க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

வெங்கட் சாமிநாதன்தமிழில் முதன் முறையாக, தற்காலத் தமிழ் அகராதி ஒன்றை க்ரியா நிறுவனம் 1992-ன் ஆரம்பத்தில் வெளியிட்டது. தற்காலத் தமிழ் என்றால் தமிழ் மொழியின் பேச்சிலும் பொது மொழியிலும் வந்து சேர்ந்துள்ள சொல் வளத்தை அங் கீகரிப்பதும், கணக்கில் எடுத்துக் கொள்வதும் அதோடு அவற்றின் பொருளை முடிந்த அளவு துல்லியமாக பதிவு செய்வதுமாகும். தமிழ் பேசுவோருக்கு கிராக்கி, கிராக்கிப்படி, கிராப்பு போன்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன என்று தெரியும். இவை பேச்சுத் தமிழில் வழங்குகின்றன. இவை செய்தித் தாட்களிலும், அரசு அலுவலங்களிலும், தெருக்களிலும் கூட வழங்கும் தமிழ் தான். ஆனால், இம்மாதிரி தமிழுக்கு வந்து சேரும், பயன் படும் சொற்களுக்கான அகராதி ஒன்று வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எழுந்ததில்லை. இவை தமிழ் அறிஞர்களால், தமிழ் கல்வி நிறுவனங்களால், அரசால் தமிழ் என ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளாத இவர்கள் பேச்சிலும் வாழ்க்கையிலும் இச்சொற்கள் புழங்குகின்றன தான். இவை போன்ற சொற்களைத் தவிர்த்து வாழ்க்கை நடத்துவது சிரமமான காரியமாகிவிடும்.

இது போகட்டும். முதலில் அகராதி பற்றிய சிந்தனையே நமக்கு வெகு சிரமத்துடன் தான் எழுகிறது. தமிழ் பற்றி நம் தமிழ்ப் பற்று பற்றி என்னென்னவோ முழக்கங்கள் இடுகிறோம். ஆனால் மொழி வளம் பற்றிய அடிப்படியான சிந்தனைகள், அதைத் தொடர்ந்த செயல்கள் இருப்பதில்லை நம்மிடம். மேடை முழக்கங்களே போதும், முரசைறைவிப்பே போதும். இவையே நமக்குப் புகழ் தந்துவிடுவதால் அத்தோடு நம் சிந்தனையும் செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன. 1910-ல் சிங்கார வேலு முதலியார் என்ற தனி நபரின் முயற்சியில் தான் அபிதான சிந்தாமணி என ஒரு அகராதி வெளி வருகிறது. அது தந்த உத்வேகத்தினாலோ என்னவோ அந்த நூற்றாண்டுப் பத்துக்களில் தமிழ் அகராதி தொகுப்பிற்கான ஆரம்ப ஆலோசனைகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கின. பெரிய காரியம் தான். அரசும் பல்கலைக் கழகமும் இரண்டினாலும் சாத்தியப்படும் அறிஞர் கூட்டமும், பணமும் எதற்கும் குறைவில்லை. 1913 லிருந்து வெகு தீவிரமாகத் தொடங்கிய அந்தப் பணி 1924 லிருந்து பாகம் பாகமாக வெளிவரத் தொடங்கியது 1936-ல் மொத்தம் 4000 பக்கங்களும் ஒரு லக்ஷத்திற்கு மேற்பட்ட சொற்களும் கொண்ட Tamil Lexicon பிரசுரம் பெற்றது. அவ்வளவே. அது அன்றைய பொதுத் தமிழை, பேச்சுத்தமிழை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது. அச்சேர்க்கைகள் தமிழாகக் கருதப்படவில்லை அவ்வகராதியைத் தொகுத்த அறிஞர் குழாத்தினால். அந்த அகராதி, தமிழ்ச் சொற்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அதிகம் பொருள் கூறும் பாங்கில் உருவானது. எதாக இருந்தாலும், 1936=ல் முடிவடைந்த அது 1982-ல் திரும்ப அப்படியே அச்சாகி வெளிவந்ததே அல்லாது, திருத்தப்பட்டதோ விரிவாக்கப்பட்டதோ அல்ல. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுத் தமிழ் வளர்ச்சி, மொழி பெற்ற மாற்றங்கள் இது வரை பதிவு பெறவோ, கணக்கில் கொள்ளப்படவோ இல்லை. எனக்குத் தெரிந்து நாடு சுதந்திரம் பெற்ற உணர்ச்சிப் பிரவாகத்தில் கலைக் களஞ்சியம் ஒன்று, பெரிய சாமித் தூரனின் தலைமைப் பொறுப்பில் என நினைக்கிறேன், நாற்பதுகளின் கடைசியிலும் ஐம்பதுகளின் ஆரம்ப வருடங்களிலும் பல தொகுப்புகளாக வெளிவந்தது. அதுவும் இன்றைய தலைமுறையினருக்கு நினைவு படுத்தப்பட வேண்டிய ஒரு அரும்பொருட்காசிப் பொருளாகிவிட்டது. தமிழ் மொழி பற்றிய இவ்வளவு மெத்தனமும் காணக்கிடைப்பது, தமிழ் இனத்தின், தமிழ் மொழியின் மீட்டுயிர்ப்பும், மறுமலர்ச்சியும் எங்களாலே தான் நிகழ்ந்துள்ளது என்று உரிமை கொண்டாடுவோர் அரசோச்சும் நீண்ட காலகட்டத்தில் தான்.

