சாத்தானாகிவிடும் சாத்தானின் வழக்குரைஞர்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

மலர்மன்னன்



ஊடகச் செய்தியாளர் கரன் தாப்பர் ஒரு குறிப்பிட்ட தொலைக் காட்சி அலைவரிசையில் பிரபலமானவர்களிடம் தாம் மேற்கொள்ளும் நேர் காணலுக்குச் சாத்தானின் வழக்குரைஞர் என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமது நேர் காணல்களின்போது தம் கட்சிக்காரரான சாத்தானாகவே மாறிவிடுவதுதான் அவரது வழக்கம். நான் அவரை இவ்வாறு விமர்சிப்பது அவருடைய கவனத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே ஏறத்தாழ இக்கட்டுரையினைப் பிரதிபலிக்கும் கட்டுரையொன்றை ஆங்கில வார இதழான ஆர்கனைசருக்கு எழுதியிருக்கிறேன். என்ன செய்வது, பிரபல இதழ்கள்தான் என்னைச் சீந்துவதேயில்லையே! எப்படியும் ஆர்கனைசரில் வெளியாகும் எனது கட்டுரை அவரது கவனத்திற்குப் போய்விடும்; தமது பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்கிற தம்முடைய அகம்பாவம் தவறானது என்கிற விவரமாவது அவருக்குத் தெரிய வரலாம்!

கரன் தாப்பரின் வாய்த் துடுக்குக்கு ஒரு வரலாறே உண்டு. அது மன நோய் சம்பந்தமானது. இந்த வகையில் கரன் நமது அனுதாபத்திற்கு உரியவர்தாம் என்பதில் சந்தேகமில்லை. தாம் நேர்காணும் எவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தவறிழைத்தவர்களாகவோ குற்றவாளிகளாகவோதான் இருப்பார்கள் என்கிற நிச்சயத்துடன்தான் அவர் கேள்விகளைக் கேட்பார். கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுத் தமது சொற்களை எதிராளியின் வாயில் இட்டு அவரிடமிருந்து பதில் வருவது போன்ற உணர்வைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவார். தொழில் தர்மத்திற்கு முற்றிலும் விரோதமான அவரது போக்கை மூத்த பத்திரிகையாளர்கள் நேரிலும், ஆசிரியருக்குக் கடிதம், தனிக் கட்டுரை ஆகியவற்றின் மூலமாகவும் அறிவுறுத்திய போதிலும் கரன் இன்னும் தமது சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு தேர்ந்த உளவியல் மருத்துவரிடம் பலமுறை சென்று சிகிச்சை செய்துகொண்டாலொழிய அது மாறும் என்று தோன்றவில்லை.

தங்கள் புத்தகம் விரைவாகவும் அதிக அளவிலும் விற்றுத் தீர வேண்டும் என்பதற்காகப் பரபரப்பான தகவல் எதையேனும் வெளியிடும் சுய சரிதை எழுத்தாளர்கள் சிலர் உண்டல்லவா? பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கோஹர் அயூப் அத்தகையவர்களுள் ஒருவர். இவர் பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி அயூப்கானின் மகன். ஹிந்துஸ்தானத்தின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் நமது ராணுவ ரகசிய ஆவணங்களைப் பாகிஸ்தான் அரசுக்குக் கேவலம் இருபதினாயிரம் ரூபாய்க்கு விற்று வந்ததாகத் தம் தந்தை தம்மிடம் தெரிவித்தார் என்று தாம் எழுதிய சுய சரிதையில் கோஹர் குறிப்பிட்டிருந்தார். போர் நடவடிக்கை சம்பந்தமான பாரத ராணுவ ஆவணங்கள் நேருவின் மேஜைக்குப் போவதற்கு முன் தமது மேஜைக்கு வந்துவிடும் என்று அவருடைய தந்தை ஜெனரல் அயூப் கான் பெருமைப் பட்டுக்கொள்வாராம்!

பின்னர் ஒருமுறை இந்த கோஹர் அயூபை நேர் கண்ட நமது சாத்தானின் வழக்குரைஞர், சிறிதளவும் கூசாமல், கோஹர் குறிப்பிடும் அந்த ஹிந்துஸ்தானத்து ராணுவ உயர் அதிகாரி ஸாம் மானேக் ஷாதானா என்று கேட்டார். கோஹர் அதை உறுதி செய்யவில்லை. மிகவும் சங்கடத்துடன் பதில் கூறுவதைத் தவிர்த்தார். ஆனால் கரன் திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருந்தார். அது ஒரு பிரிகேடியர் நிலையில் இருந்த அதிகாரி, என்றார் கோஹர். கரன் விடவில்லை. மானேக் ஷா தானே அது? அவர்தான், இல்லையா என்று விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தார். சலித்துப் போன கோஹர் அயூப், அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அவர் பெயரை நீங்கள்தான் சொல்கிறீர்கள், நான் அல்ல, என்று முடித்துக் கொண்டார். கரன் தாப்பர் தமது கடமை நிறைவேறிவிட்ட திருப்தியுடன் அடுத்த கேள்விக்குச் சென்றார்.

