கௌசல்யா

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

மட்டுவில் ஞானக்குமாரன்


அவள் …!
இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ?
இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும்.

எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு நாளிலே இந்தக் குளத்திலேயே சுனாமியை வரவளைத்தவள்.

ஆனாலும் இவள் வித்தியாசமானவள்.
யாராவது அவளுக்காக பரிந்து பேசினால்க் கூட அதைப்பற்றி எள்ளளவும் அக்கறையும் பட மாட்டாள.; அதே போல சினம் வந்து அவள் மீது யாராயினும் சுடு சொல் கொண்டு திட்டினாலும் கூட எக் குறையும் படமாட்டாள். என்னடா இவள் பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு தெரியாமல் எல்லோரையும் நம்புகிறாளோ என்று அவளைக் கடிந்து கொண்டாலும் கூட கவனிக்கவே மாட்டாள்.

அவள் பெயர் கௌசல்யா.
ஒரு முறை என் மனைவியே எனக்கு அவளை அறிமுகம் செய்தாள.;;
நான் இருக்கும் நகரிலிருந்து எண்பது கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் லிங்கன் என்ற ஊரிலேயே வாழ்கிறாள். அங்கே இருக்கும் ஒரு சிறிய அகதி முகாமுக்குள்ளேயே அவளது வாழ்கை கரைகிறது.

சட்டப்படி திருமணமானவள் என்ற சான்றிதளை கொடுத்திடத் தவறிய கதியால் எனது மனைவியும் ஏமாற்ற வேண்டும் என்ற திட்டப்படி செயலாற்றிய ஒருவன் போட்ட சதியால் கௌசல்யாவும் அந்த முகாமிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.
இவர்களோடு வயது போன ஒரு அம்மாவுமாக மொத்தம் மூவரே அவளுக்கு என்று அந்த முகாமிலே இருக்கக் கூடிய பந்தம்.

தனது தங்கப் பெட்டகத்தை யாருமே அறியாதபடி திறந்து பார்த்து மூடிவிடுகின்ற உலோபி போலவே எப்பாலும் அபுர்வமாக அதுவும் உதடுகளுக்குக் கூட தெரியாமலே அவள் சிரிப்பாள்.
தேவையின் பொருட்டே யாருடனும் பேசுவாள் அதுவும் பணத்தை எண்ணி எண்ணிச் செலவிடும் சிக்கனவாதி போல வார்த்தையினை அளந்து அளந்தே பேசுவாள.;

அவளது சொந்த ஊரை எனக்கு சரியாக நினைவில்லை யாழ்ப்பாணத்திலே இருக்கும் ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவளாம்.
இங்கு எப்படி வந்திருப்பாள் என்று அறிய விரும்பினால் எள்ளுச் செடி மீது இடி வீழ்ந்த அந்தக் கதையினைச் சொல்லியே ஆகவேண்டும்.

இது ஒரு பெருங்கதை அக்கதையின் நாயகனாகி வந்தவனே அவளை உயிரோடு எற்றியிருக்கிறான் சிதை.
மாப்பிள்ளைச் சந்தையிலே விலையாகியே யேர்மனிக்கு வந்தவள்.
அவளின் ஊர் நிலவரம் பற்றி அறிவதற்க்கு புதுவை இரத்தினதுரையின் கவிதை வரிகளே போதுமென்று நினைக்கிறேன்.
நீர் வளமுண்டு
நில வளமுண்டு
நிம்மதி ஒன்றுதான் இல்லை என்பது போல
யுத்தக் கறையான்கள் அரித்துக் தின்று கொண்டு தர்பார் நடாத்தும் தேசத்திலே வாழ்ந்த சராசரிக் குடும்பங்களிலே அவளது குடும்பமும் ஒன்று
இவள் குழந்தையாக இருக்கையிலேயே தந்தையின் உயிரினை சிங்களப் படையின் துப்பாக்கிகள் உறிஞ்சிக் கொண்டன. பின் நாளில் தாயின் அணைப்பிலும் ஒரே ஒரு தம்பியின் பாசப் பிணைப்பிலும் வழர்ந்தாள்.