இந்த கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலகட்டத்தில் முறையாக அகராதிகள் தொகுக்கப்பட்டும் திருத்தப்பட்டும் விரிவாக்கப்பட்டும் வெளிவந்திருக்குமானால், தமிழ் மொழியில், தமிழ் சமூகத்தில், அதன் பண்பாட்டு மலர்ச்சியில் காணும் மாற்றங்களை அத்தொகுப்புகளும் திருத்தங்களும் பிரதிபலித்திருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் ஆக்ஸ்·போர்டு ஆங்கில அகராதி பெறும் புதிய பதிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சொற்கள் ஹிந்தியிலிருந்து, தமிழிலிருந்து, ஜப்பானிய மொழியிலிருந்து என்று செய்திகள் சொல்லப்படும். நம் இன்றைய சிந்தனையில் தமிழின் மறுமலர்ச்சி என்று சொல்லப்படும் கால கட்டத்தில், வழக்கிலிருக்கும் எந்தெந்த சொற்களை தமிழ் அல்லாதவை என்று நீக்குவது என்பதே முதலும் ஈறுமான இடம் பெற்றுள்ளது. நல்ல தமிழ் எது என்று தினம் நமக்குப் பாடம் சொல்லப்படுகிறது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில். நன்னன் என்னும் தீவிரத் தமிழ் பற்றாளர், எவை எல்லாம் நல்ல தமிழ் இல்லை என்று கருதுவனவற்றைச் சொல்லும் போது அவர் கொள்ளும் கசப்பு உணர்வையும் காட்டத்தையும் அவர் முக பாவனைகளில் தினம் காணலாம். நன்னன் என்னும் தமிழ் பற்றாளர் இன்றைய தமிழ் அறிஞர் சமுதாயத்தின் மனவோட்டத்தைத் தான் சாட்சியப்படுத்துகிறார். அவரது கருத்து தனித்து விடப்பட்ட ஒரு குரலல்ல. தமிழ் என்று இவர்கள் சொல்லும்போது அது மொழியை மட்டும் குறிப்பதாக இல்லை. அச்சொல் அவர்கள்: பயன்பாட்டில் எத்தனையோ அன்னிய அர்த்தங்களைக் கொண்டதாகிறது.

