சரித்திரப் பதிவுகள் – 1

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

வந்தியத்தேவன்


பிஸ்மார்க்

இந்திய கப்பற் படையில் 7 வருடங்கள் பணிபுரிந்தமையால், கடலும், கலங்களும் என்னை எப்போதும் ஈர்ப்பதுண்டு. அப்படித்தான் இந்த பிஸ்மார்க் கப்பலும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1815-1898) வாழ்ந்த ஜெர்மனியின் ‘இரும்பு மனிதர் ‘ தான் பிஸ்மார்க். அவர் பெயரிலில்தான் இந்த பிருமண்டமான கப்பல்.

ஒரு வருடமே உபயோகத்தில் இருந்து, 1941 இளவேனிற் காலத்தில் ஒன்பது நாட்கள் உக்கிரமாகப் போரிட்டு, ஜெர்மனியின் ‘சூப்பர் ஸ்டார் ‘ ஆனது பிஸ்மார்க்.

பிறப்பு & அமைப்பு

7 ஜூலை 1936 ‘ல் தான் பிஸ்மார்க்கின் பூமி பூசை. இதன் நீளம் 251 மீ, அகலம் 36 மீ. மொத்தம் 17 மாடிகளைக் கொண்டது. போர்க்கப்பல்களின் தாரக மந்திரமே ‘மித, நகரு, போரிடு ‘ (To Float, To Move, To Fight). மும்மந்திரங்களின் மொத்த உரும்வம்தான் பிஸ்மார்க். எத்தனை காயம்பட்டாலும் ஒரு கப்பல் முதலில் முழுகாமல் தாக்குப் பிடிக்க வேண்டும். அதற்கு தேவை நீர்புகா அறைகள். தாக்குதலால் வெளிப்புறத்தின் வழியே நீர் புகுந்தாலும் உடனடியாக அந்த அறை ‘சீல் ‘ வைக்கப்படும். அவ்வாறு மொத்தம் 22 அறைகள். அவற்றுள் 17 அறைகள் குண்டுகள் துளைக்காத ‘கோட்டை ‘ (Citadel ‘) எனப்படும் பகுதியில், அதாவது கப்பலின் நடு மையத்தில் அமைந்தது இக்கப்பலின் தனித்துவம். கோட்டையானது கப்பலின் 70 சதவிகிதம் ஆகும். குண்டு துளைக்காமைக்காக தனது மொத்த எடையில் 40% (ஜப்பானிய யாமமடொ கப்பல் வகை இரண்டாவது இடத்தில் 33.2%) செலவிட்டது இன்னொரு சிறப்பம்சம்.

பிஸ்மார்க்கில் முன்னே 4, பின்னே 4 என்று மொத்தம் எட்டு 34 செ.மீ பீரங்கிகள். இவை கப்பல் தளம், கரை மற்றும் விமானங்களை சுக்கு நூறாக்கும் வல்லமை படைத்தவை. ஆண்டன் மற்றும் புருனோ என்பது தலா 2 முன் பீரங்கிகளை உள்ளடக்கிய சுழ்ற்தளத்திலும், சீசர் மற்றும் டோரா தலா 2 பின் பீரங்கிகளை உள்ளடக்கிய சுழ்ற்தளத்திலும் நிறுவப்பட்டன. ஒவ்வறொரு சுழற்தளமும் தலா 1,056 மெட்ரிக் டன் (1,056,000,000 கிலோ) எடை கொண்டது. ஒவ்வொரு பீரங்கியும் தன்னிச்சையாக உபயோகிக்கலாம். இதனால் குண்டுகள் அதிவேகமாக

மட்டுமின்றி மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக இலக்கை தாக்க முடியும். இங்கிலாந்து கப்பலான ஹூட் ‘ற்கு இதுவே எமனானது. இது போதாதென்று பன்னிரெண்டு 15 செ.மீ. பீரங்கிகள் மற்றும் 10.5 செ.மீ. தொலை விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதினாறு, 3.7 செ.மீ மத்திய தூர விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதினாறு, 2.00 செ.மீ சாதாரண விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதினெட்டு வேறு.

