கு ை க ர யி ல்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஓடிவந்த வெளிச்சம் குகைக்குள் காணாமல் போனது.

நடந்த விஷயங்கள் துயரமானவை. சற்றுமுன் அவர் இறந்து போனார். அவருக்கு அஞ்சலி.

கிரி ரெண்டாங் கல்யாணம் பண்ணிக் கொண்டார். சின்ன ஆசை என்றிருந்தாலும் தைரியம் இல்லை இதுநாள் வரை. ஊர் பேசுமே… என்று கூசினார். அட இல்லாமலும் முடியாது போலிருந்தது. உடம்பு அசெளகர்ய நாட்கள்… ஆத்திர அவசரத்துக்கு அவர் கூப்பிட்ட குரலுக்கு ஆள் தேவை. வீடெங்கும் சுவரெங்கும் மெளனத்தின் எதிரொலி. அவர் இருமினால் எதிரொலி உருமியது. பயமாய் இருந்தது அவருக்கு. தனித்திருந்தார். யாராவது இதமாய் வெந்நீர் போட்டுத் தந்தால் நல்லது. நெஞ்சை சற்று நீவிக் கொடுக்கலாம். இரவில் சற்று மல்லாக்கப் படுத்தபடி அவர் பேசிக் கொண்டிருக்கலாம். சிறு கலவி காணலாம். இன்னும் நாட்கள் மிச்சமிருந்தன. கலவரப் படுத்தின அவை. சாவு வரவில்லை. வரும்வரை காத்திருப்பது… தனியே இருப்பது பயமாய் இருந்தது. காத்திருப்பது பயத்தை அதிகப் படுத்தியது. எண்திசையில் எங்கிருந்தும் சம்பவிக்கலாம் மரணம். திடுமென்று ஒன்பதாவது பத்தாவது திசையில் இருந்துகூட குதிக்கலாம். அல்லது உள்ளிழுத்துக் கொள்ளலாம்.

அவர் வாழ விரும்பினார். ஆசைப்பட்டார். மருத்துவர் தவிர்க்கச் சொன்ன உணவுகள் அவருக்கு அதிக ருசியாய் இருந்தன. நாவின் அடியில் ருசி இன்னும் மரத்துப் போகவில்லை. மறந்து போகவில்லை. மிச்சமிருந்தது. அவர் இன்னும் மிச்சமிருந்தார். இரவில் விளக்கேற்றிக் கிடந்தால் வீடு தனி அழகு பெறும். கசங்கிய படுக்கைகள் மேலும் கசங்கவும், அவற்றைச் சீர் செய்யவும் ஆள் வேண்டும். பெண் என்றால் அவரது ரத்தக் கதகதப்பு அதிகரிக்கும் அல்லவா ?

மாப்பிள்ளைக்கும் யசோதாவின் அப்பாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இல்லை. இந்த வயதிலும் அவள் அப்பாவின் தலையில் பொட்டு நரையில்லை. நடைத் தள்ளாட்டமும் கிடையாது. வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர் அவர். குடி. சீட்டாட்டம். பாதி நாட்கள் அவர் இரவில்கூட வீடு திரும்புவதில்லை… யசோதா திரும்பிக் கணவரைப் பார்த்தாள். பகலில்கூட வெளியே வேலையில்லாத மனுசன். குத்தகைக்காரன் நெல்லளக்கிறான். சாப்பாட்டு வஞ்சனை கிடையாது. ஏகாந்த வாழ்க்கை. எப்பவும் வீட்டு வெளித் திண்ணையில் சேரைப் போட்டுக்கொண்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது. மெல்ல சிறு வெளியுலாவலில் பம்புசெட் வரை போய் கிணற்றுக் குளியல் கூட ஒத்துக் கொள்ளாது. மூக்கில் சப்தங்கள் காயலான் கடைக்குப் போகிற காரென ஆரம்பித்து விடும். வீட்டிலேயே ெ வந்நீர்க் குளியல்.

