சாதி என்னும் சாபக்கேடு

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

இஃபத் மாலிக் (பாகிஸ்தானிய ‘தி நியூஸ் ‘ பத்திரிக்கையிலிருந்து)


Iffat.Malik@dfat.gov.au

டர்பனில் நடக்கும் இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில், உலகப் பார்வைக்கு வராமல் ‘பர்தா ‘ இடப்பட்ட ஒரு பாரபட்சமான முறை வைக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 25 கோடி மக்களை பாதிக்கும் விஷயம்.. இது ஒரு மனிதர் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் நிர்ணயிக்கும் ஒரு முறை. இந்த ‘மறைமுக இனப்பிரிப்பு ‘ (Apartheid) முறைக்குப் பெயர் ‘சாதி ‘.

சாதி முறையைப் பற்றிய எந்த விவாதமும் இந்தியாவிலிருந்துதான் தொடங்கவேண்டும். இங்கு 3500 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய இந்த முறை இன்று பரந்த அளவில் இருக்கிறது. இந்தியாவில் சுமார் 16 கோடி தலித்துகள் இருக்கிறார்கள். இவர்கள் சாதி முறையின் அடித்தளத்தில் இருக்கிறார்கள். இவர்கள் மீது தடைகளும், விலக்குகளும், கொடுமைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதிலும் மோசமான நிலையில் இருப்பவர்கள் , வட இந்தியாவின் கிராமங்களில் , முக்கியமாக பிகாரில் வாழ்கிறார்கள்.

ஒரு சாதாரண தலித் குழந்தை, மோசமான நிலையில் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே வாழ்வின் தவறான பாதையில் தொடங்குகிறார்கள். தலித்துகளுக்கு பெரும்பாலும் கிராமத்துக்குள் வாழ அனுமதி கிடையாது. தலித் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியாது. அப்படியே சென்றாலும், அவர்கள் தரையிலேயே உட்கார வேண்டும். உயர்சாதிக் குழந்தைகள் உபயோகிக்கும் பாத்திரங்களையோ, குடிதண்ணீர்க் குழாய்களையோ உபயோகப்படுத்த முடியாது. அவர்கள் எங்கு சென்றாலும் இந்த பாரபட்சம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

பெரும்பாலான தலித்துகள் சரியாக படிப்பு முடிக்க முடியாமல், தங்களது தந்தை தாய் தொழிலைப் பின்பற்றி சமூகத்தின் இழிந்த தொழில்களை கையிலெடுத்துக்கொள்கிறார்கள். தெருக்களைச் சுத்தமாக வைத்திருப்பது, சாக்கடைகள் சுத்தம் செய்வது, இறந்தவர்களை எரிப்பது போன்றவை. இதையும் தாண்டி அவர்கள் இமாலய முயற்சி எடுத்து , நல்ல படியாய்ப் படித்து முடித்தாலோ, வேலை கொடுப்பவர்களால் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள். அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும், தலித்துகளை வேலைக்கு வைத்துக்கொள்ளத் தயங்குகின்றன.

வேலை கிடைத்தாலும், அவர்கள் தங்களது மேலதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உயர்சாதி வன்முறைக்கும் ஆளாகிறார்கள். இதிலும் மோசமானது தலித் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை. பூலான் தேவியின் சரிதம் , பாலியல் வன்முறைக்கு பலரால் ஆளானதைச் சொல்கிறது. பத்தாயிரக்கணக்கான பூலான் தேவிகள் இன்றும் இந்தியாவில் பாலியல்வன்முறைக்கு ஆளாகிறார்கள். நீதி கிடைப்பது இன்னும் கடினமானது. போலீஸ் பெரும்பாலும் உயர்சாதியினருக்குப் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ஒரு தலித் தான் தலித் என்பதை என்றும் மறக்கும் படிக்கு சமூகம் விடுவதில்லை. குஜராத்தில் நடந்த பெரும் பூகம்பத்தின் பின்னர், சமூகங்கள் இணைந்து மறுகட்டுமானம் செய்தார்கள் என்று நாம் நினைத்திருக்கலாம். ஆனால், இங்கும், தலித்துகளுக்கு, அவசர உதவியும், ஏன் தண்ணீரும் கூட மறுக்கப்பட்டன.