இத்தகைய சூழலில், தற்காலத் தமிழ் அகராதி ஒன்று பேச்சுத் தமிழையும் பொதுத்தமிழையும் அவை பெற்றுள்ள வளத்தைப் பதிவு செய்வது என்பதும், அதன் முதற்பதிப்பு வெளியான இருபது வருடங்களுக்குள் இரண்டாம் பதிப்பு திருத்தப்பட்ட விரிவாக்கப்பட்ட பதிவாக வெளிவருவது மகிழ்ச்சி தரும் ஒன்று. மிக முக்கியமானது இது தனி ஒரு மனிதரின் சிந்தையில் தோன்றிய எண்ணம், பின் அவரோடு ஒத்த சிந்தனை கொண்ட தமிழ் அறிஞர், மொழி ஆராய்ச்சியாளர்கள், பல்துறை வல்லுனர்கள் சேர்ந்து கூட்டாகச் செயல்பட்டதன் விளைவு. எந்த அரசும், பல்கலைக் கழகமும், செயல்பட்டதன் விளைவு அல்ல. அவை செயல்படாத, எண்ணியும் பார்க்காத களத்தில் நிகழந்த செயல்பாடு இது. முதலில் அகராதி என்பது என்றும் எக்கால கட்டத்திலும் முற்றுப் பெற்ற ஒன்றாக இருக்கமுடியாது. மொழியும் தான். மொழி சார்ந்ததால், மக்கள் சார்ந்ததால், எல்லாமே ஒவ்வொரு நாளும் கணமும் உருவாகிக் கொண்டே இருப்பன இவை. இந்த அடிப்படையான உண்மை நமக்குத் தெரிந்திருந்தால் அகராதியும் சரி, மொழியும் சரி, ஒரு மொழியின் இலக்கணமும் சரி, ஏதோ ஒரு காலத்தில் உறைந்து போன ஒன்றாக, புதைந்து போன பழம்பொருளாக(fossilized) வளர்ச்சியும் மாற்றமும் மறுக்கப்பட்ட ஒன்றாக நம் அறிஞர் பெருமக்களால் கருதப்பட்டிராது. இச் சொல் தமிழல்ல என்று நம் இன்றைய சொல் வளத்தை சிதைத்துக் கொண்டே போனால் மிஞ்சுவது ஏதும் இராது.

மொழியின் வளர்ச்சியையும், அதன் வளத்தையும் அம்மொழி பேசும் மக்களிடமே விட்டுவிடவேண்டும். சொல்லப் போனால், தற்காலத் தமிழ் என்ற எண்ணமே தோன்றக் காரணம், தன் நிறுவனத்தின் பிரசுரத்திற்காக வந்த கைப்பிரதிகளைப் பார்வையிடும்போது, ‘இதற்கு என்ன அர்த்தம்?” என்று அக்கைப்பிரதிகளின் சொற்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்ததனால் தான். நாம் வழக்கமாக சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு பொருளை யூகித்து மேற்செல்வோம். ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அப்படிச் செய்யவில்லை. இப்படியான சொற்களோடு முரண்டு பிடித்ததன் விளைவு தான் தற்காலத் தமிழ் அகராதி (1991) ஒரு ஆர்க்கிமிடீஸ் நீச்சல் தொட்டியில் உட்கார்ந்தால் யுரேகா என்று கத்திகொண்டு ஒடச் சொல்கிறது. ராமகிருஷ்ணனின் அவஸ்தைக்கு காரணம் அன்றைய தமிழ் படைப்புலகில் நிகழ்ந்து கொண்டிருந்த பெரும் மாற்றங்களே தான். ஒவ்வொரு வட்டார வாழ்க்கையின் பாத்திரங்களும் பேச்சுத் தமிழும் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கின. நாற்பது ஐம்பதுகளில் கல்கியிலும் ஆனந்தவிகடனிலும் இலங்கை வாழ்க்கை சென்னைத் தமிழில் பேசினர். இல்லாவிட்டால் எங்கள் வாசகர்களுக்குப் புரியாது என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அடுத்த இருபது வருடங்களில் எல்லாம் மாறிவிட்டன. அந்தத் தமிழுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு வாழ்வுண்மை இருந்தது. அந்தத் தமிழ் உயிருள்ள தமிழாக இருந்தது. ஒவ்வொரு வட்டாரத் தமிழுக்குமான தனித் தனி சொல் அகராதிகள் வரத்தொடங்கின. இது பல்கலைக் கழகங்களும் அரசும் எண்ணியும் பார்க்காத மொழி வளர்ச்சி என்று தான் சொல்லவேண்டும். இதற்கு உந்துதலாக இருந்தது அந்தந்த வட்டார எழுத்தாளர்களும் தனியார் பிரசுர நிறுவனங் களும் தான். எந்த பெரிய மாற்றமும் தனி மனிதர்களின் உணர்வுகளில் தான் பிறப்பெடுக்கிறது.