பசி அவளை மண்டியிட வைத்தது. அவரை மடியிலிட வைத்தது…

முதலிரவில் பால் செம்புடன் அவள் அவரை வணங்கியபோது திறந்திருந்த செம்பில் சில கண்ணீர்த் துளிகள் கலந்தன. பெரியவர்களின் வழக்கப்படி அவர்வாய் தன்னைப்போல, தீர்க்க சுமங்கலி பவ- என்றபோது அழுகை அதிகரித்தது.

அவளது மெளனம் அவருக்குப் புரிந்தது. அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. போகப்போக சரியாகி விடும் என நினைத்தார். அதைக் கிளறிக் கொத்திவிடக் கூடாது என நினைத்தார். நான் இன்னிக்கு சந்தோஷமா இருக்கேன்- என அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டார். பிறகு எடுத்து அந்தக் கைக்கு முத்தம் ஒன்று தந்தார். என்னைப் பிடிச்சிருக்கா- என்று கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… என்று அவள் கூந்தலை முகர்ந்தார். அதில் இருந்து ஒரு பூவை எடுத்து முகர்ந்தார். நாட்கள்… வருடங்கள் ஆகியிருந்தன. நான் உன்னைத் திருப்தியா வெச்சிக்குவேன்… என்றவர் தன்கையை எடுத்து அவள் நெஞ்சில் அழுத்திக் கொண்டார். அவளது புடவையை நெகிழ்த்தி சற்று மேலேறி வந்தாப்போல சாய்ந்து கொண்டார். பிறகு…

துாங்கிப்போனார்.

தலை நரைக்காத அப்பா. தலை நரைத்த புருஷன். வேடிக்கை. அபத்தம். தன் அப்பாவுக்கே அவள் தாயாகி விட்டாப் போலிருந்தது. எல்லாமே தலைகீழாக அல்லவா ஆகிவிட்டது. அவளுக்குச் சீர் சினத்தி என்று கேட்ட வாலிபவட்டம். சீர் தந்து அவளைக் கைப்பற்றிக் கொண்ட கிரி- ஆ, யார் அவளை அவமானப் படுத்தினார்கள் உண்மையில் ? அவளுக்கு இகழ்ச்சியாய் ஒரு புன்னகை வந்தது. மதியச் சாப்பாட்டுக்கே வழியில்லை அப்போது… இப்போது ?

எழுந்து போனாள். செம்பு நிறையப் பால்… இந்த இரவில்! ஆவேசமாய்க் குடித்தாள். வாழ்க்கையே இப்படித்தானா- உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. குடை விற்க வந்தால் வெயில் அடிக்கிறது.

சரி, துாங்கலாம் என்று பார்த்தால் அவரது குறட்டை பெரும் இழுவையாய் இருந்தது. கிணறு இங்கே. ஜகடை எங்கே ?… ஜகடையில்லாத கிணற்றில் இருந்து சப்தம்.

இந்த வாயில் பல்லாங்குழி ஆடலாமா ?… பல்லாங்குழிகூட இல்லை இது. பல்லற்ற குழி. சிரிக்க முயன்றாள். மீண்டும் அழுகை முந்திக் கொண்டது.

தன் தாலியை எடுத்தாள். புதிய நகை. தீர்க்க அமங்கலி பவ, என்று முணுமுணுத்தபோது அழுகை வரும் என நினைத்தாள். சிரிப்பு வந்தது.

பிறகு கிரி தலைக்கு மையிட்டுக் கொண்டார். மீசை வைத்து… மீசையிலும் மையிட்டுக் கொண்டார். சற்று உறக்கங் கலைந்தாற் போல உற்சாகமாய் இருந்தார் கிரி. என்ன வேணுன்னாலும் கேளு. கூச்சப்படாமல் கேளு… என்றார் அவர். உண்மைதான். அவளுக்காக அவர் ‘அவரால் முடிந்தது ‘ என்னவும் செய்வார்தான். முடியணுமே ? முடியாததைக் கேட்பதும் எதிர்பார்ப்பதும் நியாயம் அல்ல. அவள் சிறு சோகமான புன்னகை ஒன்றைச் சிந்தினாள். அவருக்கு அது மகிழ்ச்சியாய் இருந்தது. போகப்போக சரியாகி விடும் என நினைத்தார்.

