ஜெயமோகன்
நான்குவருட இடைவெளிக்குப்பின்னர் குற்றாலம் பதிவுகள் சந்திப்பு மீண்டும் இந்த அக்டோபர் 12,13 தேதிகளில் குற்றாலத்தில் ராஜா பங்களாவில் நடைபெற்றது. ஏறத்தாழ இருபதுவருடங்களாக நடைபெற்றுவரும் இந்த சந்திப்புக்கு தமிழிலக்கியச் சூழலை தீர்மானித்ததில் மிக முக்கியமான பங்கு உண்டு. தொடக்கத்தில் பிரம்மராஜனும் கலாப்ரியாவும் இணைந்து இதை நடத்தினர். இதை நடத்துவதற்கு அன்றிருந்த காரணம் மிக எளிமையானது. கலாப்ரியாவின் மாமனார் குற்றாலத்தில் பங்களாக்களை குத்தகைக்கு எடுத்து சாரல்பருவ காலத்தில் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வந்தார். சாரல் முடிந்தபின் சில மாதங்கள் அவரது கையிலேயே பங்களா இருக்கும். அங்கே சில இலக்கியவாதிகள் கூடி கவிதையைப்பற்றி பேசினால் என்ன என்ற எண்ணமே இந்த சந்திப்பின் முதல் புள்ளி. தொடக்கத்தில் இது கவிதைப்பட்டறையாகவே நடந்தது. பின்னர் பொதுவான இலக்கியச் சந்திப்பாக மாறியது.
வெவ்வேறு முகங்களை குற்றாலம் பதிவுகள் பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் நகுலன், சுந்தர ராம்சாமி, பிரமிள் முதலிய மூத்த தலைமுறை படைப்பாளிகள் இளம் படைப்பாளுமைகளுடன் உரையாடும் இடமாக இருந்தது. பின்னர் எண்பதுகளின் மையத்தில் அமைப்பியலும் தொண்ணூறுகளில் பின் நவீனத்துவமும் முதன் முதலாக விரிவாகப் பேசப்பட்டது இந்த சந்திப்பில்தான். பின்னர் அவை இலக்கியத்தில் ஆழமான பாதிப்புகளை உருவாக்கின.
எப்போதுமே இலக்கியச் சந்திப்புகளில் குடி ஒரு இரவுநேரக் களியாட்டமாக இருந்து வந்துள்ளது, அது இயல்பே. ஆனால் தொண்ணூறுகளில் ‘அமைப்புக்கு எதிரான கலகம்’ என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டபோது தொழில்முறை குடிகாரர்கள் தங்கள் குடியையே இலக்கியச் செயல்பாடாக ஆக்க அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். எந்த விவாதமும் உரையாடலும் நடக்கவிடாமல் குடித்துவிட்டு வந்து சத்தம்போடுவதே இலக்கியச் செயல்பாடாக சிலரால் முன்னெடுக்கப்பட்டது. இது முற்றி ஒரு கட்டத்தில் இக்கூட்டத்துக்கு பெண்களும் கணிசமான வாசகர்களும் வராமலானார்கள். பதிவுகள் ஒரு தேக்க நிலையை அடைந்தது
சென்ற பதிவுகள் சோர்வுறும் முறையில் முடிவுக்கு வந்தது. அரங்கில் தமிழ்-மலையாள- கன்னட கவிதைகளுக்கு இடையேயான பரிமாற்றம் ஆக்கபூர்வமாக நடந்தபோதிலும் குடிப்பதற்காக வந்திருந்த கலகர்கள் தங்களுக்கேற்ற களம் அமையாமல் அரங்குக்கு வெளியே நின்றிருந்தார்கள். பல கட்டுரையாளர்கள் வராமல்போனதனால் இரண்டாவதுநாளே சந்திப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் ஆர்வமுள்ள தமிழ் கவிஞர்களையும் கன்னட மலையாளக் கவிஞர்களையும் கூட்டி அதே சந்திப்பை கலாப்ரியாவின் வீட்டில் நடத்திய விவாதம் மிக ஆக்கபூர்வமாக அமைந்தது. அச்சந்திப்பு பற்றி மலையாளக் கவிஞர்களும் கன்னடக் கவிஞர்களும் விரிவாகவே எழுதிவருகிறார்கள்– இப்போது கூட அச்சந்திப்பு குறித்த குறிப்புகள் அவ்வப்போது விவாதத்தில் தென்படுகின்றன. [திண்ணையில் இவ்விவாதங்கள் பற்றிய விரிவான பதிவு அப்போது வெளிவந்துள்ளது.]