கைபிரதிகளில் காணும் புதிய சொற்களோடு மன்றாடும் நிர்ப்பந்தத்தில் அகராதி பற்றிய சிந்தனை தோன்றியது ராமகிருஷ்ணனுக்கு. தனித்து செய்யக்கூடிய, முடிகிற காரியமில்லை. அவர் இதற்காக உதவி நாடிய அறிஞர்கள், வல்லுனர்கள் கூட்டத்தின் பட்டியலை 1991 பதிப்பிலும் இப்போதைய 2008 திருந்திய விரிவாக்கிய பதிப்பிலும் தந்துள்ளார். ஒரு தனி மனிதரின் ஆர்வத்திற்கு அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுகளாக தம் உழைப்பையும் பாண்டித்யத்தையும் உதவிய இந்த அறிஞர் கூட்டம், அன்றைய ஆங்கில அரசும், மதராஸ் பல்கலைக் கழகமும் 1913லிருந்து 1936 வரை கூட்டிய அறிஞர்கள் குழுவிற்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை. இதில் இ.அண்ணாமலை, அ.தாமோதரன், பா.ரா.சுப்ரமணியன் போன்ற பெருந்தலைகள் தொடர்ந்து ஒத்துழைத்துள்ளனர். அவர்களோடு ஒவ்வொரு கலை, அறிவியல், தொழில் துறைக்கும் தம் ஆலோசனைகளைத் தந்தவர்கள் வேறு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1300 பக்கங்களுக்கு விரியும் இந்த அகராதியில் 21,000 சொற்களுக்கு பொருள் தரப்பட்டுள்ளது. அப்பொருள் விளக்கத்துக்கான எடுத்துக்காட்டு வாக்கியங்கள் துணையோடு. இவற்றில் இலங்கைத் தமிழர் வழங்கும் சொற்கள் மாத்திரமே 1700 உள்ளன. 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் சொற்களை அவற்றின் சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ள தரப்பட்டுள்ளன.பேச்சு வழக்கில் உள்ளவை, பொது வழக்கில் உள்ளவை, அருகி வரும் வழக்கில் உள்ளவை, பேச்சு வழக்கில் உள்ளவற்றிலேயே தகுதி அற்ற வழக்காக உள்ளவை போன்ற பாகுபாடுகளும் தரப்பட்டுள்ளன. 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியிலிருந்து பெற்ற தகவல்கள் இந்த அகராதியின் திருத்தத்திற்கும் விரிவாக்கத்திற்கும் பயன் பட்டுள்ளன என்று அகராதியின் பதிப்புரை சொல்கிறது.

மனுஷி என்ற சொல்லுக்கு மனிதன் என்ற சொல்லுக்கான பெண்பால் என்பது தமிழ் நாட்டின் அருகிய வழக்கு. ஆனால் இலங்கைத் தமிழில் மனைவி என்ற பொருளில் அது அன்றாட வழக்கில் உள்ள பொது வழக்கு. வெளிக்கிடுதல் என்றால் நமக்கு என்னென்னவோ குழப்பங்கள் மனதில் தோன்றும். ஆரம்பித்தல், புறப்படுதல் என்று ஈழத்தமிழர் வழங்குவர். பீங்கான் என்றால் எனாமல் பூசிய உலோகப் பாத்திரத்தை நாம் குறிப்போம். ஆனால் இலங்கையில் அலுமினியத்தையே பீங்கான் என்று தான் சொல்கிறார்கள். பொறுத்தல் என்றால், சகித்துக்கொள்ளுதல், ஒன்றைச் சார்ந்து இருத்தல் என்று நாம் பொருள் கொள்வோம். ஆனால் இதற்கு முக்கியமான என்று ஈழத்தவர் பொருள் கொள்கிறார்கள். அடுகிடை படுகிடையாகக் கிட என்ற சொற்றொடர் வந்தால் என்ன வென்று எப்படி யூகிப்பது? ஒரு இடத்தில் பழியாகக் கிடப்பதாக நாம் சொல்வதைத் தான் அது குறிக்கிறது ஈழத் தமிழில். பாவி என்ற சொல் பயன்படுத்து என்ற பொருள் கொள்ளும் ஈழத்தமிழில். விசர் என்ற சொல் பைத்தியம் என்ற பொருள் தரும் ஈழத்தில். வட்டார வழக்கு மொழிக்கு என்ன வண்ணங்களைத் தருகிறதோ அவ்வளவு வண்ணங்களையும் ஈழத் தமிழ் தரும். ஊத்தைச் சோடா என்று இலங்கைத் தமிழர் சொன்னால், அது caustic soda-வைச் குறிக்க என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல சொற்கள் நமக்கு வேடிக்கையான பொருள் தரும்.

