கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

சி. ஜெயபாரதன், கனடா.


மரக்கிளை முறிந்து போனாலும்
ஒட்டிக் கொண்டு தொங்கும்,
கட்டிய கூடுகள்!
எட்டி, எட்டிப் பார்த்துக்
கீச்சிட்டுக்
குஞ்சுகள் பரிதவிக்கும்!
வாசல் படியேறிக்
காதல்வலை வீசிக் கண்ணடித்து
நெஞ்சத்தில்
கூடு கட்டிய புள்ளினம்
குலாவிய பின்பு மீண்டும்
வீடு நோக்கி வரவில்லை!
கா கா வென்று
காதல் கீதம் பாடியவை,
கூக்கூ வென்று ஊடல் புரிந்தவை,
வாய் வலித்து ஓய்ந்தன!
மேய்ந்திட
பச்சைக் கொடிகாட்டும் அக்கரை!
ஓரிரவில் தேனருந்தி
விடிவதற்கு முன் வெளியேறியவை
மீண்டும்
கூடு தேடி வரவில்லை!
குடற்பசிக்கு இரைநாடும் குஞ்சுகள்
கும்பி ஒடுங்கித் தேயும்!
உடற்பசிக்கு இரைதேடிக் தீக்குளிக்கும்
மாடப் புறாக்கள்,
கூடு விட்டுக் கூடு பாயும்!
நெஞ்சைக் கல்லாக்கி
நினைவை மண்ணாக்கி,
துணைக் கழுகைப் புண்ணாக்கி,
சுத்தமான
புத்தம் புதுத் தேனுண்டு
பூமியை விட்டு விடுதலையாகி
நிலவுக்குப் பின்புறம்
ஒளிந்து
நாட்கடந்து மீளும்
கழுகுகள்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 9, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா