கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)


நகையில்லா நங்கைமுகம் நிலவா என்ன ?
நகைகழுத்தை நிறைப்பதுதான் அழகா என்ன ?
குகைபதுங்கிச் சீறுவது சிங்க மாமோ ?
குணமில்லா நரிகளெல்லாம் நண்ப னாமோ ?
பகைமறைத்துப் பொய்முகத்தால் சிரிப்ப தெல்லாம்
பதடிகளின் நடிப்பேயாம் பெருமை இல்லை
முகையாக இருந்துவிட்டால் மணப்ப தில்லை
முகம்பார்க்க வண்டினங்கள் வருவ தில்லை

உதைக்காமல் ஒருபோதும் பந்து மண்ணில்
உருண்டோடி திசையெங்கும் ஊர்வ தில்லை
சிதைத்தாலும் செதுக்குவதால் சிற்பம் தோன்றும்
சிற்றுளிதான் சிற்பிக்கு எழுது கோலாம்
வதைத்தாலும் வருந்தாத மூங்கில் கூட்டம்
வலிதாங்கி துளைதாங்கி குழல்க ளாகும்
கதைக்காமல் கலக்காமல் காதல் ஏது ?
கண்கள்தாம் காதலுக்கு தி தூது

விதைப்பதற்கு வைத்திருக்கும் விதைக ளெல்லாம்
விளைந்ததிலே தேர்ந்தெடுத்து வைத்த வைதான்
விதைக்காத விதைகளினால் விளைச்ச லில்லை
விருட்சமில்லை தேன்மலர்காய் கனிக ளில்லை
விதைத்தால்தான் விளைச்சலாகும் விளைநி லங்கள்
செழித்தால்தான் சிரிப்புவரும் சிரமம் போகும்
விதைப்பதுதான் பசிபிணிக்கு மருந்தே யாகும்
விளைநிலந்தான் தாவரத்தின் கருப்பை யாகும்

விதைத்ததெல்லாம் கருப்பையில் விளைவ தில்லை
விழிக்காத விதைகளினால் பயன்க ளில்லை
கதைக்காமல் செயல்மீது கவனம் சேர்ந்தால்
கதையின்றிக் கவிதைகளாய் வெற்றி கிட்டும்
விதைபோல கவிதைகளில் கருத்து வேண்டும்
விருத்தங்கள் வெற்றிபெற எதுகை வேண்டும்
சிதையாமல் சிந்தனைகள் செயல்க ளானால்
சிகரந்தான் சாதனையில் தடைக ளில்லை

கையிருப்பு வைத்திருக்கும் நேர்மை உண்மை
கடுமுழைப்பில் கைசேரும் செல்வம் தன்னைப்
பொய்யிருப்புக் கவர்ச்சிகளில் விதைக்க வேண்டாம்
பொன்முடியை புழுதிபட விடவும் வேண்டாம்
மெய்யிருப்பு னவற்றை விதைக ளாக்கி
மேன்மேலும் நன்மைவர விதைப்புச் செய்வீர்
கைவிரிப்பு இல்லாத கர்ண னைப்போல்
கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்
—-
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pichinikkaduelango@yahoo.com

Series Navigation