‘எந்த குண்டு இல்லை இந்த பிஸ்மார்க்கில் ‘ என்று தாரளமாய்ப் பாடலாம். 7910 கி.வா. மின் உற்பத்தித் திறன் கொண்ட ராட்சஸ டாசல் ஜெனரேட்டர்கள், 4.8 மீ விட்டமுள்ள 3 ப்ரொப்பல்லர்கள் என்று கட்டமைப்பைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். விளைவு மற்றும் உளவு

பார்க்க 4 அராடோ Ar 196 ரக கடல் விமானங்களும் பிஸ்மார்க்கை அலங்கரித்தன. இந்த விமானங்கள் உண்டி வில் போன்ற அமைப்பில் வானில் ஏவப்பட்டன.

14 பிப்ரவரி 1939 (காதலர் தினம் ? ? ?) மதியம் 1:00 மணி. கப்பல் வெளிக் கட்டுமானம் முடிந்து நீர் புகும் விழாவில் ஹிட்லர் ‘ …நமது இரும்பு மனிதரின் ஜோதி அமைதிப் பயணத்திலும், தேவைப்பட்டால் கடினமான நேரத்திலும் வழி நடத்தட்டும்… ‘ என்று முழங்கினார். நான்கு நிமிடம் கழித்து முதன் முதலாக பிஸ்மார்க் நீரைத் தொட்டது.

செப்டம்பர் 1939 ‘ல் போர் மற்றும் கடும் குளிர் தொடர்ந்த போதும், பிஸ்மார்க்கின் மேற்புற கட்டுமானப் பணி, நீராவிக் கலன்கள் மற்றும் பீரங்கி பணி ந்ிற்கவில்லை. ஏப்ரல் 1940, 40 நபர்கள் முதன் முதல் பயிற்சிக்காக பிஸ்மார்க் வந்தடைந்தனர். 23 ஜூனில் 3 ப்ரொப்பல்லர்கள் நிறுவப்பட்டன. கப்பலின் அடிப்புறம் புது வர்ணம் பூசப்பட்டது. மொத்தம் 2,065 பேர் வரை இக்கப்பலில் வசிக்கலாம்.

பயிற்சி

12 வாக்னர் நீராவிக் கலன்கள் 130,000 குதிரை சக்திகள் கொண்டது. 24 ஆகஸ்ட் 1940 கப்பற்படைக்கே உரித்தான சடங்குகளுடன் பிஸ்மார்க் ஜெர்மனிக்கு அர்ப்பணிக்கப்பட்டு முழுப்பயிற்சி தொடங்கியது. 15 செப்டம்பர் 1940 (அலைபாயுதே படப்பாலான ‘செப்டம்பர்

மாதம் …வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டேன் ‘ என்று இங்கிலாந்து பாடப்போவது அப்போது தெரியாது) ஹேம்பர்கிலிருந்து பிஸ்மார்க் பால்டிக்கிற்கு கடல் பயிற்சிக்காக பயணித்தது. அன்று மாலை அட்லான்டிக் எனப்படும் உந்து படகுடன் ஒரு சிறிய உரசல். டேமேஜ் அதிகம் இல்லை. அன்று இரவு இங்கிலாந்து சும்மாயிருக்க மாட்டாமல் தனது உளவு விமானத்தை அனுப்பிப் பார்த்த்து. பிஸ்மார்க்கின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் 300 குண்டுகளை சரமாரியாகத் துப்பியதைக் கண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியது உளவு விமானங்கள்.

‘கீல் கால்வாய் ‘ என்பது 1895 ‘ம் ஆண்டு கட்டப்பட்டது. 98 கி.மீ. நீளம் கொண்ட இந்த கால்வாய் வடக்கு கடலையும், பால்டிக் கடலையும் மிகவும் பாதுகாப்பாய் இணைத்தது. இந்தக் கால்வாயை 16 செப்டம்பர் பிஸ்மார்க், உந்து படகுகள் மூலம் கடந்தது. மேலும் 2 மாதங்கள்

உபகரணங்களை பரிசோதித்தல் தொடர்ந்தது. 130,000 குதிரை சக்தி என்பது 29 கடல் மைலை (1 கடல் மைல் = 1.9 கி.மீ) ஒரு மணி நேரத்தில் கடக்க உதவும் எனறு அனுமானிக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப்பின் அது 150,170 குதிரை சக்தியாக உருமாறியது. இப்போது பிஸ்மார்க்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 30.1 கடல் மைல். இந்த காலகட்டத்தில் பிஸ்மார்க்தான் உலகத்தின் மிக விரைவு ஆயுதக் கப்பல். கடலின் பிதாமகனாய்த் தன்னை வரித்துக்கொண்ட இங்கிலாந்து தன் தூக்கத்தை முதல் முறையாய்த் தொலைத்தது. ஒருவழியாக 09 டிசம்பர்

1940 ‘ல் பிஸ்மார்க் ஹேம்பர்க் வந்தடைந்தது.