ஆனால் அன்று நிகழ்ச்சி முடிந்தபின் இரவில் குடிக்க வந்தவர்கள் அருவியருகே கைகலப்பில் ஈடுபட்டது அமைப்பாளர்களுக்கு பலவிதமான சிக்கல்களைக் கொடுத்தது. அத்துடன் ஒரு நிமிடம்கூட அரங்கில் அமராதவர்கள் அரங்கில் நிகழ்ந்தவற்றை பற்றி கற்பனையாக சித்தரித்து கட்டுரைகள் எழுதியது மேலும் சோர்வை ஊட்டியது. தொடர்ந்து பதிவுகளை நடத்தவேண்டாமென்ற எண்ணமும் கலாப்ரியாவுக்கு உருவானது. நான்கு வருடங்கள் இந்தச் சந்திப்பு நிகழாது போனது இதனாலேயே.
இம்முறை இதை நடத்தவேண்டுமென்று பலதரப்பிலும் சொல்லப்பட்டதனால் & இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதில் கவிஞர் தேவேந்திர பூபதி உறுதுணையாக இருந்தார். இந்த நான்குவருடங்களில் மேற்குறிப்பிட்ட குடிக்கலகம் என்ற பாவனைக்கு ஏற்பட்ட வீழ்ச்சி ஒருவகையில் இந்தச் சந்திப்புக்கு உதவியாக அமைந்தது. இலக்கிய உலகம் எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உரியது, இரண்டுமே செய்யாதவர்களுக்கு அதில் இடமில்லை என்ற நிலை சமீபத்திய இலக்கியச் சூழல் மூலம் உருவானது. இந்த நான்கு வருடங்களில் புத்தகக் கண்காட்சிகள் மூலம் வாசிப்புக்கு வந்த தலைமுறை ஒவ்வொருவரையும் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை மட்டும் வைத்தே மதிப்பிடுகிறது. ஆகவே சென்ற காலங்களில் வம்புகள் மூலமே வாழ்ந்துவந்த ஒரு கும்பல் அப்படியே வெளியேற நேர்ந்தது. இவ்வருடம் அவர்கள் எவருமே பதிவுகளுக்கு வரவில்லை. அவர்கள் வரக்கூடும் என்று அஞ்சி இலக்கியவாதிகளிலும் பலர் வரவில்லை. கட்டுரை வாசிக்கவிருந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் வராது போனமையால் பதிவுகளில் வழக்கமாகத் தென்படும் பெரும்பாலான முகங்கள் இம்முறை இருக்கவில்லை.