மாலைகளில் சிறு உலாவல் என வைத்துக் கொண்டிருந்தார் அவர். இதமான விடைபெறுகிற வெளிச்சத்தின் கதகதப்பு. வயோதிக வெளிச்சம். காலை உலாவல் சிரமம். வீடுதிரும்ப வெயில் உக்கிரப்பட்டு விடும். திகைப்பாகி விடும். என்னபாடு பட்டும் நியதிகள் ஒழுங்குக்குள் கட்டுக்குள் வரவில்லை. வயிறு சண்டித்தனம் பண்ணியது அடிக்கடி. காலைக்கடன் மதியரொக்கம் எல்லாம் போச்சு. இரவில் சற்று முன்னதாகவே சாப்பிடாவிட்டால் ஜீரணாதி இந்திரியங்கள் ஸ்தம்பித்தன. சிறுநீரை அடக்க முடியவில்லை. அந்த நினைப்பு எழுந்ததுமே ஒடோடி சுமையிறக்க வேண்டியிருந்தது. அது ஒரு பிரச்னை என்றால் பெருங்கடன் கழித்தல் வம்பாடு படவேண்டியிருந்தது. அவள் கதவைத் தட்டி அவர் மயங்கி விட்டாரோ என்று கவலைப்படுகிற மாதிரி ஆகிப் போனது நிலைமை. உள்ளே சிற்றறையில் வியர்த்து ஊற்றியது. அவர் ‘அதற்கு ‘ மட்டும் வெளியேபோய் ஒதுங்கினார். ஆசுவாசமாய் இருந்தது அது.

வயிற்றில் எலி புகுந்து கொண்டாற்போல பாத்திரங்கள் உருண்ட சப்தங்கள். இரவு. வெளியே கிளம்பவும் சிறு யோசனை. அவளை எழுப்பிச் சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுப்ப நினைத்தார். அந்தச் சிறுமுகத்தைப் பார்த்தார். பாவம்- துாக்கம் ஒரு சுகம். அவளுக்கு அந்தக் கொடுப்பினை இருக்கிறது. துாக்கத்திலும் அந்த அரையிருளிலும் அழகாய் இருந்தாள். என் பெண்டாட்டி! சிறிது கர்வமாய்க் கூட இருந்தது. அவள் உதடுகளில் முத்தமிட்டார். ஹ்ரும்… என்கிறாப்போலக் கலைந்தாள் அவள். வேண்டாம் எழுப்ப வேண்டாம் என்றிருந்தது. ஒண்ணில்ல… துாங்கு… என்றார் ரகசியம் போல.

தன் உதட்டில் அவளது உயிரின் கதகதப்பை நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. உற்சாகமாய் இருந்தது. வீட்டைவிட்டு வெளியே வந்தார். வெளியே பூட்டிக் கொண்டார். சாவியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்.

தெரு அமைதியாய்க் கிடந்தது. ஒரு குஞ்சு இல்லை. விளக்குகள் மாத்திரம் விழித்திருந்தன.

