மு இராமனாதன்
அ.முத்துலிங்கம் எழுதிய ‘வியத்தலும் இலமே’ நூலை சில மாதங்களுக்கு முன்னால் சென்னைப் புத்தகக் கடையொன்றில் வாங்கினேன். கடையைச் சுற்றி நகரின் சில பிரதான இடங்கள் இருந்தன. ஒரு பிரிட்டிஷ் காலத்து காவல் நிலையம், ஒரு பல்லவர் காலத்துக் கோயில், ஒரு பாடல் பெற்ற சாலை (‘பீட்டர்ஸ் சாலை பெரிய சாலை’- இன்குலாப்). கடைக்கு ஒன்றுக்கு இரண்டாக கதவு இலக்கங்கள் இருந்தன- பழையதும் புதியதும். கடை முதல் மாடியில் இருந்தது. குறுகலான படிக்கட்டுகளின் முடிவில் ஒரு பக்கம் கடையும் இன்னொரு பக்கம் ஓர் அலுவலகமும். அலுவலகத்தின் முகப்பில் வரவேற்பில் இருந்த பெண்ணே கல்லாவையும் கவனித்தார். பில் போடும்போது என்னை அமரச் சொல்லி உபசரித்தார். பக்கத்து இருக்கையில் ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னிடத்தில் இருக்கும் நூலொன்றின் பின்னட்டையில் அவரது படத்தைப் பார்த்திருக்கிறேன். அந்த நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு. செறிவும் வடிவ நேர்த்தியும் மிக்க கதைகள். சில மாதங்களுக்கு முன்னால் அவர் நீண்ட கதையொன்றை எழுதியிருந்தார். ஒரு நடராஜர் கோயிலும் ஐந்து சினிமாக் கொட்டகைகளும் உள்ள சிறு நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் ஓவியத் துறை திறந்து மூடப்படுவதைச் சொல்லும் அந்தக் கதையை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்திருந்தேன். அவர் யாருக்காகவோ காத்திருப்பது மாதிரிப் பட்டது. அவரது கண்கள் பரபரவென்று சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. அவரிடத்தில் ஏதாவது பேசலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது பில் தயாராகிவிட்டது. இதே வேளையில் கதாசிரியரின் நண்பராக இருக்க வேண்டும், உள்ளேயிருந்து வந்தார். நான் நூல்களையும் பாக்கிப் பணத்தையும் பெறுவதற்குள் அவர்கள் படிக்கட்டுகளில் ஒரு பக்கமாகச் சாய்ந்தபடியே இறங்கிப் போய் விட்டிருந்தார்கள்.
அன்றிரவு முத்துலிங்கத்தின் நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஆங்கில எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு. இந்த எழுத்தாளர்கள் பிரபலமானவர்கள், எழுத்தை ஆராதிப்பவர்கள், ஆனால் காட்சிக்கு எளியவர்கள் அல்லர். இவர்களை முத்துலிங்கம் விரட்டிப் பிடித்து நேர்கண்டிருக்கிறார். எனக்குக் குறுகுறுத்தது. கைகுலுக்கும் தூரத்தில் இருந்த எழுத்தாளனிடத்தில் குசலம் விசாரிக்கும் பண்பு போலும் இல்லாத தமிழ் வாசகனல்லவா நான். நேர்காணல் ஓர் இலக்கிய வடிவாக விளங்கும் ஆங்கிலச் சூழலில் தொழில்படும் எழுத்தாளர்களுடன் உரையாடி அதைத் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் முத்துலிங்கம்.
