சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


தமிழில் ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி பரிசு வழங்குவதும், அதையொட்டி சர்ச்சை எழுவதும் சடங்காகிவிட்டது. பரிசு பெற்றவர் பெயர்,புத்தகம், அது குறித்த விமர்சனம்/ஒப்பாரியுடன் முந்தைய ஆண்டுகளில் எழுதியதை சிறிது மாற்றி ஒவ்வொரு ஆண்டும் எழுதிவிடலாம் என்று சொன்னால் அது மிகையில்லை. வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது குறித்து சில கட்டுரைகள் அமுதசுரபியிலும், காலச்சுவட்டிலும் வெளியாகியுள்ளன. (http://tamil.sify.com) .ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான புலம்பல்கள், குற்றச்சாட்டுகளைக் கேட்டு சாகித்ய அகாதமிக்கே பழகிப் போயிருக்கும். சச்சிதானந்தன் இது குறித்து சில கருத்துக்களைக் கூறியுள்ளதாக அரவிந்தன் கட்டுரையிலிருந்து தெரிகிறது. என்னுடைய நோக்கம் அவர் கூறிய கருத்துக்கள் பற்றி எழுதுவதல்ல.மாறாக அகதாமிக்கு சில யோசனைகள் கூறுவது.

அகாதமி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி தகுதியான பத்து பெயர்களையும், தகுதியில்லாத

பத்து பெயர்களையும் புத்தகங்களின் பெயர்களுடன் பரிந்துரைக்கவும் என்று எழுதினால், தன் பெயரை பத்து முறையும், பரிசு தரக்கூடாது என்று 20 பெயர்களையும், எனக்கு பரிசு தராவிட்டாலும் பரவாயில்லை,இவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்ற பட்டியலும் அகாதமிக்கு பலரிடமிருந்து கிடைக்கக் கூடும்.

மேலும் கடந்த கால பரிசுகளை வைத்துப்பார்த்தால் யாருக்கு கிடைக்கும், எந்த நூலிற்கு கிடைக்கும் என்பதை யூகிப்பது எளிதல்ல.வைரமுத்துவிற்கு கொடுத்தால் வாலிக்கும் கொடுக்கலாம், ஏனெனில் ராஜாஜி எழுதிய ராமாயண நூலுக்குப் பரிசு என்றால் கவிதையில் காவியங்கள் சொன்ன வாலிக்கு கிடையாதா என்று கேட்கலாம் என்ற ரீதியில்தான் அகதாமி பரிசு குறித்த புரிதல் உள்ளது.கொஞ்சம் யோசித்தால் கடந்த காலத்தில் அகாதமி தேர்ந்தெடுத்துள்ள பல நூல்கள் அந்த பரிசுக்கு எந்த விதத்திலும் தகுதியானவை அல்ல என்பது புரியும்.

தமிழில் அகதமி பரிசு தராத, ஆனால் தகுதியானவர்கள் என்பவர்கள் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடியும். இன்று எத்தனையோ பரிசுகள்/விருதுகள் -உள்ளூர் முதல் வெளிநாடு

வரை இருந்தாலும் அகாதமியின் பரிசின் மவுசே தனிதான்.ஆனால் அகாதமிதான் அப்போது இப்போது என்று தண்ணிக்காட்டிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்படாத

எழுத்தாளர்களுக்கு எழுவது இயல்பு.இந்த ஆண்டு சு.ரா, வைரமுத்து இறுதிச்சுற்றில் வந்த போது பின்னவரை தேர்ந்தெடுத்திருப்பதாகவே கட்டுரைகள் கூறுகின்றன.காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.மேலும் எந்தெந்த நூல்கள் பரீசிலிக்கப்பட்டன என்பதையும் அகாதமி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.அவ்வாறு அறிவிப்பது அகாதமி பரிசீலிக்கும் நூல்களின் தரம் குறித்து அறிய உதவும். சிற்பி, அப்துல் ரகுமான்,வைரமுத்து என்று பரிசு கொடுக்கும் போது சு.ரா விற்கு ஏன் தரப்படவில்லை என்பதை அகாதமி தெரிவிக்க வேண்டும்.இறுதி சுற்றுவரை வந்தும் சிலருக்கு தொடர்ந்து பரிசு மறுக்கப்படுமானால் அதற்கு என்ன காரணம் ?. தனி நபர் விருப்பு வெறுப்பா ?

