சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

மார்வின் ஹாரிஸ்


மற்ற மக்களின் புராண இதிகாசங்களுக்கும் மேற்குலகின் புராண இதிகாசங்களுக்கும் அடிப்படையில் எந்த வித வித்தியாசமும் இல்லாதவை. அதன் ரகசியங்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு அதன் நடைமுறைச் சூழல்களைப் பற்றிய அறிவே நமக்குத் தேவை.

இயேசு என்ற சமாதானப் பிரபு பற்றிய ஆராய்ச்சிக்கான விடையை, என்ன நடந்திருக்கலாம் என்று நாம் தேர்வு செய்ய மிகச்சில நிகழ்வுகளே உள்ளன. . ஜெருசலத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இயேசு தோன்றி, ரோமானியர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால், அதாவது இயேசுவின் போதனைகளின் காலகட்டம் தவறாக இருந்தால், இந்த அமைதி மதத்தை விளக்குவது எளியது. கலிலியின் யூதாஸ் (Judas of Galilee) நடத்திய வரிகொடாப் போராட்டமும், போண்டியஸ் பிளேட் (பிலாத்து) ஆளுனராக இருந்ததும், மேற்சொன்ன வசதியான காலகட்டத்தில் இது தோன்றியதாகச் சொல்லமுடியாமல், உறுத்திக்கொண்டு நிற்கிறது.

ஆக, இயேசு எப்போது பேசினார் என்பதில் நாம் தவறிழைக்க முடியாது. ஆனால் என்ன பேசினார் என்பதில் நாம் தவறிழைக்கிறோம் என்று கூற காரணங்கள் நிறைய இருக்கின்றன. முந்தைய அத்தியாயத்தின் முடிவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான எளிய விடை, நாம் பொதுவாகக் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதிரானது. இயேசு அமைதியான மெஸையா அல்ல என்பதும், யூத ராணுவ மெஸையா பாரம்பரியத்தை எந்த விதத்திலும் இயேசுவின் வார்த்தைகள் உடைத்து புதிய பாதையில் செல்லவில்லை என்பதும் தான் உண்மை.. அவரது உண்மையான போதனைகள், தீவிரவாத கொள்ளையருக்கு ஆதரவாகவும், ரோமானிய எதிர்ப்புணர்வுடனும் இருந்திருக்கலாம். ஜெருசலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரே, ரோமின் வெற்றிக்கு உகந்தவாறு, தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு எதிர்வினையாக, ரோம் மற்றும் பேரரசின் மற்ற நகரங்களில் வாழ்ந்து வந்த அவரைப் பின்பற்றிய யூத கிரிஸ்துவர்களால், யூத ராணுவ மெஸையா பாரம்பரியம் உடைக்கப்பட்டு, அவரது பேச்சுக்களில் இருந்திருக்கக்கூடிய அரசியல் ராணுவப் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கலாம். நடைமுறை வாழ்க்கை பிரச்னைகள் எவ்வாறு இந்த சமாதான மெஸையாவை உருவாக்குகின்றன என்பதைச் சுருக்கமாகக் காட்ட இருக்கிறேன்.

ஏசுவிற்கும் ஜான் பாப்டிஸ்டுக்கும் (ஸ்நானகன் யோவான்) உள்ள நெருங்கிய தொடர்பு, இயேசுவின் பிரச்சாரங்கள் ராணுவ மெஸையா பாரம்பரியத்தின் நீட்சியே என்று உணர்த்துகிறது. விலங்குத் தோல்களை உடுத்திக்கொண்டு, வெட்டுக்கிளிகளையும் காட்டுத்தேனையும் மட்டுமே உண்டு வாழ்ந்த ஜான் பாப்டிஸ்டு, தெளிவாகவே ஜோஸஃபஸ் குறிப்பிடக்கூடிய, ஜோர்டான் பள்ளத்தாக்கில் அலைந்து திரிந்து, கிராமப்புறவாசிகளையும் அடிமைகளையும் தூண்டிவிட்டு, ரோமானியர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் யூதத் தலைவர்களுக்கும் தொல்லைதரும் யூத புனிதர் வகையறாவில் ஒருவராகவே வருகிறார்.

முதல் நான்கு ஆகமங்களும் இயேசுவின் உடனடி முன்னோடியாக ஜான் பாப்டிஸ்டைக் குறிப்பிடுகின்றன. ஏசையா குறிப்பிடும் வேலையைச் செய்வதுதான் அவரது தொழில்: கொள்ளையர் உலவும் பின் நிலங்களில் சென்று யாஹ்வாவின் ஒப்பந்தத்தை மக்களுக்கு உரத்த குரலில் ஞாபகப்படுத்தல். “ கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள்” (Mark 1:3 ‘prepare ye the ways of the Lord; make his paths straight ‘) (உங்களது பாவங்களுக்கு மனம் வருந்துங்கள், உங்களது குற்றங்களை உணருங்கள். அதனால், வாக்களிக்கப்பட்ட பேரரசு உங்களுக்குப் பரிசாக வழங்கப்படும்) தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு தகுந்த முறையில் மனம் வருந்திய யூதர்களை, ஆற்றிலோ, ஓடையிலோ குளிக்கவைத்து அடையாள முறையில் அவர்களது பாவங்களைக் கழுவி ஜான் பாப்டிஸ்ட் ‘ஞானஸ்நானம் ‘ செய்வித்தார். கிரிஸ்துவ பைபிளின் அப்போஸ்தலர்களின் ஆகமங்களை பொறுத்த மட்டில், ஜான் பாப்டிஸ்டிடம் தவறை ஒப்புக்கொண்ட பிரபலமான யூதர், இயேசு கிரிஸ்து. ஜோர்டான் ஆற்றில் ஜான் பாப்டிஸ்ட்டால் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டபின்பு, தனது – மிகுந்த செயல்பாட்டுடன் பிரச்சாரம் செய்து மரணத்துக்கு இட்டுச் சென்ற – உச்சகட்ட வாழ்க்கைப்பகுதியை ஆரம்பித்தார்.

முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட பாலைவன தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை அடியொற்றி ஜான் பாப்டிஸ்டின் வாழ்க்கையும் இருந்தது. அவரைச் சுற்றியிருந்த மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானபின்னால், அவர் அருகாமையிலிருந்த ரோமானிய சட்ட ஒழுங்கு அதிகாரி அவரைக் கைது செய்தார். ஜான் பாப்டிஸ்டு மிகவும் செயல்பாட்டுடன் பிரச்சாரம் செய்த ஜோர்டானுக்குக் கிழக்கே இருக்கும் பாலஸ்தீனப் பகுதியில் ெபெயருக்கு அரசராய்ப் இருந்த ஹரோது ஆண்டிபாஸ் முன்னிலையில், ஆஜர் செய்யப்படுவதற்காக கைது செய்யப்பட்டார்.

ஜான் பாப்டிஸ்டின் பிரச்சாரமும் செயல்பாடுகளும் சட்ட ஒழுங்குக்கு ஆபத்தானவை என்பதாலேயே ஜான் பாப்டிஸ்டு கைது செய்யப்பட்டார் என்று ஆகமங்களில் எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை. அவரது கைதின் முழு அரசியல் ராணுவ பரிமாணமும் ஆகமங்களில் காணப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, ஹரோதின் சகோதரர்களில் ஒருவரது மனைவியான ஹரோதியாஸ் என்ற பெண்ணை, அந்தப்பெண்ணின் விவாகரத்துக்குப் பின்னர், ஹரோது திருமணம் செய்து கொண்டதை விமர்சித்ததே அவர் கைதுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜான் பாப்டிஸ்டின் மரண தண்டனைக்கு எந்த அரசியல் காரணத்தையும் சொல்லாமல், ஹரோதியாஸின் பழிவாங்கும் ஆர்வமே காரணமென்று ஆகமம் சொல்கிறது. அரசர் ஹரோதுக்கு முன்னர் தன் மகள் சலோமியை நடனமாட ஹரோதியாஸ் ஏற்பாடு செய்தாள். நடனத்தால் மகிழ்வடைந்த ஹரோது நடனமாடியவள் என்ன கேட்டாலும் தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். ஜான் பாப்டிஸ்டின் தலையை தட்டில் வைத்து தர வேண்டும் என்று சலோமி கேட்கிறாள். ஹரோது அதைச் செய்து தருகிறார். இயேசுவுக்கு மரண தண்டனை விதித்ததும் போண்டியஸ் பிளேட் மிகுந்த வருத்தம் அடைந்தது போலவே, ஜான் பாப்டிஸ்ட்டுக்காக ஹரோதும் மிகுந்த மனவருத்தம் அடைந்தார் என்று குறிப்பிடப்படுகிறார். காட்டுப்பகுதிகளில் ஜான் பாப்டிஸ்டு மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, அரசியல் காரணங்கள் இல்லாமையும் ஹரோதின் வருத்தமும் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. ஜான் பிரச்சாரம் செய்தது சுத்தமான ராணுவ மெஸையா பிரச்சாரம்.

( One mightier than I cometh – He shall baptize you in spirit and fire;

his winnowing fan is in his hand, and he will thoroughly cleanse his

threshing-floor, and gather the wheat into his barn; but the chaff he

will burn up with unquenchable fire. )

‘மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

மத்தேயு 3:12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். ‘

பாலைவன தீர்க்கதரிசிகளுக்கும் மதத்தீவிரவாதி-கொள்ளையர்களுக்கும் இடையேயான உறவைப் பற்றி அறியாதவரா ஹெரோது ஆண்டிபாஸ் ? ஜான் பாப்டிஸ்டு மாதிரியான ஆட்களை பாலைவனத்தில் பெரிய கூட்டங்கள் சேர்க்க அனுமதிப்பதன் ஆபத்துகளைக் கண்டுகொள்ளாமல் 43 வருடங்கள் ஆட்சி நடத்தவோ, கொள்ளையர்களை அழித்துக்கொண்டிருந்த கொடுங்கோலன் ஹரோது மாமன்னனின் புதல்வன் ஹரோது ஆண்டிபாஸ் இருந்திருக்க முடியுமா ? மெஸையாவுடன் இணையாத zealot-bandit நோக்கங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு தீர்க்கதரிசி எவ்வாறு அவ்வளவு கூட்டத்தைச் சேர்க்க முடியும் ?