மானேக் ஷா தமது தலை சிறந்த ராணுவ சேவைக்காக ஃபீல்டு மார்ஷல் என்கிற அதி உன்னத விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டவர். 1965, 1971 போர்களில் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தியவர். அப்படிப்பட்டவர் மீது கரன் தாப்பர் ஒரு சிறிதும் நியாயமின்றி சேற்றைவாரி இறைத்தது கண்டு மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் மிகவும் மனம் வருந்தினார்.

தமது வேதனையைப் புலப்படுத்தி, கரன் தாப்பர் தனிப்பட்ட முறையில் மானேக் ஷா வுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதித் தமது தவறுக்குக் கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும் என்று எழுதினார்.

குல்தீப் நய்யார் கரன் செயலுக்கு வருந்தி அறிவுரையும் கூறிய கட்டுரை சண்டீகரிலிருந்து வெளிவரும் தி ட்ரிப்யூன் நாளிதழின் மே மாதம் 21 தேதி இதழில் வெளியாகியது. அடிபட்ட விலங்கு தாக்குவதற்காகத் திரும்பத் திரும்பப் பாய்ந்து வருவது போல மானேக் ஷாதானே அந்த அதிகாரி என்று கோஹரிடம் மீண்டும் மீண்டும் கரன் தாப்பர் கேட்டுக் கொண்டே
யிருந்தார். கோஹர் அதனை மறுத்தும் கரன் விடவில்லை. கடைசியில் அவர் பெயரை நீங்கள்தான் சொல்கிறீர்கள், நான் அல்ல என்று சொல்லி கோஹர் பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டியதயிற்று என்று எழுதும் குல்தீப் நய்யார், கரன் தாப்பரின் இந்தப் போக்கிற்கு ஒரு காரணமும் கண்டுபிடித்துச் சொல்கிறார்.

கரன் தாப்பரின் தந்தை ஜெனரல் பி.என். தாப்பர் 1962 சீன ஆக்கிரமிப்பின் போது ஹிந்துஸ்தானத்து ராணுவத்தின் தளபதியாக இருந்தவர். நமது ராணுவம் அப்போது அடைந்த படு தோல்விக்கு அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரதமர் நேருதான் அவர் மீது எல்லாக் குற்றங்களையும் சுமத்தினார். அப்போது ராணுவ அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன், பி. என். தாப்பரின் முகத்தைப் பார்க்கவும் மறுத்துவிட்டார். அந்தப் பல்லில்லாத கிழவனை விரட்டு என்றார். அவமானப்பட்டுத் தலை குனிந்த பி. என். தாப்பர் மனமுடைந்து வெளியேறினார்.

தந்தையின் மானக் கேட்டைப் பார்த்து மனம் பொருமிய சிறுவன் கரன் தாப்பர், அதன் காரணமாகவே அனைவர் மீதும் குற்றங்கண்டு அவர்களின் மனம் புண்படுவதைப் பார்த்து குரூர மகிழ்ச்சியடையும் உளவியல் நோய்க்கு ஆளாகியிருக்க வேண்டும் என்று குல்தீப் நய்யார் கருதுகிறார். ஆதாரம் ஏதுமின்றியே, மானேக் ஷாதான் தம் தந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிற அபிப்பிராயத்தையும் ஒருவேளை கரன் இளம் வயது முதல் மனதில் பதிய வைத்துக்கொண்டு வந்திருக்கக் கூடும் என்றும் நய்யார் ஐயம் தெரிவித்திருக்கிறார். இக்கட்டுரை வெளிவந்த தி ட்ரிப்யூன் இதழை வெகு எளிதாகவே வலையில் கண்டுபிடித்துவிடலாம். நீ எழுதுவதற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்பவர்கள், பின் வரும் தொடர்பிற்குச் சென்று, ஓப்பன் எட் என்பதன் கீழே நய்யாரின் கட்டுரையைப் படிக்கலாம்:

http://www.tribuneindia.com/2007/20070521/edit.htm#6

ஹிந்துத்துவ அமைப்புகள் மீது வெறுப்பை உமிழ்வதில் குல்தீப் நய்யாரும் எவருக்கும் சளைத்தவரல்ல. ஆகவே கரன் மீது அவர் கண்டுபிடித்துச் சொல்லும் குறைபாட்டிற்கு உள்நோக்கம் எதுவும் கற்பித்துவிட இயலாதுதான்.

தந்தைக்கு ஏற்பட்ட அவமானம் கண்டு அதற்குப் பழி தீர்த்துக் கொள்வதுபோல மற்றவர்களை அவமானப்படுத்துவதில் மனநிறைவு காணும் போக்கு மகன் கரன் தாப்பரிடம் தொடர்கிறது. தீவிர சிகிச்சை பெற்றாலன்றி அது மறைய வழியில்லை.


Series Navigation