சமீபத்திய முப்பது நாற்பது வருட காலத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அரசியல் பண்பாட்டு மாற்றங்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. அப்பிரதிபலிப்பைத் ஒரு தற்காலத் தமிழ் அகராதியில் தான் காணமுடியும். அக்கிராசனர், சபா நாயகர், பகிஷ்கரித்தல், உபாத்தியாயர்,. மந்திரி சபை போன்ற போன நூற்றாண்டு நாற்பது ஐம்பதுக்களில் வழங்கிய சொற்கள் இப்போது மறைந்து விட்டன. தற்கால தமிழ் அகராதியின் முதற்பதிப்பில் இருந்த இச்சொற்கள் புதிய பதிப்பில் ‘அருகிவரும் வழக்கு’ எனச் சொல்லப்பட்டுள்ளது. அவற்றினிடத்தில், அவைத்தலைவர், ஆசிரியர், அமைச்சரவை என்ற சொற்கள் வந்து விட்டன. உபாத்தியாயர் என்ற சொல்லின் தமிழ்த் திரிபாக வாத்தியார் என்ற சொல் வழக்கில் உள்ளது. ஆனால் அது வழக்கில் உள்ள வட்டம் குறுகிப் போயிற்று. இதெல்லாம் வடமொழிச் சொற்களை நீக்கி (பேராசிரியர் நன்னன் அவர்களிடம் நேற்றுக் கேட்ட மொழியில், “எத்தனையோ நூற்றாண்டுகளாக படிந்து விட்ட அழுக்குகளையெல்லாம் நீக்கி தமிழைச் தூய்மைப் படுத்தி’ அவற்றிற்கு இணையான தமிழ் சொற்களை தேடி அல்லது உருவாக்கி தமிழ் தனித்து இயங்கும் மொழியென நிரூபிக்க எழுந்த முயற்சியின் விளைவுகள். நல்லது. ஆனால் ‘தற்சமம்’, ‘தற்பவம்’ என வடமொழிச் சொற்கள் தமிழில் ஆண்டு வருவதற்கான விதிகள் சொல்லப்பட்டுள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும். அமாத்திய என்ற பிராகிருதச் சொல் தான் அமைச்சர் என்ற ‘தூய’ தமிழ்ச் சொல் பிறந்துள்ளது என்பது மறந்து போகிறது. இப்படி ‘தூசு தட்டிக்கொண்டே’ போனால் தொல்காப்பியம் வரை போக வேண்டியிருக்கும். ‘ஹர்த்தால்’ என்ற சொல் அருகிய வழக்காகிவிட்டது. ஆனால் அந்த இடத்தை ‘தார்ணா” பிடித்துக் கொண்டு விட்டது. யாரும் ஏதும் சொல்ல முடியவில்லை.