செத்தகடல் ஓலைகள் (Dead Sea Scrolls) கண்டிபிடிப்பின் காரணமாக, ராணுவ மெஸையா பாரம்பரியத்தில் ஜான் பாப்டிஸ்டின் இடம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இயேசுவை ஜான் ஞானஸ்நானம் செய்வித்ததாகக் கூறப்படும் பகுதியில் இருந்த கும்ரான் (quamran) என்ற கிரிஸ்துவம் தோன்றுவதற்கு முந்தைய சமூகத்தின் அழிவுப்பகுதிகளைச் சார்ந்த குகைகளில் இந்த ஓலைகள் கண்டறியப்பட்டன. ‘காட்டில் பாதையை உருவாக்கும் ‘ நோக்கத்துக்காக, ஜான் பாப்டிஸ்டு போலவே இந்த கும்ரான் மதச் சமூகமும் தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக கூறிக்கொள்கிறது. இதுவரைக்கும் தெரியவராமல் இப்போது தெரியவந்த இந்த கும்ரான் சமூகத்தின் வளமையான ஆன்மீக இலக்கியங்கள், ரோமானிய சாம்ராஜ்யம் தன் இறுதி அழிவைச் சந்திக்கும் ஒரு மாபெரும் போருக்கு யூதர்கள் இட்டுச்செல்லும் ஒரு வரலாற்றை கூறுகிறது. டேவிடின் குடும்பத்தின் வழியில் வந்த ஒரு ராணுவ மெஸையா ரோமைத் தகர்த்து, ரோமுக்கு பதிலாக ஜெருசலத்தில் தலைநகரமாக்கி மாபெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணிப்பார்.இந்த மெசையா எந்த சீசரையும் விட ஆற்றல் மிக்கவராய் இருப்பார். படைகளின் மாபெரும் தளபதி, வெற்றிகொள்ள முடியாத சேனாபதி, “இஸ்ரேலின் அபிஷேகம் செய்யப்பட்ட மெஸையாவால்” வழிநடத்தப்பட்டு, “ஒளியின் குழந்தைகளான” யூதர்கள்( ‘sons of light ‘), இருட்டின் புத்திரர்களான ( ‘sons of darkness ‘) ரோமானியருடன் பொருதுவார்கள். இது ஒரு மாபெரும் அழிவுப்போராக இருக்கும். 28,000 யூத போர்வீரர்களும், 6000 குதிரை ரத வீரர்களும் ரோமானியர்களை எதிர்கொள்ளுவார்கள். அவர்கள் ‘எதிரியை துரத்தி அடித்து, அவனை அழித்து, அவன் பூண்டோடு நிரந்தரமாக அழியும் வரைக்கும் போரிடுவார்கள்… ‘ வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஏனெனில், ‘நீங்கள் எம்மிடம் பழைய ஆகம வார்த்தையைச்சொல்லியிருந்தீர்கள். ‘ ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும் ‘(Book of Numbers எண்ணாகமம் 24.17. இந்த தீர்க்கதரிசனம் பின்னால் பார் கோச்வாவுக்கு பொருத்தப்பட்டது). இஸ்ரேல் வெற்றி பெறும், ஏனெனில், ‘ கடந்த காலத்தைப் போலவே, உன்னால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ,தீய சக்திகளை தானியப்பொதியை நெருப்பு எரித்தது போன்று எரித்தார்கள்… பழைய புத்தகங்களில், எதிரி… வீழ்வது மனிதனது வாளால் இருக்காது.. அவனை உண்பது மனிதனது வாளால் இருக்காது ‘( ‘because as in the past, through thine annointed ones thou hast devoured evil like a blazing torch in a swath of grain… for of old thou hast proclaimed that the enemy…shall fall by a sword not of man, and a sword not of man shall devour him. ‘)

கும்ரான் சமூக மக்கள், போரைத் துல்லியமாக கணக்கிட்டு கடைசி விஷயம் வரைக்கும் வரையறை செய்திருந்தார்கள். ஏன் வெற்றிக்குப் பிறகு பாடப்படும் பாடலைக்கூட இயற்றியிருந்தார்கள்..

Arise, O Valiant One!

Lead away Thy captives, O glorious Man!

Do Thy plundering, O valorous One!

Set Thy hand upon the neck of Thine enemies

And Thy foot upon the heap of the slain!

Strike the nations Thy enemies

And let Thy sword devour guilty flesh!

Fill the land with glory

And Thine inheritance with blessing!

A multitude of cattle in Thy pastures,

Silver and gold and precious stones in thy palaces!

O Zion, rejoice greatly!

Appear amid shouts of joy, O Jerusalem!

Show yourselves, O all you cities of Judah!

Open thy gates forever.

For the riches of the nations to enter in!

And let their kings serve thee

And let all thy oppressors bow down before thee

And let them lick the dust of thy feet!

எழுக, வலியோனே!

உன் கைதிகளை இழுத்துச்செல், போற்றலுக்குரியோனே!

உன்னுடைய கொள்ளைகளை நடத்து, ஓ வலியோனே!

உன் கரங்களை உன் எதிரிகளின் கழுத்தில் வீசு!

உன்னுடைய கால்களை வீழ்ந்தவர்களின் குவியலின் மீது வை!

உன்னுடைய எதிரிகளான அந்த நாடுகளை தாக்கு!

குற்றவாளிகளின் தசைகளை உன் வாள் விழுங்கட்டும்!

உன்னுடைய தொழுவத்தில் அளப்பறிய கால்நடை மந்தை!

வெள்ளியும் பொன்னும் நவரத்ன மாணிக்கங்களும் உன் மாளிகைகளில்!

ஓ ஜியான்! நன்றாக மகிழ்ந்தெழு!

ஓ ஜெருசலேம்! என்று உரத்த சந்தோஷ ஒலிகளுக்கிடையே தோன்று!

ஓ ஜ்உடாயாவின் நகரங்களே! வந்து நில்லுங்கள்!

உங்கள் கதவுகளை நிரந்தரமாய் திறந்து வையுங்கள்!

பல்வேறு நாடுகளின் செல்வங்கள் உள்ளே புகட்டும்!

அந்த நாடுகளின் அரசர்கள் உங்களுக்கு சேவை செய்யட்டும்!

உனது அடக்குமுறைக்காரர்கள் உங்கள் முன் முழந்தாளிடட்டும்!

உங்கள் காலடித் தூசுகளை அவர்கள் நக்கட்டும்!

வரப்போகும் மெஸையா (anointed one)வு க்காக முன்னணிப்படை போல செயல்பட மிஷனரிகளை இந்த கும்ரானியர்கள் அனுப்பினார்கள் என்பதும் தெரிகிறது. ஜான் பாப்டிஸ்டு போல, இந்த மிஷனரிகளும், வெட்டுக்கிளிகளையும் காட்டுத்தேனையும் உண்டு விலங்கு தோல்களை உடுத்து அலைந்ததாக குறிக்கப்படுகின்றனர். ஜான் பாப்டிஸ்டு போலவே, அவர்களது நோக்கமும், இஸ்ரவேலின் குழந்தைகள் தங்களது பாவங்களுக்காக மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்யவேண்டுமென்பதே. இந்த மிஷனரிகள் ஞானஸ்நானம் செய்வித்தார்கள் என்பது நிரூபிக்க முடியாதென்றாலும், கும்ரானுக்குள்ளே பரந்த குளியல் அறைகள் சடங்குகளுக்காக கட்டப்பட்டிருப்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட குமுகங்களின் உள்ளே நடக்கும் பரந்த நீண்ட ஞானஸ்நான சடங்குகளின் சுருக்கப்பட்ட நிகழ்வாக ஜான் பாப்டிஸ்டுவின் ஞானஸ்நானம் அறிமுகப்படுத்தபட்டிருக்கலாம். இந்தக் குளியல்கள் யூத ஆன்மீகத் தூய்மையின் கருத்துக்களை ஒரு சில வகைகளில் பிரதிபலிக்கின்றன.

ஜோஸஃபஸ் மற்றும் கிரிஸ்துவ ஆக்மங்கள் எழுதியவர்களின் எழுத்துக்களில் இப்படிப்பட்ட இலக்கியம் இருக்கிறது என்ற நுண் குறிப்பு கூட இல்லை என்பது இங்கே சிறப்பாக குறிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன். இந்த ஓலைகள் இல்லையேல், இப்படிப்பட்ட ராணுவப் புனிதர்கள் எதற்காக வேலை செய்துவந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரிந்திராது. ஏனெனில் கும்ரான் கிபி. 68இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது. ‘இருளின் புத்திரர்”களாய்க் கருதப்பட்ட கும்ரான் சமுதாயம் அழிக்கப்பட்டதற்கு முன்னால், இந்த நூலகத்தின் ஓலைகளை கூஜாக்களிலும் பானைகளிலும் வைத்து பூட்டி அங்கங்கு இருந்த குகைகளில் கும்ரான் சமூகத்தினர் மறைத்து வைத்தனர். இந்த ஓலைகள் 2000 வருடங்களாக தொடப்படாமல் யாருக்கும் தெரியாமல் புதைந்து கிடந்தன. இவைகளை யாரும் கடந்த 2000 வருடங்களில் தொட்டு திருத்தியிருக்க முடியாது என்பதாலேயே இவை, கிரிஸ்துவின் காலத்துக்கு சற்று முந்தியும் பிந்தியும் இருந்த யூத மதத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் மகத்தான மூல ஏடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கும்ரான் ஓலைகள், ஜான் பாப்டிஸ்டுவின் போதனைகளையும், அங்கு மைய நீரோட்டமாக இருந்த யூத ராணுவ மெஸையா பாரம்பரியத்தையும் பிரிக்கமுடியாதபடி செய்கின்றன. . ரோமுடன் ரத்தம் தோய்ந்த நீண்ட கொரில்லாப் போரின் நடுவே, ஜான் பாப்டிஸ்டு கூறும் ‘பசி தீராத நெருப்பில் எரியும் உமிகள் ‘ உவமை, கும்ரானியர்கள் தீர்க்கதரிசனம் கூறும் ‘தான்யக்குவியலில் பற்றி எரியும் நெருப்பு ‘ என்பதற்கு எதிரானதாக இருக்கமுடியாது. ஜான் பாப்டிஸ்டு மனத்தில் என்ன இருந்தது என்பதைப் பற்றி எனது ஊகங்களைக் கூறவில்லை. ஆனால், அவரது நடத்தையை இன்னும் பிறக்காத ஒரு மதத்தின் நிலைப்பாட்டிலிருந்து எடை போட முடியாது. புழுதி நிறைந்த நிலங்கள், விவசாயிகள் கிராமப்புறத்தினர் ஆகியோர் பொங்கி ததும்பும் கும்பல்கள், கொரில்லாக்கள், வரி ஏய்ப்பவர்கள், திருடர்கள், ஜோர்டானில் முழங்கால் ஆழத்தில் நின்றுகொண்டிருக்கும் கும்பல், ஹரோத் போன்ற கொடுங்கோலர்கள் மீது பொங்கும் வெறுப்பு, கைப்பாவையாக இருக்கும் மதகுருக்கள், அரக்கத்தனமான ரோமானிய ஆளுனர்கள், புனித யூத கோவில்களில் அசிங்கமாக வாயு பிரிக்கும் ரோமானிய போர்வீரர்கள் ஆகியவற்றின் பின்னணியிலேயே அவர் கூறிய வார்த்தைகளையும் செயல்களையும் புரிந்துகொள்ள முடியும்.