Writers at Work என்பது ஆங்கில வாசகர்களுக்குப் பரிச்சயமான சொற்றொடர். வாசகர்கள், எழுத்தாளர்களின் இலக்கியக் கொள்கைகளையும் எழுதும் முறைகளையும் விரும்பிப் படிக்கிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் கொஞ்சம் விலகி நின்று பார்ப்பதற்கு ஏது செய்யும் நேர்காணல்கள், பத்திரிக்கைகளிலும் வானொலிகளிலும் தொலைக் காட்சிகளிலும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. Paris Review எனும் இதழ் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட நேர்காணல்களை வெளியிட்டிருக்கிறது. கதாசிரியர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் அன்னியில் அபுனைவுப் படைப்புகள் எழுதும் பத்தி எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள், விமர்சகர்கள், வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் போன்றோரின் நேர்காணல்களும் இதில் அடக்கம். அமெரிக்காவில் மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் படைப்பிலக்கியம் கற்பிக்கப்படுகிறது. இந்த வகுப்பறைகளில் எழுத்தாளர்களின் நேர்காணல்களும் விவாதிக்கப் படுகின்றன. இலக்கிய அமைப்புகள் நடத்தும் வாசிப்புக் கூட்டங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் தாம் எழுதியதிலிருந்து சில பகுதிகளை வாசித்தபின் வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட எழுத்தாளர்களைத்தான் முத்துலிங்கம் நேர்கண்டிருக்கிறார். கனடாவில் இருந்து இதுவரை ஒருவருக்கும் நோபல் பரிசு கிடைக்கவில்லை. அது கிடைக்குமானால் அதற்குத் தகுதியானவர்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிடுவது இரண்டு பெண் எழுத்தாளர்களை: மார்கிரட் அட்வூட் மற்றும் அலிஸ் மன்றோ. இருவரது நேர்காணல்களும் இத்தொகுப்பில் இருக்கின்றன. அமெரிக்காவின் டோபையாஸ் வூல்·ப் விருதுகள் பல வாங்கிக் குவித்தவர். இவரை ‘எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்’ என்று சொல்கிறார்கள். டேவிட் செடாரிஸ் கடந்த பத்து ஆண்டுகளில் உலகப் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர். இவரது நூல்கள் 28 மொழிகளில் பெயர்க்கப் பட்டிருக்கின்றன. 30 இலட்சம் பிரதிகள் ஆங்கிலத்தில் மட்டும் விற்பனையாகியுள்ளன. டேவிட் ஓவன் புகழ்பெற்ற இலக்கிய இதழான நியூயார்க்கரின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார். பிரபலமான கட்டுரையாசிரியர்.
ஆங்கிலத்தில் எழுதும் பிற மொழிக்காரர்களின் நேர்காணல்களும் நூலில் இருக்கின்றன. அமினாட்டா ·போர்னா ஆப்பிரிக்காவின் சியாரோ லியோனைச் சேர்ந்தவர். முகமது நஸீகு அலி ஆப்பிரிக்காவின் கானாவவைச் சேர்ந்தவர். முன்னவர் இங்கிலாந்திலும் பின்னவர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர். இருவரும் இளைஞர்கள். தத்தமது முதல் நூலிலேயே ஆங்கில வாசகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தவர்கள். டேவிட் பெஸ்மாஸ்கிஸ் முன்னாள் சோவியத் குடியரசின் லட்வியாவில் இருந்தும், ஷ்யாம் செல்வதுரை கொழும்பில் இருந்தும் கனடாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். மேரி ஆன் மோகன்ராஜும் இலங்கைத் தமிழ்ப் பெண். அமெரிக்காவில் குடியேறியவர். அகில் சர்மா எட்டு வயதில் இந்தியாவில் இருந்து தன் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர். இவர்களனைவரும் எழுத்துலகில் அழுத்தமாகத் தடம் பதித்தவர்கள், பதித்து வருபவர்கள்.
