கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

ஐயன் காளி


வாதம் 8: பிற மதத்தவரை அனுமதியோம் என்பது ஒரு குறுகிய பார்வை அல்லவா. பன்னெடுங்காலம் முன்பு தோன்றிய மதத்தார் பதின்மவயது பார்வைகொண்ட சிறுபான்மை மதங்களின் பார்வையை ஏன் கொள்ள வேண்டும்?

வைத்தியம்: சரியான புரிதலால் வருவது தர்க்கம். தவறான புரிதலால் வருவதோ குதர்க்கம்.

கொல்லுகிறது விஷக்கிருமிகள் என்பதும், மனிதரைக் கொல்லுவதால் அவை வாழ்கின்றன எனபதும் ஒரு உண்மை நிலை.

அவற்றின் கொலை வெறி தவறு என்பது ஒரு வாதம். இங்கே முதல் வாதம்.

அவற்றை அழித்தால் பிழைக்கலாம் என்பது தெளிந்த மற்றொரு உண்மை நிலை.

இந்நிலையில், முதல் வாதத்தின்படி கொலை வெறி தவறென்பதால், விஷக்கிருமிகளைக் கொல்லுவதும் தவறு என்பது இரண்டாவது வாதம்.

இவ்விரண்டு வாதங்களும் தனித்தனியே கொண்டு செல்லும் முடிவுகள் எதிரானவையாகவே இருக்கும். மேலும் ஒரு வாதம் உண்மைநிலைக்கு எதிரானதாய் இருக்க முடியாது. உண்மை நிலைக்கு எதிரானதாய் இருக்கும் வாதத்தால் உண்மையை அறிய முடியாது. இப்புரிதலின்படி தவறைச் சரி செய்யும் எதுவும் தவறாய் இருக்க முடியாது. இதன்படி முதல்வாதம் மட்டுமே உண்மை. ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது.

வாதம் 9: இரண்டையும் ஏற்றுக்கொண்டு ஒரு வித சமாதானத்திற்கு வரலாமே?

வைத்தியம்: இரண்டாவது வாதம் முதல்வாதத்தோடு அமைதிபூண்டிருப்பதால் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் விஷக்கிருமிகள் மட்டுமே உயிர்வாழும். அவற்றின் வாழ்வு மனிதரின் அழிப்பால் நிகழ்வதால், மனிதர் அழிந்த பின் வாழ காரணிகள் இல்லாததால் அவையும் அழியும். விஷத்திற்கும் உணவிற்கும் உடன்பாடு ஏற்பட்டால், உணவும் விஷமாகும். இறுதியில் எதுவும் எஞ்சாது. எஞ்ச வேண்டுமானால் விஷக்கிருமிகள் அழிக்கப்படவே வேண்டும்.

வாதம்
10: இதனால்தான் எங்கள் மதத்திற்கு அடிமையாய் இருங்கள் என்கிறோம். உங்களை முற்றிலும் அழிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் உயிர் சத்தை உறிஞ்சி நாங்களும் வாழ்ந்துகொள்கிறோம், நீங்களும் வாழலாம் என்று பரந்த முடிவை உங்களின்மேல் இரக்கத்தோடு வைக்கிறோம். இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

வைத்தியம்: எலியின் வேதனைக்குரல், பூனைக்கு வீணையின் நாதம். உங்களுக்கு எங்கள் உயிர்சத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்து குற்றுயிரோடு வாழ்வது மரணத்தைவிட அதீத வேதனை தரும் நிகழ்வு. இவ்வேதனை எமக்கும், எம் குழந்தைகளுக்கும் வேண்டாம். மேலும், விஷக்கிருமிகளுக்குள்ளும் தூய விஷக்கிருமிகள், அந்த அளவு தூய்மையற்ற விஷக்கிருமிகள் என்கிற பாகுபாட்டை விஷக்கிருமிகளின் வேதங்களே பரப்புவதால் உங்களுக்குள்ளும் என்றும் வன்முறையும், வேதனையும், நரகமும் நிரந்தரம்.

வாதம் 11: இதைத் தீர்க்க என்ன வழி?

வைத்தியம்: ஒன்றல்ல. இரண்டுண்டு. இரண்டு மட்டுமே உண்டு.

முதல் வழி: தங்கள் மதம் தவிர்த்த மற்ற மதங்களும், வழிபாடுகளும், நம்பிக்கைகளும், ஆன்மீகப் பயிற்சிகளும் இகலோகத்தில் தண்டிக்கப்படவேண்டியவை, அழிக்கப்படவேண்டியவை; பரலோகத்தில் நரகத்தைத் தருபவை என்று இருக்கும் கருத்துக்களை அவர்களது மதப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடவேண்டும். அங்கனம் செய்தால் அங்கனம் செய்த மதத்தினர் இந்துக்கோயில்களுக்கு வருவதை அனுமதிக்கலாம்.