ஜான் பாப்டிஸ்டு கைது செய்யப்பட்ட உடனேயே, அவர் ஹரோத் ஆண்டிபாஸின் முன்னிலையில் வழக்கு நடப்பதற்கு காத்திருக்கும்போதே, இயேசு அதே மாதிரியான மக்களிடம் அதே மாதிரியான சூழ்நிலையில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். இயேசுவின் முதல் சீடர்கள், குறைந்தது இரண்டு பேர் சைமன் பீட்டர், ஆண்ட்ரூ ஆகிய சகோதரர்கள், ஜான் பாப்டிஸ்டை முன்பு பின்பற்றியவர்கள். இயேசுவுக்கும் ஜான் பாப்டிஸ்டுக்கும் சிறிதளவு வித்தியாசத்தையும் ஹரோது ஆண்டிபாஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஏசு பற்றிச் சொன்னதாக, ‘இது ஜான், நான் தலையை வெட்டிய ஆள், அவர் இறப்பிலிருந்து மீண்டெழுந்துவிட்டார் ‘ கூறப்படுகிறது. மையமாய் இல்லாத கிராமப்புறப் பகுதிகளிலே அற்புதங்களைச் செய்து ஏராளமான கூட்டங்களை வசீகரித்து யேசு தன் பெரும்பாலான பிரச்சாரங்களைச் செய்தார். பெரும்பாலும் அவர் போலீசுக்குத் தப்பி ஓடியபடியே இருந்திருக்க வேண்டும். ஜோஸஃபஸ் விவரிக்கும் மெஸையா இறைதூதர்களைப் போலவும், ஜான் பாப்டிஸ்டு போலவும், இயேசுவும் ஒரு மோதலையே ஆரம்பித்தார். இந்தப் போக்கு இயேசுவின்கைதில் முடியவேண்டும் அல்லது இன்னொரு மாபெரும் புரட்சியில் வெடிக்கவேண்டும்.

இயேசுவின் வளரும் புகழ், அவரை, இன்னும் அதிகமான ஆபத்தான வீரதீரங்களுக்கு, உந்தித்தள்ளியது. புனித யூத பேரரசின் வாக்களிக்கப்பட்ட தலைநகரான ஜெருசலத்திலும் தங்கள் வேலையை ஆரம்பிக்க அவரும் அவரை பின்பற்றியவர்களும் வெகு விரைவிலேயே முன்வருகிறார்கள். சக்கரையாவின் புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசன அடையாளக்குறிப்புகளை வேண்டுமென்றே உரத்து தேர்ந்தெடுத்து, இயேசு கதவுகளின் நடுவே கழுதை மீதேறி (குதிரையாகவும் இருக்கலாம்) ஊர்வலம் வந்து ஜெருசலம் நுழைகிறார். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளில் பைபிள் போதிப்பவர்கள், இயேசு இதனைச் செய்ததன் காரணம், “அஞ்ஞானிகளுக்குச் சமாதானம் கூற” முனைந்ததுதான் ( ‘speak peace unto the heathens ‘) என்று சொல்வார்கள். இது சக்கரியாவின் புத்தகத்தின் உள்ளே முழுமையாக இருக்கும் மிக முக்கியமான ராணுவ மெஸையா வரிகள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் போவதாகும். ஏனெனில், சக்கரியாவின் மெஸையா எளிமையாக கழுதை மீது சவாரி செய்து வருவதன் பின்னே, ஜியானின் பிள்ளைகள் (மொ.கு யூதர்கள்) ‘அனைத்தையும் விழுங்கி அடக்குகிறார்கள் ‘(devour and subdue) “அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள். கர்த்தர் அவர்களோடே கூட இருப்பார். குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் தடுமாறுவார்கள். ( ’10:5 mighty men which tread down their enemies in the mire of the streets in battle… because the Lord is with them and the riders on horses shall be confounded. ‘)

கழுதை மீது அமர்ந்து சவாரி செய்துவரும் உருவம் அமைதியான மெஸையா அல்ல, சமாதான பிரபு அல்ல. அந்த உருவம், ஒரு சிறு நாட்டின் மெஸையா, தனது ஏமாற்றும் எளிமையிலிருந்து மேலெழுந்து எதிரியின் குதிரைப்படையையும் குதிரை ரதப்படையையும் அழித்து அடக்கும் போரின் இளவரசன், டேவிடின் வழித்தோன்றல். யூதனல்லாதவன் (heathen) சமாதானம் அடைவான். அது வெகுகாலம் காத்திருந்த புனித யூதப் பேரரசின் சமாதானம். தெருவெங்கும் நிறைந்திருந்த கூட்டம், இயேசு கடந்து செல்லும்போது அப்படித்தான் அதைப் புரிந்திருக்கும். ஏனெனில், அவர்கள், ‘ஹோசன்னா, கடவுளின் பெயரால் வருபவனுக்கு நல்லாசிகள். நமது தந்தையார் டேவிடின் சாம்ராஜ்யத்துக்கு நல்லாசிகள் ‘ என்றே கத்தினார்கள்.

இயேசுவும் அவரைப் பின்பற்றியவர்களும் நகரத்துக்குள் நுழைந்ததும் செய்த விஷயங்களில் அமைதியானது என்று எதுவும் இல்லை. பாஸோவர் விருந்திற்குச் சற்று முன்னர் ஜெருசலத்தை ஆக்கிரமிக்கத் தேர்ந்தெடுத்ததன் மூலம், கிராமப்புறங்களிலிருந்தும், மத்தியதரைக்கடல் பிரதேசங்களிலிருந்தும் வந்து குவிந்த புனித நாள் யாத்திரீகர்களின் பாதுகாப்பைப்பெற்றுக்கொண்டார்கள். மதத்தீவிரவாத- கொள்ளையர்கள்(zealot-bandits), கிராமப்புறத்தினர், உழைப்பாளர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் இன்னும் கட்டுப்பாடற்ற பல குழுக்கள் ஒரே நேரத்தில் நகரத்துக்குள் ஆறு போல பாய்ந்து வந்துகொண்டிருந்தனர். நாள் முழுவதும், இயேசு எங்கும் போகாமல், ஆர்வமுள்ள கூட்டத்தின் நடுவே இருந்தார். இருட்டானதும், அவர் நண்பர்களின் வீடுகளிலிருந்து நழுவிச்சென்று தான் எங்கிருக்கிறோம் என்ற விஷயத்தை மிகவும் குறுகிய சீடர் வட்டத்தை தவிர வேறொருவருக்கும் தெரியாமல் மறைத்திருந்தார்.

அன்றைய ராணுவ மெஸையா இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்ல என்று காட்ட எந்த ஒரு அடையாளத்தையும் இயேசுவும் அவர் தம் சீடர்களும் செய்யவில்லை. குறைந்த பட்சம் ஒரு வன்முறை மோதலையும் தூண்டினார்கள். அவர்கள் மாபெரும் கோவிலின் முற்றத்தில் புகுந்து அங்கு இருந்த வியாபாரிகளையும், வெளிநாட்டு யாத்ரீகர்கள் பலிக்காக விலங்குகள் வாங்க உதவுவதற்காக, வெளிநாட்டுப் பணத்தை உள்நாட்டு பணமாக மாற்றித்தரும் வியாபாரிகளையும் தாக்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் போது இயேசுவும் சவுக்கை உபயோகப்படுத்தினார்.

கிரிஸ்துவ பைபிளின் ஆகமங்கள், எவ்வாறு தலைமை மதகுரு கையஃபாஸ் (Caiaphas) இயேசுவை கைது செய்ய ‘திட்டம் தீட்டினார் ‘ என்று கூறுகின்றன. பணம் மாற்றுபவர்கள் மீது வன்முறை தாக்குதலை நேரில் பார்த்த கையஃபாஸ் இயேசுவை சிறையில் போடுவதுசட்டப்பூர்வமானது தான் என்பது பற்றிய எந்த விதமான சந்தேகமும் இருக்காது. ஆனால், இயேசுதான் மெஸையா என்று நினைக்கும் மக்களை தூண்டிவிடாமல் எப்படி அவரைக் கைது செய்வது என்பதைப் பற்றித்தான் கையஃபாஸ் கணக்கிட வேண்டியிருக்கும். துப்பாக்கிகளும் கண்ணீர் புகை குண்டுகளும் இல்லாத அந்த காலத்தில், அதுவும் முக்கியமாக, ஒரு கும்பல் வெற்றி கொள்ளமுடியாத பெரும் தலைவர் தம்முடன் இருக்கிறார் என்று நினைத்தால், அது மிக மிக ஆபத்தானது.

இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்திற்கு, நிச்சயமாக ஒரு அஹிம்சை வாழ்க்கை முறையைப் பின்பற்ற நேரமில்லை. ஏன், அவரது மிக நெருங்கிய சீடர்கள் கூட ‘அடுத்த கன்னத்தை காட்ட ‘ தெளிவாக தயாராக இல்லை. குறைந்தது இரண்டு பேர்களது பட்டப்பெயர்கள் அவர்கள் ராணுவ தீவிரவாதிகள் என்பதை குறிப்பிட்டுக்காட்டுகின்றன. ஒருவர் சைமன். அவர் zealot என்றே அறியப்பட்டார். மற்றவர் யூதாஸ் இஸ்காரியத் Judas Iscariot. sicarri என்ற வார்த்தைக்கும் Iscariot என்ற வார்த்தைக்கும் தவிர்க்க முடியாத ஒற்றுமை உள்ளது. ஜோஸஃபஸ் இந்த வார்த்தையையே கத்தி வீசும், கொலைகார குறுவாள் வீரர்களுக்கு உபயோகப்படுத்துகிறார். ஒரு சில புராதனமான லத்தீன் ஆவணங்களில் யூதாஸை zelotes என்ற பெயரிலேயே எழுதுகின்றனர்.

மற்ற இரண்டு சீடர்கள் போர்க்குணமுள்ள பட்டப்பெயர்களைக் கொண்டிருந்தனர். ஜேம்ஸ் ஜான் ஆகிய இருவரும் ஜெபடாயின் மகன்களாக அறியப்பட்டனர். (sons of Zebedee) இவர்கள் போவனெர்ஜெஸ் (Boanerges) என்று அழைக்கப்பட்டனர். அராமய்க் மொழியிலிருந்து மார்க் மொழிபெயர்க்கும்போது இதனை இடியின் மைந்தர்கள் என்று மொழிபெயர்க்கிறார். இதை ‘கடுங்கோபமுடைய கடூரர்கள் ‘ என்றும் மொழிபெயர்க்கலாம். ஜெபடாயின் மைந்தர்களுக்கு இந்தப் பெயர் பொருத்தமானதே. ஆகமத்திலேயே ஒரு இடத்தில், ஒரு சமாரிய கிராமம் இயேசுவை வரவேற்காததால், அந்த கிராமத்தையே அழிக்க விரும்புகிறார்கள்.

ஆகமங்கள் , ஒரு சில சீடர்கள் வாட்களை தங்களோடு வைத்திருந்தார்கள் என்பதும், கைது செய்யப்பட்டால் எதிர்த்துப் போராட தயாராக இருந்தார்கள் என்பதையும் கூட குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட சற்று நேரத்திற்கு முன்னர், இயேசு ‘எவன் கையில் வாள் இல்லையே அவன் தன்னுடைய உடையை விற்று வாளை வாங்கிக்கொள்ளட்டும் ‘ என்று கூறுகிறார். அவரது சீடர்களை தங்களிடம் இரு வாட்கள் இருக்கின்றன என்று காட்டத் தூண்டுகிறது. அதாவது அந்த சீடர்களில் இருவர் நிரந்தரமாகவே ஆயுதம் தாங்கியவர்கள் என்பதையும், அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் தங்கள் உடைகளில் மறைத்து வைத்திருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது… குறுவாள் வீரர்கள் போல.