ஆனால் முற்றிலும் புதிய இளம் தலைமுறை படைப்பாளிகள் கணிசமானோர் வந்திருந்தனர். அதன் மூலம் வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பங்குபெறுவோர் காணப்பட்டனர். விவாதங்களும் மிகுந்த தீவிரத்துடனும் நேர்மையுடனும் நடைபெற்றன. இலக்கியச் சண்டைகள் காழ்ப்புகள் வெளிப்படவில்லை. இன்றைய இலக்கியத்தின் சிக்கல்களே அலசப்பட்டன. கோணங்கி அவையில் ”யார் வரவில்லை என்பது இனி முக்கியமே இல்லை, புதிய தலைமுறை வந்திருக்கிறது. யாருக்காகவும் இலக்கியம் நிற்காது என்பது நிரூபிக்கபப்ட்டிருக்கிறது” என்றார். அது உண்மை. இம்முறையும் வழக்கம்போல கவிஞர் விக்ரமாதித்யன் முழுப்போதையில் தொடர்பில்லாமல் ஓசைகள் எழுப்பி தொந்தரவளித்தாலும் அது சமாளிக்கக் கூடியதாகவே இருந்தது. ஏதோ ஒருவகையில் அனைவருக்கும் அவர்மேல் மரியாதையும் அன்பும் இருப்பதனால் அது சிக்கலாகவும் இருக்கவில்லை. இலக்கியத்துக்கு பங்களிப்பே செய்யாதவர்கள் அதைச் செய்யும்போதுதான் பலர் எரிச்சலுறுகிறார்கள். இந்தமுறை வராமலிருந்த கலகர்கள் இனிமேலும் வராமலிருக்க கருணை கூர்ந்தால் அதுவே அவர்கள் தமிழிலக்கியத்துக்குச் செய்யும் ஒரே சேவையாக அமையும்.
**
குற்றாலம் பதிவுகள் நிகழ்ச்சியில் இம்முறை தொ.பரமசிவன்,வண்ணதாசன், தேவதேவன், விக்ரமாதித்யன், கோணங்கி, எம்.யுவன்[சந்திரசேகர்] , ரமேஷ்[பிரேம்], அ.ராமசாமி , ந.முருகேசபாண்டியன், தேவேந்திர பூபதி, பா.வெங்கடேசன், கிருஷி, யவனிகா ஸ்ரீராம், கண்டராதித்யன், கால பைரவன், அஜாத சத்ரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் கலந்துகொண்டர்கள். எழுத தொடங்கியிருக்கும் பலர் வந்திருந்தனர். கிட்டத்தட்ட எழுபதுபேர் பங்கெடுத்தனர். நகுலனைப்பற்றி கோணங்கி எழுதியிருக்கும் நினைவுப்பதிவு சிறு நூலாக வெளியிடப்பட்டது.
முதல்நாள் அமர்வை விக்ரமாதித்யன் ஒருங்கிணைத்தார். யவனிகா ஸ்ரீராம் கவிதைபற்றி உரையாற்றினார். அதன் மீதான கருத்துக்களை தேவேந்திர பூபதி விரிவாக முன்வைத்தார். தொடர்ந்த விவாதத்தில் அ.ராமசாமி, யுவன் சந்திரசேகர் , ந.முருகேச பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றார்கள்.
யவனிகா ஸ்ரீராம் தன் துவக்க உரையில் நவீனக் கவிதை இன்று சிறுகதை வழக்கமாக தொட்டுவந்த பல இடங்களை தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.கவிதையின் வடிவம் சார்ந்த அக்கறைகளை விடவும் அதன் சமூகப்பங்களிப்பு முக்கியபப்ட்டிருக்கிறது. இன்றைய கவிதை இன்று உருவக்கப்படும் அறிவதிகாரத்துக்கு எதிரான ஒரு மீறலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. கவிதையின் அழகியல் என்பது இந்தக் கோணத்திலேயே இன்று விவாதிக்கப்படவேண்டும் என்றார். தேவேந்திர பூபதி யவனிகா ஸ்ரீராமின் கருத்துக்களை ஒட்டி தன் கோணத்தை மரபிலக்கியம் சார்ந்தும் விரிவுபடுத்தி முன்வைத்தார்.