அறியப்பட்ட ஆங்கில எழுத்தாளர்களைச் சுற்றி ஒரு வெளிச்சம் பரவுகிறது. ஊடகங்களும் வாசகர்களும் அவர்களை மொய்க்கிறார்கள். இது தமிழ்ச் சூழலில் இருந்து பெரிதும் மாறுபட்டது. அசோகமித்திரனால் வேளச்சேரியின் சந்தடி மிக்க தெருமுனையில் டீ குடித்துவிட்டுப் போக முடியும். அவரைக் கடந்து போகிற பலருக்கும் அவர் 187 சிறுகதைகள், 7 நாவல்கள், 10 குறுநாவல்கள், 360 கட்டுரைகள், 4 மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் 3 அபுனைவு நூல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியாது. தெரிந்தவர்களும் பார்த்தவுடன் பரவசமடையப் போவதில்லை. கி.ராஜநாராயணனுக்கு ஒரு கடுதாசி எழுதிப்போட்டால் அவரே கைப்படப் பதில் எழுதக்கூடும். நாஞ்சில்நாடனைத் தொலைபேசியில் அழைத்தால், போனை எடுப்பது அவராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம். தமிழ் எழுத்தாளன் சாதாரண ஜீவி. ஆனால் அறியப்பட்ட ஆங்கில எழுத்தாளர்களின் நிலை வேறு. டேவிட் பெஸ்மாஸ்கிஸ் சொல்கிறார்: “சிறிது பிரபல்யம் கிடைத்துவிட்டால் போதும்; நிருபர்கள் பேட்டி கேட்டபடியே இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் அழைக்கிறார்கள். வாசகர்கள் கடிதம் போடுகிறார்கள். மின்னஞ்சல் முகவரியை எப்படியோ கண்டுபிடித்து மடல் அனுப்புகிறார்கள்.” எழுத்தாளனின் நேரம் அருமையானது. அமினாட்டா ·போர்னா, “என்னுடைய நேரத்தை ஒரு கருமி போல பாதுகாக்க வேண்டியிருக்கிறது” என்கிறார். ஆகவே எழுத்தாளர்கள் பலரும் தங்கள் முகவரி, மின்னஞ்சல் விலாசம், தொலைபேசி எண் போன்றவற்றை புதையலைப் பூதம் காப்பது போல காப்பாற்றுகிறார்கள். என்றாலும் முத்துலிங்கம் அசரவில்லை. சிலரது தொலைபேசி எண்கள் கிடைக்கின்றன. ஆனால் மறுமுனையில் எப்போதும் இயந்திரக் குரல். இவர் தொடர்ந்து தகவல்கள் விடுகிறார். எழுத்தாளர்களை நேர்காணும் விருப்பத்தைத் தெரிவித்து அவர்களது பதிப்பாளர்களுக்கும் ஏஜெண்டுகளுக்கும் எழுதிப் போடுகிறார். சிலர் படைப்பிலக்கியம் படிப்பிக்கிறார்கள். அந்தப் பல்கலைக் கழகங்களுக்கு எழுதுகிறார். சில எழுத்தாளர்களின் மனைவிமார்களைப் பிடித்து சிபாரிசு செய்யச் சொல்கிறார். சினிமா நடிகையை நிருபர்கள் துரத்துவது போல் துரத்துகிறார். இவருடைய விடாமுயற்சிக்கும் ஆர்வத்திற்கும் அவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
பாதுகாப்பு அரண்களைக் கடந்து உள்ளே போனால் இந்த எழுத்தாளர்கள் பலரும் எளிமையானவர்களாகவே தென்படுகிறார்கள். இவர்களின் அர்ப்பணிப்பு அபாரமானது. யாரும் தன்னால் போகிற போக்கில் எழுதிவிட முடியும் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. பல முறை திருத்தித் திருத்தி எழுதுவேன் என்கிறார் டேவிட் செடாரிஸ். “கடற்கரையிலே உருண்டு உருண்டு உண்டான கூழாங்கல்லைப் போல பல மணி நேர உழைப்பு ஒவ்வொரு வசனத்திலும் இருக்கிறது” என்கிறார் அவர். டேவிட் பெஸ்மாஸ்கிஸ், “மிகக் கடினமாக வேலை செய்துதான் எனக்குள் அடைபட்டிருக்கும் வார்த்தைகளை என்னால் மீட்க முடிகிறது” என்கிறார். டோபையாஸ் வூல்·ப் இதை வேறு விதமாகச் சொல்கிறார்: “நீங்கள் ஒரு வார்த்தைக்காகத் தேடி அலைகிறீர்கள். அப்படி ஒரு வார்த்தை இருப்பது உங்களுக்குத் தெரியும். அது என்னவென்று தெரிவதில்லை. அந்த வார்த்தை திடீரென்று தோன்றும் கணம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.”
முத்துலிங்கம் இந்த எழுத்தாளர்களிடத்தில் அவர்களது படைப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கிறார். இவரது நுட்பமான வாசிப்பு பலரை இளக்கி விடுகிறது. இன்னும் இவர்களது வாழ்க்கை குறித்தும், வசப்படுத்தியிருக்கும் படைப்புமொழி குறித்தும் கேட்கிறார்.