இரண்டாம் வழி: முதல்வழி முடியாது என்றால், இந்து மதத்திற்கு மீண்டு வருபவர்களை மட்டும் அனுமதிக்கலாம். ஒரு இந்து எந்த தெய்வத்தையும் வழிபடலாம். எனவே கிருத்துவ இஸ்லாமிய மதங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் தங்களது விருப்ப தெய்வங்களான ஏசுவையும், அல்லாவையும் வழிபட எந்தத் தடையுமில்லை. அனைத்துத் தெய்வங்களையும் மதிக்கின்ற பண்பு இந்து மதத்திற்கு இருப்பதால் அந்த மதிப்பினை மற்றவர்கள், முக்கியமாக பிற மதத்தவருக்கு அனுமதியில்லை எனும் ஆலய நிர்வாகிகள், தெரிந்துகொள்வதற்கு இந்து மதத்திற்கு மீள்வது ஒரு அத்தாட்சியாய் அமையும்.

வாதம் 11: எல்லாம் இறையே என்பது இந்து மதக் கருத்தாயிருப்பின், எல்லாரையும் அனுமதிக்க வேண்டியதுதானே? மேலும், மரியாதை கொடுப்பவர் மரியாதை கொடுக்கட்டும், பக்தியுள்ளவர் பக்தியோடிருக்கட்டும், மதிக்காதவர்கள் மதிக்காமலேயே இருக்கட்டும். விதி செய்து சட்டத்தின் மூலமாய் மரியாதையை ஏன் தேடவேண்டும்?

வைத்தியம்: “எல்லாம் இறையே” எனும் கருத்தை மதிப்பவரை கோயில்கள் அனுமதிக்கின்றன. எங்கள் கடவுள் தவிர்த்த அனைத்தும் எங்களது நுகர்விற்கு எங்களது கடவுளால் படைக்கப்பட்டன என்பவர் அவரது கருத்தாலேயே இக்கருத்தை எதிர்த்தவர் ஆகிறார். அவர்களும், இந்துக்களும் விலகி இருக்கும்வரை இன்னல்கள் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாய் சேரவேண்டும் என வற்புறுத்தினால், அவ்வற்புறுத்தலின் வலியால் மதிப்பவரும், மதிக்காதவரும் ஒன்று சேர்ந்தால் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே அவற்றைத் தவிர்க்க இவ்விதிகள்.

வாதம் 10: சமத்துவமும், சகோதரத்துவமும் சிறந்தவை என ஒத்துக்கொள்ளப்படும் இக்காலத்தில் மனித சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளுவது என்ன தவறு?

வைத்தியம் 1: சமத்துவம் என்பது எல்லா பிரிவினருக்கும் மத்தியில் வைக்கப்படவேண்டும். அங்கனம் இல்லாமல் ஒரு பிரிவினர் மட்டும் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். மற்றையோர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை எதிர்ப்பது அவர்களது நம்பிக்கையிலும், உரிமையிலும் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

வைத்தியம் 2: நீங்கள் சமத்துவம் என்று வைப்பது உண்மையில் சமத்துவம்தானா என்பது விவாதத்திற்குரியது. நீங்கள் சமத்துவம் பேசிய இடங்களில் சமத்துவம் இல்லை என்பதும், மிகப்பெரிய வன்முறைகளின்கீழ் மனிதத்தின் வேறுபட்ட பரிணாமங்கள் மறைக்கப்படுகின்றன என்பதும் ஏற்றப்பட்ட விளக்கின்கீழ் வெளித்தெரியும் உண்மை.

வாதம் 11: சமத்துவம் என்பதை ஏற்காத நம்பிக்கைகளை அழிப்பதால் என்ன தவறு?

வைத்தியம்: சமத்துவம் என்பதை ஏற்காமல் இருப்பதுதான் அக்கோயிலின் புனிதத்தை தெய்வ பலத்தை அளிக்கிறது என்று இவ்வமைப்பின் நிர்வாகத்தார் நம்புகிறார்கள். நம்பிக்கைகள் தவறென்றால் அவற்றினை மாற்ற நேர்மறை நடவடிக்கைகளையே நேர்மையாளர் கொள்வர். ஒரு கோட்டை சிறிதாக்க அதைவிட பெரிய கோடு வரைவதே உதவும்.