அனைத்து கப்பல் குழுவினரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தத்தம் உறவினரை (கடைசியாக ? ? ?) பார்க்கச் சென்றனர். 24 சனவரி 1941 போர்ப்பயிற்சிக்காக மீண்டும் பால்டிக் செல்லவிருந்த பயணம், கீல் கால்வாய் உறைந்ததால் தள்ளிப்போனது. ஒருவழியாய் மார்ச்சில் கீல்

கால்வாய் பயணத்தையும் பலத்த பாதுகாப்புடன் கடந்து தனது அனைத்து பரிசோதனை மற்றும் பயிற்சிகளை முடித்தது.

அடோல்ப் ஹிட்லரின் தரைப்படை ஐரோப்பாக் கண்டத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்த காலம். கப்பற் படை மட்டும் சும்மா இருக்க முடியமா ? 2 ஏப்ரல் 1941 ‘ல் பிஸ்மார்க்கில் அனைத்து 4 போர்விமானங்களும் தயார். பிறகென்ன…ஜெய பேரிகை கொட்ட ஜெர்மனி தயாரானாது. பூமத்திய ரேகைக்கு வடக்கே, அட்லான்டிக்கில் செயல்படும் வியாபாரக் கப்பல் கூட்டத்தை துவம்சம் செய்யவேண்டும். என்னே புனிதமான

குறிக்கோள்…

இங்கிலாந்துக்கு மூக்கில் வியர்வை. பிஸ்மார்க்குடன் இணையவேண்டிய ஒரு கப்பலை நீரேவுகணை (Tarpedo) கொண்டு தாக்கியதில் அதன் விமானமும் பலியானது. பட்ட காலிலே படும் என்பது போல மீண்டும் அதே கப்பலை இங்கிலாந்து விமானப்படை 4 குண்டுகள் வீசியதில் அந்த கப்பலுக்கு பலத்த சேதம். இப்போது பிஸ்மார்க்குடன் ஒரே ஒரு போர்க்கப்பலே (பிரின்ஸ் யூகென்) துணை. இருப்பினும் அமைதியாய் அட்லான்டிக்கில் கலந்து எதிரியை அழிக்க ஜெர்மனி துடித்தது. தாக்குதல் தாமதமானால் இரண்டு தலைவலிகள் நேரலாம். அமெரிக்கா

யுத்தத்தில் எப்போது வேண்டுமானாலும் குதிக்கலாம். இங்கிலாந்திற்கு முக்கிய பொருட்கள் அட்லான்டிக் மூலம் வந்தடையக்கூடும். தாக்குதலை துரிதப்படுத்தும் வகையாக U படகுகள் (அந்நாளைய ஜெர்மன் நீர்மூழ்கிகள்) உதவியும் நாடப்பட்டது. பிஸ்மார்க்கின் பயணத்திட்டம் U படகுகளின் கமாண்டருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ரைன் பிரவர்த்தனம் (OPERATION RHEINUBUNG)

22 ஏப்ரல் 1941, போர் முரசு கொட்டவே இந்த பிரவர்த்தனம். துணைக் கப்ப்லுக்கு நேர்ந்த சிறிய விபத்தால் பயணம் தள்ளி வைக்கப்பட்ட போது பிஸ்மார்க்கின் கேப்டன் தனது போர்க்குறிப்பேட்டில் இவ்வாறு எழுதினார், ‘….நாங்கள் எதிரியை உடனடியாக எதிர் கொள்ளத்

துடிக்கிறோம்… ‘

5 மே 1941, ஹிட்லர் பிஸ்மார்க்கை விஜயம் செய்கிறார். 18 ‘ம் தேதி பிஸ்மார்க் தனது துணைக்கப்பல் மற்றும் மூன்று பாதுகாப்பு கப்பல்களுடன் புறப்பட்டது. 20 ‘ம் தேதி மதியம் ஒரு மணியளவில் ஸ்வீடன் கப்பல் இதனைப் பார்த்தவுடன் இங்கிலாந்திற்கு செய்தி பறந்தது.