வெந்த புண்ணிலே வேல் பாய்ந்தது என்பார்களே அதை அவளது தாயின் இயற்கைச் சாவு வந்து சொல்லிக் காட்டியது.
கௌசல்யா சோர்ந்துவிடவில்லை வாழ்ந்தாள் தனக்காகவும் தம்பிக்காகவும் வாழ்ந்தாள்.
எப்பிடித்தான் ஓட்ட வழித்து சாப்பிட்டாலும் கூட எங்காவது இலையின் ஒரு ஓரத்திலே ஒட்டி இருக்குமே ஓரிரு பருக்கை சோறு அது போல இருளாகிப் போன அவள் வாழ்வுக்கு ஒளி ஏற்ற சில நல்லவர்கள் அங்கேயும் இருக்கத்தான் செய்தார்கள். அவளுக்கென்று ஒரு வரனைத் தேடினார்கள். வந்த வரனோ என்னாளும் கூடவே அவளோடு வரான் என்று யாருக்குமே அப்போது தெரியவில்லை.
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிய கதையாக அது ஆனது.

பொதுவாகவே வெளியுர் மாப்பிள்ளைகளுக்கு உள்ளுரிலே மதிப்பு அதிகம் என்பதையும் தாண்டி சிவா என்ற இறைவன் பெயரைக் கொண்டவனே மணாளனாக வரப் போகிறான் என்பதை இட்டு அவளுக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி

ஈசன் சிவாவோ உமை அம்மை என்ற ஒருத்திக்கு மட்டுமே தன்னில் பாதியை தானம் கொடுத்திருந்தானாம். ஆனால் இந்த சிவாவோ சட்டப்படி மட்டும் மூவருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறான்.

இவர்களுள் ஒருத்தியை மட்டுமே தாயாக்கினான். மற்றையவரை பிள்ளைக் கனி தாராத காயாக்கினான்.

இறுதியில் அனைவரையும் புறத்தே விட்டு யேர்மனிக்குத் தாவித் தனித்திருந்தான். நிரந்தர வதிவிட அனுமதி கூடக் கிடையாத இவனுக்கு துணைக்கென ஒருத்தி தேவையானாள்.அவளை இறக்குமதி செய்வதற்க்காக ஒரு தரகரை நாடினான்.

எங்கள் தரகர்களோ பரிமேலழகரையும் கம்பரையும் கூட விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் அவ்வளவு தூரத்துக்கு மாப்பிள்ளைகளையும் மணப் பெண்களையும் பற்றி அதி உச்ச விபரணை செய்தே திருமணத்தை முடித்து விடுவார்கள். பின்னாலே வரும் பிடுங்கல்களுக்கு பதில் சொல்ல அவர்கள் இருந்தால் தானே.
தரகரின் அதி உச்ச வருணனையாலே இவனது மாய வலைக்குள் அகப்பட்டவள் கௌசல்யா எனும் மீன்.
சிவா எனும் வண்டைப் பொறுத்தவரை அவள் அப்போதைய தாகத்தைத் தீர்க்க வந்த தேன் அவ்வளவு தான்.

யேர்மனி வருவதற்கான செலவைக்கூட இவளே ஏற்க்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை தரகர் ஊடாக சிவா கொடுத்தான். அதன் காரணத்தாலே இருந்த ஒரு வீட்டையும் அவள் பன்னிரண்டு இலட்சத்தைக்கு விற்றாள்.

இவ்வளவு பணத்தைக் கொடுத்துவிட்டும் கூட அவள் ஒன்றும் விமானத்திலே வந்து நேராக யேர்மனிலே குதிக்கவில்லை. விமானத்திலே பறந்ததை விட அவள் கால்கள் நடந்த தூரமே அதிகம் என்று கூறுமளவிற்க்கு சீனப் பெருஞ்சுவர் போல நீண்டு கிடந்தது பயணம். இருந்த போதும் கூட தனது துணைவனுக்காகவே துயரங்களைப் பொறுத்தாள்.