இயேசு கைது செய்யப்பட்டபோது, அவரது சீடர்கள் அனைவரும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை காட்டினார்கள் என்பதை நான்கு ஆகமங்களுமே பதிவு செய்கின்றன. பாஸோவர் இரவு உணவின் பிறகு, இயேசுவும் அவரது மிக நெருங்கிய உள் வட்டமும், நழுவிச் சென்று கெத்செமெனே தோட்டத்திற்கு போய் இரவைக் கழிக்க சென்றனர். யூதாஸ் இஸ்காரியத்தால் வழி நடத்தப்பட்டு தலைமை மதகுருவும் அவரது ஆட்களும் அவர்கள் மீது பாய்ந்து பிடித்தார்கள். அப்போது இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார், மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சீடர்கள் தங்கள் வாட்களை உருவினார்கள். ஒரு சிறிய போராட்டம் நடந்தது. அப்போது அந்த சண்டையில் கோவில் காவலர் ஒருவரது காது வெட்டப்பட்டது. காவலர்கள் இயேசுவை பிடித்ததும், சீடர்கள் போரிடுவதை நிறுத்திவிட்டு இரவுக்குள் ஓடி மறைந்தார்கள். மாத்தியூவின் லிகிதத்தில், இயேசு தன் சீடர்களில் ஒருவரிடம் வாளை உறைக்குள் போடும்படி கூறினார். அந்த கட்டளைக்கு சீடர் கீழ்ப்படிந்தாலும், சீடரால் இயேசு சொன்னதை கேட்க முடியவில்லை, ஏனெனில் அவர் ஏற்கெனவே ஓடிவிட்டார்.

ஆகமக் கதைகளில், ஹெரோடியாஸ் ஜான் பாப்டிஸ்டை திட்டியது போன்ற ஒரு பரிசு யூதாசுக்கு வழங்கப்படுகிறது. யூதாஸ் உண்மையிலேயே ஜிலோத்தாக இருந்தால், அவர் இயேசுவை எத்தனையோ தந்திரோபாயங்களுக்காகவோ, அல்லது ராணுவ திட்டத்துக்காகவோ காட்டிக்கொடுத்திருக்கலாம், ஆனால் ஒரு போதும் பணத்துக்காக இருக்காது. (ஒரு காரணம், இயேசு போதுமான அளவு போராட்ட உணர்வுடன் இல்லாமல் இருப்பதாகக் கருதியதாக இருக்கலாம்). யூதாஸின் காரணம் வெறும் பேராசை என்று சொல்வதன் மூலம், ஜோஸஃபஸ்ம், ரோமானியர்கள் ஆகியோர் மதவெறிக் கொள்ளைக்காரர்களை வர்ணனை செய்தது போன்ற சிதிலமான சித்திரத்தை ஆகமங்கள் யூதாஸின் மீதும் பிரயோக்கின்றன. மதவெறிக் கொள்ளையர்கள் பணம் இல்லாமலேயே கொல்ல தயாராக இருந்தார்கள். சென்ற அத்தியாயத்தில் உள்ள நிகழ்ச்சிகள் மூலம் அது தெளிவான விஷயம்.

ஏன் சீடர்கள் ஓடிப்போனார்கள் ? ஏன் சைமன் பீட்டர் இரவு முடிவதற்கு முன்னால் மூன்றுமுறை மறுதலித்தார் ? ஏனெனில், யூதர்கள் அனைவரும், கையபாஸ் உட்பட, தங்கள் மூதாதையர்களது மெஸையா வாழ்நெறியை புரிந்திருந்தார்கள். மெஸையா வெற்றிகொள்ளமுடியாத மாபெரும் அற்புதங்கள் செய்யும் ராணுவ இளவரசர்.

இது ஒரே ஒரு முடிவுக்குத்தான் இது இட்டுச் செல்கிறது. இயேசுவும் அவரது உள் வட்ட சீடர்களும் பங்கெடுத்த வாழ்நெறி அமைதியான சமாதான பிரபு வாழ்நெறி அல்ல. ஆகமங்கள் தெளிவாக வன்முறையான அரசியல் வேலைகளைச் செய்யக்கூடிய வலிமை உள்ள இயேசுவை வரையவில்லை என்றாலும், அடிநாதமாக, முன்னுக்குப் பின் முரணான நிகழ்வுகளையும் வார்த்தைகளையும் கொண்டு, ஜான் பாப்டிஸ்டுவையும் இயேசுவையும் ஒரே ராணுவ மெஸையா பாரம்பரியத்தில் இணைத்து, கொரில்லா போர்முறையில் அவர்கள் இருவரையும் குற்றவாளிகளாக்குகின்றன. முதலாவது ஆகமம் எழுதப்பட்டபோது, இயேசு கூறிய வன்முறை வார்த்தைகளும், வன்முறை செயல்களும் நேரடியாகப் பார்த்த மத நம்பிக்கையாளர்களால் பரவலாக அறியப்பட்டிருந்தன. அதிகாரப்பூர்வமான தவறென்று கூற முடியாத அப்போஸ்தலரது பதிவுகளில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. ஆகமங்கள் எழுதப்பட்டபோது, இயேசுவின் வார்த்தைகள் சமாதானம் அமைதி அஹிம்சையின் திசை நோக்கி தள்ளப்பட்டன. ஆயினும் இயேசுவின் வாழ்வில் இருந்த தொடர்ச்சியான ராணுவ மெஸையா பாரம்பரியத்தின் அங்கங்கு இருக்கும் குறிப்புகளை முழுவதுமாக நீக்க முடியவில்லை. ஆகம்ங்களின் இந்த முரண்பாடுகளை இயேசுவின் அமைதியான வார்த்தைகளையும், எதிர்பாராத முறையில் தோன்றும் அவற்றின் எதிர்மறை வார்த்தைகளையும் ஒன்றன் அருகில் மற்றொன்றாகப் பார்க்கும் போது தெளிவாகப் புலப்படும்.

5:9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்

(Blessed are the peacemakers. Matthew 5:9)

10:34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, வாளையே அனுப்பவந்தேன

(Think not that I am come to send peace

on earth, I come not to send peace but

a sword. Matthew 10:34)

5:39 ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.

Whosoever shall smite thee on thy right cheek, turn to him the other also (Matthew 5:39)

12:51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Suppose ye that I come to give peace on earth ? I will tell you nay, but rather division rather division(Luke 12:51)

26:52 வாளை எடுக்கிற யாவரும் வாளினால்மடிந்து போவார்கள்.

All that take the sword shall perish with the sword. (Matthew 26:52) 22:36

வாள் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

He that hath no sword, let him sell his garments and buy one. (Luke 22:36)

6:27 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

Love thine enemies; do good to to them that hate you. (Luke 6:27)

2:15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,

And when he had made a scourge of cords, he drove them out of the temple…and poured out the changer ‘s money and overthrew the tables. (John 2:15)

இங்கே, யூதர்கள் ரோமானியர்களுக்கு வரிகள் கொடுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இயேசு சொன்னதற்கு பாரம்பரியமாகக் கொடுக்கப்பட்டுள்ள பொய்யான கட்டமைப்பை குறிப்பிட வேண்டியிருக்கிறேன். ‘சீசருக்குக் கொடுக்க வேண்டியதை சீசருக்குக் கொடுங்கள். கடவுளுக்குக் கொடுக்க வேண்டியதை கடவுளுக்குக் கொடுங்கள் ‘. கலிலியின் யூதாஸ் நடத்திய வரிகொடா போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த கலிலி மக்களுக்கு இது ஒரே ஒரு பொருளைத்தான் தரும். அதாவது ‘ரோமானியர்களுக்கு வரி கொடுக்காதே ‘. ஏனெனில், கலிலியின் யூதாஸ் பாலஸ்தீனத்தில் உள்ள அனைத்தும் கடவுளுக்கே உரித்தானது என்று கூறியிருந்தார். ஆனால், கிரிஸ்துவ பைபிளின் ஆகமங்களை எழுதியவர்களுக்கோ அல்லது அந்த ஆகமங்களைப் படிப்பவர்களுக்கோ கலிலியின் யூதாஸ் பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே, மிகவும் மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் அமைந்த இயேசுவின் பதிலை, இது உண்மையிலேயே ரோமானிய அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறது என்று நினைத்து தக்கவைத்துக்கொண்டுவிட்டார்கள்.

அவரை பிடித்ததும், ரோமானியர்களும் அவர்களது யூத கைப்பாவைகளும், இயேசுவை ஒரு உண்மையான அல்லது தயாராக இருக்கிற ராணுவ மெஸையா புரட்சியின் தலைவராகவே நடத்தினார்கள். தவறான தீர்க்கதரிசனங்கள் சொன்னதற்காகவும், யூத மதத்துக்கு அவமதிப்பான வார்த்தைகள் பேசியதற்காவும் அவரை நீதி விசாரணை செய்தார்கள். உடனே அவரை குற்றவாளி என முடிவு செய்தனர். பின்னர், மதம் தவிர்த்த பிற குற்றங்களுக்காக இரண்டாவது விசாரணை செய்ய அவரை போண்டியஸ் பிளேட்டிடம் அனுப்பினர். இதன் காரணம் மிகவும் தெளிவானது. சரக்குபெட்டி மதம் பற்றிய அத்தியாயத்தில் காட்டியது போல, காலனிய பின்னணியில், எல்லா பிரபலமான மெஸையாக்களுமே அரசியல் மத குற்றங்களுக்காகவே குற்றவாளியாக இருக்கிறார்கள். மதக் குற்றங்களுக்காக மட்டும் அல்ல. ரோமானியர்களுக்கு அங்கிருக்கும் பிராந்திய மக்களின் மதச் சட்டங்களை இயேசு பின்பற்றாததைப் பற்றி எந்த வித கவலையும் இல்லை. அவர்களது கவலையெல்லாம், அவர் ரோமானிய காலனியாதிக்கத்துக்கு எதிரான ஆபத்தாக இருப்பதே.

