சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

இப்னு பஷீர்


திண்ணையில் சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்தை ஆரம்பத்திலிருந்து அவதானித்து வந்தவன் என்ற முறையில் எனது கருத்தையும் முன்வைக்க விழைகிறேன்.

1. ‘”பார்ப்பனர்”, “சங்கராச்சாரி” என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம்’ என்று வஹ்ஹாபி ஒப்புக் கொண்டதாக நேசகுமார் திரிக்கிறார். ஆனால் ‘திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயம் ‘பாரதி தரிசனம்’ என்ற தலைப்பில் எழுதிய திண்ணைக் கட்டுரையின் ஒரு பகுதியையே தான் எடுத்தாண்டதாக/பயன் படுத்தியதாக’ வஹ்ஹாபி தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அக்கட்டுரையில் ‘பார்ப்பனர்’ ‘சங்கராச்சாரி’ ஆகிய சொற்களை உள்ளடக்கிய ஒரு பகுதியை வஹ்ஹாபி மேற்கோள் காட்டியிருக்கிறாரேயொழிய அவை அவராக எழுதிய வார்த்தைகளன்று என்பது தெளிவு.

2. ‘பார்ப்பனர்’, ‘சங்கராச்சாரி’ போன்ற பதங்களை பயன்படுத்திக் கொண்டே தங்களை ‘முகமதியர்’, தங்களின் சாமியாரை/நபியை அவதூறாகப் பேசுகின்றார்கள் என்று ஓலமிடும் இரட்டை மனப்பான்மையையே தான் சுட்டிக் காட்டுவதாக நேசகுமார் தெரிவிக்கிறார். ‘பார்ப்பனர்’, ‘சங்கராச்சாரி’ போன்ற பதங்களை வஹ்ஹாபி தாமாக பயன்படுத்தவில்லை என்பது தெளிவான நிலையில் முஸ்லிம்களை ‘முகமதியர்’ என்று திரும்பத் திரும்ப குறிப்பிடும் மலர்மன்னனின் பிடிவாதமும், முஸ்லிம்களின் நபியை அவதூறாகப் பேசும் நேசகுமாரின் வக்கிர எழுத்துக்களுமே இன்னும் எஞ்சி நிற்கின்றன. தவறுகளை தம் புறத்தில் வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் ஓலமிடுகிறார்கள் என்றும் பங்க்ரா நடனமாடுகிறார்கள் என்றும் எழுதும் நேசகுமாரின் இரட்டை மனப்பான்மையையே இது சுட்டிக் காட்டுகிறது.

3. ‘பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களை பலர் பயன்படுத்தியுள்ளனர். இப்போது வஹ்ஹாபியுமே தான் பயன்படுத்தியுள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்’ என்று நடக்காத ஒன்று திரும்பத் திரும்பச் சொல்லி தனது குதர்க்க வாதத்திற்கு வலு சேர்க்க முயல்கிறார் நேசகுமார். பாரதி போன்ற பிராமணர்களே பயன்படுத்திய ‘பார்ப்பனர்’ என்ற பதம் இன்றைய சூழலில் கிட்டத்தட்ட வசைச்சொல்லாக மாறியிருப்பதால் அந்தப் பதத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென பிராமணர்கள் கோருகின்றனர். (ஆனால், நேசகுமார் யாருக்காக பரிந்துக் கொண்டு இந்த விவாதத்தில் மூக்கை நுழைத்தாரோ அந்த மலர் மன்னரே சமீபக் காலம் வரை ‘பார்பனர்’ என்ற பதத்தை உபயோகித்து இதே ‘திண்ணை’யில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்) பிராமணர்களின் இந்தக் கோரிக்கை எவ்வளவு நியாயமானதோ அதை விட கூடுதல் நியாயமுடையது முஸ்லிம்களின் கோரிக்கை. ‘முகமதியர்’ என்ற பதம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே பயன்படுத்தப் பட்டதில்லை. ஆங்கிலேயர்களாலும் இந்துத்துவவாதிகளாலும் முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட பெயர் இது. இது வசைச் சொல் அல்ல என்ற போதிலும் முஸ்லிம்களின் அடையாளத்தை சிதைக்கும் முயற்சி என்பதாலேயே முஸ்லிம்கள் இந்த வார்த்தைப் பிரயோகத்தை எதிர்க்கின்றனர். முஸ்லிம்களின் இந்தக் கோரிக்கையைக் கண்டு நேசகுமார் பதறுவது ஏன்?
4. வஹ்ஹாபியின் எள்ளல், வசவுகள், பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் ஆகியவற்றின் மூல காரணம், தோற்றுவாய் அச்சு அசலாக முகமது 1400 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய அதே யுக்தி, தர்க்கம், வசவுகள் என்கிறார் நேசகுமார். வஹ்ஹாபி சில வாரங்களுக்கு முன்பு திண்ணையில் எழுதிய கட்டுரைகள் தெளிவாக இருக்கையில் அற்பக் காரணங்களுக்காக அவர் சொல்லாத ஒன்றை சொன்னதாக திரிக்கும் நேசகுமார், குர்ஆன் வசனங்களையும் நபிகளாரின் வார்த்தைகளையும் எந்த அளவுக்கு திரிப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவர் இணையத்தில் எழுதத் தொடங்கிய நாள் முதல் இஸ்லாம், குர்ஆன், நபிகளார் பற்றிய இவரது வரலாற்றுப் புரட்டுகளையும் திரிப்புகளையும், ஆதாரங்கள் காட்டுவதாகச் சொல்லிப் பின் காணாமல் போன நிகழ்வுகளையும் எனது வலைப்பக்கத்தில் சேமிக்கத் தொடங்கினேன். திரிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் அவற்றை திரட்டலாம். முக்காலே மூணு வீசம் திரிப்புகளும் புரட்டுகளுமாக இருந்தால் என்ன செய்வது? என்ற மலைப்பில் அப்பணியை நிறுத்தி வைத்திருக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேசகுமார் பதில் சொல்லத் தயார் என்றால் அந்த விவாதங்களை மீண்டும் தொடரலாம்.

