அவளாது ஞானச் செருக் கொண்ட கண்கள் எதைத் தொலைத்தோமென தேடுகிற பாவனையில் தவிக்கிறதே ஏன் ?

24வருட வாழ்வில் 24 மணி நேரப்பொழுது சொற்பம் தான். ஆனால் அந்த 24 மணி அவளின் மிச்ச பொழுதுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டாதென்னவோ உண்மை

பேசிக் கொள்ள முடியாத உறவுகள் அவை,பார்வையில் பரிமாறியது எதை. தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் சந்தித்து சந்தித்து மீண்ட கண்கள் சாயங்காலக் கூடு திரும்பும் பறவையாய் அவரவர் வீடு திரும்ப எத்தனித்த போது சூழல்கள் மீறி நிலை குத்தி ஒன்றோடொன்று நின்றது இன்னமும் கண்களூக்குள்

திசை மாறி,இரை தேடி எத்தனை தூரம் கடந்தாலும் கூடவே வரும் கண்களாய் அவை எப்பொழுதும் அவள் துயர் துடைத்தபடி உயர் படிதனில் ஏற்றியபடி. சிரமங்கள் வரும் போது சிந்தனைக்குள் வந்து சிரித்து போகும் கண்களால் இவள் மனமும் சிரித்து விடும்.

பருவங்கள் மாறுகையில் பறந்து செல்லும் பறவையாய் பறந்தாலும் பயணத்தில் பின்னோக்கி செல்லும் மரமாய் இல்லாது , கூடவே வரும் நிலவாய் எட்டா தூரத்தில் எப்படி அந்தக் கண்களால் தொடர முடிகிறது

ஒவ்வொரு முறையும் இதழ் விரித்து மலராய் மலரும் எண்ணம் வரும் போதெல்லாம்,மணம் அறியாது காம்பொடிக்கப் படுகையிலும் ஆதரவாய்காயம் தடவும் அந்தக் கண்கள்….

சுரீர் சுரீர் என கொசுக்கடி தாங்காதுமுழித்துப்பார்க்கையில் அணைந்திருந்தது கொசுவர்த்தி சுருள்

கொசுக்கடிக்குப்பயந்து மேலே கிடந்த பிள்ளையின் கை நகர்த்தி எழுந்து, அலுப்பில் அயர்ந்திருந்த கணவன் குமாருக்கு போர்த்தி விட்டு கொசுவர்த்தி சுருள் பற்ற வைத்து படுக்கையில் விழுந்தாள்

அறையெங்கும் மூச்சு விட முடியாத நெடி. நெடி தாங்கச் சொல்லும் கொசுவின் கடி. திணறல்களோடு தூங்க மீண்டும் கண் மூடினாள் இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில்………..

Series Navigation