ஆ- என்னைப்போலவா அவை ?- என சிறு அலட்டல் மனசில். தனிமை. எதும் பாடலாமா என நினைத்தார். வயிற்றில் வலி உக்கிரப்படும் போலிருந்தது. முள்ளுக்காட்டில் கால்வைக்கவும் சுரீரென்றது. காலை இழுக்க நினைத்தால் நீளமாய்க் கூட எதுவோ வந்தது. பெரிய முள் என நினைத்தால் நெளிந்து காலைச் சுற்றிக் கொண்டது. சிலீரென்றது. பயம் உச்சியில் பட்டாரென்று தாக்கியது. பேருதறல் உதறினார். இருளில் சிறு சரசரப்பு. கால் விடுபட்டிருந்தது. பயத்தில் தன்னைப்போல நடை நொண்டியது. என்ன வேகம். நரகலை மிதித்தாற்போல தரையில் ஊனாமல் இழுத்தாற்போலப் போனார். ரத்தநாளமெங்கும் ஒரு விறுவிறுப்பு. வியர்வை பொங்கியது. காலில் இருந்து தண்ணீர்க்குடம் உருண்டாற்போல ரத்தம் மெல்ல மெல்ல அலையலையாய் வெளியேறியது. நடராஜர் மாதிரி ஒருகாலைத் துாக்கி வலிக்கிற இடத்தைப் பார்க்க முயன்றார். தள்ளாட்டத்தில் கீழே விழுந்து விடுவாரோ என்றாகி விட்டது. ரத்தக் கசிவு அதிகரிக்கிறதா ?

பாம்பா முள்ளா ? பயந்த மூளை ஒருவேளை காலைச் சுற்றிக் கொண்டாற் போல கிளர்ச்சி கொண்டிருக்கலாம். இருளின் சரசரப்பு. ஓணானாய்க் கூட இருக்கலாம். மனம்… சட்டென்று உள்ளே எதையாவது வரைந்து கொண்டே யிருக்கிறது. கற்பனைச் சிகரம் பட்டமளிக்கலாம் அதற்கு. புன்னகை செய்து கொள்ள முயன்றார். பயமாய் இருந்தது. சீக்கிரம் வீடடைய வேண்டும்… முன்காலில் நின்றது வலி. பாம்பு படமெடுத்தாற் போல குதிகாலால் ஒரு நடை. நரகலை மிதித்தாற் போல நடை. நான் இன்னும் ‘வெளிக்குப் ‘ போகவே இல்லை. ஆனாலும் மிதித்து விட்டேன்!… வேலைக்காரி கரிபோகாத தோசைக்கல்லை ஆமையாய்க் குப்புறப் போட்டு மண்ணை அதன்மேல் போட்டு இப்படித்தான்… குதிகாலால் அழுத்தித் திருகித் தேய்ப்பாள். தெருவில் நல்லவேளை யாருமில்லை. இந்த நடையைப் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா ?

சட்டென்று தெரு விளக்குகள் அணைந்தன. மனசில் பயம் சட்டென்று ஒரு பேய் உருக் கொண்டது. வெள்ளைநிழல் அல்ல… இது கருமை அப்பல். திக்கென்றது. திக்குத் தெரியாத இருள். திகைப்பு. மூச்சு முட்டியது. காலில் குபுக் குபுக்கென ரத்தத் துடிப்பு அதிகரித்தது. வலியின் கடுகடுப்பு அதிகரித்தது. அந்த கடிவாயில் சூடு வந்தாற் போலிருந்தது. அப்படியானால் விஷயிறக்கம்தான். பாம்புதான்… என்றது மனம். பதட்டம் அதிகரித்தது. சீக்கிரம் வீடுபோனால் யசோதாவிடம் சொல்லி முதலுதவிகளுக்கு – மருத்துவ உதவிக்குப் பார்த்துக் கொள்ளலாம். அவள் பார்த்துக் கொள்வாள். என்னைப் பாம்பு கடித்து விட்டது யசோ… பயப்படாதே நான் பிழைத்துக் கொள்வேன். தீர்க்க சுமங்கலி பவ.