இயேசு நிராதரவாக காட்டப்பட்டால் எப்படி கூட்டம் எதிர்வினையாற்றும் என்பதைப் பற்றிய கையாபாஸின் எதிர்பார்ப்புகள் சரியென வெகு விரைவிலேயே காட்டப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட மனிதனை பிளேட் பொதுவில் காட்சிப்பொருளாக ஆக்கியபோது எதிர்ப்பென ஒரு குரலும் எழும்பவில்லை. ஏன் கூட்டம் வேண்டினால், இயேசுவை விடுதலை செய்துவிடக்கூட பிளேட் அறிவித்தார். பிளேட் இந்த அறிவிப்பைச் செய்ததன் காரணம் இயேசு அப்பாவி என்று பிளேட்டே நம்பியதுதான் என்று கிரிஸ்துவ பைபிளின் ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், பிளேட் ஒரு தந்திரக்காரர் என்பதுவும், அவர் வலுவான கரம் கொண்ட ராணுவ தீவிரவாதி என்பதுவும், அவர் அடிக்கடி ஜெருசலம் கூட்டத்தோடு பிரச்னைகளை சந்தித்துவந்தார் என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும். ஜோஸஃபஸ் கூற்றின்படி, ஒரு முறை பிளேட் தந்திரமாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஜெருசலம் ஸ்டேடியத்துக்குள் அழைத்துவந்து அவர்களை போர்வீரர்கள் சுற்றிவளைக்க வைத்து அவர்களது தலைகளை வெட்டிப்போடப்போகிறேன் என்று பயமுறுத்தினார். மற்றொருமுறை, ஒரு கூட்டத்தினுள் ரோமானியப் போர்வீரர்களை பொதுமக்கள் உடைகளை அணியவைத்து நுழைந்து ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டதும் கண்ணில் பட்ட எல்லோரையும் வெட்டித்தள்ள ஆணையிட்டுக் கொன்றார். நேற்றுவரை அவர்களால் பாதுகாக்கப்பட்ட, போற்றப்பட்ட இயேசுவை கூட்டத்திடம் அவ்வாறு காண்பிப்பதன் மூலம், ராணுவ மெஸையா பாரம்பரியத்தின் மறுக்கமுடியாத தர்க்கத்தை உபயோகப்படுத்திக்கொண்டு, கூட்டத்திடம் அவர்களது முட்டாள்தனத்தை காட்டினார். அவர்கள் எதிர்பார்த்த புனித யூதப் பேரரசின் மாபெரும் மன்னர், அவர்களது தெய்வீக விடுதலை வீரர் மிகச்சில ரோமானிய போர்வீரர்களுக்கு முன்னிலையில் நிராதரவாக நிற்கிறார். கூட்டம், இயேசுவை மதப் பொய்யர் என்று கோரி அவரை கொல்லும்படித்தான் கேட்டிருக்கும். ஆனால் பிளேட்டுக்கு மதப் பொய்யர்களை சிலுவையில் அறைவதில் எந்த வித ஆர்வமும் இல்லை. ரோமானியர்களைப் பொறுத்த மட்டில், பாலைவனத்திலிருந்து ஊர்ந்து வெளியே வரும் எத்தனையோ கொள்ளையர்கள், புரட்சிக்காரர்கள் போல இன்னொரு ஆள்தான் இயேசு. அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அதே முடிவுதான் இவருக்கும். அதனால்தான், இயேசுவின் சிலுவையின் மீது ‘யூதர்களின் அரசர் ‘ என்ற பட்டம் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டது.

எஸ்.ஜி.எஃப் பிராண்டன், மான்ஸெஸ்டர் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை தலைவர்,(S. G. F. Brandon, a former dean of the School of Theology of the University of Manchester) நமக்கு இயேசு தனியாக சிலுவையில் அறையப்படவில்லை என்று ஞாபகப்படுத்துகிறார். இன்னும் இரண்டு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுடன் ஒருவராக தனது முடிவை அடைந்தார். இயேசுவின் கூட சிலுவையில் இருந்தவர்களின் குற்றங்கள் என்ன ? ஆங்கில மொழிபெயர்ப்பில் கோஸ்பலில் இவர்கள் திருடர்கள் (thieves) என்று குறிக்கப்படுகிறார்கள். ஆனால், கிரேக்க ஆவணங்களில் இவர்களை குறிக்க உபயோகப்படும் வார்த்தை lestai இதே வார்த்தையைத்தான் ஜோஸஃபஸ் ஜிலோத்து கொள்ளையரை குறிப்பிட உபயோகப்படுத்துகிறார். இந்தத் திருடர்கள் யார் என்பதைப் பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும் என்று பிராண்டன் நம்புகிறார். இயேசுவின் விசாரணையின் போது, ஜெருசலம் சிறையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் ‘புரட்சி செய்த ‘ சிறைக்கைதிகள் இருந்ததாக மார்க் எழுதுகிறார். இயேசுவின் அருகே சிலுவையில் இருந்தவர்கள் இவ்வாறு ‘புரட்சி செய்த ‘வர்களிலிருந்து வந்திருப்பார்களேயானால், கோல்கோத்தாவில் பார்க்கக்கூடிய காட்சி ஒரு ஒருங்கமைவை அடைகிறது. யூதர்களின் மெஸையா அரசர் நடுவே, அருகே இரண்டு மதத்தீவிரவாத கொள்ளையர்கள். பிராந்திய மக்களுக்கு சட்டம் ஒழுங்கைப்பற்றி பாடம் சொல்லித்தர விரும்பும் காலனிய அதிகாரிகளின் மனவியலுக்கு மிகவும் பொருத்தமான காட்சி.

கிரிஸ்துவ பைபிளின் நான்கு ஆகமங்களும் இயேசு சிலுவையில் சோகமாக துன்பம் அனுபவிப்பதும், சீடர்கள் யாரும் அருகே இல்லாத நிலையையும் ஒரு சேர கூறுகின்றன. மெஸையா தன்னை இவ்வாறு சிலுவையில் அறைய அனுமதிப்பார் என்பதை சீடர்கள் யாராலும் நம்ப முடியவில்லை. அவர்களால், இயேசு மதம் அமைதியான மெஸையா மதம் என்பதையோ அது பழிவாங்கும் மெஸையா மதம் அல்ல என்பதைப் பற்றியோ அந்த சீடர்கள் கற்பனையும் செய்யவில்லை. பிராண்டன் குறிப்பிடுவது போன்று, மெஸையா ஏன் எதிரிகளை அழிக்கவில்லை தன்னைத்தானே ஏன் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் சீடர்களுக்குப் பிடிபடவில்லை.

கல்லறையிலிருந்து இயேசுவின் சடலம் காணாமல் போவதன் பிறகுதான், அவரிடம் மெஸையா சக்தி இல்லை என்பது புரிபடுகிறது. பல சீடர்கள் இயேசுவின் உருவத்தை அங்குமிங்கும் மாயசக்தி போல் பார்க்கிறார்கள். மெஸையாவின் பரிசோதனை – அதாவது ராணுவ வெற்றி- இயேசுவுக்குச் சரியாக பொருந்தாது என்று புரிந்துகொண்டார்கள். உருவக்காட்சிகள் காரணமாக, இயேசுவின் மரணம் அவர் இன்னொரு பொய் மெஸையா என்று நிரூபிக்கவில்லை என்று வாதிட முனைந்தார்கள். அவர்கள் யெஹ்வாவின் ஒப்பந்தத்துக்கு தகுதியானவர்கள் என்று நிரூபிக்க யூதர்களுக்கு யெஹ்வா இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றும் வாதிட முனைந்தார்கள். இயேசுவை சந்தேகித்ததற்காக மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டு பிராயச்சித்தம் செய்து யெஹ்வாவின் மன்னிப்பைக் கோரினால், இயேசு மீண்டும் வருவார் என்று சொன்னார்கள்.

இயேசுவின் மரணத்துக்கு மறு விளக்கம் கொடுத்த ஒரே காரணத்தால், உடனே, ராணுவ மெஸையா நிராகரிக்கப்பட்டு, இயேசுவின் ராணுவ மெஸையா அரசியல் பரிமாணம் நிராகரிக்கப்பட்டது என்று நம்ப ஒரு காரணமும் இல்லை. பேராசிரியர் பிராண்டன் மிகவும் ஆதாரத்துடன் கூறுவது போன்று, கிரிஸ்துவை சிலுவையில் கொன்ற பின்னரிலிருந்து ஜெருசலத்தின் வீழ்ச்சி வரைக்கும் பெரும்பாலான யூதர்கள் ரோமை வீழ்த்தி ஜெருசலத்தை புனித யூதப் பேரரசின் தலைநகரமாக ஆக்க ஒரு மெஸையா வருவார் என்றே நம்பிக்காத்திருந்தார்கள். அப்போஸ்தலர்களின் நடபடிகள் (acts of apostles) ஆரம்பத்தில், (இயேசு இறந்ததும் என்ன நடந்தது என்பதைப் பற்றி லூக் எழுதியது) இயேசு மீண்டும் வருவதன் அரசியல் பரிமாணமே அவர்களது மனத்தில் முக்கிய விஷயமாக இருந்தது. மீட்டெழுந்த இயேசுவிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுதான், ‘ ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் ? ‘ மற்றொரு கிரிஸ்துவ பைபிளின் பகுதியான, புது ஏற்பாடு மூலத்தில், வெளிப்படுத்திய விசேஷம் (Book of Revelation), இயேசு மீண்டும் திரும்ப வருவதை வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்து, போர்களை செய்து, கண்கள் நெருப்பு போன்ற தழலுடன், ரத்தத்தில் ஊறிய உடையுடன், நாடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஆள்பவராகவும், “புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். “ என்பதாகவும் (tread the winepress of the fury of the wrath of God Almighty) சித்திரிக்கப்படுகிறார்.

செத்த கடல் ஓலைகளுடனும் இங்கு ஒருங்கிணைந்த தடயங்கள் காணப்படுகின்றன. சற்று முன்னர் மெஸையா இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்து வருவதும் புதிய கருத்தல்ல என்று சொன்னேன். செத்த கடல் ஓலைகள் ‘நேர்மையின் போதனையாளர் ‘ (teacher of righteousness) தன் எதிரிகளால் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து தனது மெஸையா காரியங்களை முடிப்பதை குறிப்பிடுகிறது. கும்ரானியர்கள் போல, யூத கிரிஸ்துவர்களும் தங்களை குமுகமாக அமைத்துக்கொண்டு, தங்களது ‘நற்செயல்களின் போதனையாளர் ‘திரும்பி வருவதற்காகக் காத்திருந்தார்கள்.

அப்போஸ்தலர்களது நடபடிகள் குறிப்பிடுகிறது

2.44. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

2.45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

4.34. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,

4.35. அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

( All that believed were together and had all things in common, and sold their possessions and goods, and parted them among all, according as any man had need. . . . Neither was there any among them that lacked, for as many were possessors of lands or houses sold them, and brought the prices of the things sold and laid them down at the apostless ‘ feet. )

பிராயச்சித்தம் செய்யவிரும்பும் யூதர்கள் எவ்வாறு நகரங்களில் குமுகங்கள் அமைப்பது என்பது பற்றிய அதே மாதிரியான வரையறைகளை செத்த கடல் ஓலைகளும் கொண்டிருப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். கும்ரான் தீவிரவாதிகளும், யூத கிரிஸ்துவர்களும் ஒரே நிலைகளுக்கு ஒரே மாதிரி வழிகளில் எதிர்வினை செய்கிறார்கள் அல்லது ஒரே ராணுவ மெஸையா இயக்கத்தின் கிளைகள், அல்லது அதே இயக்கத்தின் பகுதிகள் என்பதற்கான கூடுதல் ஆதாரம்.

