கொச்சைப்படுத்தாதீர்கள், தயவு செய்து..

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

சரவணன்1978


சொல்புதிது சார்பில் நடத்தப் படும் நித்யா ஆய்வரங்கங்களின் ஆக்கபூர்வமான விமரிசன ஆய்வுகளை அதன் தளத்தில் எதிர் கொள்ள முடியாத சிலர் கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் . ஆர் பி ராஜநாயகம் மற்றும் மாலன் ஆகியோரால் திண்ணையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் அம்முயற்சியின் சான்றுகள்.

இவர்கள் சொல்லும் அவதூறுகள் என்னென்ன ?

அ ] சொல் புதிது தளையசிங்கத்தை புதிய விக்கிரகமாக முன்வைக்கிறது என்பது முதல் குற்றச்சாட்டு .திண்ணையில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் விவாதங்களை படித்து பார்க்கும் எவருமே இது எத்தனை அபத்தமான கூற்று என்று புரிந்து கொள்ள முடியும். தமிழின் பலதரப்பட்ட கருத்துக்கள் கொண்ட முக்கியமான எழுத்தாளர்களும் விமரிசகர்களும் அதில் பங்கு கொண்டிருக்கிறார்கள் . அதில் சிலர் தளைய சிங்கத்தை முழுமையாகவே நிராகரிக்கிறார்கள் [வெங்கட் சாமி நாதன் ,நாஞ்சில் நாடன் ] .சிலர் அவரது சமூக சீர்திருத்த பாணியை மட்டுமே ஏற்கிறார்கள் [ அன்பு வசந்தகுமார், தாமரை ஆறுமுகம் ] சிலர் அவரது சில கதைகள் மட்டுமே முக்கியமாக கூறுகிறார்கள் [மோகனரங்கன், சூத்ரதாரி ]

அவரை முக்கியப்படுத்தி பேசும் வேதசகாய குமாரும் ஜெயமோகனும் கூட கடுமையான விமரிசங்கள் மூலம் அவரை சாராம்சப்படுத்தி அணுகுவதை காணலாம். வேதசகாய குமார் விரிவாக விவாதித்து , தளையசிங்கத்தின் மெய்யுள் காலகட்டம் இலக்கிய முக்கியத்துவம் உடையதல்ல; சிறுகதைகளும் முதல்கட்ட விமரிசனங்களும் மட்டுமே முக்கியம் என்கிறார். பிறகு மேலும் சென்று அவரை ஒரு விமரிசகராக மட்டுமே முக்கியப்படுத்திச் சொல்கிறார் .

அதேபோல ஜெயமோகன் தளையசிங்கத்தின் பெரும்பாலான அம்சங்களை கறாராக பரிசீலித்து நிராகரித்து செல்வதை படிக்கத் தெரிந்தவர்கள் உணர முடியும். அவரது பரிணாம கொள்கை எந்த சூழலில் இருந்து பெறப்பட்டது என்று விளக்குகிறார். அவர் பயன்படுத்திய இந்திய மரபு உருவகங்கள் எப்படி முழுமையற்றனவாக உள்ளன என்கிறார். தன் அகத்தரிசனங்களை அவர் ஈழ அரசியல் நோக்கிப் போட்டு பார்த்தது மனப்பிறழ்வின் விளைவு என்று கூறி மெய்யுளையே நிராகரிக்கிறார். தளையசிங்கத்தின் முக்கியத்துவமாக ஜெயமோகன் கூறுவது இரு விஷயங்கள் 1] அவர் உண்மையான கலகக்காரர், சமூக சீர்திருத்தக் காரர் 2] தன் காலகட்டத்தின் தத்துவபிரச்சினைகளையும் வரும்கால பிரச்சினைகளையும் அவர் துல்லியமாக தன் உள்ளுணர்வினால் அடையாளம் கண்டு அது குறித்து முதல் முன்னோடியாக பேசினார் . அவ்வளவுதான்

சொல் புதிது நடத்திய கூட்டம் ஒரு முக்கிய சிந்தனையாளரை பற்றிய முழுமையான பார்வையை பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் உருவாக்கி பதிவு செய்யும் பொருட்டே. உண்மையில் ஒரே ஒரு சிறு கூட்டம் மட்டுமே நடத்தப்படுள்ளது. அரைகுறை ஆசாமிகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் தலைப்பகை கட்டி அரை நூற்றாண்டுகாலம் கொண்டாடிய ஆசாமிகளெல்லாம் இதை வழிபாடு என்கிறார்கள். சிந்தனை முன்னோடி என்ற முறையில் இக்கூட்டமே தளையசிங்கத்தைப் பற்றியதல்ல, அவர் முன்வைத்த விஷயங்களை ப் பற்றியது என கட்டுரைகளை படிக்கும் எவருமே அறியமுடியும்

ஆ] ஆர் பி ராஜநாயகம் அவரது கோரிக்கைக்கு ஏற்ப கூட்டத்துக்கு வந்தார் . அவருக்கு எதுவுமே புரியவில்லைஎன்று தெரிந்தது . தன் கல்லூரி நாள் சாகசங்கள் , வினோபா ஆசிரம காம களியாட்டங்கள் என்றெல்லாம் அரட்டை அடித்தபடியே இருந்தார். பணம் செலவு செய்து வந்தவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பலமுறை கோரப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் எழுந்து நின்று ஒரு ரவுடி கழுதையை புணர்வதை நடித்து காட்ட ஆரம்பித்த போது அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்தது. பங்கேற்போர் கோரிக்கையின்படி கூட்டத்தை விட்டு வெளியேறும்படி கோரப்பட்டார்.