மதியத்துக்கு மேல் அமர்வை தேவேந்திர பூபதி ஒருங்கிணைக்க ரமேஷ் கவிதையின் அரசியல் பற்றி பேசினார். ”அரசியல் என்பது சமூக உருவாக்கம் நிகழும்பொருட்டு உருவாக்கப்படும் அதிகாரச் செயல்பாடாகும். அதிகாரத்தை உருவாக்கவும் நிலை நாட்டவும் மாற்றியமைக்கவும் தேவையான கருத்தியல் செயல்பாடு சமூகத்தில் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே எப்போதும் கவிதை செயல்பட முடியும் ” என்று குறிப்பிட்ட ரமேஷ் தமிழிலக்கியத்தில் இதுவரை நிகழ்ந்துவந்த ‘கவிதை-அரசியல்’ செயல்பாட்டின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
”சங்ககாலத்தின் தொடக்கத்தில் இனக்குழுப்பண்பாடு சார்ந்த கவிதைகள் காணப்படுகின்றன. அதன் பின்னர் நாம் காண்பது மூவேந்தர்கள் என்ற அரசு அமைப்பு வேளிர்கள் முதலிய குலத்தலைவர்களை கொன்றொழிக்கும் சித்திரத்தையே. மூவேந்தர்கள் வேளிர்களை அழித்ததும் அவர்களின் ஊர்களை எரியூட்டி அழித்ததும் சங்கப்பாடல்களில் விதந்து ஓதப்பட்டிருக்கின்றன. அதேசமயம் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்…[பாரிமகளிர்] போன்ற கவிதைகளில் அந்த ஆதிக்கச்செயல்பாட்டுக்கு எதிரான குரலும் பதிவாகியிருக்கிறது– அதாவது அரசியலின் இருமுகங்களும் காணக்கிடைக்கின்றன
பின்னர் காப்பிய காலத்தில் நாம் காண்பது தத்துவங்களின் அரசியலை. பௌத்த சமண மதங்கள் புதிய அறவியலையும் தத்துவத்தையும் இங்கே கொண்டுவந்தன. அவற்றுக்கு எதிராக இங்குள்ள அதிகார அமைப்புகள் போராடி கடைசியில் அவற்றால் உள்ளிழுக்கபப்ட்டன. இந்த உள்ளிழுத்தலின் அரசியலை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.
நீதிநூல்களின் காலகட்டத்தில் பௌத்த சமண மதங்களின் பாதிப்பால் தமிழில் அறக்கோட்பாடுகள் வலுவாக வேரூன்றுவதைக் காணலாம். அந்த அறக்கோட்பாடுகள் ஒருபக்கம் இங்கு வேரூன்றியிருந்த பேரரசுகளின் ஆதிக்க அறவியலை ஜனநாயகப்படுத்தும் நோக்கு கொண்டிருந்தன. மறுபக்கம் உறுதியான ஒழுக்க நெறிகளை உருவாக்கி தனிமனிதர்களை நிறுவனக்கட்டமைக்குள் நிறுத்தும் போக்கும் கொண்டிருந்தன.
அதன்பின்னர் வந்த பக்தி இலக்கிய காலகட்டம் முழுக்க முழுக்க பேரரசுகளின் உருவாக்கத்துடன் தொடர்புகொண்ட ஆதிக்க அரசியலை தன் உரிப்பொருளாகக் கொண்டிருந்தது. சைவ வைணவ பாடல்கள் சமணர்களை கழுவேற்றவும் பௌத்தர்களை ஒழிக்கவும் அறைகூவின. அதன்பொருட்டு பிற ஐதீகங்களையும் வழிபாட்டுமுறைகளையும் ஒருங்கிணைக்க முயன்றன
அதன்பின் பாரதியில் தொடங்கும் நவீன காலகட்டம். பாரதி இலக்கியத்தை ஜனநாயகப்படுத்தினார். அவரது அரசியலென்பது சுதந்திரஜனநாயக [லிபரல்] உரிமைகளுக்கான கோரிக்கையை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. அந்தப்போக்கையே நவீனக் கவிதை முன்னெடுத்தது. நவீனக்கவிதைக்குள் பல்வேறு அரசியல்கள் செயல்பட்டாலும் அது அடிபப்டையில் சுதந்திர அறவியலையும் அடக்குமுறைக்கு எதிஆன மீறலையும் மட்டுமே தன் சாரமாகக் கொண்டுள்ளது” என்றார் ரமேஷ்
அதன் மேல் நடந்த விவாதங்கள் கட்டற்று பலதிசைகளுக்குச் சென்றன. ரமேஷ்-பிரேம் முன்வைக்கும் உடலரசியல் பற்றி கேட்கபப்ட்டபோது ரமேஷ் மரபு எப்போதுமே உடலை ஒடுக்குகிறது என்றும் நவீன இலக்கியம் உடலின் விடுதலையை கொண்டாடுவதாக அமையவேண்டுமென்றும் சொன்னார். நம் மரபில் எப்போதுமே சமத்துவம் என்ற கருத்து இருந்ததில்லை என்றார். விக்ரமாதித்யன் அதை மறுத்து அப்போக்குகள் வடவருக்கு உரியவை, தமி பண்பாடு அப்படி இல்லை என்று வாதிட்டர். தொடர்ந்து நடந்த விவாதங்கள் தொல்தமிழ் மரபில் ஒடுக்குமுறையின் இடமும் அளவும் என்ன என்பதைப்பற்றியதாக அமைந்தது.