வெள்ளைப் பனி மலையின் மீதுலாவுவோம் என்று பாரதி பாடினாலும் பாடிவிட்டான் அந்தப் பனி மலைகளிலே முட்டியும் மோதியும் உருண்டும் பிரண்டும் உலாவி மாண்டு போவதெல்லாம் எதிலியாகிப் போன ஈழத் தமிழினம் தானே.

முட்கம்பி வேலிகளுக்கிடையே தவழ்ந்தும் போலந்து நதிகளுக்குள்ளே மூழ்கியும் பயணத்தைத் தொடர்ந்தாள். பாலை வனமாகி வெடித்த நாக்கிற்க்கு பனித்துளிகளைப் பிழிந்து ஊற்றினாள். இருந்த போதும் பசி அவளைப் பிடித்துத் தின்றது.

இப்படித்தான் இடர் மிகு பயணங்களை பொறுத்தாள். வரும் என நம்பிய வசந்தத்திற்க்காக தன்னையே ஒறுத்தாள்.
பயணத்தரகர்கள் எனும் அழுக்கு மேகங்களிடையேயும் அசுத்த வாயுமண்டலங்கள் எனும் துட்டர்களிடமும் சிக்காது தப்பித்து புமித் தேகத்தை தொட்ட இந்த தூய மழைத் துளி விழுந்த இடமோ சாக்கடையானது.

ஏதோ கடையிலே வாங்கிய பொருட்கள் மனதுக்கு திருப்தி இல்லாது போகும் போது திருப்பிக் கொடுக்கலாம் என்று சில கடைகள் அறிவிப்பது போலவே கௌசல்யாவையும் எண்ணிக் கொண்டு இவள் மீதான மோகத்தையும் முப்பது நாளோடு முடித்துக்கொண்டான்.
பின் அவளையும் ஒதுக்க ஆரம்பித்தான்.
அஃறிணைக்கும் உயர் திணைக்கும் வித்தியாசம் அறியாதவனாகினான் சிவா எனும் அஃறிணை

அதற்கான காரணங்களை தனது நிராகரிப்புக்கான தோரணங்களாக்கினான்.
மையலில் மையல் குன்றியதால் சமையலில் சுவை இல்லை என்றான். இரசம் வைக்கச் சொல்வான் வைத்தால் சுவை இல்லை என்று ஏசுவான். இரசத்திலே பிளையில்லை அவனுக்கு யார் மீதோ விரசம் வந்திருப்பது தான் உண்மையாக இருந்தது.

அவன் விரும்பிய படி செய்வதற்க்கெல்லாம் அவள் பாதகமாக இருந்ததால் அவளின் சாதகம் சரியில்லை என்றான்.

அரசியலிலே அறிவு இல்லை என்றான்.
இலங்கையிலே அவளது அன்றாட வாழ்வியலோ அரிசி இயலுக்காக போராட்டம் செய்கையிலே அரசியல் பற்றி எப்படி அவளாலே அறிந்திருக்க முடிந்திருக்கும். இவளைத்தான் அரசியல் அறிவற்ற ஞான சூனியம் என்றான்.
புவி சுழலுகிறது என்பதையும் உலகம் உருண்டை என்பதையும் இன்று வரை ஏற்க்க மறுக்கும் பாமரர்கள் இருக்கும் உலகத்திலேயே அவளும் ஒருத்தியாக இருந்தது என்பது எவ்வகையிலே அவளது தப்பாகும்.
இந்த நாட்டை இவ்வளவு கேவலமாக்கிய காவலனை கூண்டிலேற்றுவதை விட்டு அந்த அப்பாவிப் பெண்ணை தண்டிப்பது சரியா

ஆக்கிமிடிசுத் தத்துவத்தையும் அடம் சிமித்தின் பொருளியல் கொள்கைகளையும் படித்த பின்னரா எல்லோரும் வெளிநாட்டுக்கு வருகின்றனர்.
விமானத்திலே பறக்கும் போதே தாங்கள் பிறந்ததாகவும் பிரசவத்திற்கான அலுவல்களைக் கூட எலிசபத்து மகாராணியே நேரில் நின்று பார்த்ததாகவும் இங்கே பலர்; கதை விடுகிறார்கள்.