21 ‘ம் தேதி தனது உளவு விமானம் மூலம் இச்செய்தியை இங்கிலாந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது. தனது எரிபொருளை நிரப்பிக்கொள்ள கிடைத்த வாய்ப்பை பிஸ்மார்க் செய்யவில்லை. இங்கிலாந்தோ உடனடியாக டென்மார்க் ஜலசந்திக்கு 2 போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது.

மேலும் 21 ‘ம் தேதி இரவு ஹெச்.எம்.எஸ். ஹூட், ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ஆகிய கப்பல்கள் ஐஸ்லாந்தைப் பாதுகாக்கக் கிளம்பின. 22 ‘ம் தேதி இரவு பிஸ்மார்க் நார்வேயை விட்டுக் கிளம்பியது.

டென்மார்க் ஜலசந்திப் போர் (ஐஸ்லாந்து யுத்தம்)

ஜெர்மன் கப்பல்களுக்கும் (பிஸ்மார்க், பிரின்ஸ் யுகென்), இங்கிலாந்து கப்பல்களுக்கும் (ஹெச்.எம்.எஸ். ஹூட், ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ்) நடந்த சுமார் ஒண்ணேகால் மணி நேர யுத்தம் இது.

ஹெச்.எம்.எஸ். ஹூட் என்பது பிஸ்மார்க் போல் வலிமையானது என்றாலும் இருபது வருடங்கள் பழமையானது. துணை-அட்மிரல் ஹாலண்ட் தலைமையில் ஹூட் மிக விரைவாக பிஸ்மார்க்கை நேரெதிர் கொள்ள விழைந்தது. ஏனெனில் தூரத்து இலக்கை மிக எளிதாக தாக்கியழிக்கும் வல்லமை வாய்ந்தது பிஸ்மார்க்.

அட்மிரல் லூடியன்ஸ் (தமிழ்ப்படுத்தியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்) தலைமையிலான பிஸ்மார்க்கோ அட்லான்டிக் அடைந்துவிட துடித்தது. ஆனால் ஹூட் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. விதி வலிமையானது அல்லவா ?

24 மே 1941 காலை மணி 5:53 ஹூட் மற்றும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ், ஜெர்மன் கப்பல்கள் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. சிறிது தயக்கத்திற்குப் பின்னர் பிஸ்மார்க்கும், பிரின்ஸ் யுகென்ன்னும் பதில் கொடுக்க ஆரம்பித்தன.

காலை சுமார் ஆறு மணியளவில் பிஸ்மார்க்கின் ஐந்தாவது ரவுண்டு குண்டுகள் ஹூட்டை பதம் பார்த்தன. பிஸ்மார்க்கில் ஜெர்மனியர்கள் தங்கள் கண்களையே நம்பாமல் பார்த்துக் கொண்டிருக்க, இங்கிலாந்தின் பெருமையான ஹூட் மூழ்கி க்கொண்டிருந்தது. மூன்றே நிமிடங்கள்தான். 1,415 பேர் ஜல சமாதி. பிழைத்தது மூன்றே பேர்.

பிரின்ஸ் ஆப் வேல்ஸோ மூழ்கும் ஹூட்டைத் தவிர்த்து ஒதுங்கும் போது பிஸ்மார்க் முன்னர் வர வேண்டியதாகிப் போய்விட்டது. சும்மாயிருக்குமா பிஸ்மார்க் ? போட்டுக் தாக்குடா பெரியசாமியென்று குண்டு பொழிந்தது. பிரின்ஸ் ஆப் வே ல்ஸின் பிரிட்ஜ் தீக்கிரையானது. கேப்டன் உயிர் பிழைத்தார். நான்கு முறை பிஸ்மார்க்காலும், மூன்று முறை பிரின்ஸ் யூகென்னாலும் அடிவாங்கி யுத்தகளத்தை விட்டுப் பறந்தது பிரின்ஸ் ஆப் வேல்ஸ்.