தலித்துக்களை சாதி அவர்களின் வாழ்நாளெல்லாம் துரத்துகிறது. அவர்களால் அதனை உதறிவிட்டுப் போகமுடியாது. சிலர் வேறு சில மதங்களுக்கு மதம் மாறி சாதிக்கொடுமையிலிருந்து தப்ப முயன்றார்கள். அம்பேத்கார் புத்தமதத்துக்குச் சென்றார். இதில் அவலம் என்னவென்றால், இஸ்லாம், புத்தமதம், கிரிஸ்தவ மதத்திலும், அங்குள்ளவர்கள் இவர்களது கீழ்சாதி காரணமாக கீழ்த்தரமாகவே நடத்துகிறார்கள். சாதி முறை இந்து மதம் தாண்டி இந்திய சமூகம் எங்கும் பரவிக்கிடக்கிறது.

கடந்த நூற்றாண்டில், கென்யா, உகாண்டா, அமெரிக்கா, கானடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு தலித்துகளும் மற்றவர்களைப் போலவே சென்றார்கள். இந்தியாவில் இருக்கும் பல ஜாதி பாரபட்சங்களைத் தாண்டினாலும், மன ரீதியான தடைகள் இன்னும் இருக்கின்றன. இரண்டாம் மூன்றாம் தலைமுறை இந்தியர்கள் இன்னும் சாதி பார்த்தே திருமணம் செய்கிறார்கள். ஒரு தலித் மிகச்சிறந்த இருதய நோய் சிகித்சை நிபுணராக நியூயார்க்கில் இருந்தாலும், அவருக்கு பிராம்மணப் பெண் திருமணம் செய்யக்கிடைக்காது.

பாகிஸ்தானில் இந்தப் பிற்போக்கு முறை இல்லை என்று நாம் நினைக்கும் முன்னர், ‘மனித உரிமைகள் கண்காணிப்பு ‘(Human Rights Watch report) அறிக்கை ஒன்றை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்த அறிக்கை சாதிக்கொடுமை இருக்கும் தேசங்களில் ஒன்றாக பாகிஸ்தானையும் இணைத்திருக்கிறது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் நடத்தப்படுவதற்கும், இந்தியாவில் தலித்துகள் நடத்தப்படுவதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா ? தெருக்களைச் சுத்தம் செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள் எல்லோருமே கிரிஸ்தவர்களாக இருக்கிறார்கள் பாகிஸ்தானில். ‘சுத்தமான ‘ முஸ்லீம் வீடுகளில் இவர்களை எந்தப் பாத்திரங்களையும் தொட அனுமதிக்க மாட்டார்கள். நாம் பீகாரின் தலித்துகளை கொடுமை செய்வதுபோல செய்யவில்லை என்றாலும் நம்மிடம் தெய்வ நிந்தனை சட்டங்கள் (blasphemy laws) இருக்கின்றன. இந்த சட்டங்களும் , மற்ற எவரையும் விட, அப்பாவி கிறுஸ்துவர்களையே குறி வைக்கிறது. பல கிரிஸ்தவர்கள் எந்தவிதமான சாட்சியமும் இல்லாமல் ஜெயிலில் வாடுகிறார்கள்.

ஒரு உருது சிறுகதையில், முக்கிய பாத்திரம் மருத்துவமனையில் இருக்கும்போது, ஒரு கிரிஸ்தவ நர்ஸ்சுடன் காதல் கொள்கிறான். நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் வற்புறுத்தலால், அந்தக் காதலை மறக்கிறான். ஆனால், அவன் ஒரு வெள்ளைக்கார கிரிஸ்தவப் பெண்ணை மணம் செய்யும்போது, அதே குடும்பத்தாரும், நண்பர்களும், அவனைப் பாராட்டுகிறார்கள். சந்தோஷப்படுகிறார்கள். இந்தக்கதை எப்படி நமது சமூகக் கிரிஸ்தவர்களை பாரபட்சமாக நடத்துவது இந்து சாதி முறையிலிருந்து வருகிறது என்பதை விளக்குகிறது. பாகிஸ்தானிய கிரிஸ்தவர்களில் பெரும்பான்மையோர் தலித்துகளின் சந்ததியினர்.

பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்குள்ளேயே உயர்சாதி கீழ்சாதி அமைப்புகள் இருக்கின்றன. கீழ்சாதி முஸ்லீம்கள் பொதுவாக ‘கம்மி ‘ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், நாவிதர்கள், கறிவெட்டுபவர்கள், போன்ற கை வேலை செய்பவர்கள்.

திருமண விளம்பரங்கள் பெரும்பாலும், சமூகப் பார்வைகளையும், மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துகின்றன. எல்லா விளம்பரங்களிலும், மணப்பெண், மணமகனின் அதே ‘ஜாத் ‘ (சாதி) முக்கியமாக இடம் பெறுகிறது. ‘அரைன் டாக்டருக்கு ஜோடி தேவை. அரைன் குடும்பங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் ‘ போன்ற வரி விளம்பரங்களே இருக்கின்றன. ஜாத் வித்தியாசம் பாகிஸ்தானிலிருந்து வெளியே சென்ற குடும்பங்களிடமும் இருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்களும், இந்தியக்குடும்பங்களைப் போலவே, ஜாத் பார்த்தே, திருமணங்கள் செய்வதும், குடும்ப உறவுகள், நட்புகள் வைத்துக்கொள்வதும் செய்கின்றன. பலவேறுபட்ட ஜாதி பாரபட்சங்கள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், பொதுமையான அமைப்பு இப்படித்தான்.

இந்திய அரசியல் சட்டம் ஜாதி இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை. அது தலித்துகளை பாரபட்சமாக நடத்துவதை தடை செய்கிறது. ஆனால், காகிதத்தில் எழுதிய சட்டங்கள் உண்மையான இந்தியாவில் முக்கியமானதாக இல்லை.

***

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

‘மனித உரிமைகள் கவனிப்பு ‘(Human Rights Watch report) அறிக்கையில் இந்தியா பாகிஸ்தான் மட்டும் குறிப்பிடப்படவில்லை. இதில் தெற்காசியா, இந்திய வம்சாவளியினர் தவிர மற்ற நாடுகளும் இனங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஜப்பானின் புராக்கு மக்களும், நைஜீரியாவின் இக்போ இனமக்களும், செனகல், மவுரிட்டானியா நாடுகளில் சில இனங்களும் இவ்வாறு கீழ்த்தரமாக நடத்தப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் 1871இல் புராக்கு (Buraku) அமைப்பு அரசாங்கரீதியாக தடைசெய்யப்பட்டாலும், அந்த இன மக்கள் சுமார் 30 லட்சம் பேர் இன்னும் ‘சுத்தமற்ற ‘ வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஜப்பானிய பெளத்தர்களும், ஜப்பானிய ஷிண்டோக்களும், இந்த ‘சுத்தமற்ற ‘ வேலைகளைச் செய்வதில்லை. இந்த புராக்கு இன மக்கள் தனியான சேரிகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் வேலைகளில் பாரபட்சமும், பொது இடங்களில் வார்த்தைக் கொடுமையும் நடக்கிறது.

தென் கிழக்கு நைஜீரியாவில் இருக்கும் இக்போ Igbo இன சமூகங்களில் ஓசு Osu என்றழைக்கப்படுபவர்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு வாழவைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சமூக சம அந்தஸ்து கொடுக்கப்படுவதில்லை. இது தவறு என்று சட்டங்கள் இருந்தாலும், இது தொடர்ந்து நடக்கிறது. ஓசு மக்கள் தங்கள் சாதிக்குள்ளேயே மணம் புரிய வேண்டும். அவர்கள் இறந்தால் தனியான கல்லறை இடங்களில் புதைக்கப்படுகிறார்கள்.

செனகல் நாட்டிலும் மற்ற பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், செய்யும் வேலை சார்ந்து சாதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. க்ரியோட் என்னும் சாதி முறை வம்சம் வம்சமாக வருகிறது. மவுரிட்டானியா நாட்டில், அடிமைகள் சாதிவாரியாக பயன்படுத்தப்படுகிறார்கள். அரபு மொழி பேசும் ஹெராட்டின்கள் (Haratines) மவுரிட்டானியா நாட்டின், சகாரா பாலைவனப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களிடையே கூலி கொடுக்காமல் உழைக்கவேண்டிய அடிமை முறை இன்னும் இருக்கிறது.

****

Series Navigation