வாதம் 12: சிறிய கோடு அப்படியே இருக்குமே. அதை அழிக்க வேண்டாமா?

வைத்தியம்: பல பெரிய கோடுகள் சிறிய கோட்டை தானாகவே மக்களின் கண்களிலிருந்து மறைந்துவிடும். கண்களிலிருந்து மறைந்தால் மனத்திலிருந்து மறைந்துவிடும். மனத்திலிருந்து மறைவதே நிரந்தர மறைவு.

வாதம் 13: எதிர்மறைப்போக்கால் என்ன தவறு? சிறிய கோட்டை ஏன் அழிக்கக்கூடாது? சாதி மத வெறியை பரப்பும் இந்த அமைப்புக்களின் முதுகெலும்பை உடைப்பதால் ஜாதிமத வெறியை யும் அழித்துவிடலாமே?

வைத்தியம்: எதிர்மறைப்போக்கால் எதிர்ப்பவை மேலும் உரம்பெறவே வாய்ப்புண்டு. மேலும், இவ்வமைப்புக்கள் குறுகிய மனப்பான்மையோடு இருப்பினும், இக்குறுகிய மனப்பான்மையையும் தாண்டிய, மீறிய ஒரு மிகப்பெரிய சத்தியத்தையே இவை முன்வைக்கின்றன. இந்த சத்தியமே மக்களை இவ்வமைப்புக்களிடம் ஈர்க்கின்றன. இவற்றை அழித்தால் இச்சத்தியத்தை அணுகுவதற்கு மக்களிடம் இருக்கும் வாய்ப்பு பறிபோகும். இந்து மதத்தை அழிப்பதே தங்களது லட்சியம் என்று சொல்லுபவர்கள் இவ்வமைப்புக்களை அழிப்பதன்மூலம், மக்களை இந்த சத்தியத்தின் அணுக்கத்திலிருந்து அகற்ற விரும்புகின்றனர். இந்த அகற்றுதலால் மக்கள் இவர்தம் கொள்கைக்கு வருவார் என்று நம்பி நடக்கின்றனர்.

வாதம் 14: நேர்மறை அணுகுமுறை என்பது கானல் நீரைக்கொண்டு கரும்பு விளைவிக்கலாம் எனும் ஏமாற்றும் வேலை. நேர்மறை என்று ஏதேனும் இருக்கிறதா?

வைத்தியம்: இருக்கிறது. செய்ய வேண்டியது எல்லாம் இதுபோன்ற குறுகிய சாதி மத மனப்பான்மையை ஆதரிக்கிற தலங்களுக்கு மாற்றாக பரந்த மனப்பான்மையை ஆதரிக்கிற தலங்கள்
பல்கவேண்டும். அதுவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மேல்மருவத்தூர் கோயில் முதல் ராமக்கிருட்டிண, சின்மயா, அம்ருதானந்த, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளீடாக இன்னும் எத்தனையோ இந்து அமைப்புக்கள் பரந்த தளத்தில் இந்து மத வழிபாட்டுத் தலங்களைப் பல்குகின்றன. அங்கே செல்லும் மக்கள்தொகை சாதி மத உயர்வு தாழ்வு பேசும் தலங்களைவிட மிக மிக அதிகம்.

வாதம் 15: பரந்த மனப்பான்மையுடைய இந்த புனிதத்தலங்கள் இருக்கும்போது, மத வேறுபாடுகள் பார்க்கிற தலங்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

வைத்தியம்: மனிதம் பல பரிமாணங்களை உடையது. பன்முகத்தன்மையை அனுமதிப்பது என்பது மனிதவளத்தை மகத்தாய் பெருக்கும். இதை எதிர்த்து நடக்கும் அனைத்தும் தீவிரவாதம் மட்டுமே. குருவாயூர் கோயிலில் பிற மதத்தவர்கள் வரக்கூடாது என்பது ஒரு விதி. அதே போல மேல்மருவத்தூர் கோயிலில் யார்வேண்டுமானாலும், எந்த சூழலிலும் அருள்தரும் அன்னையை வணங்கலாம் என்பது விதி. இரண்டு விதிகளுமே மதிக்கப்படுவதுதான் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் செயல். உன் வழி உனக்கு. என் வழி எனக்கு.