வேட்டையாட வந்தவர்களே வேட்டையாடப்பட்டது விந்தைதானே… ? காயப்பட்ட கப்பலை விடுத்து ஜெர்மன் கப்பல்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்ததும் விந்தைதான். போரில் பிஸ்மார்க்கும் சிறிது காயம்பட்டது. அதன் காரணமாக இழந்த எரிபொருள், பின்னர் இடைஞ்சல்

கொடுக்கப்போவதை பிஸ்மார்க் அறியவில்லை. தனக்கேற்பட்ட பழுதுகளை செப்பனிடும் பொருட்டு பிஸ்மார்க், பிரான்ஸ் கரைக்கு விரைந்தது.

ஹூட் மூழ்கியதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. ‘அனைத்து போர்க்கப்பல்களும் பிஸ்மார்க்கைத் தேடியழிக்கட்டும் ‘ என்று முகம் சிவக்க ஆணையிட்டார் பிரதம மந்திரி சர்ச்சில்.

24 ‘ம் தேதி மாலை தன்னைத் துரத்தும் இங்கிலாந்து கப்பல்களிடம் இருந்து தப்பிக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டதில் பிஸ்மார்க்கின் எரிபொருள் மேலும் கணிசமாகக் குறைந்தது. நார்வேயில் நிரப்பாதது எவ்வளவு பெரிய மடத்தனம். யாரை நொந்துகொள்வது ?

விக்டோரியஸ் என்ற இங்கிலாந்துக் கப்பலிலிருந்து புறப்பட்ட போர்விமானங்கள் சரமாரியாக நீரேவுகணைகளை வீசி பிஸ்மார்க்கைத் தாக்கியது. கப்பலுக்கு சேதாரமில்லையென்றாலும் முதல் உயிர்ப்பலி நடந்தது.

25 ‘ம் தேதி விடிகாலையில் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மற்றும் பிஸ்மார்க்கிடையே ஒரு சிறிய யுத்தம். சுமார் நான்கு மணியளவில் தன்னைத் தொடரும் கப்பல்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு புதிய மார்க்கத்தில் பயணித்தது பிஸ்மார்க்.

அன்றுதான் அட்மிரல் லூடியன்சின் பிறந்த நாள்.

தனது உரையில் ‘பிஸ்மார்க்கின் வீரர்களே! ஹூட்டை மூழ்கடித்தன் மூலம் எதிரிக்கு ராணுவரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் மரண அடி கொடுத்து விட்டோம். பதிலடிக்காக எதிரிகள் முழுவீச்சில் தாக்குதல் நடத்தக்கூடும். வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியழிக்கும் பணியை

ப்ரின்ஸ் யூகென்னுக்குத் தந்துவிட்டேன். ப்ரின்ஸ் யூகென்னும் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவித் தந்திரமாய்த் தப்பிவிட்டது. எதிரிகள் எப்போதுவேண்டுமானாலும் தாக்கக்கூடும். ஜெர்மனி தேசமே நம்மோடு. நமது பீரங்கிகள் தீச்சுடரை கக்கட்டும். கடைசிக் குண்டு பீரங்கியை

விட்டு அகலும்வரை போரிடுவோம். இப்போது நமது போர்முழக்கம் வெற்றி அல்லது வீர மரணம் ‘. அன்று மாலையே ஹிட்லர் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை அட்மிரலுக்குத் தெரிவித்தார்.

26 மே காலை சுமார் 10:10 அளவில் (முப்பத்த்ியோரு மணி நேர கண்ணாமூச்சிக்குப் பின்) இங்கிலாந்தின் உளவு விமானங்கள் பிஸ்மார்க்கைக் கண்டு கொண்டன. துரதிருஷ்டவசமாய் இங்கிலாந்தின் கிங் ஜார்ஜ் V மற்றும் ராட்னி கப்பல்கள் பிஸ்மார்க்கைவிட தொலை தூரத்திலிருந்தன. தாக்குதல் தாமதமானது.

மதியம் மூன்று மணியளவில் தனது கப்பலான ஷெப்பீல்டையே பிஸ்மார்க்கெனெ நினைத்து, 11 நீரேவுகணைகளால் இங்கிலாந்து தாக்கியது. நல்ல வேளையாய் ஷெப்பீல்டு தப்பித்தது. சொந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப்பிழைத்த ஷெப்பீல்டின் கண்களுக்கு பிஸ்மார்க் தென்பட்டது.