நான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, ஜெருசலத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் வரைக்கும், இயேசுவை அமைதியான மெஸையா என்ற பிம்பத்தை உருவாக்குவது (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு. ஜெருசலத்தின் வீழ்ச்சி கிபி 70) துல்லியமாக்கப்படவில்லை. இயேசுவின் இறப்புக்கும் முதலாவது கோஸ்பல் எழுதப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் அமைதியான மெஸையாத்தனத்தின் அடித்தளங்களை கட்டியவர் பால்(Paul). ஆனால், யாருக்கெல்லாம், இயேசு ராணுவ மெஸையா redeemer தலைவராக இருந்தாரோ அவர்கள் தலைமைப்பொறுப்பெடுத்து தங்களது கொரில்லா இயக்கத்தை விரிவு படுத்தி கிபி 68இன் பெரும் மோதலுக்கு இழுத்துச் சென்றுகொண்டிருந்தனர். கிரிஸ்துவ பைபிளின் ஆகமங்கள் எழுதப்பட்ட காலம், – மிகவும் அமைதியான எல்லா மக்களுக்குமான மெஸையாஐ சித்தரிக்கும் ஆகமங்கள் – ரோமுக்கு எதிராக யூதர்கள் எழுப்பிய போர் முழுத்தோல்வியடைந்த காலம். யூத மெஸையா புரட்சியாளர்களை முழுவதுமாக தோற்கடித்த ரோமானிய தளபதிகள் ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசர்களாக ஆனபின்னர், சமாதானப்பிரபுவான மெஸையாவை உருவாக்கும் தேவை நடைமுறை தேவையாக ஆகிவிட்டது. தோல்விக்கு முன்னால், ஜெருசலத்தில் இருந்த யூத கிரிஸ்துவர்கள் யூத மதத்துக்கு விசுவாசம் கொண்டவர்களாக இருக்க வேண்டியது நடைமுறை தேவையாக இருந்தது. படு தோல்விக்குப் பின்னர், ஜெருசலத்தில் இருந்த யூத கிரிஸ்துவர்கள் பேரரசின் மற்ற பகுதிகளில் இருந்த யூத கிரிஸ்துவர்கள் மீது மேலாதிக்கம் செய்வது முடியாத விஷயமாகிவிட்டது. குறைந்தது, வெஸ்பாஸியன், டிடஸ் ஆகியோரின் ஆளுகைக்குக் கீழ் இருந்த ரோமாபுரியில் இருந்த யூத கிரிஸ்துவர்கள் மீது மேலாண்மை செய்வது முடியாத விஷயமாகிவிட்டது. தோல்வியுற்ற மெஸையா போருக்குப் பின்னால், தங்களது மதம் ரோமானிய பேரரசை கவிழ்க்கும் மெஸையா என்ற யூத நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய மெஸையாவால் உருவாக்கப்பட்டது என்பதை மறுப்பது கிரிஸ்துவர்களின் நடைமுறை தேவையாகிவிட்டது.

ஜெருசலம் கிரிஸ்துவ குமுகம் ‘தூண்கள் ‘ ( ‘the pillars ‘) எனப்பட்ட மூன்று பேர்களால் வழிநடத்தப்பட்டது. அதனை அப்போஸ்தலர்களின் நடபடிகள்( ‘Acts of the Apostles ‘) குறிக்கிறது. இவர்கள் ஜேம்ஸ், பீட்டர், ஜான் ஆகியோர். இவர்களில் ஜேம்ஸை, ‘இயேசுவின் சகோதரர் ‘ என்று பால் குறித்தார். (பெற்றோர் வழியா என்று தெரியவில்லை) ஜேம்ஸ் முக்கியமான தலைமைப்பொறுப்பில் முன்னுக்கு வந்தார். இயேசு இயக்கத்தின் யூத ராணுவ மெஸையா மூலங்களை பால் அழிக்க முனையும் முயற்சிகளுக்கு தீவிரமான எதிர்ப்பு போராட்டத்துக்கு ஜேம்ஸ் தலைமை தாங்கினார்.

கிபி 70 வரைக்கும் ஜெருசலம் கிரிஸ்துவ மதத்தின் மையமாக இருந்தாலும், ரோமானியப் பேரரசின் மற்ற நகரங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்த யூத வியாபாரிகள், படிப்பாளிகள், யூத கைவினைஞர்கள் மத்தியில் விரைவிலேயே பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டு யூதவழிபாட்டுத்தளங்களுக்குப் பிரயாணம் செய்த யூத கிரிஸ்துவ மிஷனரிகள் மூலம் இயேசுவைப் பற்றி இந்த வெளிநாட்டு யூதர்கள் அறிந்து கொண்டனர். இப்படிப்பட்ட மிஷனரிகளில் முக்கியமானவரான பால், (இயற்பெயர் டார்சஸைச் சார்ந்த சவுல் Saul of Tarsus) கிரேக்க மொழி பேசும்யூதர். இவரது தந்தையார் தனக்கும் தன் குடும்பத்துக்கும் ரோமானிய குடியுரிமை பெற்றிருந்தார். எந்த அப்போஸ்தலர்களோடு தொடர்பும் இல்லாத பால், இயேசுவை நேரடியாகப் பார்த்திராத பால் , நேரடியாக தனக்கு இயேசு அருள் பாலித்தார் என்று தன்னை இயேசுவின் அப்போஸ்தலர் என்று அறிவித்துக்கொண்டார். கிபி 49இலிருந்து கிபி 57 வரைக்கும் அவர் கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், தான் அரேபியாவிலும் டமாஸ்கஸிலும் மிஷனரி வேலையை 3 வருடங்களாகச் செய்துகொண்டிருப்பதாகவும், தான் எந்த ஒரு அப்போஸ்தலரையும் நேரடியாக சந்தித்துப்பேசியதில்லை என்றும் எழுதுகிறார். ஒரு கடிதத்தில் சிறிது நேரம் சிமோன் பீட்டரையும், ‘இயேசுவின் சகோதரரான ‘ ஜேம்ஸையும் சந்திக்க நேர்ந்தது என்றும் எழுதுகிறார்.

அடுத்த 15 வருடங்கள் பால் ஒரு நகரம் விட்டு ஒரு நகரம் சென்று பிரச்சாரம் செய்தார். ஆரம்பகாலத்தில் மதம் மாறியவர்கள் எல்லோருமே யூதர்களே. ஏனெனில், பால் கோரியவண்ணம் யூத தீர்க்கதரிசன வம்சாவளியை இயேசு பூர்த்தி செய்தார் என்பதை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் யூதர்களே. பால் தன்னை யூதர் என்று கருதிக்கொள்ளவில்லை எனினும், எந்த ஒரு யூத மதகுருவினிடமும் படிக்கவில்லை எனினும், ஹீப்ரூ பேசத்தெரியாது எனினும், அவரால், ரோம சாம்ராஜ்யத்தின் கிழக்குப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கும் யூத சமூகங்களில் இயேசு குறுமதத்துக்கு அணுக்கமான யூதர்களை கண்டறிய முடிந்திருக்கும். பேரரசில் மிகவும் அதிகமாக சிதறடிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் யூதர்களே என்பதும், கிபி 70 வரைக்கும் யூதர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன என்பதும் அவர்கள் மிகவும் செல்வாக்குடையவர்களாக ரோம சாம்ராஜ்யத்தில் இருந்தார்கள் என்பதும் நிதர்சனம். பாலஸ்தீனத்துக்கு வெளியே, சுமார் 30 லட்சத்திலிருந்து 60 லட்சம் வரைக்கும் இருந்த யூதர்களை மதமாற்றம் செய்ய முனைந்தார். இது ஜேம்ஸ் பாலஸ்தீனத்துக்குள் மதமாற்றம் செய்ய வேண்டியிருந்த யூதர்களை விட இரண்டு மடங்கு அதிகம். வெளிநாட்டில் வசிக்கும் எல்லா யூதர்களும் நகரங்களிலோ அல்லது சிறு நகரங்களிலோதான் வசித்தார்கள்.

வெளிநாட்டு யூத சமூகங்கள் அவரது பிரச்சாரத்தை மறுக்கின்றபோதெல்லாம், யூதரல்லாதவர்களை தன் மதத்தில் இணைத்துக்கொள்ள பால் சிறப்பு முயற்சி எடுத்துக்கொண்டார். இதுவும் புதிய விஷயம் அல்ல. சமூக, பொருளாதார சிறப்பு சலுகைகள் யூதர்களுக்கு இருந்தமையாலும், தொடர்ந்து நகர்ப்புறங்களில் யூதர்கள் வசித்துவந்தமையாலும், தொடர்ந்து மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறிக்கொண்டே இருந்தார்கள். யூத சட்டங்களுக்குக் கீழ்ப்படிபவர்களாகவும், ஆணுறுப்புத்தோல் வெட்டும் சடங்கு செய்து கொள்பவர்களாகவும் இருக்கும் வரைக்கும், ஆண்கள் யூதர்களாக வரவேற்கப்பட்டார்கள். பால் தனது மதமாற்ற பிரச்சாரத்தில் செய்த புதுமை, அவரது புதிய மெஸையா பிரச்சாரம் அல்ல, அவர் யூதர்கள் அல்லாதவர்களை ஆணுறுப்பு தோல்வெட்டும் சடங்கு இல்லாமலும், அவர்களை யூதர்கள் என்று அடையாளப்படுத்தாமலும், யூத கிரிஸ்துவர்களாக மதமாற்றம் செய்ததுதான்.

‘அப்போஸ்தலர்களின் செயல்பாடுகள் ‘ கூறுவதுபோல, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பால் ஜெருசலம் வந்து யூதரல்லாத மக்களை கிரிஸ்துவ மதத்துக்கு கொண்டுவரும் அவரது முயற்சிகளைத் தடை செய்யவேண்டாம் என்று ஜெருசலம் கிரிஸ்துவ தலைவர்களிடம் இறைஞ்சினார். , ஆண்தோல் நீக்கும் சடங்கு இல்லாமல் யூதரல்லாதவர்கள் கிரிஸ்துவர்களாக ஆகலாம், ஆனால், அவர்கள் சிலை வழிபாடு, தவறான உடலுறவு, கழுத்து நெறிக்கப்பட்டோ, ரத்தக்கறையுள்ளதாகவோ இருக்கும் கறியை உண்பது ஆகியவற்றை தவிர்த்திருக்க வேண்டும் என்று இறுதியாக, ஜேம்ஸ் தீர்ப்பு அளித்தார். ஆனால், ஜேம்சும் மற்ற ஜெருசலம் கிரிஸ்துவ தலைவர்களும், யூதரல்லாத ஆண் தோல் நீக்கும் சடங்கு செய்யாத கிரிஸ்துவர்கள், யூத கிரிஸ்துவர்களை விட தாழ்ந்தவர்களே என்று வலியுறுத்தினார்கள். சைமன் பீட்டர் ஆண்டியோக் ( Antioch) பிரதேசத்தில் பாலை சந்தித்தபோது எல்லா கிரிஸ்துவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர் என்று பால் எழுதினார். ஆனால், ஜேம்ஸ் அனுப்பிய விசாரணைக்குழு வந்தபின்னால், ஆணுறுப்பு தோல் நீக்கம் சடங்கு செய்யாத, யூதரல்லாத கிரிஸ்துவர்களுடன் சேர்ந்து உணவு உண்பதை உடனே சைமன் பீட்டர் நிறுத்தினார். அதாவது யூத கிரிஸ்துவ விசாரணைக்குழு ஜேம்ஸிடம் சொல்லிவிடும் என்று பயந்து.