சொல் கூட்டங்களின் சிறப்பியல்பே வெற்று அரட்டைக்கு இடமில்லை, சபை மரியாதை குறித்த நிபந்தனைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்ற கண்டிப்புதான். இதற்கு ஒப்புக் கொள்பவர்களே அழைக்கப்படுகிறார்கள். ஆகவேதான் ஆக்கபூர்வமான விமரிசனங்கள் இங்கு சாத்தியமாகியுள்ளன.பங்கேற்பாளர்களும் சொந்தச் செலவில் நம்பி வருகிறார்கள். ராஜநாயகத்தை சிலர் தூண்டி விட்டு நடக்காத விஷயங்களை எழுதி இதழ்களுக்கும் தனிநபர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே திண்ணையில் வெளியான கட்டுரை. அதில் குறிப்பிடுவதுபோல எந்த விவாதத்தையும் அவர் நடத்தவில்லை

சொல் கூட்டங்களில் எங்களை முற்றாக நிராகரிப்பவர்களான எஸ் .ராமகிருஷ்ணன் , ஆதவன் தீட்சண்யா [ஆசிரியர் விசை ] போன்ற பலர் கலந்துகொண்டு கடுமையாகவே விமரிசனங்களை முன்வைத்துள்ளார்கள் .சொல் கூட்டம் எப்போதுமே ஒருதரப்பாக நடைபெற்றதில்லை .

3 ] மாலன் கூறும் குற்றசாட்டுகளை திண்ணை கட்டுரைகளிலிருந்தே ஆதாரபூர்வமாக மறுக்கலாம். ஜெயமோகன் சொல் புதிதில் எழுதிய விஷயமே மாலன் கூறுவதற்கு நேர் எதிரானது. சாரு நிவேதிதா எழுதும் வெறும்பாலியல் கதைகள் எந்தவகையான சமூக அதிர்ச்சியையும் ஏற்படுத்தாது; அம்மாதிரி அதிர்ச்சிகளை தனக்குள் அனுமதித்துக் கொண்டே இயங்குவது நம் சமூகம்; கலகம் என்றால் சாரு எழுதுவதுபோல வெறும் பேச்சாக இருக்காது என்று தான் ஜெயமோகன் எழுதினார். தளையசிங்கத்தின் பாலியல்கதைகள் யாழ்ப்பாணச் சாதிய சமூகத்தின் ஆத்மாவை சீண்டுவது. அவரது கலகம் முழுமையானதாக இருந்தது. ஆகவே அவர் அழிக்கப்பட்டார் என்கிறார்.

தளைய சிங்கம் பாலியல் கதாசிரியர் என்று சொல்லப்படுவதாக மாலன் எழுதுவதை என்ன என்று விளக்குவது என்றே தெரியவில்லை. அதற்கு நேர்மாறாக அவரது பாலியல் கதைகள் நியதிகளை மீறிச் செல்ல்லும் கலைஞனின் ஆன்மீகத் தேடலின் ஒரு கட்டம் என்றே வேதசகாயகுமார் உள்ளிட்டவர்கள் மிக விரிவாக தங்கள் கட்டுரைகளில்பேசுகிறர்கள்.

மீறல் என்பதை ஆன்மீகத்துடன் பெரிக்கமுடியாது என்றும் எல்லா ஆன்மீக வாதிகளும் amoral ஆன கதைகளை/விஷயங்களை ஒருகட்டத்தில் முன்வைத்துள்ளனர்; ஆகவே தளையசிங்கத்துக்கு பாலியல் அதிர்ச்சி தரும் நோக்கம் இல்லை என்றே ஜெயமோகன் வாதிட்டார். இதைஅவரது கட்டுரையிலும் விவாதத்திலும்காணலாம். மு தளையசிங்கம் எழுதியவை பாலியல் அதிர்ச்சி கதைகள் என்று சொன்னவர் நாஞ்சில்நாடன் மட்டுமே.

தளைய சிங்கத்தின் மரணம் குறித்து பிகெ பால்கிருஷ்ணனை மேற்கோள்காட்டி வெவ்வேறு கோணக்களில் ஜெயமோகன் மிக விரிவாக தன் கட்டுரையில் பேசியிருக்கிறார். விவாதங்களில் தளையசிங்கத்தின் தளையசிங்கத்தின் போராட்டம் மரணம் பற்றி பல கோணங்களில் பேசப்பட்டுள்ளது. தேவகாந்தன் தன் ஆதாரபூர்வ நினைவுகளை சொல்லியுள்ளார் . இவ்வளவு பதிவு செய்யப்பட்ட பிறகு [வேறு இதழில்கூட அல்ல!] மாலன் கூசாமல் அவதூறை அவிழ்த்துவிடுகிறார் .

தளையசிங்கத்தின் சீர்திருத்த நோக்கு , மார்க்ஸ்-உடன் அவரது உறவு ஆகியவை பற்றி ஜெயமோகன் தன் கட்டுரையில் விரிவாகவே பேசியுள்ளார். [மார்க்ஸியமும் தளையசிங்கமும் பற்றி ஒரு உபதலைப்பே உள்ளது] அதன் பல தளங்கள் விவாதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பதிவான பிறகும் இப்படி சொல்ல எப்படி துணிவு வருகிறது ?

தங்களை படிக்கும் வாசகர்களில்பெரும்பாலோர் ஒருபோதும் வேறு எதைப்பற்றியும் படிக்க மாட்டர்கள்; கையெட்டும்தொலைவில் இருந்தாலும் உண்மைத்தகவல்களை தெரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான் அது .மாலனை பொறுத்தவரை அது சரியாகவும் இருக்கலாம்

***

yaazhini@rediffmail.com

***

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்