‘ஏன் எழுதுகிறீர்கள்’ என்பது முத்துலிங்கம் பலரிடமும் கேட்கும் இன்னொரு கேள்வி. எழுத்து தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாக நினைக்கிறார் ஷ்யாம் செல்வதுரை. எழுத்து தன் உயிருக்குச் சமானம் என்கிறார் அகில் சர்மா. அதில் உண்மை இருக்க வேண்டும். எழுத்திற்காகத் தனது மில்லியன் டாலர் வருமானமுள்ள வங்கி வேலையை உதறியவர் அவர். “28 ஆண்டுகளாக ஒரு நாளும் தவறாமல் எழுதுகிறேன். ஒரு பழக்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்கிறார் டேவிட் செடாரிஸ்.
ஆங்கில எழுத்தாளர்களிடத்தில் அவர்களது எழுதும் முறை, நடைமுறை ஒழுங்கு (routine) இவற்றைப் பற்றிக் கேட்பதும் ஒரு நேர்காணல் மரபு. எழுத்தாளர்கள் எழுதத் தேர்ந்தெடுக்கும் நேரம் என்ன? ஒரு படைப்பை எழுதி முடிக்க எத்தனை காலம் எடுக்கும்? எழுதும் நாற்காலியும் மேசையும் எப்படி இருந்தால் பிடிக்கும்? எப்படி எழுதுவார்கள்-பேனாவிலா பென்சிலிலா, இல்லை நேரடியாகக் கணினியிலா?-இன்னோரன்ன கேள்விகள். முத்துலிங்கமும் எழுதும் முறைகளைக் குறித்துக் கேட்கிறார். பகல் நேரங்களிலேயே எழுதுவதாகச் சொல்கிறார் அமினாட்டா ·போர்னா. இடையிடையே உலாத்தப் போவதாகவும் சொல்கிறார் அவர். டேவிட் பெஸ்மாஸ்கிஸிற்கும் காலை நேரமே உவப்பானது. மிக மெதுவாகத்தான் எழுத முடிகிறது என்கிறார். எனில் அதற்காக அவர் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. பலரும் குறிப்புப் புத்தகங்களைக் கொண்டு திரிகிறார்கள். திடீரென்று தோன்றும் வார்த்தையினையோ கருத்தையோ தவற விடாமல் இருப்பதற்கு.
ஒரு எழுத்தாளர் எழுதும் முறையினையோ, ஒழுங்கையோ, ஒழுங்கின்மையினையோ தெரிந்து கொள்வதால் வாசகனுக்கு என்ன பலன்? ஆரம்ப எழுத்தாளன் இதிலிருந்து கற்றுக் கொள்ள என்ன உண்டு? ஒவ்வொருவரது எழுதும் முறையும் அவர்களுக்கானது. அதை அவரவரே கண்டுணர வேண்டும். என்றாலும் அபிமான/அறியப்பட்ட எழுத்தாளரின் எழுதும் முறைகளை அறிந்து கொள்வது சுவாரஸ்யமானது. மேலும் அது எழுத்திற்குப் பின்னால் உள்ள உழைப்பையும் படைப்பு உருவாக்க மனத்தையும் புழுதி படிந்த சித்திரம் போல் அறியத் தருகிறது. தமிழ் நேர்காணல்களில் ஏனோ எழுதும் முறைகள் குறித்துக் கேட்கப்படுவதாகத் தெரியவில்லை.
தமிழில் கடந்த இரண்டு தசாப்தங்களில் பொருட்படுத்தத்தக்க நேர்காணல்கள் இலக்கிய இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. தமிழ் எழுத்தாளர்களின் நேர்காணல்களும் இதில் அடக்கம். அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் இலக்கியக் கோட்பாடுகளும் உரையாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன. எனில் நான் வாசித்து எனக்கு நினைவிருக்கிற வரையில் அவர்களின் எழுதும் முறைகளைப் பேட்டியாளர்கள் கேட்பதில்லை. கந்தனின் ஒரு நாள் வாழ்க்கையை எழுத ஜி.நாகராஜனுக்கு எத்தனை நாள்கள் வேண்டி வந்திருக்கும்? இதை அவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருப்பாரா அல்லது வெள்ளைத் தாளில் எழுதியிருப்பாரா? யமுனா ‘இதுக்குத்தானா?’ என்று கேட்பது தி.ஜானகிராமனுக்கு எழுதும்போதே மின்னலடித்தது போல் பட்டுத் தெறித்திருக்குமா அல்லது அந்தக் கேள்வியை அவர் பல நாள் அடைகாத்திருப்பாரா? எப்படியாகிலும் இதை அவர் ·பவுண்டன் பேனாவில்தான் எழுதியிருக்க வேண்டும். என்றால், ஜே.ஜே-யின் மொழியை வேட்டை நாயின் கால் தடத்தோடு ஒப்பிடுகிறாரே சுந்தர ராமசாமி, அதை ·பவுண்டன் பேனாவில் எழுதியிருப்பாரா?, பால் பாயிண்ட் பேனாவில் எழுதியிருப்பாரா? எழுத்தாளனை மதிக்கும் சமூகந்தான் அவன் எழுதும் முறைகளைக் குறித்தும் அக்கறை காட்டுமோ?