புனித யூத சாம்ராஜ்யத்தில், இஸ்ரேலின் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயர்ந்த ஸ்தானத்தைப் பற்றி அதிகம் பேசாதிருப்பது, அவர் வெளிநாட்டில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளும்போது, பாலுக்கு நல்லது தான். அதே போல, இயேசுவின் மெஸையா வேலை நோக்கத்தின் இவ்வுலகத்திய ராணுவ மற்றும் அரசியல் பரிமாணங்களை உதாசீனம் செய்வதும் பாலுக்கு நல்லது தான். ஆனால், பால் உருவாக்கிய மத ரீதியான புதுமைகள், அவர் தீர்க்க முடியாத பிரச்னைகளை உருவாக்கின. ஜெருசலம் கிரிஸ்துவர்களின் தொடர்வாழ்வு அவர்கள் எவ்வாறு தங்களை உண்மையான யூத தேசபக்தியாளர்களாக காட்டிக்கொள்கிறார்கள் என்பதைப்பொருத்து அமைந்தமையால், இந்த புதுமைகள் அவருக்கும் , ஜேம்ஸ் மற்றும் ஜெருசலம் கிரிஸ்துவர்களுக்கும் இடையில் மோதல் பாதையை உருவாக்கியது. ரோமுடன் உச்சக்கட்டத்தை நெருங்கும் யூதப்போரின் மத்தியில் பல பிரிவுகளுக்கு நடுவே தங்களைத் தொடர்ந்து இருத்திக்கொள்வதற்காக தொடர்ந்து ஜெருசலம் கோவிலில் வழிபடுவதும், தங்களை யூத சட்டத்துக்கு பக்தி நிறைந்தவர்களாக காட்டிக்கொள்வதும் அவசியமாயிற்று. இயேசு மீண்டும் காட்சியளிப்பார் என்ற நம்பிக்கை, யூதத்தெய்வம் யாஹ்வாவின் ஒப்பந்தத்தின் மீது அவர்களது நம்பிக்கையை அதிகரித்ததே ஒழிய குறைக்கவில்லை.

வரப்போகும் மெஸையாவின் மீட்பின் போது, யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சமமாக அருள் கிடைக்கும் என்று கூறியதாகவும், யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பது போல யூத மதத்தின் சட்டங்களை யூதர்கள் உதாசீனம் செய்யச்சொன்னதாகவும் பாலை குற்றம் சாட்டினார்கள். இயேசு குறுமதத்தின் அப்படிப்பட்ட ஒரு விளக்கம் ஜெருசலத்தில் பரவினால், ஜேம்ஸ் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களுக்கு அழிவையே கொண்டுவரும். பிராண்டனின் வார்த்தைகளில், ‘யூத பார்வையில், அப்படிப்பட்ட ஒரு விளக்கம், இனம் மதம் என்ற இரண்டு பரிமாணங்களிலும், கடுமையான இறையியல் தவறு மட்டுமல்ல, அது மிகுந்த அதிர்ச்சி கொடுக்கக்கூடிய மத நிராகரிப்பும் கூட. ‘

இப்போதும் காணக்கிடைக்கும் இயேசுவின் வார்த்தைகளும் செயல்பாடுகளும், யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை அழித்துவிட முயலும் பாலின் முயற்சிக்கு எந்த ஆதரவும் தருவதில்லை. மார்க் எழுதிய ஆகமத்தில், சிரியரான கிரேக்க பெண் ஒருவர் இயேசுவின் காலடியில் விழுந்து தன் பெண் குழந்தை மீது வந்த பேய்களை ஓட்டும்படி இறைஞ்சுகிறார். இயேசு மறுக்கிறார்: ‘ முதலில் குழந்தைகள் உண்ணட்டும். குழந்தைகளின் உணவை எடுத்து நாய்களுக்கு போட அனுமதியில்லை ‘. சிரிய கிரேக்க பெண் திரும்ப வாதிட்டு, சொல்கிறார், ‘குழந்தைகள் உண்டபின் உதறும் துகள்களை மேஜைக்கடியில் இருக்கும் நாய்கள் உண்ணலாமே ? ‘ அதன் பின்னால், இயேசு மனமிரங்கி அந்த பெண்ணின் குழந்தையை குணப்படுத்துகிறார். ‘குழந்தைகள் ‘ என்பது இஸ்ரேலின் குழந்தைகளை மட்டுமே குறிக்கும். ‘நாய்கள் ‘ என்பது யூதரல்லாதவர்களையே குறிக்கும். முக்கியமாக சிரிய கிரேக்கர்கள் போன்ற எதிரிகளை. மார்க்கிலும் மற்ற கோஸ்பல்களிலும் இன்னும் வைத்திருக்கப்படும் இப்படிப்பட்ட வார்த்தைகளும் செயல்பாடுகளும் இருப்பதற்கு என்ன காரணமோ, அதுவே மற்ற பழிவாங்கும், இன மையம் கொண்ட வார்த்தைகளும் செயல்பாடுகளும் முழுவதுமாக அழிக்கப்பட முடியாதிருப்பதற்கும் காரணம். செவிவழி கேட்டவர்களின் பாரம்பரியம் உயிருடன் இருப்பதன் அடிப்படையிலேயே கிரிஸ்துவ பைபிளின் ஆகமங்கள் எழுதப்பட்டன. ஜேம்ஸ் பீட்டர் மற்றும் ஜான் ஆகியோர் கண்ணால் கண்ட சாட்சியங்கள் ராணுவ மெஸையா குணத்தின் நம்பகத்தன்மையையும், மற்ற இன மைய கருத்தாக்கங்களையும் வலியுறுத்துகின்றன. மேலும், மார்க் பிறப்பால் யூதர். ஆகவே, அவர் ஜெருசலத்தின் தாய் ‘சர்ச் ‘சின் ஸ்தாபகர்கள் வலியுறுத்திய இன மையக் கருத்தாக்கங்களிலிருந்து எப்போதுமே விடுதலை அடைந்தவராக இல்லை.

ஜெருசலம் குமுகத்தைக் காப்பாற்றுவதற்காக, கிரிஸ்துவத்தில் இருக்கும் யூத முக்கியத்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக, ஜேம்ஸ் போட்டி மிஷனரிகளை அனுப்பிவைத்தார். இவர்கள் பாலின் பின்பற்றலை குறைக்கவும், பாலின் நம்பகத்தன்மையைக் கெடுக்கவும் முனைந்தனர். பால் இயேசுவை காட்சியாக (vision) மட்டுமே பார்த்ததையும் நேரடியாக பார்த்ததில்லை என்பதையும் பால் ஒப்புக்கொண்டிருந்தமையால் இப்படிப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடியவராகவே இருந்தார். மேலும், வெளிநாட்டு யூத கோவில்களிடமிருந்து உதவியும் ஆதரவும் தொடர்ந்து பெற வேண்டிய கட்டாயத்திலேயே அவர் இருந்தார். ஆகவே, தீச்சகுனங்களும், தீர்க்கதரிசன எச்சரிக்கைகள் இருந்தபோதும், ஜெருசலம் சென்று தன் மீது குற்றம் சாட்டியவர்களைச் சந்திக்க முனைந்தார்.

ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியின் முன்னர் ஆஜராவது போல ஜேம்ஸ் முன்னிலையில் பால் நின்றார். ஜெருசலத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் இயேசுவை நம்புபவர்களாக இருந்தாலும், அவர்கள் ‘யூத சட்டங்களில் விசுவாசம் கொண்டவர்களாகவே ‘ இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு பாலை ஜேம்ஸ் கடிந்துரைத்தார். தான் ஒரு விசுவாசமான யூதர் என்பதையும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்பதையும் நிரூபிக்கும்படியும், ‘ஒழுங்கான முறையில் நடந்துகொள்வதையும் யூதச்சட்டத்தை பாதுகாக்கிறார் ‘ என்பதையும் நிரூபிக்கும்படியும் ஜேம்ஸ் பாலுக்கு கட்டளையிட்டார். ஜெருசலம் கோவிலில் ஏழு நாட்கள் சுத்தப்படுத்தும் சடங்குகளை பால் செய்யவேண்டுமென்றும் கோரினார். பால் அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், 1) இயேசுவின் சகோதரர் ஜேம்ஸே அன்றைய கிரிஸ்துவத்தின் மேலான தலைவர் என்பதையும், 2) ஜேம்ஸ் மற்றும் இதர யூத கிரிஸ்துவர்கள் ஜெருசலம் கோவிலிலேயே வழிபாடு செய்துவந்தனர் என்பதும் அவர்களுக்கென தனி சர்ச் ஏதுமில்லை என்பதையும் 3) இயேசு திரும்பி வந்து டேவிடின் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்து, புனித யூதப் பேரரசின் தலைநகராக ஜெருசலத்தை ஆக்குவார் என்பதையுமே யூத கிரிஸ்துவர்கள் நம்பிவந்தார்கள் என்பதையும், 4) இயேசுவையும் யாஹ்வாவையும் நம்பி ஞானஸ்நானம் செய்த மனம் வருந்தும் நம்பிக்கையாளர்கள் எல்லோருமே மீட்கப்படுவார்கள், ஆனால் யூத கிரிஸ்துவர்கள் மற்றவர்களை விட அதிகமாக மீட்கப்படுவார்கள் என்பதையும் பால் நிரூபித்தார்.