நாளை ஒரு கோயில் கட்டப்பட்டு மீசை உள்ள ஆண்கள் மட்டுமே அங்கு வரவேண்டும் என்று விதித்தால், அதை மீசை இல்லாத ஆண்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

அதை விடுத்து மேல்மருவத்தூர் கோயிலில் இந்துக்கள் மட்டும்தான் வரவேண்டும் என்று வற்புறுத்தினாலும், குருவாயூர் கோயிலிலிருக்கும் குழந்தைக்கு செருப்பு அணிவிக்கவேண்டும் என்பவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாலும் அது தவறே.

இந்து மத கோயில்களில் எல்லோரும் வழிபடும் கோயில்கள் உண்டு. இந்துக்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. ஆண்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. பெண்கள் மட்டும் வழிபடும் கோயில்கள் உண்டு. தமிழில் மட்டுமே வழிபாடு நடக்கும் கோயில்கள் உண்டு. செம்மொழியில் (ஸமஸ்கிருதம்) வழிபாடு நடக்கும் இடங்களும் உண்டு. இரண்டு முறையிலும் வழிபாடு நடக்கிற தலங்களும் உண்டு. அரவாணிகளுக்கு சிறப்பு மரியாதை கொடுக்கும் கூத்தாண்டவர் கோயில் போன்றவையும் உண்டு. ஒவ்வொரு சாதியும் அவர்களுக்குக் கட்டிக்கொள்ளும் குலதெய்வ கோயில்களும் உண்டு. மற்ற மதத்தவர் இஸ்கான் கோயிலுக்கு வரலாம். ஐயப்பன் கோயிலுக்கு எந்த மதத்து ஆணும் விரதமிருந்து இருமுடி கட்டி வரலாம். மேல்மருவத்தூர் கோயிலுக்கு செவ்வாடை அணிந்து எந்த மதத்தவர் வேண்டுமானாலும் வரலாம். புட்டபர்த்திக்கு வருடம்தோறும் வரும் கிருத்துவரும், இஸ்லாமியரும், கம்யூனிஸ்ட்டுகளும் எண்ணிக்கையிலடங்கார்.

தங்களை அனுமதிக்காத சிவன் கோயில்களை புறங்கையால் ஒதுக்கிவிட்டு ஈழவர் கட்டிய கோயில்களிலும் சிவ நர்த்தனம் நடந்துகொண்டுதானிருக்கிறது. அக்கோயில்களுக்கு அனைத்து பிரிவினரும் சென்று அண்ணலின் அருளை அருந்திக்கொண்டுதானிருக்கிறார்கள்.

காபா எனும் கட்டிடத்திற்குள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அனுமதிப்பதில்லை என்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ, திராவிடர் கழகத்தில் பார்ப்பனர் உறுப்பினராய் ஆகமுடியாது என்பதை நாம் எங்கனம் ஏற்றுக்கொள்கிறோமோ, கிருத்துவ தேவாலயங்களின் புனித நீரும் அப்பமும் கிருத்துவர்களுக்கு மட்டுமே என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளுகிறோமோ, அதுபோலவே இந்துக் கோயில்களின் விதிகளை ஏற்றுக்கொள்ளுவதும் மாற்று கருத்துக்களை அனுமதிப்பதும் பண்பாடு என்பதை உவப்போடு ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த செயல்.

அதைவிடுத்து, ஒரு குறிப்பிட்ட ஒற்றைப் பார்வைக்குள் அனைத்தும் பொருந்த வேண்டும் என்பது இயற்கைக்கு எதிரான மனித பன்முகத்தன்மைக்கு எதிரான வன்முறை. இதனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை செதுக்கிக்கொள்ள இயலாதவர் வன்முறையில் இறங்குவர். வன்முறை பரப்புவர்.

வாதம் 16: குறிப்பிட்ட மடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் சாதி அடிப்படையில் மரியாதை அளிக்கப்படுகிறதே. இது தவறல்லவா?

வைத்தியம்: அந்த மடங்களில் சென்று அவர்களின் செயலுக்கான காரணிகளை ஆராய்ந்தால் அந்த சாதியைச் சேர்ந்தோர் அந்த மடத்திற்கும், வழிபடு தலத்திற்கும் செய்திருக்கிற உழைப்பும், தியாகங்களும் அதீதமாய் இருக்கும். இக்காரணங்களாலேயே இவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதாக உங்களுக்குப் பதிலும் கிடைக்கும். சில மடங்களில் பார்ப்பனர்கள் முக்கியத்துவம் பெறுவதும், தமிழ்நாட்டு ஆதீன மடங்களில் வேளாள சாதியார் மரியாதை பெறுவதும், உயர்சாதி வெறி எதிர்த்துப் புறப்பட்ட நாராயண குருவின் மடங்களில் ஈழவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதும், திராவிடர் கழக மடங்களில் தலித்துகள் பார்ப்பனர்கள் அல்லாத உயர்சாதியார் மரியாதை பெறுவதும் இதன் காரணமாகவே நடைபெறுகின்றன.