காலத்தின் சவுக்கு உனது முகத்திலும் வயோதிபக் கோடுகளைக் கீறும். கோலத்தின் தூரிகை உனது தலையிலும் வெள்ளை நரைகளைக் தீட்டும். ஆராதித்த அழகோ உனை ஏறெடுத்தும் பார்க்காது போகும் இது தானே வாழ்கையின் நியதி.

இந்த நியதிகள் அவனுக்கு எப்படி விளங்கும். கழுத்திலே விழவந்த முடிச்சோ அவளின் மூச்சை நெருக்கியது. அட்சதை அரிசியோ வாய்க்கு அரிசியாகியது.
இவனோ அக அழகை தரிசிக்கத் தெரியாத குருட்டு விழியால் புற அழகினைத் தேடினான்.

தமிழ் சினிமா என்பது இளசுகளை மட்டுமல்ல பளசுகளையும் தான் மிக அதிகமாகவே காயப்படுத்தி இருக்கிறது இல்லாவிட்டால் கனவுக் கன்னிகளை எல்லாம் கல்யாணம் செய்யக் கேட்க்குமா.
எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன் தான் உழைக்கும் பணத்தை எல்லாம் தொலை பேசியிலே பேசிப் பேசியே செலவழித்து விடுகிறானாம் யாரோடு என்றால் தமிழ் நாட்டில் உள்ள பிரபலமான ஒரு தமிழ் நடிகையோடுதான்.

எனது உறவினர் ஒருவருக்கோ வயது நாற்பதைத் தாண்டியும் மணம் நடக்கவில்லை காரணம் தனக்கு வரப்போகும் பெண் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற கொழுப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார்.
அரைக்கிலோ முகக் களிம்பிலே சிம்ரானுக்கு வாழ்க்கை ஓடுவதோ அடை மழையிலே மொத்த அழகும் கரைந்துவிடும் என்ற விடயமோ ஏன் இவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை.
அழகு மெழுகைப் போன்றது என்பதை எந்த ஆசான் வந்து இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்போகிறார்கள்.

அந்த நகரத்திலே இருக்கின்ற நல்லவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே சான்றிதள் கொடுப்பவர்களும் ஊர்ப் பெரியவர்கள் என்று தங்கள் தோள்களில் தாங்களே பீதாம்பாரம் போட்டுக் கொள்பபவர்களும் கூட இவ்விடயத்திலே அமைதியையே காத்தனர். வந்து விழுந்துவிடும் சில எலும்புகள் தடைப்பட்டுவிடுமோ எனும் பயமே இதற்க்குக் காரணம்.

சிவாவுக்கு கொஞ்சம் கார் திருத்தும் வேலைகள் தெரியும் என்பதாலே அவனோடு முரண்பட்டால் இலவசமாகத் திருத்தப்படும் காருக்கு ஆப்பு வைக்கப்பட்டு இரவல் சேலையிலே கொய்யகம் கட்ட முடியாது போகுமே என்ற கவலை அவர்களுக்கு

அவளோ கல்லானாலும் கணவன் என்றபடி இருக்க இவன் மனசோ கல்லாக மாறியது மட்டுமல்ல கௌசல்யாவை ஒரு தேரை போல கல்லுக்குள்ளேயே சிறை வைத்தான்

தான் இதுவரை சிந்திய கண்ணீர்க் கடலுக்கு அணைபோடுவான் இந்தத் துணைவன் என்றால் இவன் கண்ணீர்க் கடலையே இப்போ சமுத்திரமாக ஆக்கினான்.
இவளைப் போன்ற வேறு ஒரு பெண் எனின் போ என்று அவன் முகத்திலேயே உமிழ்ந்திருப்பாள். ஆனால் இவளோ தன்னை ஏற்றுக்கொள்ள மறுபடியும் வருவான் என காட்டிலே கைவிடப்பட்ட தமயந்தியாக காத்திருக்கிறாள்.