5. அஹமதியாக்களையும் பஹாய்களையும் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா? என்று கேட்கிறார் நேசகுமார். அமெரிக்க பழங்குடியினர் கூட செவ்விந்தியர் என்றும் சுருக்கமாக ‘இந்தியர்’ என்றுமே அழைக்கப் படுகின்றனர். அவர்களும் இந்தியர்கள்தானே என்பதால் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்பதைப் போல இருக்கிறது இவரது கோரிக்கை. முஸ்லிம்களை முகமதியர் என குறிப்பிடுதலாகாது என்ற விவாதத்தில் பார்ப்பனர், அஹமதியா, பஹாய் என பிற்சேர்க்கைகளை நுழைத்து நேசகுமார் விவாதத்தை திசை திருப்ப முயல்கிறார் என்ற போதிலும், இந்தக் கேள்விக்கும் வஹ்ஹாபி தெளிவாகவே பதிலளித்துள்ளார். ‘முஸ்லிம்கள்’ என்றால் யாவர் என்பது குர்ஆனில் தெளிவாகவே வரையறுக்கப் பட்டிருக்கிறது. அந்த வரையறைக்குள் அடங்குபவர் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம்தான். அஹமதியாக்களும் பஹாய்களும் இந்த வரையறைக்குள் அடங்குவார்களெனில் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைக்க வஹ்ஹாபிகள் ஒப்புக் கொண்டேதான் ஆக வேண்டும்.

6. இந்த விவாதத்தில் சகோ. வஹ்ஹாபியின் நிதானமான அதே சமயத்தில் ஆணித்தரமான ஆதாரங்களுடனான வாதங்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் சம்பந்தமில்லாத விவாதங்களில் மூக்கை நுழைப்பதும் பிறகு அதில் தொடர்பற்ற விஷயங்களை நுழைத்து விவாதத்தை அதன் மையப் புள்ளியிலிருந்து திசை திருப்பிச் செல்வதுமே நேசகுமாரின் உத்திகளாக இருந்து வருகிறது. இம்முறையும் அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அகமதி, பஹாய், ஜிகாதி என்பதெல்லாம் இந்த விவாதத்தை திசை திருப்பவே பயன்படும். இவை பற்றிய விவாதங்களை இன்னொரு சந்தர்ப்பத்திற்கு வைத்துவிட்டு, இந்த விவாதத்தின் மையப் புள்ளியை மீண்டும் நேசகுமாருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

முஸ்லிம்களை முகமதியர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடும் மலர்மன்னனின் பிடிவாதம் சரியானதென்றாலோ, அதை மறுதலிக்கும் வஹ்ஹாபி போன்ற முஸ்லிம்களின் வாதம் தவறானதென்றாலோ, அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைத்து நேசகுமார் தனது விவாதத்தை தொடரலாம். அப்படியில்லாவிடில் அவரது வாதம் வெறும் குதர்க்க வாதமாகத்தான் நீண்டு கொண்டிருக்கும், அவரது முந்தைய வாதங்களைப் போலவே!

-இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com/

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்