ஆயினும், ஒரு மடம் அல்லது வழிபடு தலம் அனைவருக்கும் பொதுவானதாகத் தன்னைக் காட்டிக்கொள்ளுமாயின் அது அனைத்து சாதியாருக்கும் அனைத்து மதத்தாருக்கும் சமமான மரியாதையையே அளிக்கவேண்டும். மனிதரை அவர் பிறந்த சாதி மதம் சாராது அமைப்பிற்கு தரும் பங்களிப்பைப் பொறுத்து மரியாதை செய்யவேண்டும். அத்தகைய சம மரியாதையை இந்து அமைப்புக்களில் ராமகிருட்டிண-விவேகானந்த-சாரதா அமைப்புக்களிலும், சின்மயா அமைப்பிலும், ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புக்களிலும், மாதா அம்ருதானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரஜனீஷின் ஆசிரமங்களிலும், ஜேகேவை ஏற்றுக்கொள்கிற அமைப்புக்களிலும், ஷிர்டி மற்றும் புட்டப்பர்த்தி சாய்பாபா அமைப்புக்களிலும், ரமண ஆசிரமங்களிலும், வேதாத்திரி மகாரிஷியின் அமைப்பிலும், வள்ளலாரின் சீவ காருண்ய அமைப்பினராலும், இன்னும் நம் பார்வைக்கு வராத அமைப்புக்களாலும் நடந்துகொண்டுதானிருக்கிறது. ஆயினும், இந்த இடங்களிலும் வேறுபடும் விதிகள் உண்டு. இந்த விதிகளை ஏற்பவரே இந்த புனித இடங்களிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

வாதம் 16: உலகில் எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கும் சுதந்திரமான இடங்களே இல்லையா?

வைத்தியம்: முற்றிலும் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும், ஓரளவு இவற்றை வெற்றிகரமாய் செய்யக்கூடிய இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

வாதம் 17: அட, அவை எந்த இடங்கள்?

வைத்தியம்: இந்தியாவின் அனைத்து இலவச பொது கழிப்பறைகள், மற்றும் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும்.

ஐயன் காளி

aiyan.kali@gmail.com

http://aiyan-kali.blogspot.com/

Series Navigation

ஐயன் காளி

ஐயன் காளி

கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

ஐயன் காளிஅல்லும் பகலும் அயராதுழைத்து கொல்லும் வறுமைக்குள் குடும்பம் நடத்துகிறவர்கள் நாட்டில் செய்தி நிறுவனங்களின் தார்மீகக் கோபம் இந்துக் கோயில்களில் இறையை காண இயலாத கிருத்துவ, இஸ்லாமியருக்கு ஆதரவாய் கோயில் ஒழுங்குகளை எதிர்த்து நிற்கிறது.

அத்தனை செய்திகளும் இந்த புரட்சிக்கு ஆதரவாய் நிற்கையில், “இவர்தம் கேள்விகளில் முன்தெரியும் அறச்சீற்றம் எனும் புலிப் போர்வைக்குள்ளிருந்து பசுவதைப்போர்தம் பச்சாதாபக் குரல்களே கேட்கிறது” என்றொரு குரல் எழுமாயின் அஃதே முரண்பார்வை. அதுவே இக்கட்டுரையின் பார்வையும்.

பெயரளவுப் புரட்சியும், செயலளவு புரட்சியும்:

இந்தியாவிற்கென்று ஏற்கனவே நெய்யப்பட்டுவிட்ட தடத்திற்கு எதிரான இம்முரண்பார்வைகளை இகழ்ந்துவிட்டு, பிறந்து வளர்ந்து செத்தும்போய்விட்ட குறைப்பிரசவ குழந்தைக் கொள்கைகளுக்கு புதுமை என்று பெயர்சூட்டு விழா நடத்துவதுதான் புரட்சி என்றும்,

அழிவுக் கடவுளாய் அறியப்படும் சிவம் அழிப்பது பயன்படாத பண்டை கருத்துக்கள் என்பதும் அந்த பிணக்கருத்துக்களை எரித்த இடத்தில் நடக்கும் சிவத்தின் தாண்டவம் புதிய புவனங்களைப் புரிகிறது என்பது பிற்போக்குவாதம் என்று பேசுவதே முற்போக்கு என்பவர்கள் மத்தியில் இவர்தம் சமத்துவ வேடம்பற்றிய கேள்விகள்தாம் உண்மையில் புதுமைப்பார்வை, புரட்சிப்பார்வை.