இது போன்ற சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட முடியும். சர்ச்சைகளை குறைக்க அகாதமி ஒரு சிறப்பு நடவடிக்கையாக இரண்டு ஆண்டுகளில் தலா பத்து அல்லது பதினைந்து பேருக்கு தமிழில் பரிசு வழங்கலாம்.அகாதமி பரிசு என்றென்னும் ஒரு நாள் கிடைக்கும் என்ற ஆசையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு இது பெரும் நிம்மதியளிக்கும். மேலும் ஏதேனும் ஒரு படைப்பிற்காவது ஏதேனும் ஒரு பிரிவில் கிடைக்காதா என நினைத்து இலக்கிய வகைகள் அனைத்திலும் எழுதும்/எழுத முயற்சிக்கும் எழுத்தாளர்(களுக்கு) இதன் மூலம் பலன் ஏற்படும்.தேவையற்ற நூல்கள் வெளியாவது குறையும். மேலும் இவ்வாறு இரண்டு ஆண்டுகள் வழங்கிய பின் இரண்டு/மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டு பின் ஆண்டு தோறும் ஒருவருக்கு தருவது என்ற பழைய பாணியைத் தொடரலாம்.அதற்குள் சர்ச்சைகள் பெருமளவு ஒய்ந்திருக்கும்.அகாதமிக்கும் நல்ல பெயர் கிட்டியிருக்கும்.

என்னைக் கேட்டால் தமிழில் ஒரு சிலருக்கு இனி எழுதமாட்டேன் என்று உறுதி அளித்தால் இந்தப் பரிசை தயக்கமின்றி கொடுத்துவிடலாம்.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி போல், எழுதித்தள்ளுவோரில் சிலர் இனி எழுதமாட்டேன் என்றால் இப்பரிசு கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம். ஒரு சில எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தினால் எழுத்தாளர்களுக்கும்,வாசகர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.இப்படி யோசித்தால் நான் ஏன் இரண்டு ஆண்டுகள் பலருக்கு விருது தரச்சொல்கிறேன் என்பது புரியும். ஒரு விசேஷ சலுகையாக இதைத் தரலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியின் ஒரு பகுதியை கூட்டியுள்ளது, கடன் வட்டி குறைப்பு/தள்ளுபடி செய்வது -இவையெல்லாம் நியாயம் என்றால் அகாதமி இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்கு செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

மேலும் இந்தியா இப்போது ஒளிரும் போது, இதைச் செய்தால் பொருத்தமாக இருக்குமல்லவா ? இதையும் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்- மவுண்ட் ரோட்டில் இதற்கென தனி விளம்பரம் உங்கள் அபிமான,பரிசு பெறும் எழுத்தாளர்களின் புன்முறுவல் பூத்த

முகங்களுடன் ஒரு பிரம்மாண்டமான கட் அவுட், மற்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம்.

இந்தியா ஒளிர்வதை இவர்தம் புன்னகையில் காண்க என்று விளம்பரப்படுத்தலாம்.

அப்புறம் ஒரு சிறு யோசனை-எழுத்தாளர்கள் பிரதமரையோ அல்லது குடியரசுத் தலைவரையோ அல்லது பரிசு வழங்கும் பிரமுகரையோ சந்திக்கும் போது, மறக்காமல் கையுறை அணிய வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு கைகுலுக்கும் போது அல்லது தொட்டாலே மின்சாரம் பாய்வது போல் தோன்றும்.அதிக மகிழ்ச்சியில் அதிக மின்சாரம் ‘பாய்ந்து ‘ மூர்ச்சையடையக்க் கூடும் அல்லது தலைச்சுற்றக் கூடும்.இதை தவிர்க்க கையுறை தேவை. பார்த்தாலே மின்சாரம் பாய்வது போல் யாருக்காவது தோன்றினால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா ? நல்ல கேள்வி, பதில் குறித்து யோசிக்க வேண்டும்.உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

————————————————————————————-

ravisrinivas@rediffmail.com

Series Navigation