முத்துலிங்கத்தின் நேர்காணல்கள் ஆங்கிலத்தில்தான் நிறைவேற்றப்பட்டவை. ஆனால் தமிழ் வாசகனுக்காகவே நடத்தப்பட்டவை. முத்துலிங்கத்தின் மொழி எந்த இடத்திலும் தமிழ் வாசகனுக்கு அந்நியப்பட்டு நிற்கவில்லை. அது தமிழ் பண்பாட்டையும் உள்வாங்கி நிற்கிறது. நாடக நெறியாளர் டீன் கில்மோர் என்பவருடன் மேடை உபகரணங்களைக் குறித்துப் பேசுகிறார் முத்துலிங்கம். கதையை வெளிக் கொண்டு வரும் கருவியாகவே உபகரணங்களைப் பார்க்கிறார் கில்மோர். அவர் சொல்கிறார்: “கதை மாறுவதே இல்லை. அது அங்கே சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது”. சம்மணமிட்டு உட்காரும் வழமை இல்லாத கில்மோர் இதை வேறு வார்த்தைகளில்தான் சொல்லியிருக்க வேண்டும். முத்துலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் அது தமிழ் பண்பாட்டின் வழி வாசகனை வந்தடைகிறது. மார்கிரட் அட்வூட் தனது நேர்காணலில் ஹோமரின் ஒடிசி காவியத்திலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டுகிறார். பிறிதொரு நேர்காணலில் ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவரான எலிஸபெத் கேரி என்பவரின் நாடகத்திலிருந்து சில வரிகள் வருகின்றன. இந்த வரிகளை எல்லாம் முத்துலிங்கம் தமிழ் படுத்தியே தருகிறார்.
இந்த நேர்காணல் கட்டுரைகளின் இன்னொரு சிறப்பம்சம் இவற்றின் கட்டுமானம். பெரும்பாலான நேர்காணல்கள் சம்பிரதாயமான கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கிறது. என்றாலும் ஆசிரியர் கூற்றாக எழுத்தாளரையும் அவரது படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிற முன்னுரையும், நேர்காணல் அனுபவத்தை உள்ளடக்கிய முடிவுரையும் இடம் பெறுகின்றன. கேள்வி-பதில் எனும் இறுக்கமான வடிவத்திற்கு வெளியேயும் பேசுவதற்கு இது வழி செய்கிறது. இளைஞரான டேவிட் பெஸ்மாஸ்கிஸின் நேர்காணல் துவங்கும் முன்பு அவரது உடையையும் சிநேக பாவத்தையும் குறித்து சொல்லிச் செல்லும் ஆசிரியர், அவரிடத்தில் மூத்தவர்களை மதிக்கும் பண்பு இருக்கிறது என்றும் சொல்கிறார். நேர்காணலின் போது புலம்பெயர் வாழ்க்கையில் அவரது பெற்றோர்கள் அனுபவித்த இன்னல்கள், அதற்கிடையிலேயும் அவர்கள் காட்டிய அன்பு, அதை வெளிப்படுத்தும் அவரது எழுத்து ஆகியவை குறித்து பெஸ்மாஸ்கிஸ் பேசும்போது முன்சொன்ன முகவுரை வாசகனுக்கு உதவுகிறது. இதைப் போலவே டோபையாஸ் வூல்·பின் அறிமுகவுரையில் வரும், ‘பேசுவதற்கு நட்பாகவும் மரியாதையுடன் கூடிய கண்டிப்புடனும் இருந்தார்’ எனும் வரி பிற்பாடு அவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு வாசகனைத் தயார்ப் படுத்துகிறது.