இதைத் தான் அவ்வப்போது பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது திருத்தப்படும்/விரிவாக்கப்படும் அகராதிகள் தமிழ் வளத்தின், மொழி பெறும் மாற்றங்களை அரசியல் பண்பாட்டுத் தாக்கங்களை பதிவு செய்யும் என்றேன். இதை நாம் இப்போது க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியின் இருபதிப்புகளிலும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், தமிழ் பத்திரிகைகளில், இலக்கியப் படைப்புகளில், அரசியலில், தொழில் நுட்பத்தில், தமிழ் வாழ்க்கையில், கருத்துலகில் அனேக புதிய வரவுகள் நிகழ்ந்துள்ளன. தலித்தியம், பெண்ணியம், கணிணி, உலகமயமாதல், பங்குச் சந்தை, தாராளமயமாதல், போன்ற அனேக துறைகள் எல்லாம் இந்த இருபது வருட காலத்தில் தமிழ் மொழித் தளத்தை மிகவும் விரிவு படுத்தியுள்ளன. எண்ணற்ற சொற்களை தமிழின் அன்றாட புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ள துறைகள் இவை. தலித் என்ற சொல் நமது தமிழ்ப் பேராசிரியர்கள் அனுமதி இன்றியே மராட்டியிலிருந்து தமிழுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு விட்டது. அது முந்தைய அகராதியில் இல்லாதது. இணைய தளம், கம்பி வடம், வலைப்பூ, பெண்ணிய கவிஞர்கள் எழுதும் கவிதைகள் கொண்டு சேர்த்துள்ள சொற்கள் இன்னம் வேறு இருக்கின்றன.அப்பெண்ணிய கவிதைச் சொற்கள் அகராதியில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. கரடி என்ற சொல் பங்குச் சந்தையின் சந்தர்ப்பத்தில் புது அர்த்தம் கொள்கிறது. பணிமனை, பணி இடைநீக்கம், பணி மூப்பு, போன்ற சொற்கள் புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்றைய அரசியலையும் பண்பாட்டையும் கூட அகராதி வெளிப்படுத்தும். ஆக்கிரமிப்பு என்ற சொல் படையெடுப்பை மட்டுமல்லாது உரிமையற்ற இடத்தை பலவந்தமாகக் கைப்பற்றலைக் குறித்தால், கட்டைப் பஞ்சாயத்து, மின் திருட்டு, சல்வார் கமீஸ், மின் வெட்டு, பறவைக் காய்ச்சல், போன்ற சொற்கள் புதிய பதிப்பில் இடம் பெற்றால். அது வேறு என்ன சொல்லும்? இப்போதே, வன்பகடி, மகிழுந்து, சுமை உந்து, சரக்குந்து போன்ற புதிய சொற்களைக் கேட்கிறோம். ஆனால் இவற்றில் எவை அன்றாட வழக்கில் நிற்கும் எனச் சொல்வதற்கில்லை. தீர்மானிப்பது பண்டிதர்களோ அரசோ அல்ல. மக்கள் தான். நடத்துனர், ஓட்டுனர், பேருந்து போன்ற சொற்கள் படிக்க சகஜமான தோற்றம் தருகின்றன தான். ஆனால் அவை பணிமனையின் உபயோகத்தில் கூட இல்லை. பணிமனை என்ற சொல்லே கூட, பணிமனையின் உபயோகத்தில் இல்லை.

இதெல்லாம் போக, இந்த அகராதியின் கருத்தாக்கம், ஒரு சொல்லின் பொருளை மாத்திரம் சொல்வதல்ல. ஒரு சொல்லின் இலக்கண வகை, வினைச் சொல்லாக பெயர்ச்சொல்லாக, துணை வினையாக, இடை வினையாக இப்படி வெவ்வேறு வடிவங்களில், பயன்பாட்டில் அதன் பொருள் வேறுபடுவது அத்தனையையும் இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உதாரணமாக அடி என்ற சொல், 40 வகை பயன்பாட்டில் பொருள் வேறு படுகிறது. உதாரணமாக, மரத்தடி, வீணடி, கிணற்றடி, ஆட்டை அடி, மழை அடித்து…… இப்படி 40.

மூன்று காரியங்கள் ஒரு புதிய கலாச்சார நிகழ்வாக இத் தற்கால தமிழ் அகராதி வெளியீட்டில் நிகழ்ந்துள்ளன. ஒன்று தற்காலத் தமிழுக்கு என ஒரு அகராதி வந்துள்ளது. இரண்டு, இருபது வருடங்களுக்குள்ளாக இன்னொரு திருந்திய, விரிவாக்கிய பதிப்பு கொணர்ந்தது. ஒரு பெரிய அறிஞர் குழாம் இருபது வருடங்களாகத் தொடர்ந்து ஒரு தனிமனிதரின் கனவில் தாமும் பங்கு கொண்டு ஒத்துழைத்தது. இவை யெல்லாம் ஒரு மரபை ஸ்தாபிக்க வேண்டும்.

சாதாரணமாக, நாம் ஒரு அகராதியை நாம் கையிலெடுப்பது, தேவை எழும்போது, ஒரு சொல்லின் பொருள் அறிய. ஆனால் என் அளவில் தற்காலத் தமிழ் அகராதியின் இரு பதிப்புகளும் விரிக்கும் பக்கங்களில் ஆழ்வது ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. மொழியின் சொற்களின் பயணத்தை மக்களின் பண்பாட்டு வெளிப்பாடாகவும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சொல்லும் எங்கெங்கோ நம்மை இட்டுச் செல்கிறது. நம் சிந்தனையே நேர் கோட்டுப் பயணம் அல்லவே.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி: Cre-A, H-18 Flat No.3, South Avenue, Thiruvanmiyur, Chennai-41
விலை ரூ 495.

வெங்கட் சாமிநாதன்/13.7.08


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்