கூட்டுக்கவிதைகள் இரண்டு

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன்.


ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள்

———– (கூட்டுக்கவிதை )
– ஜான் பாபுராஜ்
– நா.முத்துக்குமார்
– சங்கர ராமசுப்ரமணியன்
– லஷ்மி மணிவண்ணன்
– விக்ரமாதித்யன்.

ஒரு
வீடு இருந்தது
அல்லது
இருந்ததாகச் சொல்லப்பட்டது
ஒருவேளை
அது இருந்திருக்கவும் செய்யலாம்
ஆனால்
அது
அம்மா வீடா
அப்பா வீடா
குழந்தைகள் வீடா

குழந்தைகள்
விளையாடிக் கிளப்பிய புழுதியில்
வீடு என்று சொல்லப்பட்ட வீடு
மறைந்து தெரிந்தது

வீட்டுக்குப் பக்கத்தில்
இன்னொரு வீடு(ம்) இருந்தது
அல்லது
இருந்ததாக நினைத்துக்கொண்டது

கடவுள் வீட்டில் பிசாசும்
பிசாசு வீட்டில் கடவுளும்
திணை மயங்கிய இரவில்
ராஷஸ சதுரங்கப் பலகையில்
ஏணிகளை விட்டு
பாம்புகள் இறங்கிக்கொண்டிருந்தன

குளியலறையின் குழாயடியிலிருந்து
விபரீதம் தொடங்குகிறது
குழாயடி இருட்டு
அறைகள் முழுதும் அலைகிறது
தூங்கிக்கொண்டிருக்கும்
குழந்தைகள் மீது
இருட்டு படர்கிறது

வீடு
வயோதிகர்களுக்கானதும்தான்
அந்தக்காலத்தில்
எல்லா வீடுகளிலும்
பாயும் படுக்கையும் உண்டு

வாடகை வீடா
சொந்த வீடா
சொந்த வீடென்றால்
ஒத்திவைக்காமல்
காப்பாற்ற வேண்டும்
எல்லாவற்றையும்
மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள்

வீடு
பாம்பாய் உரு மாறியபோது
மனைவியை
வீடு சுற்றிப் படர்ந்தது

கடைசி
முத்தச்சூடு
முடிந்த வேளை
குழந்தை
அழகிய தூக்கத்தில்
அம்மாவின் புணர்ச்சியை
கனவு கண்டபோது
வீட்டின் சுவர்கள் கரைந்து
வீடு
வெறும் கட்டிலானது
(உடல்களற்ற
கட்டில்)

வீடுகளிலிருந்து கிளம்பும்
மனிதர்கள் முதுகில்
சுமந்து செல்கிறார்கள்
தங்களுக்கான வீடுகளை

சமையலறையிலிருந்து வெளியேறும்
மாற்றுச்சாவி தொலைந்த பெண்கள்
வீடு தேடி அலைகிறார்கள்
நகரெங்கும்

எல்லா வீடுகளின் உத்தரங்களிலும்
யாராவது ஒருவர்
தூக்கில் தொங்குகிறார்
எங்கிருந்தோ வந்து
எறும்புகள் சூடுகின்றன.

*********************************

வருவான்
குதிரை ஏறி வருவான்

—————கூட்டுக்கவிதை
-நா. முத்துக்குமார்
-விக்ரமாதித்யன் நம்பி

அற்புதம் அற்புதம்
பள்ளம்
பாய விழக்கொண்டு
பார்த்திருக்கிறாயா
யோனிமுடியை
அதன் பிரபஞ்சச்சுழிப்பை
வளர்ந்து
வரும் சிறுமுலையை
ரோம நதியை
(அதன்
ஆழங்களில்
அமிழ்ந்து
அடித்துச் சொல்லப்பட்டவர்களை)
மாதவிடாய்
என்றால் தெரியுமா
தெரியும்
தெரியும்
வழிகிறது
குருதி ஆறு
ஆசையில்
யாரை
நோக்கி
எப்படி
கண்டுபிடி
கண்டுபிடி
எந்த மரக்கிளையில்
இருந்து விழுந்தாய்

முதல் முதலிலே
இதைப் பார்த்து
பயந்தாயா பெண்ணே

ருதுவாகி
எத்தனை
வருஷங்கள் ராஜகுமாரி

உன் கனாவில்
யார் வருகிறான்

வருவான்
குதிரை ஏறி வருவான்

என்னை
சிறையெடுத்துச் செல்வான்

என்
முலைக்கதகதப்பில்/குளிர்ச்சியில்
தூங்குவான் அமைதியாய்

சற்றே மீறிப்போனால்
சங்கைக் கடித்து
ரத்தம் குடித்து
நானும்
செத்துப்போவேனடா
பித்துக்குளியே

***********************************

Series Navigation

ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன்.

ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன்.