முன்னுரைகளைப் போலவே முடிவுரைகளும் அலாதியான வாசக அனுபவத்தை நல்குகின்றன. டேவிட் செடாரிஸின் நேர்காணல் ஓர் எடுத்துக்காட்டு. நேர்காணல் முடிந்ததும் டேவிட்டுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது. அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் சிகரெட் பிடிக்க முடியாது. அவர் முத்துலிங்கத்துடன் வெளியே வருகிறார். அடுத்த நேர்காணலுக்காக ஓர் இளம்பெண் வந்திருக்கிறாள். ‘தன்னிடம் இருந்த சிரிப்பில் ஒரு பெரிய சிரிப்பை எடுத்துச் சொண்டிலே வைத்துக்கொண்டு அவள் உள்ளே டேவிட்டுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்’. அப்போது கலைந்த தலைமுடியும் கிழிந்த காலணியும் அணிந்த ஒரு ரோட்டோரப் பெண் டேவிட்டிடம் நேராக வந்து ஒரு சிகரெட் கேட்கிறாள். முத்துலிங்கம் தொடர்ந்து சொல்கிறார்:
‘டேவிட் பேசுவதை நிறுத்தவில்லை. திரும்பி அவளைப் பார்க்கக்கூட இல்லை. கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டார். அவர் பையில் ஒரேவொரு சிகரெட்தான் இருந்தது. அதை எடுத்துக் கொடுத்தார். அந்தப் பெண் வாய் திறக்காமல் நெருப்புக்காக நின்றாள்.அதையும் பற்ற வைத்தார். ஆனால் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த விவகாரம் ஒவ்வொரு நாளும் நடப்பதுபோலச் சாதரணமாக நடந்து முடிந்தது. அவள் நன்றி என்னும் வார்த்தையை வெளியேவிடாமல் பத்திரப்படுத்தியபடியே திரும்பினாள்.
நானும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அவர் அடுத்த பேட்டிக்குத் தயாரானார். எனக்கு முன்னால் அந்தப் பெண் போய்க் கொண்டிருந்தாள். தலைக்கு மேல் புகை வட்டம் குடைபோலப் போனது. அவள் நடையில் ஒரு துள்ளல் இருந்தது.’
இந்தக் காட்சியில் இரண்டு பெண்கள் வருகிறார்கள். முன்னவள் ஒரு சிரிப்பை எடுத்து உதட்டிலே வைத்துக் கொள்கிறாள். அந்தச் சிரிப்பு அவள் உள்ளுக்குள்ளேயிருந்து வருவதில்லை. வெளியேயிருந்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். பின்னவள் நன்றி என்னும் வார்த்தையை வெளியே விடுவதில்லை. அதானாலென்ன? அது அவள் உள்ளேயிருக்கிறது. அவள் வெளிப்படுத்துவதில்லை. அவளுடைய நடையில் ஒரு துள்ளல் இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறார். அந்தத் துள்ளல் ஆசிரியரையும் தொற்றியிருப்பதாகத் தோன்றுகிறது. டேவிட் அந்தப் பெண்ணிற்கு நெருப்போடு துள்ளலையும், முத்துலிங்கத்திற்கு இலக்கியத்தோடு உற்சாகத்தையும் பற்ற வைத்திருக்க வேண்டும். அலிஸ் மன்றோ தனது நேர்காணலில், ‘ஒரு படைப்பில் உள்ள வசனம் சொல்லுவது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்க வேண்டும்’ என்கிறார். முத்துலிங்கத்தின் வசனங்கள் அதைச் செய்கின்றன. இதனால் நேர்காணல்க் கட்டுரைகளே ஒரு படைப்பாக இலக்கியமாக மாறி விடுகின்றன.