தனது யூத தேசீய நோக்கத்துக்குக் கொண்டிருந்த விசுவாசத்தை பால் மறுபடியும் அழுத்திச்சொல்லும் முயற்சி தடைப்பட்டது, சந்தேகமில்லாமல் துரோகத்தால்தான். ஆசியாவிலிருந்து வந்த சில யாத்ரீகர்கள் அவரை கோவிலிலிருந்து வெளியே இழுத்து அவரை அடித்தே சாகடிக்க முனைந்தனர். அங்கிருந்த ரோமானிய காவலாளிகள் தலைவர் இடையில் வந்து அவரை காப்பாற்றியதால்தான் அவர் உயிர்பிழைக்க முடிந்தது. தலைமை மதகுருக்களால் மீண்டும் விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். பல திட்டங்கள் அவருக்கு எதிராக போடப்பட்டன. இறுதியில் தனது ரோமாபுரி குடியுரிமையைக்காரணம் காட்டி தான் ரோமானியர்களால்தான் விசாரிக்கப்படமுடியும் என்றும், யூதர்களால் அல்லவென்றும் கூறி பாலஸ்தீனத்திலிருந்து தப்பிச் சென்றார். ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார், அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதனை வரையறுத்துக் கூறமுடியாது. பேரரசர் நீரோ ரோமில் உருவான பெரும் தீயை யார் மீதாவது பழி போட வேண்டும் என்று புதிய ரத்தப்பசி கொண்ட மதப்பிரிவு யூதர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது என்றும் அவர்கள் ‘மனித குலத்தின் எதிரிகள் ‘ என்றும் கூறி பழி போட்டதில், கிபி 54இல் பால் உயிர் நீத்திருக்கலாம். (நீரோவின் எதிரிகள் அவரது அரண்மனைக்கு அருகே இருந்த குப்பங்களை அகற்ற அவரே அந்த தீயை உருவாக்கினார் என்று கூறுகிறார்கள்)

மிகவும் தாமதமாக, பாலஸ்தீனத்தில் தோன்றிய முழுமையான பரந்த போர், பாலின் மதப்பிரச்சார செயல்பாடுகளின் அரசியல் பின்னணியை அடியோடு மாற்றியது. கிபி 70இல், ஜெருசலத்தில் இருந்த யூத கிரிஸ்துவ ‘தாய் ‘ சர்ச், வெளிநாடுகளில் இருந்த கிரிஸ்துவ குமுகங்களின் மீது கொண்டிருந்த மேலாதிக்க நிலைமையை இழந்தது. ஜெருசலத்தின் வீழ்ச்சியைத் யூத கிருஸ்துவ “தாய் “ சர்ச் தாங்கிக்கொண்டு தொடர்ந்திருந்தாலும், அது குறிப்பிடத்தகுந்த சக்தி என்ற நிலையை எல்லா வகையிலும் இழந்தது. 68-73களின் நீண்ட புரட்சி ரோமானியர்களுக்கும் வெளிநாட்டு யூதர்களுக்கும் இடையேயிருந்த உணர்வுகளை மேலும் கசப்படைய வைத்தது. மேலும், யார் யூதர்களின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக இருந்தார்களோ அவர்களையே ரோமானிய பேரரசை கட்டுப்படுத்தும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தது. கிபி 71இல் வெஸ்பாஸியனும் அவரது மகனும் மாபெரும் ஊர்வலத்தை ரோமில் ஆர்ச் ஆஃப் டைடஸில் நடத்தினர். அதில் யூதக் கைதிகளும் போரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். அந்த ஊர் மத்தியில் மேடையில் எல்லோருக்கும் முன்னர் ஜெருசலத்தின் ஜிலோத்து கொள்ளையர் தலைவரான சிமோன் பென் கியோரோஸ் கழுத்து நெறிக்கப்பட்டுகொல்லப்பட்டார். அதன் பின்னர் பேரரசில் இருந்த யூதர்களை மிகவும் கடுமையாக வெஸ்பாஸியன் நடத்தினார். அவர்களது சுதந்திரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அவர்களது கோவில் வரியை சாட்டர்ன் கஜானாவுக்கு அனுப்பினார். முதலாம் நூற்றாண்டின் மீத காலம் முழுவதும் ரோமானிய வாழ்க்கையிலும் எழுத்துக்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அங்கமாக யூத எதிர்ப்புவாதம் (anti-semitism) ஆனது. இதுவும், கனலும் எதிர்ப்புணர்வாகவும், புரட்சியாகவும், தொடர்ந்த அடக்குமுறையாகவும் தொடர்ந்து எதிர்வினை கொண்டு, இறுதியில் இரண்டாவது மாபெரும் போராக கிபி 135இல் பார் கோச்வாவிற்கு இட்டுச் சென்றது.

இயேசுவைக் கொன்றவர்களுக்கு தண்டனையாகத்தான் ஜெருசலத்தின் கோவில் அழிக்கப்பட்டது என்ற மார்க்கின் அழுத்தமான வாசகங்களிலிருந்து, பின்னால் வந்த கிரிஸ்துவ பைபிளின் ஆகம எழுத்துக்களுக்கு முன்மாதிரியாக இருந்த மாற்க்கின் ஆகமமே ஜெருசலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரே எழுதப்பட்டது என்று பிராண்டன் ஊகிக்கிறார். பிராண்டன் கூறுவது போல, கிபி 71இல் நடந்த மாபெரும் வெற்றி கொண்டாட்டத்திற்கு நேரடியான எதிர்வினையாகவே அது எழுதப்பட்டிருக்கவேண்டும்.

அமைதியான மெஸையாவின் குறுமதம் பரவுவதற்கான சரியான சூழ்நிலை தன்னை முழு சக்தியோடு காட்டிக்கொண்டது. கிரிஸ்துவர்கள், யூதர்களைப் போலல்லாமல், அரசியல் ஆர்வங்கள் இல்லாத தொந்தரவு தராத அமைதிவழிக்காரர்கள் என்று காட்டிக்கொள்வதற்காகவும், தங்களது மெஸையா மதத்தீவிரவாதகொள்ளையர்போல அல்லாத அமைதி மெஸையா என்று காட்டிக்கொள்வதற்காகவும், உடனடியாக யூதரல்லாதவர்களை கிரிஸ்துவத்தில் யூத கிரிஸ்துவர்கள் இணைத்துக்கொண்டனர். கிரிஸ்துவ ராஜாங்கம் இந்த உலகத்தியது அல்லவென்றும், கிரிஸ்துவ மீட்பு இறந்தபின்னர் கிடைக்கும் மீட்பு என்றும் கூறினர். எல்லா மக்களுக்கும் நிரந்தர வாழ்வு கொடுப்பதற்காக கிரிஸ்துவ மெஸையா இறந்தார் என்றும் கூறினர். அவரது போதனைகள் ரோமானியர்களுக்கு ஆபத்தானது அல்லவென்றும், அது யூதர்களுக்கே ஆபத்தானது என்றும் கூறினர். இயேசுவின் இறப்பில் ரோமானியர்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்றும், யூதர்களே இயேசுவை கொன்றார்கள் என்றும், போண்டியஸ் பிளேட் நிராதரவாய் நின்று அந்த கொலையை தடுக்க முடியவில்லை என்றும் கூறினர்.

சமாதானப்பிரபுவான அமைதி மெஸையாவின் ரகசியம் போர்க்களங்களிலும், பூமியில் நடந்த இரண்டு மாபெரும் போர்களிலும் இருக்கிறது. ‘இருளின் குழந்தைக ‘ளுக்கு எதிராக அந்த போர்களின் முடிவுகள் சென்றிருந்தால், அமைதி மெஸையா குறுமதம் நாம் அறிந்தது போல பரந்து செழிப்பானதாக ஆகியிருக்காது.

கிழக்கு மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் முழுவதும் சிதறிக்கிடந்த நகரத்து யூதர்களே இந்த புதிய மதத்தில் சேர வந்தவர்கள். இவர்கள் எண்ணிக்கையை விட இவர்களது செல்வாக்கு முக்கியமானது. பலரும் நம்புவது போன்று, பேரரசின் மக்கள்தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருந்த கிராமப்புறங்களில் இருந்தவர்களின் மத்தியிலும், அடிமைகளின் மத்தியிலும் கிரிஸ்துவ மதம் எந்த நுழைவையும் சாதிக்க முடியவில்லை. வரலாற்றறிஞர் டபிள்யூ. பாரோன் குறிப்பிட்டு காட்டுவது போன்று, பாகனஸ் paganus என்ற வார்த்தை கிராமப்புறத்தில் இருக்கும் மக்களை குறிப்பிட உபயோகப்படுத்தும் லத்தீன் வார்த்தை. இந்த வார்த்தையே கிரிஸ்துவர்கள், கிரிஸ்துவர்கள் அல்லாதவரை குறிப்பிட உபயோகப்படுத்திய பாகன் என்ற வார்த்தை. புலம் பெயர்ந்த தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்ட நகரத்து மக்களின் மதமே கிரிஸ்துவ மதம். ‘நகரங்களின் மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு யூதர்களாக இருந்தார்கள். சில இடங்களில் அதைவிட அதிகமாக இருந்தார்கள். ஆகவே, புதுவகை யூதமதம் வெற்றிகரமாக முன்னேற ஆரம்பித்தது ‘

கிர்ிஸ்துவர்களாக ஆன யூதர்களை விட யூதர்களாகவே இருந்த யூதர்கள் ரோமானிய அடக்குமுறைக்கு மிக அதிகமாக பலியானார்கள். கிரிஸ்துவர்கள் மீதான முழு அளவு அடக்குமுறை ஆரம்பித்தது நீரோ அல்ல.. கிபி 150க்குப் பின்னாலேயே அது வந்தது. அந்த நேரத்தில், அவர்கள் நகர்ப்புறத்தில் குழுமியவர்களாக இருந்ததினால், ரோமானிய மேல்தட்டு வர்க்கத்தின் பகுதியாகவும் ஆகிவிட்டிருந்தனர். சமூக நலத்திட்டங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கட்டி அதனை நிர்வகிக்க திறமையான மேலாளர்களும் இருந்ததினால், கிரிஸ்துவ சர்ச்சுகள் ரோமானிய சட்டம் ஒழுங்குக்கு மீண்டும் ஒருமுறை அரசியல் ரீதியான அச்சுறுத்தலாக ஆனார்கள். அவர்கள் ‘அரசாங்கத்துக்குள் ஒரு அரசாங்கமாக ‘ ஆகிவிட்டிருந்தார்கள்.

ரோமானிய பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக கிரிஸ்துவ மதம் ஆனதற்கு உதவியாக இருந்த உலகாயதநிகழ்வுகள், மற்றும் காரணங்களின் சங்கிலித்தொடரைப் பற்றி எழுதுவதை தவிர்க்கிறேன். ஆனால், இதுமட்டும்சொல்லப்பட வேண்டும். பேரரசர் கான்ஸ்ட்டாண்டைன் வரலாற்றுப்பூர்வமான முக்கியமான முடிவை எடுக்கும்போது, கிரிஸ்துவ மதம் ‘சமாதான பிரபுவின் ‘ அமைதியான மெஸையாவின் மதமாக இருக்கவில்லை. காண்ஸ்டாண்டைனின் மதமாற்றம், கிபி 311இல் அவர் ஒரு சிறு ராணுவத்தை ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நடுவே அழைத்துச் சென்றபோது நடந்தது. அசதியோடு ரோமை நெருங்கும்போது, சூரியனுக்கு மேல், சிலுவை நிற்கும் சித்திரத்தை கண்டார். சிலுவையின் மேல் அவர் ‘IN HOC SIGNO VINCES- ‘By this sign you will conquer. ‘ என்ற வார்த்தைகளை கண்டார். இயேசு காண்ஸ்டாண்டைனுக்கு தோற்றம் கொடுத்து, அவரது ராணுவ சின்னத்தில் சிலுவையை பொருத்திக்கொள்ள ஆணையிட்டார். இந்த புதிய பதாகையின் கீழே, காண்ஸ்டாண்டைனின் போர்வீரர்கள் சென்று முக்கியமான வெற்றிகளை அடைந்தார்கள். அவர்கள் மீண்டும் பேரரசை ஸ்தாபித்தார்கள். அதன் மூலம் பல கோடிக்கணக்கான கிரிஸ்துவ போர்வீரர்களும் அவர்களது கோடிக்கணக்கான எதிரிகளும் அமைதியான மெஸையாவின் சிலுவையின் பதாகையின் கீழ் இன்று வரைக்கும் போரிட்டு இறக்கக் காரணம் ஆனார்கள்

(இந்த அத்தியாயம் முற்றிற்று)

Series Navigation

மார்வின் ஹாரிஸ்

மார்வின் ஹாரிஸ்