போரின் உச்சக்கட்டம் ஆரம்பமானது. பிஸ்மார்க்கைப் பழிவாங்க இங்கிலாந்தின் கடைசித் தருணம். விடிந்து விட்டால் பிரெஞ்சுக் கடற்கரைக்கு பிஸ்மார்க் ஓடிப் போய்விடும். மேலும் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களின் உதவியும் சேர்ந்துவிடும். ஏற்கெனவே U-556 எனும் ஜெர்மானிய நீர்மூழ்கி, இங்கிலாந்தின் விமானந்தாங்கிக் கப்பலான ஆர்க் ராயலை மோப்பம் பிடித்துத் தொடர்ந்தது. இந்த ஆர்க் ராயல்தான் விமானங்களை ஏவி ஷெப்பீல்டை போட்டுப் பார்த்தது. இங்கிலாந்தின் அதிருஷ்டம். U-556 ‘ன் அனைத்து நீரேவுகணைகளும் சிறிது நாட்களுக்கு

முன்னர் ஏற்பட்ட யுத்தத்தில் காலியாக்கி விட்டிருந்தது. எனவே கொட்டாவி விட்டபடி ஆர்க் ராயல் செல்லும் பாதையில் ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ ‘ என்று பாடித் தொடரத்தான் முடிந்தது. தொல்லை கொடுக்க முடியவில்லை.

முடிந்தது மோகன வாழ்வு

ஆர்க் ராயலிலிருந்து புறப்பட்ட ஸ்வார்டு பிஷ் ரக போர்விமானங்கள் இரவு சுமார் 8:47 ‘க்கு நீரேவுகணைகளால் பிஸ்மார்க்கைத் தாக்கத் தொடங்கியது. பிஸ்மார்க்கின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முழங்கின. இருப்பினும் இடது விலாவில் ஒன்று, வலது காலில் ஒன்றென இரண்டு

நீரேவுகணைகள் பிஸ்மார்க்கைப் பதம் பார்த்தன. சுக்கான்கள் பலத்த சேதமடைந்தன. வெள்ள மட்டம் ‘கன்னா பின்னா ‘ வென கப்பலினுள்ளே ஏற ஆரம்பித்ததாலும், கடல் வேறு அதிகமாக வெளியே பொங்கியெழுந்ததாலும், சுக்கான்களை பழுது பார்த்தல் என்பது முடியாமல் போய்விட்டது.

இரவு 9:40 ‘க்கு பிஸ்மார்க்கிலிருந்து ஜெர்மனிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது ‘கப்பலை திறம்பட இயக்க முடியவில்லை. கடைசிக்குண்டு இருக்கும் வரை போரிடுவோம். வாழ்க ஹிட்லர் ‘.

சுக்கான்கள் பழுதுபட்டதால் தனது வேட்டைக்காரரையே நாடும் இரையாகியது பிஸ்மார்க். செலுத்துவானின் (Steeering Wheel) கட்டளைக்கு கப்பல் பணிய முடியவில்லை. முதலில் எதிர்பட்டது ஷெப்பீல்டு. ஆறு முறை முழங்கியது பிஸ்மார்க்கின் பீரங்கிகள். தப்பியோடிய ஷெப்பீல்டில் ராடார் சேதம் மற்றும் மூவர் பலி.

இரவு 10:48 ‘க்கு போலந்து மற்றும் இங்கிலாந்தின் நான்காவது நாசகாரிக் கப்பற்படைக் கூட்டம் பிஸ்மார்க்கை மொய்த்துக் கொண்டது. 27 மே காலை 7:00 மணி வரை மொத்தம் 16 நீரேவுகணைகளை வெற்றிகரமாய் தவிர்த்து அடிபட்ட சிங்கம் போல பிஸ்மார்க் வீரமுடன்

போராடியது.

மூன்று நாட்கள் முன்னர் முப்பது நாட் வேகத்தில் தண்ணீர்ப் பாய்ச்சல் காட்டிய பிஸ்மார்க் இன்று ஏழு நாட் வேகத்தில் நொண்டியடித்தது. கப்பல் குழுவோ களைத்துப் போயிருந்தது. 8:43 ‘க்கு ஒரு வழியாய் கிங் ஜார்ஜ் V மற்றும் ராட்னி, பிஸ்மார்க்கிற்கு 23 கி.மீ. தூரத்தில்

வந்தடைந்தன.

8:47 ‘க்கு ராட்னியும், 8:48 ‘க்கு கிங் ஜார்ஜ் V ‘ம் குண்டு மழையைத் தொடங்கின. 8:54 ‘க்கு நோர்போல்க், 9:04 ‘க்கு டோர்செட்ஷயர் சேர்ந்து கொண்டது.

