சாயங்கால அறை

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ஹெச்.ஜி.ரசூல்ஒரு துளி சந்தோசத்தின் சிறகுதிர்த்த

நிலவொளியின் சாயல் பதிந்த உருவம்

எதையெதையோ தினம் சொல்லும்

மாயக் கனவின் விளிம்போரம் துளிர்த்த

மழைச் சாரல் சிதறல் தவம் கலைக்கும்.

யானைப்படை குதிரைப் படைகளென

குளம்படிசப்தங்களில் சிதைந்துபோன

வரலாறின் நெடுநாளைய வரிகளெங்கும்

கசங்கிய மனங்களின் கருகல்வாசம்

மழையும் மண்ணும் கதிர்மணிகளும்

நட்சத்திரங்களோடு கண்சிமிட்டிப் பேச

விசித்திரம் விரிந்து முத்தமிடும்.

உடைபடா மெளனம் சூடிய சொற்கள்

குழந்தையின் புழுதிபடர்ந்த உடலாகி

மண்ணில் உருண்டு புரண்டெழும்

வெற்றுப் பாளைகளிலும் பூத்து ஒளிந்திருக்கும்

கமுகம் பூக்கள்

கிணற்றோரங்களில் கிழிபட்டு

கயிற்றின் முடிச்சுகளில் தொங்கி

நீரிறைக்கும் பட்டைகளின்

சின்ன சின்ன தியாகங்களை

காற்றில் எழுதிச் செல்லும்.

குஞ்சுப் புறாக்களுக்கு சிறகு பொருத்தி

அழகுபார்த்த தாய்ப் பறவையின் மடியில்

ஒரு கூட்டம் புறாக்கள்.

ரோஜா பிச்சி முல்லைகளை முகர்ந்து பார்க்க

மீண்டும் கூடும் பரவசம்

சாயங்கால அறைகளில் இனி நாளையும்

மூக்கு வியர்க்கவும் இமைமயங்கவும்

திரும்பத் திரும்ப பேசவேண்டும்

mylanchirazool@yahoo.co.in

Series Navigation