வந்தபோது தெரியாத நடை இப்போது துாரங் காட்டியது. தலை சுற்றுகிறதோ ? கண்ணை லேசாய் இருட்டுகிறதோ ? கிறுகிறுப்பாய் இருந்தது. மயங்கி விடுவேனோ ?… பாம்புதான் போலிருக்கிறது. கொடிப்பின்னல் பின்னிக் கொண்டதே… இருட்டு. அப்படியோர் இருட்டு… ஒருவேளை விஷ உக்கிரத்துக்கு எனக்குதான் கண்ணை மறைக்கிறதோ ?… நடை தடுமாற ஆரம்பித்தது. மேலே நடக்கவே தள்ளாட்டம் அதிகரித்தது. எங்காவது உட்காரலாமா… உடம்பு சாய ஏங்க ஆரம்பித்தது. தவித்தது உடம்பு. பாம்புதான் என்றது மனது. அதுதான். அதேதான். உள்ளே அதன் விறுவிறுப்பு உஷ்ணம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. ஹா… என வாயைத் திறந்து மூச்சு விட்டார். மூச்சே பாம்புச் சீறல் சீறியது. வெளிச்சம் இருந்தால் தெம்பாய் இருக்கும். எவ்வளவு துாரமாகி விட்டது வீடு… நடை பலவீனப் பட்டுக் கொண்டே வந்தது. நடக்க முடியவில்லை. குதிகால்கள் வலித்தன.

இல்லை. வெறும் முள் குத்தல்தான். நான் சரியாக இருக்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை… என நினைக்கையிலேயே தலை திடாரென்று ஒரு சுற்றில் அடிவாங்கினாப் போல ஆளைத் தள்ளியது. தடுமாறி போதைகண்டாப்போல ரெண்டடி நடையோட்டம் ஓடி சமாளித்து நின்றார். இல்லை. நிலைமை கட்டுமீறிக் கொண்டே வருகிறது. தன்னம்பிக்கை என்று பைத்தாரத்தனம் பண்ணிறப்டாதில்லையா… அட வீடு அதுவே லட்சியம் என்கிற அளவில் மனசைக் குவித்த கணம் கல்லொன்று இடறி அப்படியே விழுந்தார். நல்லவேளை. பொட்டில் கிட்டில் பட்டிருந்தால் உசிர் போயிருக்கும். பாம்புக்கும் தப்பித்து அடியும் படாமல் தப்பித்தது நல்ல விசயந்தான்… உடம்பெல்லாம் மண். அப்போதுதான் வியர்த்து உடம்பே அம்மை போட்டாப் போல முத்துமுத்தாகி நாறுவதை உணர்ந்தார். குப்பென்று இந்த இருளில் இந்த வியர்வை. விஷம் மேலேறுகிறது. எதாவது கயிறு கொண்டு கடிவாயில் கட்ட வேண்டும். அவசரம். அவசரம் என அலாரமாய் அலறியது உள்ளே. எழுந்து கொண்டால் நல்லது.

முடியவில்லை.

பிடியில்லாமல் எழுந்து கொள்ளமுடியாது என்றிருந்தது. கால்கள் நடுங்கின. பயத்தினாலா ? பசிக்கிறதோ ? யசோதா உன்னண்டை எப்படியும் வந்து சேர்ந்து விடுகிறேன். நீ பார்த்துக்கொள். என்னைக் காப்பாற்று யசோதா… அது சரி- எழுந்து கொள்ளவே முடியவில்லையே. அப்படியே சிறிது உட்கார்ந்திருந்தார். சீக்கிரம். நேரம் பொன்னானது. ஒவ்வொரு துளியும் மகத்துவம் வாய்ந்தவை. வீணாக்க முடியாதவை…

எழுந்து கொள்…ள- மீண்டும் முடியவில்லை. ஆளைச் சரித்தன கால்கள். நம்பிக்கை துரோகிகள். இவ்வளவு நாட்கள் ஒத்துழைத்து என்ன ? அவசர நேரத்தில் கைவிட்டு விட்டன. சொன்னபடி கேட்க மறுத்தன. சரி, நான்… அதெல்லாம் பிழைத்து விடுவேன்… வீட்டை நோக்கி… உருள ஆரம்பித்தார். கோவிந்தா கோவிந்தா… திருப்பதியில் அங்கப் பிரதட்சிணம் அதிகாலை செய்திருக்கிறார். சபரிமலையில் செய்திருக்கிறார். இப்போது நடுவீதியில். தலைசுற்றல் ஏற்கனவே. உருளலுக்கும் அதுக்கும் உடம்பு இலக்கை நோக்கிப் போகாமல் எங்கெங்கோ போய்ச்சேர்ந்தது. எங்கே கிடக்கிறோம் என்றே தெரியாதபடி காரிருள் கடந்த பேரிருள்…

