கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

கோபால் ராஜாராம்


‘இலக்கியப் பேட்டையில் கலாட்டா ‘ என்று தலைப்பிட்டு ‘இந்தியா டுடே ‘யில் சிற்றிலக்கிய நண்பர்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்தக் கட்டுரையில் வெளிவந்தவை எண்ணி மூன்றே மூன்று செய்திகள் . பிரமிள் பற்றிய இலக்கியக் கூட்டமும், விவாதமும் மதுக் கடையில் நிகழ்ந்தது. அஜயன் பாலாவின் புத்தக வெளியீடு ஓடும் ரெயிலில் நடந்ததும், புத்தகம் கூவத்தில் வீசப்பட்டதும். பெண் செக்ஸ் தொழிலாளியை வைத்து என் அடுத்த புத்தகம் வெளியாகும் என்று ஒருவர் சொன்னதன் பதிவு. (இது இன்னும் நடக்கக் கூட இல்லை. வெறுமே சொன்னதே கலாட்டா ஆகிவிட்டது ‘இந்தியா டுடே ‘க்கு. அதனால் இரண்டே செய்திகள் தான். அதிலும் ஒன்று பொய். செக்ஸ் தொழிலாளி புத்தகத்தை வெளியிடுவது பற்றி ஒருவர் யோசிப்பதே எப்படி கலாட்டா ஆயிற்று என்று தெரியவில்லை. ) பிரமிள் புத்தக வெளியீட்டுக்குப் பிறகு சாரு நிவேதிதா தாக்கப் பட்டது , இலக்கிய சம்பந்தமான நிகழ்ச்சியாய்த் தெரியவில்லை.

இதில் எனக்கு அதிர்ச்சி செய்த ஒரே செய்தி கூவத்தில் புத்தகம் வீசப்பட்டது தான். (இது பொய்ச்செய்தி என்று ‘தீம்தரிகிட ‘வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.) சென்னை மிகவும் அசுத்தங்கள் தாங்கிய நகரம். பொறுப்பற்ற உபயோகிப்பாளர்களும் , கடைக்காரர்களும் தெருவையே குப்பைக்கூடையாக்கிக் கொண்டிருக்கும் நகரில் அந்தக் குப்பைக்கு மேலாக இன்னொரு குப்பையை வீசும் செயலைக் கலகம் என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. தூய்மையான தெருக்களை உடைய மேநாட்டுத் தெருவொன்றில் குப்பையைப் போட்டுவிட்டு அது தான் கலகம் என்று சொன்னாலாவது அர்த்தமுண்டு. அதுவும் கூட குறியீட்டளவில் செய்யப்பட்டால் தான் அதற்குப் பொருளுண்டு. நிஜமாகவே குப்பை போடுவது என்பது குப்பை அள்ளும் தொழிலாளியை அநாவசியமாய் வேலை வங்கும் செயல். சென்னையில் இதற்கிணையாகக் கலகம் செய்ய வேண்டும் என்றால், சிறு பத்திரிகை இயக்கத்தினர் சென்னை வீதிகளை விளக்குமாறு எடுத்துக் கொண்டு போய்க் கூட்டினால் தான் கலகம் என அழைக்க வேண்டும்.

புத்தகத்தை வெளியில் எறிந்து ‘இயற்கைக்கு அர்ப்பணிப்பு ‘ என்று பெயர் எடுப்பதற்குப் பதிலாக, தெருமுனையில் புத்தகத்த்தின் பக்கங்களை ஒரு பலகையில் வைத்து மக்களைப் படிக்கச் செய்திருக்கலாம்.

இலக்கியவாதிகள் குடிப்பது என்பது பெரிய விஷயமில்லை. ஒரு அமைப்பிற்குட்பட்ட structured இலக்கியக் கூட்டங்களுக்கு முன்பும், பின்னும் குடிப்பதும் , தொடர்ந்த விவாதமும் பல சாளரங்களைத் திறந்துள்ளன. பல தொடர்ந்த செயல்பாடுகளுக்கு வழி வகுத்துள்ளன. திருச்சியில் வாசகர் அரங்கு கூட்டமே கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் தான் பல காலம் நடந்தது. மதுக்கடைகள் இல்லாத காலத்தில் தேநீர்க்கடை பெஞ்சுகளில் விவாதங்கள் நடந்ததுண்டு. இந்த மதுக்கடையில் நடந்த கூட்டத்திலேயே குடிக்காதவர்கள் , குடிப்பழக்கம் இல்லாதவர்கள் , விவாதத்தில் கலந்து கொண்டதும் எனக்குத் தெரியும். இது ஒழுக்கம் சார்பான பிரசினை அல்ல. தனிமனித தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம்.

ஆமாம், கூட்டங்களில் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த கலாட்டா எல்லா சமூகக் குழுக்களைப் போலவும் இலக்கியக் குழுக்களிலும் நடப்பதுண்டு. இவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். போதைப்பொருள் விலக்குச் சிகிச்சையை -Detoxification Program – மனதளவிலும் உடலளவிலும் பெற வேண்டிய அவசியம் உள்ளவர்கள். இவர்களைப் போன்ற நோயாளிகள் பண்ணும் கலாட்டா யாரையாவது சங்கடப் படுத்தவேண்டும் என்றால், நண்பர்களையும் குடும்பத்தினரையும் தான்.