எச்சரிக்கை:

இம்முழுக்கட்டுரையின் போக்கும் இப்படித்தான் இருக்கும் என்பதை மேலுள்ள பீடிகைகள் மெய்ப்பித்துவிட்டதால், புரட்சி என்று பிற்போக்கிற்கு பெயரிட்டு அதைச் சீராட்டுபவர்கள் இக்கட்டுரையை விடுத்துத் தங்களுக்கு பிடித்த வார்த்தைகளைப் பரப்பி நிற்கிற பக்கங்களுக்குப் பட்டென்று சென்றுவிடலாம்.

இத்தகையோர் பொய்மை வாழ்க்கையிலிருந்து இந்தச் சீராட்டுக் கனவுகள்தாம் அவரை காப்பாற்றுகின்றன என்கிற இரக்கத்தாலும், எமது நிலை என்ன என்பதை முதலிலேயே தெளிவாய் தெரிவிப்பது அறம் என்பதாலுமே கட்டுரையின் முன் நிறுத்தப்படும் இந்த “எச்சரிக்கை” அறிவிப்பும்.

ஏனெனில் ஒரு கருத்தை குறித்து உரையாடுபவர்தம் நோக்கம் தெளிவாய் தெரிந்த பின்னர் நடக்கும் உரையாடலில்தான் நேர்மை இருக்கும்.

கோயிலுக்குள் மாற்று மதத்தாரையும் அனுமதிக்கவேணும் என்போர்தம் நேர்மை குறித்தே இக்கட்டுரை. இக்கட்டுரை இப்பொய்யர்தம் வாதங்களை உண்மை என நம்புவோருக்கு எழுதப்பெற்றது.

வாதங்களும் அவற்றிற்கான வைத்தியங்களும்:

அகவறுமை கொண்டார் அறச்சீற்ற நடிப்பில் வந்துவிழும் வசனங்களில் ஒரு சில:

வாதம் 1. மாற்று மதத்தாரை கோயிலில் அனுமதிக்கக் கூடாதென்பது பார்ப்பனீய சாதி வெறி. பக்தி கொண்ட பாடகர் ஏசுதாஸை ஏற்காதவர்கள், பகல் கொள்ளையோடு விபச்சாரமும் செய்பவர் இந்து என்பதாலே அனுமதிப்பார்கள்.

வைத்தியம் 1: நிகழ்ந்த வரலாற்றனுபவங்களும், நிகழ்கிற அனுபவங்களும், அமைப்புக்களை நடத்த அவசியமாகிற சில பொதுமைப்படுத்தல்களுமே கோயில் ஒழுங்குகளுக்கும், அவற்றின் நடைமுறைப்படுத்தலுக்கும் காரணிகள்.

இந்துக்களாய் பிறந்த பெரும்பான்மையோர் பக்தி இல்லாவிட்டாலும்கூட ஒருவித மரியாதையோடுதான் கோயிலுக்குள் நுழைவார்கள். ஆனால் இந்துக்கள் வழிபடுகிற தெய்வங்களைப் பேய் வழிபாடு என்கிற மதத்தவர் இந்துக்கோயிலுக்குள் நுழைய நல்ல எண்ணங்கள் காரணமாயிருக்க முடியாது என வரலாற்றனுபவங்கள் சொல்கின்றன.

நம் கடவுளை தவிர்த்த மற்ற வழிபடு தலங்களும், வழிபடு முறைகளும் அழிக்கப்படவேண்டியவை என்பதை நம்புகிறவர் இந்துக் கோயிலுக்குள் வருகையில் கோயிலுக்கு வந்திருப்போருக்கும், கோயில் ஊழியருக்கும் என்ன மனநிலை ஏற்படும்?

தென் தமிழகத்திலும், பரந்த பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோயில் தெய்வங்களின் திருவுருவங்கள் உடைபடுவதும், வெடிகுண்டுகள் வீசப்படுவதாலும் காவலர் சோதனைக்குப் பின்பேதான் இறைக்காதலர் கடவுளை காணமுடிகிறது.

இச்சூழலில் இந்து வழிபாட்டு நம்பிக்கைகளை அழிக்கவேண்டும் என நம்பும் மதத்தவரை அனுமதிப்பது ஆபத்தானது என்று அவரை அனுமதியோம் என்று பொதுமைப்படுத்தலினால் ஏற்பட்ட விதி பாதுகாக்கிறது.