9:13 ‘க்கு ஆண்டன் மற்றும் புருனோ என்னும் பிஸ்மார்க்கின் பீரங்கிகள் செயலிழந்தன. பின்னாலிலிருந்த பீரங்கிகளைக் கொண்டு போரைத்தொடர்ந்தது பிஸ்மார்க். 9:31 ‘க்கு அனத்து பீரங்கிகளும் செயலிழக்க, பிஸ்மார்க்கின் கேப்டன் கப்பலைக் கைவிடுமாறு கட்டளையிட்டார். பிஸ்மார்க்கின் போர்க் குறிப்பேட்டை விமானம் மூலம் கொண்டு செல்ல கடைசி முயற்சி உண்டி வில் சரியாக வேலை செய்யாததால் தோற்றுப்போனது.

பிஸ்மார்க் போரிடும் சக்தியை இழந்து பரிதாபமாக ஊர்வதைப் புரிந்து கொண்ட ராட்னி, ஸ்பெயினில் நடக்கும் ‘காளைச் சண்டையில் கத்தியைப் பாய்ச்சுவதற்கு ‘ மிக வேகமாக முன்னேறியது. 2 நீரேவுகணைகளில் ஒன்று மீண்டும் பிஸ்மார்க்கின் இடது விலாவை பதம் பார்த்தது. நோர்போல்க் நீரேவுகணை ஏவியதில் பிஸ்மார்க்கின் வலது புறத்தில் மேலும் ஒரு பெரிய காயம்.

இப்போது பிஸ்மார்க் கப்பலில் எஞ்சியிருந்தது பெருங்குழப்பம். எங்கு பார்த்தாலும் கரும் புகை… சரமாரியாய் குண்டுத்துளைகள். செயலிழந்த பீரங்கிகள் தன் போக்கிற்கு வாய் பிளந்து பரிதாபமாய் நின்றன. கடலிலோ தப்பிப் பிழைக்க குதித்த மனிதத் தலைகள். மொத்ததில்

பிஸ்மார்க் மதுரைக் கொத்து புரோட்டாகிப் போனது. அப்படியும் ‘மூழ்கமாட்டேன் ‘ என அடம் பிடித்தது.

10:20 ‘க்கு டோர்செட்ஷயர் மேலுமிரண்டு நீரேவுகணைகளால் பிஸ்மார்க்கைத் துளைத்தது. ம்ஹூம் மாட்டேன்…அடம் தொடர்ந்தது. சுற்றி வந்த டோர்செட்ஷயர் மேலும் ஒரு நீரேவுகணையை இடது விலாவில் அனுப்பியது. ஒருவழியாய் 10:39 ‘க்கு , சண்டை துவங்கி 2 மணிநேரம் கழிந்து, பிஸ்மார்க் ‘போதுமென்ற மனதுடன் ‘ மூழ்க ஆரம்பித்தது.

ஹூட்டோ குண்டுகள் விழுந்து மூன்றே (தாக்குதல் தொடர்ந்த ஆறு நிமிடத்தில்) நிமிடத்தில் மூழ்கியதை ‘ஞாபகம் வருதா ‘ ? மொத்தம் 74 நிமிடங்களில் பிஸ்மார்க்கை நோக்கி ஏவப்பட்ட குண்டுகள் சுமார் 2,876. அவற்றில் சுமார் 400-600 குண்டுகள் கப்பலைத் தாக்கியிருக்கலாம். வரலாற்றில் இப்படியொரு அடியை எந்தக் கப்பலும் எதிர்கொள்ளவில்லை. மொத்தம் 2,200 பேரில் உயிர் பிழைத்தது 115.

28 ‘ம் தேதி ஜெர்மானியப் போர்விமானங்களின் தாக்குதலில் இங்கிலாந்துக் கப்பலான மஷோனா மண்ணைக் கவ்வியது. மாண்டவர் 46. மீண்டவர் 170.

பத்து நாள் நடவடிக்கையில் பிஸ்மார்க்கில் மற்றும் பிஸ்மார்க்கால் மாண்டவர் 4,550. மீண்டவர் 288. பிஸ்மார்க்கி(கா)ல் மாண்டவருக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துவோமே !!!

====

t_sambandam@yahoo.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்