கேட்டதெல்லாம் நான் தருவேன்

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

சக்தி சக்திதாசன்


நினைவுகளைப் பஞ்சாக்கி
நெஞ்சமெனும் உறையினிலே
தலையாணி போலாக்கி
ஞாபகங்களைத் தூங்க வைத்தேன்

காலமென்னும் காற்றடிக்க
கலைந்து விட்ட ஞாபகங்கள்
அலைந்தோடும் மேகங்களாக
அசைபோட்டு நின்றதம்மா

கலைமகளின் துணைகொண்டு
கல்வி கற்ற பொழுதுகளின்
கதகதப்பான எண்ணங்கள்
கற்பனையை நனைத்தன

இன்பத்தையே வரவாக்கி
இன்பமாய் செலவு செய்து
இன்பத்தின் மடிதனிலே
இருந்த ஒரு காலமது

நட்பெனும் புனித உறவு
நெஞ்சத்தை நிறைத்திருந்த
நேசமழை பொழிந்திருந்த
நேரமந்த நேரமம்மா

கண்ணால் விதையன்று
கன்னியவள் வீசியெந்தன்
காளை மனதினில் வளர்த்தது
காதலென்னும் செடியன்று

ஜாதியில்லை மதமில்லை
ஜக்கியத்தின் ஆலயத்தில்
ஜம்பமாய் நண்பர் குழாம்
ஜயனித்த வேளையது

முதற் காதல் அரும்பியதும்
ஒருதலையாய் வளர்ந்ததும்
பார்வைகளால் பேசியதும்
பறந்ததந்தக் காலமம்மா

கேட்டதெல்லாம் நான் தருவேன்
கேட்காமல் கொடுப்பவனே நான்
கேட்பதெல்லாம் உன்னிடத்தில்
கொடுத்துவுடு திரும்ப அந்தக் காலமதை


Series Navigation