வைத்தியம் 2: விதிகள் பெரும்பான்மையை ஒட்டி எழும் பொதுமைப்படுத்தலில் இருந்தே எழும். குருவாயூர் கிருட்டிணனை பக்தியாய் வணங்கும் ஏசுதாஸும், இகழ் வாழ்வு நடத்தும் இந்துக்களும் அவர் சார்ந்த மதத்தின் விதிமீறுபவர். விதிமீறியவர்களின் நடத்தையை விதிகள் செய்ய பயன்படுத்த முடியாது.

வாதம் 2: உங்களது மத வழிபாட்டு உரிமையை நான் மதிக்கிறவன், ஆனாலும் பிற மதத்தவன் என்பதால் அனுமதிக்க இயலாது என்பது தவறல்லவா?

வைத்தியம் 1: வழிபாட்டு உரிமையை அனுமதிக்கும் மதிப்பிற்கும், வழிபடுதலை நம்புவதற்கும் ஆழி நீருக்கும், ஆற்று நீருக்கும் உள்ள சுவையொத்த வேறுபாடுண்டு. பக்தி என்பதை நம்பிக்கை என எடுத்துக்கொண்டால் அஃதில்லாதார் ஆலயம் ஏன் வரவேண்டும்?

வைத்தியம் 2: இந்து மதத்தின் மேலுள்ள உங்களின் மதிப்பை உரசிப்பார்த்து உண்மை நிர்ணயிப்பவர் யார் – கோயிலின் அதிகாரிகளா, அல்லது அந்த அதிகாரிகளை நியமிக்க, வேலையைவிட்டு துரத்தும் வல்லமையுள்ள அரசியல்வாதிகளா?

வாதம் 3: அதுதான் உங்களது கடவுளைப் பார்க்கவேண்டுமானால், இந்து மதத்திற்கு எதிரானவர் இல்லை என கையெழுத்துவிட்டுச் செல்லவேண்டும் என்கிற நடைமுறை சில கோயில்களில் இருக்கிறதே. கையெழுத்துப்போட்டுவிட்டு போகிறேன். அனுமதிக்கிறீர்களா?

வைத்தியம் 1: இந்து வழிபாட்டிற்கு எதிரானவர் இல்லை என்று கையெழுத்துப்போட மறுத்துவிட்டு, ஆனால் திருப்பதி கோயிலுக்குள் சென்ற சோனியாவால் திருப்பதி அறநிலையத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டது?

அறநிலையத்தின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து, கல்விநிலையங்களின் தலைமைப்பதவிவரை கிருத்துவர்களுக்குப் போயிற்று.

வைத்தியம் 2: உன் மனைவி எனக்கு தங்கை போல. அவளின் அழகைக்காணவே போர் தொடுத்தேன். காட்டினால் போர் நிறுத்துவேன் என்றவர்கள், கண்ட அழகைப் பெண்டாள கயமைகள் செய்தனரே. நமது மதத்தை வெற்றி பெறச் செய்ய என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற மதத்தத்துவங்களின் பித்தத்திலுள்ளோரின் வெற்றுக் கையெழுத்தை எங்கனம் நம்புவது?

வைத்தியம் 3: சிதறுண்ட நெல்லிக்கனிகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராய் இருக்கும் பலமற்ற இந்துக்களால் கையெழுத்துப்போட்டுவிட்டு அதை மீறுகிறவர்களை ஒன்றும் செய்ய இயலா நிலையில் கையெழுத்தாலும் என்ன பலன்?

வாதம் 4: நீதி மன்றங்களில் வழக்குத் தொடுங்கள். உங்களது சட்ட அமைப்பை நீங்களே நம்பவில்லையா?

வைத்தியம்: பலமுள்ள சிறுபான்மையினர் என்பதால் சட்ட அமைப்பின் சக்கரத்தை உங்கள் விரல்களில் அல்லவா சுழற்றுகிறீர்கள். உங்களுக்கு ஆதரவளிப்பதால் உங்களது சிவில் சட்டங்களை உங்களுக்கு மட்டும் ஏற்கும் நீங்கள், க்ரிமினல் சட்டத்திற்கு பொது நீதியே சரி என்கிறீர். சிவில் வழக்குகள் சிலவற்றிலும் உங்கள் செல்வாக்கு சட்ட அமைப்பையே மாற்றிய சதிகளைச் செய்தது.

மேலும், இந்தியாவின் நீதி மன்றங்கள் ஏதேனும் சடுதியில் நியாயம் உரைத்தனவா?