ஆ வீடு பூட்டியிருக்குமே…

அதுவரை திரண்ட நம்பிக்கை சட்டென்று முருங்கைக் கிளையாய் முறிந்து மளுக்கென உட்சத்தம். அட உருள்கிறாய். வீடு போய்ச்சேர் சீக்கிரம். உனக்கு ஒன்றும் ஆகாது. பிழைத்து விடுவாய். தப்பித்து விடுவாய். யசோதா. பார்லிமென்ட்டுக்கு மசோதா. கிச்சன் பார்லிமென்ட் மகாராணி. இவள் யசோதா… வீட்டில் சமீபத்தில்தான் ஃபோன் வந்தது. மனிதர்கள் துாங்கினால் குறட்டை வரும். தொலைபேசி விழித்திருந்தால் குறட்டை வருகிறது.

பிறகு வேடிக்கை. நேரம் நழுவுகிறது. வீடு அடேயப்பா… உருண்டு அங்கேயும் இங்கேயுமாக என்ன இது ? தெருவில் நல்லவேளை யாருமேயில்லை… அட இது மடத்தனம்டா, தெருவில் யாராவது என்னை, அதும் இந்நிலையில் பார்த்தால் ஓடிவந்து உதவ மாட்டார்களா ?… திருவருட்செல்வர் சினிமா கிளைமேக்ஸ் போலல்லவா ஆகிவிட்டது.

வீடு. வீடு. வீடு… எத்தனை சீக்கிரம் போகிறோமோ அத்தனை சீக்கிரம் நல்லது. கடிவாயில் கட்டுப்போட வேண்டும். உடனே செய்திருக்க வேண்டும் அதை. அப்ப ஓர் அலட்சியம். அட பாம்பாய் இருக்காது என நினைத்தது எத்தனை பிசகு. என்ன பாம்போ ? உதற உதறப் போகவில்லை. நறுக்கென்று என்ன கடி. பாம்புகள் அநேகம் விஷமற்றவை… அதற்காக நாம காலை நீட்டிக் காட்டிட்டிருக்க முடியாது- மூச்சிறைப்பு மேலும் அதிகமாகி விட்டது. தலைக் கிறுகிறுப்பு அதிகமாகி விட்டது. கடிவாயில் டிக்டிக் ரத்தகடிகாரம்… மயங்கி விடுவேனா ? அதற்குள் யசோதாவைச் சேர்வேன். அவள் பார்த்துக் கொள்வாள். ஹா நல்லவேளை வீட்டில் ஆள் இருக்கிறது கவனிக்க. கல்யாணம் பண்ணிக் கொள்ளாவிட்டால் இந்த உதவியும் கிடைக்காது! நான் பிழைத்து விடுவேன். பிழைத்து விடுவேன்.