‘இப்படி கலகம் செய்வதெல்லாம் இன்றைக்கு நேற்று ஆரம்பித்த விஷயமில்லை. 70-களிலேயே தருமு சிவராமுவும், வெங்கட் சுவாமிநாதனும் ஆரம்பித்து வைத்த விஷயம். இப்படிப்பட்ட கலக நடவடிக்கைகள் ஆழமான, ரசனையுள்ள வாசிப்பிற்கு எதிரான மனநிலையை உருவாக்கும் என்பது நிச்சயம் புரிந்துகொள்ளக் கூடியது தான். ‘ என்பது இந்தியா டுடேயின் வாசகம். என்ன நடந்தது என்று அறியாத பாமரத் தனம் தான் இதில் வெளிப்படுகிறது.வெங்கட் சாமிநாதன் சென்னையில் தான் இருக்கிறார். அவரிடம் சென்று கேட்டிருக்கலாம் என்ன நடந்தது என்று. பிரமிளை அறிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆமாம், வெங்கட் சாமிநாதனுக்கும், சிவராமுவிற்கும் சில சண்டைகள் நடந்தது உண்டு தான். இதனால் வெ சாவின் விமர்சனப் பணியோ, சிவராமுவின் கவிதைச் சிறப்போ அறியப்படாமல் போய்விட்டனவா ? வெ சாவை விடவும் ரசனையை அழுத்தமாய்ப் பேசிய விமர்சகர் வேறு யார் ?

என்னென்ன கலகங்கள் யாரால் நிகழ்த்தப் பட்டன என்று பட்டியலிடும்போது, இந்தியா டுடே மிக ஞாபகமாக தன் மீது எறியப்பட்ட கலகம் ஒன்றை இருட்டடிப்பு செய்தது ஏன் என்று தெரியவில்லை. அப்படிச் செய்தவர்கள் இந்தியா டுடேயுடன் இன்று ஐக்கியமாகிவிட்டதனாலா ? அது நடந்து பத்து வருடங்களாகிவிட்ட நிலையில், கலகம் ‘லேடஸ்ட் ஃபேஷன் ‘ என்று இந்தியா டுடே தெரிவிப்பது ஏன் ?

சிறுபத்திரிகைகள் குழுவாக இயங்குவதும், குழு ஒன்றை இன்னொரு குழு விமர்சனத்துக்குள்ளாக்குவதும் புதிய விஷயமல்ல. இப்படி விமர்சனங்கள் தான் – இந்தியா டுடே பாஷையில் சண்டை – இலக்கிய இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன. இந்தியா டுடே பற்றி, குமுதத்திலோ, குமுதம் பற்றி விகடனிலோ , விகடன் பற்றி கல்கியிலோ எந்த விமர்சனமும் வராது ஏனென்றால் இவர்கள் ஒரு விதத்தில் கூட்டுக் களவாணிகள். இவர்களின் நோக்கம் ‘ஒருவரையும் புண்படுத்தாமல் ‘ காசு பண்ணுவதாகும். இப்படி புண்படுத்த வேண்டாத ஒரு கட்டுப்பெட்டித் தனமும், கருத்துகளைக் கண்டு அஞ்சும் தன்னடக்கம் என்ற பெயரில் ஏற்படுத்திக் கொண்ட மழுங்கல் தன்மையும், பரஸ்பர மரியாதை என்ற பெயரில் ஒருவரையொருவர் தாங்கிப் பிடிப்பதும் வணிகப் பத்திரிகைகளுக்கு தேவையாய் இருக்கலாம். அவர்களின் வணிகம் யாரும் மனம் நோகாமல் ‘பணியாற்றும் ‘ முனைப்பில் இருக்கலாம். சிறு பத்திரிகைகள் இப்படிச் சமரசம் செய்துகொண்டாக வேண்டியதில்லை. சிறு பத்திரிகைகளுக்கு அவர்களின் விமர்சனப் பாங்கே பலம் ஆகும். சண்டை சச்சரவுகளே விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிற முனைப்பு ஆகும்.

இப்படிப்பட்ட கட்டுரைகள் முழுக்க முழுக்கப் பயனற்றவை என்று நிராகரிக்க அவசியமில்லை. இதுவரையில், காங்கிரஸ் கோஷ்டி சண்டை, ஸ்டாலின்-அழகிரி சண்டை, தாமரைக்கனி சண்டை என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தவர்கள் சிறு பத்திரிகை இயக்கத்தின் செயல்பாடுகளில் சண்டையைத் தேடிப் பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் ஒரு விதத்தில் சிறுபத்திரிகை உலகம் நட்சத்திர மதிப்புப் பெற்று விட்டதாகத் தானே அர்த்தம் ?மைய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாய்த் தானே அர்த்தம் ? இதை நாம் ‘வரவேற்க ‘ வேண்டுமல்லவா ?

***********

gorajaram@yahoo.com

Series Navigation