பணத்தாலும், பயமுறுத்தலாலும் விலைக்கு நீதியை வாங்கமுடியும் என்கிற உங்களது நப்பாசைகளையும் மீறி நல்லவர் சிலரால் நீதி மழை அவ்வப்போது பொழிகிறது.

மழை பொழிவதற்கு முன்னால் சோலையை பாலையாக்கிவிடும் “பலமுள்ள சிறுபான்மையோர்” மத்தியில் பாலையில் மழை பெய்து பலன் ஏது?

ஆங்காங்கே இருக்கும் பாலைவனச்சோலைகள் தயவில் “பலமற்ற பெரும்பான்மையோர்” மானம் துறந்துவிட்டாலும், உயிராவது தரித்திருக்கிறார்.

வாதம் 5: ஆலயங்களை பக்தியோடில்லை, கலைக்கூடமாய் காணுகிறேன். நான் வருவதில் என்ன தவறிருக்க முடியும்?

வைத்தியம்: கண்காட்சிக் கலைகளுக்கும், கடவுள்சார் கலைகளுக்கும் வேறுபாடு தெரியாததால் வந்த வினா இது. “அறியாமையால் வரும் வினை” என்கிற தமிழ் வாக்கிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

கடவுள்சார் கலைகள் வெளிப்படுத்தும் உன்னத உணர்வுகளையும், உண்மையையும் பார்க்க பக்தி என்றொரு தீப்பந்தம் வேண்டும். தாயினும் மேலான புனிதத்தை பக்தன் ஒரு பெண் சிலையில் காண்கையில், பக்தி இல்லா மாந்தர் வனப்புமிகு பெண்மையில் சொட்டும் கீழ்த்தர காமம் காண்பர். பக்தர் பாலூட்டும் சிலையில் தாய்மை காண்பர்; பதர்களோ “பார், என்ன வளமை பார்” என பரிகாசம் செய்வர்.

கலைமகளின் உலகிற்குள் விலைமகளிர் தெருவைக் காண்பவர் மத்தியில் கடவுளை வைக்க கோரிக்கை எழுப்புவது ஏன்?

வாதம் 6: எங்கள் மதத்தவராயினும், அதன் மகத்துவம் தெரியாமல் உங்கள் இறையின் முன் மண்டியிடுபவர் வந்தால், அவர் சென்றபின் கோயிலை சுத்தி செய்வதற்கு எதற்காக?

வைத்தியம்: கோயிலுக்கு வருவதற்கு முன்னரும் கோயில் விதிகள் தெரிந்தவையே. இக்கோயில் விதி தெரிந்தும், தன் தலைவிதி வினை தீர்க்கும் தெய்வம் இதுதான் என நம்பி வருவோர் கோயிலின் விதியையும் மதித்தே தீரவேண்டும்.

வாதம் 7: ஒரு மதத்தைச் சேர்ந்தார் பொல்லார் எனும் வாதம் மத வெறியன்றோ? இவ்வெறிக்குச் சொல்லும் சமாதானங்கள் சாதி வெறிக்கும் பொருந்துமன்றோ?

வைத்தியம்: பொருந்தா. பொல்லாச் செயல்களை புரி என்பதை நம்பிக்கையாய் கொண்டோரை மறுக்கக் காரணங்கள் அவர்தம் மதத்திலே உள்ளன. சாதிவெறி எனும் சாக்கடை இழிவிற்கு இந்து மதத்தில் இடம் இல்லை. இந்து மதத்தை வெறுப்பவரோ அவர்தம் வெறுப்பிற்கு அவர்தம் மத நம்பிக்கைகளை ஆதாரமாய் காட்டுகின்றனர். அவை மாற்றப்பட முடியாதவை என்கின்றனர்.

ஆனால், சாதி உயர்வு தாழ்வு பார்ப்பவர் எவரும் எந்த இந்து மத நூலையும் ஆதாரம் காட்டுவதில்லை. காட்டப்பட்டாலும் அவை ஆதார நூல்கள் இல்லை. ஆதார நூல்களையும்கூட அப்படியே ஏற்கவேண்டிய, பின்பற்றவேண்டிய அவசியமும் இந்து மதத்தில் இல்லை.

சாதி வெறுப்பு உலக சமுதாயத்தில் புரையோடிய சமூக-பொருளாதார புண். அதனாலேயே இந்து மதம் மட்டுமல்லாமல் சிறுபான்மை மதங்களிலும் அதன் கொடூரக் கூறுகளைக் காண்கிறோம்.

ஐயன் காளி

aiyan.kali@gmail.com

http://aiyan-kali.blogspot.com/

Series Navigation

ஐயன் காளி

ஐயன் காளி