உருள்கிறதுக்கும் அதற்கும் தெருவின் குப்பைகள் அசுத்தங்கள் அப்படியே உடையில் அப்பின. வேட்டியை அடிக்கடி கட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. தெருப்புழுதியும் அழுக்கும். வியர்வைக்கு அவை இன்னும் தீவிரமாய் உடையில் பற்றின. ஒருவித நாற்றம் கிளம்பியிருந்தது. அட இதெல்லாம் ஒரு விஷயமா என்ன ? வீடே குறி. இன்னும் பெரிய பிரச்னை காத்திருக்கிறது. உருளும்போதெல்லாம் வீட்டின் சாவியைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வழியில் அது விழுந்து விட்டால் அது உயிரே விழுந்தாப்போல. அது சாவி. இது ஆவி…. நான் பிழைத்து விடுவேன். என்னிடம் சக்தி மிச்சமிருக்கிறது. அதெல்லாம் சமாளித்து விடுவேன். பிழைத்து விடுவேன். என்ன பயங்கரமான ராத்திரி. நாய்த் துணையுமற்ற இரவு. எங்காவது நாய் குரைத்தால் கூடத் தெம்பாய் ஆறுதலாய் இருக்கும். இந்த மகா அமைதி மகா பயங்கரம். அதுவே பாதி கலவரத்தை மூட்டுகிறது… என்று நினைக்கிறபோதே அடுத்த தெருவிலோ எங்கோ நாய் ஒன்றின் குரல். இரவுக்கும் இருளுக்கும் பயந்த பணிந்த நாயின் நீ…ள அவல ஊளை! ஏனிப்படி ஊளையிடுகிறது சனியன். நாய் ஊளையிட்டால் எமன் வருகிறதாக ஐதிகம். அட நாயே ஐதிகமும் நீயும்… ஐதிகம் நாய்க்கா நமக்கா ?

வீட்டை எப்படியோ எட்டி விட்டேன். ஆகாவென்று மனம் எழுச்சி கொண்டது. சந்தோஷம். சந்தோஷம் எனக் கூக்குரல் கிளம்பியது உள்ளே. பைக்குள் சாவி… ஆ, நல்லவேளை தொலையவில்லை. எல்லாம் நல்லம்சங்கள்தான். நல்ல சகுனங்கள் தான்… நாய் ஊளை ? அதைப் பற்றியென்ன ? ஆனால் எவ்வளவு உயரத்தில் இருந்தது பூட்டு. எட்டித் தொட்டுத் திறக்க வேண்டுமே. கம்பிகள் கொண்ட கதவானால் எத்தனை உதவிகரமாய் இருந்திருக்கும். மரக்கதவு. கையை உயர்த்திப் பூட்டை எட்டிப் பிடிக்கவே முடியவில்லை. எழுந்து உட்கார வேண்டும். முடியுமா ?… என்ன கேள்வி இது ? முடிந்தாக வேண்டும். உடம்பு நடுங்க நடுங்க கதவின் மரவேலைப்பாடுகளில் சிறுபிடி கிடைக்குமா என்று முயன்றார். பிடி சறுக்கி சறுக்கி ஆளைச் சரித்தது. இத்தனை துாரம் வந்துவிடவில்லையா நான் ? அதெல்லாம் பிழைத்து விடுவேன்…

பரவாயில்லை. அட கதவை நம்பாதே. உன்னை நம்பு. நீ கட்டாயம் கட்டாயம் பிழைத்து விடுவாய். அப்ப்டியே கையூன்று. எழு. கை நடுங்கி அதிர்ந்தது, ரயிலில் போகிறாப்போல. விடாதே. தெம்பேயில்லை. பரவாயில்லை. விடக்கூடாது. உன்னால் முடியும். இத்தனை துாரம் உடம்பை வேடிக்கை காட்டி இழுத்துக் கொண்டு வந்தவன் நீ. உன்னால் முடியும். மாப்ள இன்னும் நாலு கல்யாணம் முடிக்க உனக்குத் தெம்பு இருக்கிறது. அதெல்லாமில்லை- என்று மனம் உடம்பைப் பொத்தென்று கீழே தள்ளிவிட்டது. விடப்டாது. உடம்பு கூசினாலும் நடுங்கினாலும் பிடியைத் தளர்த்தக் கூடாது. விடக்கூடாது. தலைக் கிறுகிறுப்புதான் அதிகரித்தபடி இருந்தது. ரத்தமே உஷ்ணமாகி விட்டாப்போல. ஜுரம் அதிகரித்திருக்கிறது.