நளன் தமயந்தியைப் பிரிந்த காரணமோ வேறு. தன்னோடு வந்து காட்டிலே துயர் உறக் கூடாது என்பதற்க்காகவே கட்டிலோடு வந்தது தமயந்திக்கு அந்தப் பிரிவு.
ஆனால் இந்த சிவாவோ தன்னை நம்பி வந்தவள் துயர்படுவாள் என்று தெரிந்தும் அவளை நட்டாற்றிலே கைவிட்டான்.

தான் அழகில்லை என்பதால் தானே தன்னை விலக்கினான். இதனை சீர் செய்தால் தன்னை மறுபடி ஏற்றுக் கொள்வான் என்றே இவள் இப்போதும் நம்புகிறாள். இதற்க்காகவே அழகு சாதனப் பொருட்களை எல்லாம் வாங்கிப் புசுகிறாள்.
இதை விடக் கொடுமை யாதெனில் எறும்பு சேர்ப்பது போல சேர்த்து வைக்கின்ற மாதாந்த உதவிப் பணத்தை எல்லாம் அப்பப்போ வந்து கவர்ந்து செல்கிறான் இந்த மானமுள்ள கணவன். வெளியே அவன் நிற்க்க அவனது நண்பர்கள் வந்து அந்தப் பணத்தை வேண்டிச் செல்கிறார்கள்.

ஆனால் இப்போது சில காலமாக யாரும் அவளைத் தேடி வருவதேயில்லை. காரணம் அவன் வேறு நாட்டுக்கு ஓடிப் போய் விட்டானாம்.
நண்பர்களே … இவள் ஒரு கிராமத்துப் பறவை தான். இடிபாடுகளுக்கிடையே இறங்கி வந்த நதி தான். ஆனால் அவளுக்கும் இதயம் இருப்பதை மறந்து போகிறீர்களே.

கௌசல்யா நிலையை எண்ணி மனம் வருந்துவோரும் உண்டு அதையே பெரும் குறையெனச் சொல்லி அவள் மனத்தை வருத்துவோரும் உண்டு அப்படி யாரேனும் அவளைக் கிண்டல் பண்ணும் போதிலோ அல்லது குத்திக் கதை பேசும் போதிலோ கீறல் விழுந்த ஈரப் பலா பாலை பொசிவது போல கண்ணீரைப் பொசிவாள். அதைத் தவிர அவளால் வேறென்ன தான் செய்ய முடியும்
இங்கிருக்கும் பெண்ணிய வாதிகளும் கூட பட்டி மன்றங்களோடு மட்டும் தமது பணி முடிந்து விட்டதென்று நின்று விடுகிறார்கள்.
சந்தங்கள் சேரவில்லை என்பதற்க்காக பாடலைச் சிரைச் சேதம் செய்வதற்கே நான் வருந்தி இருக்கிறேன். பந்தங்கள் சேரக் கூடாது என்பதற்க்காக மனைவி எனும் ஆதாரத்தையே சேதாரம் செய்;பவனைப் பற்றி எழுதாமல் விடுவேனா

நிலாவை பிடித்து தருவேன் என்று கூறி சோறூட்டி விடும் தாயின் தந்திரத்தை போல கணவனோடு ஒன்று சேர்ந்து வாழ வழி செய்து தருவோம் என்று கூறி தங்களுக்குத் தேவையான பலவற்றை அடைகின்றனர் சிறு மதி படைத்த சில மனிதர்கள்.

உங்களில் யாருக்கேனும் தங்கையாக தாயாக மகளாக அவள் இருந்திருந்தால் எண்ணிப் பாருங்கள் அவளுக்கு நிகழ்ந்த இந்த இரணத்தின் ஆழத்தை …….!
அவன் இப்பொழுது வேறு நாட்டுக்கு தலைமறைவாகி விட்டபோதும் கூட அவன் வருவான் என்று காத்திருக்கிறாளே இந்த வைதேகி.

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ

மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)


maduvilan@hotmail.com

Series Navigation

மட்டுவில் ஞானக்குமாரன்

மட்டுவில் ஞானக்குமாரன்