‘வியத்தலும் இலமே’ எனும் தலைப்பு நூலில் இடம்பெறும் எழுத்தாளர்கள் அனைவரும் மாட்சியிற் பெரியோர் என்பதையும் தெரிவிக்கிறது. எழுத்தாளர்கள் அல்லாத சிலரின் நேர்காணல்களும் நூலில் இடம் பெறுகின்றன. ஒரு பறவையியல் விஞ்ஞானி, ஒரு மாரத்தான் ஓட்ட வீராங்கனை. கலி·போர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்டின் நேர்காணலும் இருக்கிறது. இவர்களும் மாட்சியிற் பெரியோர்தாம். இவர்களின் நேர்காணல்களும் காத்திரமானவைதாம். ஆனால் முழுத் தொகுப்பையும் எழுத்தாளர்களை மையப்படுத்தி உருவாக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அப்போது பதிப்பிற்கும் ஒரு சிறப்பான நோக்கமும் திசை வழியும் வாய்த்திருக்கும். இந்தத் தொகுப்பு தமிழுக்கு வாராது போல் வந்திருக்கும் மாமணி. இப்படியான நூல்களை முத்துலிங்கம் போன்றவர்களாலேயே தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்க முடியும். அதனாலேயே எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.
சென்னைப் புத்தகக் கடையில் இந்நூலின் இரண்டு பிரதிகள் வாங்கினேன். தமிழ் நூல்கள் வாங்க முடியாத ஊரில் வசிக்கும் நண்பருக்கும் சேர்த்து. அவர் நூலை வாசித்துவிட்டு கூச்சமாக இருப்பதாக எழுதி இருந்தார். இப்பேர்ப்பட்ட எழுத்தாளர்கள் பலரை வாசித்ததில்லையே என்கிற கூச்சம். நான் அக்மார்க் தமிழ் வாசகன். எனக்குக் கூச்சம் ஒன்றும் இல்லை. என்றாலும் இந்த எழுத்தாளர்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. நூலகத்திலிருந்து அலிஸ் மன்றோ, மார்கிரட் அட்வூட், டேவிட் செடாரிஸ் ஆகியோர் எழுதிய தலா இரண்டு நூல்களை இரவல் வாங்கியிருக்கிறேன். ஹாங்காங் நூல் நிலையங்களில் ஒருவர் ஆறு புத்தகங்கள் வரை எடுக்கலாம். இரண்டு வாரம் கெடு. அதற்குள் இணைய வழியாகவோ நேராகவோ நீட்டித்துக் கொள்ளலாம்-ஆறு முறை. பன்னிரெண்டு வாரங்களுக்குள் சில படைப்புகளையேனும் நான் வாசிக்கக்கூடும். பிற்பாடு சில நூல்களை நான் வாங்கவும் கூடும். புதிய சாளரங்கள் வழி புதிய காற்று என்னை வருடக்கூடும்.
‘வியத்தலும் இலமே’ என்னுள் இன்னொரு மாற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது. முத்துலிங்கம் வெகு தொலைவில் வசிக்கிறார். என்றாலும் எப்போதேனும் நான் அவரைச் சந்திக்கக் கூடும். அப்போது நான் அவரிடத்தில் பேசுவேன். “ஐயா, ஆங்கில எழுத்தாளர்களை ஒரு வாசகனாகப் படித்து, ஒரு ரசிகனாக வியந்து, ஒரு விமர்சகனாக நுணுகி ஆராய்ந்து, ஒரு நிருபராகப் பேட்டி கண்டு, ஒரு மொழிபெயர்ப்பாளனாய் உரையாடலைத் தமிழ்ப் படுத்தி, கடைசியாக ஒரு படைப்பாளியாய்த் தொகுத்துக் கட்டுரையாக்கி வழங்குகிறீர்கள்” என்று கோர்வையாக என்னால் அப்போது பேச முடியாமல் போகலாம். “ஐயா, நான் உங்கள் வாசகன்” என்று மட்டுமாவது சொல்லுவேன்.
“வியத்தலும் இலமே”(நேர்காணல்கள்)
அ. முத்துலிங்கம்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001
முதல் பதிப்பு: டிசம்பர் 2006
பக் 237, விலை ரூ.125
(இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் தீராநதி செப்டம்பர் 2007 இதழில் வெளியானது)
மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com
இணையதளம்: http://www.muramanathan.com/
- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- எங்கள் தேசப்பிதாவே
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- தைலம்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- எழுத்துப் பட்டறை
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- பூகம்பம்
- தமிழர் திருமகன் இராமன்
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- தீபாவளி
- கவிதைகள்
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- கவிதை
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீரால் அமையும்
- பொற்கொடியும் பார்ப்பாள்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- அவருடைய புகழுக்குப் பின்னால்