ஆளை உடம்பு கீழே சரிக்குமுன் செயல்பட வேண்டும். நல்லவேளை- பூட்டை எட்ட முடிந்தது. காயடிக்கப் பட்ட மாடுபோல பூட்டு. பிடித்தார். பிடித்துக் கொள்ள செளகர்யமாய் இருந்தது. சட்டென்று உள்ளேயிருந்து எக்களிப்பு. கெட்ட நாற்றத்துடன் திரவம் வெளியேற அவசரப் பட்டாப்போல. நுரைக்கிறதோ வாயில் ? சீச்சீ பயப்படாதே. எல்லாம் சரியாகி வருகிறது. யசோதாவிடம் உன் உடம்பை ஒப்படை. அவள் பார்த்துக் கொள்வாள். முதலுதவி செய்வாள். கடிவாயில் கட்டுப் போடுவாள். தொலைபேசிகூட இருக்கிறது. டாக்டரை வரவழைத்து விடலாம். டாக்டர் ஹரிகிருஷ்ணனிடம் வீட்டில் ஃபோன் இருக்கிறது. எல்லாம் நல்லபடி முடியும். ஆகா- நான் பிழைத்து விடுவேன்.

சட்டென்று கண் இருட்டி ஒருவிநாடி எதுவுமே தெரியவில்லை. என்ன இருள் இது. ஆளை மிரட்டுகிறது… யசோதா பயந்துறாதே. அதெல்லாம் நான் பிழைத்து விடுவேன். நடுங்க நடுங்க பூட்டைத் திறக்கப் போராடினார். மனசின் குறியில் ஒரு வெறிப்பற்றல் பற்றிக் கொண்டார். மண்டியிட்டிருந்தார். ஆண்டவரே ரட்சியும்… டொடக். பூட்டு திறந்தபோது ஆகாவென எழுச்சி கொண்டார். கதவு கொண்டியைத் திறக்க பெரும்பாடு பட வேண்டியிருந்தது… பரவாயில்லை. யோசிக்க நேரமில்லை. பாதி திறந்த கதவில் உடம்பைத் திணித்துக் கொண்டார்…

யசோதா படுத்திருப்பது தெரிந்த கணம் உற்சாகக் கணம். உள்ளே உருண்டு யசோதாவை நோக்கி… யசோதாவை விலகிப் போய்… திரும்ப உருண்டு… பரவாயில்லை. பரவாயில்லை. யசோதா என்னைக் காப்பாற்று யசோதா. எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உன்னிடம் வந்து சேர்ந்து விட்டேன். ஆவேசமாய் அவளை நோக்கி ஒரு ரயில் தண்டவாளத்தில் ஓடுவதைப்போல உடம்பைத் தள்ளிக் கொண்டு முன்னேறினார். யசோதா என்னைப் பார் யசோதா… பேச முயன்றார். கத்த முயன்றார். முடியவில்லை. நல்லுறக்கத்தில் இருக்கிறாள். அவரால் அவளை உசுப்பி எழுப்ப முடியுமா ? முடியுமாவாவது… யசோதா என் உயிர் உன் கையில். கிட்டேபோய் அவள் கா…லை… உயரத்துக் கட்டிலை எட்டி… காலைத் தொட்டு அசக்கினார். யசோதா விழித்துக் கொள். நான் செத்துக் கொண்டிருக்கிறேன். நிலைமை கட்டுமீறி விட்டது. உடனே டாக்டரிடம் போக வேண்டும். டாக்டர் வந்தால் நல்லது. விஷம் மேலேறி விட்டதா ? உடம்பெங்கும் பரவி விட்டதா ? என் உடலே பரபரக்கிறது. விஷமேறி விட்டால் உடம்பே நிறம் மாறிவிடும். நீலம் பாரித்துவிடும் என்கிறார்கள்…

திரும்ப அவள் காலை அசக்கினார். அசைந்தாள். உறக்கம் கலைந்தாள். சந்தோஷத் திகட்டலில் அழுகை முந்தியது- என்னைக் காப்பாற்று யசோதா…

‘சனியன் எப்பபாரு இதுக்கு இதே நினைப்புதான்! ‘ என்றாள் யசோதா. காலை இழுத்துச் சுருட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ஹா…வென மல்லாக்க விழுந்தார்.

storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்