கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம் – ஒரு பார்வை

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

அசுரன்


நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகளை கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்திய அணு மின் உற்பத்தி கழகம் தொடங்கியது. இதற்கு 1988 முதலே மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கூடங்குளத்தில் மேலும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நான்கு அணு உலைகள் அமைக்க இந்திய அணு மின் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஆண்டு அக்.6ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அணு உலை வேண்டாம் என்று பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே கூடங்குளத்தில் அணுஉலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் 2ம் முறையாக ஜன.31ல் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமும் அலுவலக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. 3வது முறையாக மார்ச் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. பின்னர் வ.உ.சி. மைதானத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தயாரான நிலையில், தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டதால் 3வது கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 4வது முறையாக ஜூன் 2ம் நாள் காலை 11 மணிக்கு நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) கண்ணப்பன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் உள்ளிட்டோர் நெல்லை வந்துள்ளனர். இதனிடையே கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூன் 2ஆம் நாள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் மீனவ கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி, தோமையார்புரம், கூட்டப்பனை, கூடுதாழை மற்றும் பெரியதாழை ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இது சம்பந்தமாக நடைபெறும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் நெல்லைக்கு சென்றுவிட்டதால் எப்போதும் பரரப்பாக காணப்படும் மீனவ கிராமங்களின் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது. மேலும் அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளத்தில் வியாபாரிகள் கடையடைப்பும் நடத்தினர். இதனால் கூடங்குளம் முழுவதும் பந்த் போன்று காட்சியளித்தது.

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கைக்குழந்தைகளுடனும் பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வந்திருந்தனர். அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் அவற்றில் விவரத்தை பூர்த்தி செய்து கொடுத்தவண்ணம் இருந்தனர். ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் வந்திருந்தனர். சுமார் 30 வண்டிகளில் சற்று தாமதமாக வந்த கூடங்குளம் மக்கள் அனைவரும் அரங்கிற்கு வெளியேயே நிறுத்தப்பட்டனர். (உள்ளே அவர்களின் எதிர்காலம் குறித்த அனல்பறக்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன).

பல்லாயிரக்கணக்கில் இலத்திகளுடனும் துப்பாக்கிகளுடனும் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் கும்பலைப்பார்த்து மக்கள் மிரள, சுற்றி சுற்றி வீடியோ எடுத்து மிரட்டிக்கொண்டிருந்தனர் போலீசாரும் அணுவாற்றல் துறையினரும். இதனால் வெகுண்ட முனைவர் எஸ்.பி. உதயகுமார், “நாங்களெல்லாம் என்ன பயங்கரவாதிகளா?, அல்லது கிரிமினல்களா?” என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்க அவரோ எதுவும் தெரியாத அமுல்பேபி போல “நெக்ஸ்ட்… நெக்ஸ்ட்…” என்று கூட்டத்தை நடத்துவதிலேயே குறியாக இருந்தார்.

கூட்டத்தின் நோக்கம் குறித்து ஆட்சியர் பேசிய உடன், “கோஸ்டல் ஆக்ஸன் நெட்வொர்க்’கை சேர்ந்த என். ஜீவா பேசியபோது, “கடந்த ஆண்டு அக்டோபர் 6ல் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது ஆட்சியர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முழுவதையும் தமிழில் தரவில்லை. அண்டை மாவட்டங்கள் மூன்றிலும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யவில்லை. திட்ட வளாகத்தில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவில்லை” என்றார். அவரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் அரங்கிற்குள் இருந்தவர்கள் முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளித்த ஆட்சியர், அந்த அறிக்கையின் முழுப்பிரதியை விதிமுறைப்படி எல்லாருக்கும் கொடுக்க இயலாது என்றும், தேவைப்படுவோர் அணுமின் திட்ட அலுவலகத்திற்குச் சென்று பார்வையிடலாம் என்றும் தெரிவித்தார்.

கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர்.

இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன.

இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.

இதுபற்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ், “கூடங்குளம் அணுமின் திட்டத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பது தொடர்பாக பொது மக்களின் கருத்தை கேட்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள், மீனவர்கள், அவர்களது பிரதிநிதிகள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் பெரும்பாலும் 3 பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கேள்விகளை கேட்டனர். அதில் ஒன்று இந்த திட்டத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுமா? என்பது தான். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து ஒரு சொட்டு அளவு கூட தண்ணீர் எடுக்கப்பட மாட்டாது. ஏனெனில் இந்த திட்டத்துக்கு தேவையான தண்ணீர் முழுவதும் கடலில் இருந்தே எடுக்கப்படுகிறது. இதற்காக அணுமின் திட்டத்தினர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைத்து உள்ளனர். இந்த அமைப்பை நமது ஜனாதிபதியே வந்து பார்த்து சென்று உள்ளார்.

மேலும் அணுமின் திட்ட குடியிருப்புகளுக்கும் அந்த தண்ணீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. அணுமின் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, மீண்டும் கடலுக்குள் விட்டால் கடல் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். அதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

அடுத்து அவர்களது கேள்வி இடப்பெயர்ச்சி பற்றியது. கூடங்குளம் அணுமின் திட்டத்தில் கூடுதலாக அமைக்கப்படும் 4 அணு உலைகளுக்காக மேற்கொண்டு எந்த நிலமும் கையப்படுத்தப்படமாட்டாது. இப்போது அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அனைவரும் வசிக்கலாம். எந்தவித இடப்பெயர்ச்சியும் இருக்காது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையில் அறிக்கை 750 பக்கங்களை கொண்டது. அதை முழுமையும் படிக்க முடியாது என்பதால் அதன் சுருக்கத்தை தமிழில் மொழி பெயர்த்து பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். கூடங்குளம் அணுமின் திட்டம் உலக தரத்தில் பல்வேறு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த திட்டம் பற்றி மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. 4 அணு உலைகளுக்கான கருத்து கேட்பு முடிந்து விட்டது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் கூறினார்.

ஆக, அரைகுறையாக நடத்தப்பட்ட கூட்டங்களின் முடிவாக அரசுக்கு சார்பான வகையில் அறிக்கையை அனுப்பி வைப்பதே மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ள பணி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், “எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் உரிய பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்ததை இந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய நகைச்சுவையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது. கொளுத்தும் நெல்லை வெயிலில் மதியம் பட்டினி வயிறுகளுடன், தங்கள் எதிர்காலம் பற்றி என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் அபலைகளாய், திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டவர்களைப் போல அந்த அப்பாவிகள் கலைந்து சென்ற காட்சி நெஞ்சை உலுக்குவதாய் இருந்தது.

சனநாயகம் என்ற பெயரில் நம் நாட்டில் நடக்கும் மக்கள் விரோத அரச செயல்பாட்டின் மற்றொரு சாட்சியமாக இந்த கருத்தாய்வு கூட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். (மற்றொரு அண்மைய எடுத்துக்காட்டு சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பான மக்கள் கருத்தாய்வு கூட்டங்கள்). வாழ்க சனநாயகம்!.


(asuran98@gmail.com)

Series Navigation