அ.ராமசாமி சங்க பாடல்களின் அதற்கும் முந்தைய இனக்குழு சமூகத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள் சில உள்ளன என்பது உண்மையே என்றார். குறிப்பாக வெட்சி திணை பாடல்களில். ஆனால் சங்கப்பாடல்கள் காட்டும் சமூகம் பெண்ணுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், பிறப்படிப்படையில் பாகுபாடுகளைந் இறுவுவதாகவுமே உள்லது என்றார். இழிசினர் என்று மக்களை வகுப்பதை தொல்காப்பியம் தெள்ளத்தெளிவாகவே வகுத்து அவர்களுக்கு மைய இடம் இல்லை என்கிறது என்றார்.சங்க கால அழகியலின் சில பகுதிகள் நமக்கு உவப்பூட்டுகின்றன என்பதற்காக பொற்காலங்களைக் கற்பிதம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்.
திருக்குறளின் நீதிகள் தமிழ் மரபிலிருந்து திரட்டப்பட்டவை அல்ல அவை பௌத்த சமண மதங்கள் இந்திய அளவில் முன்வைத்த நீதிகளின் நீட்சியே என்ற ரமேஷ் தம்மபதத்துக்கு திருக்குறள் பெரிதும் கடன்பட்டுள்ளது என்றார். அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. திருக்குறளின் காமத்துப்பால் தமிழ் பண்பாட்டு அடையாளம் மேலோங்கியது என்று ந.முருகேச பாண்டியன் குறிப்பிட்டார்.
எம்.யுவன் நவீனக் கவிதை குறித்த விவாதத்தில் ஏன் மரபுக்கவிதையின் தொடர்ச்சியை தேடவேண்டும் என்று கேட்டார். நவீனக்கவிதை செயல்படும் தளம் வேறு. அதன் சவால்களும் வேறு என்றார். மேலும் அரங்கில் பேசப்பட்டதில் பெரும்பகுதி கவிதையின் உள்ளடக்கம் குறித்ததாக உள்ளது. கவிதையின் உள்ளடக்கம் எதுவாகவும் அமையலாம். அதைப்பற்றிய பேச்சுக்கு அளவே இல்லை. கவிதையைப்பற்றி புறவயமாக விவாதிக்க வேண்டிய ஒரே தளம் அதன் அமைப்பு வடிவம் பற்றியே என்றார். நவீனக்கவிதையில் மரபின் இன்றியமையாத தொடர்ச்சி இருக்கும்போது அதைப்பற்றி விவாதிப்பது தேவையே என்று ரமேஷ் சொன்னார். மாலை ஆறு மணிவரை விவாதம் பல தளங்களில் நீடித்தது.
மறுநாள் காலை அரங்கில் கோணங்கி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பதிவுகளில் முதல்முறையாக நகுலன் வந்ததை நினைவுகூர்ந்த கோணங்கி இலக்கியத்துக்கு பொதுப்பாதைகளில் செல்லாமல் சஞ்சரிக்கும் ஒரு தனிப்பாதை உள்ளது என்றார். பதிவுகள் நிகழ்வது அங்குதான். நகுலன் நடந்த பாதை அது. இங்கு அமர்ந்தபடி நாம் மொத்த சமூகத்தின் பொதுப்போக்குகளை விமரிசித்து எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றார். நடுநிலை இதழ்கள் இலக்கியத்தை வணிகம் நோக்கி தள்ளுகின்றன என்று சொல்லி சிற்றிதழியக்கம் அதற்கெதிரான விழிப்புடன் செயல்படவேண்டும் என்றார்.
அடுத்து ஜெயமோகன் தன் கட்டுரையைப் பேசினர். ”சிறுகதைக்கு இதுவரை மூன்று காலகட்டங்கள் இருப்பதாக உருவகம்செய்ய முடிகிறது. செவ்வியல் சிறுகதை ‘ஒளிமிக்க அல்லது திருப்புமுனையாக அமைந்த தருணங்களை’ சித்தரிக்க முயன்றது. அடுத்தகட்டத்தில் நவீனத்துவ சிறுகதை ‘வாழ்க்கையின் அபத்தத்தையும் பொருளின்மையையும் வெளிப்படுத்தும் மையப்புள்ளி ஒன்றை நிறுவும்’ கதைகளை உருவாக்கியது.
அதை தாண்டி உருவான பின் நவீனத்துவச் சிந்தனைகள் அவ்வாறு மையப்புள்ளிகளில் வாழ்க்கையை நிறுத்திப்பார்ப்பதற்கு எதிரானதாக இருந்தன. உண்மை என்பது பல அடுக்குகளும் பல முகங்களும் கொண்டதாக இருப்பதை முன்வைத்தார்கள். ஒவ்வொன்றும் பல்வேரு வரலாற்று சக்திகளினால் நிர்ணயிக்கப்படுவதை கதைகளில் சொல்ல முயன்றார்கள். ஆகவே பலகுரல்களில் பேசும் கதைகள் உருவாயின. அதன்பொருட்டு சிறுகதையின் வடிவத்தை மாற்றியமைத்தார்கள். மையப்புள்ளிக்கு பதிலாக கதையின் எல்லா கூறுகளும் கவித்துவமான பன்முகத்தன்மையுடன் அமைக்கபப்ட்டன. ஆகவே கதை உருவகத்தன்மை கொண்டது. படிம மொழிக்கு சென்றது.
உருவக,படிம மொழிக்கு இசைவாக இருந்தது மிகைக் கற்பனையே.[·பேண்டசி] ஆகவே உலகமெங்கும் மிகைக்கற்பனைப் படைப்புகள் உருவாயின. மாய யதார்த்தம் அதில் ஒன்று.. தமிழிலும் அப்போக்கு உருவானது.சென்ற பதிவுகள் வரை அதுவே பேசப்பட்டது இங்கு
இன்று உலக அளவில் மிகைக் கற்பனைகள் முக்கியத்துவமிழந்துள்ளன. யதார்த்தவாதம் சார்ந்த ஆக்கங்கள் புதிய கவனம் பெற்று பேசப்படுகின்றன. இது தமிழிலும் பிரதிபலிக்கிறது. தமிழில் யதார்த்தவாத எழுத்து இன்று மேலோங்கி மிகைக் கற்பனையை இல்லாமல்செய்துவிட்டது. இன்று நம் முன் உள்ள கேள்வி யதார்த்தவாத எழுத்துக்குள் பலகுரல் தன்மையை அடையும் சிறுகதை வடிவத்தை எப்படி உருவாக்கிக் கொள்வதுதான் ” என்றார் ஜெயமோகன்.
இதை ஒட்டி கோணங்கி விரிவாகப்பேசினார். ”யதார்த்தவாதம் தர்க்கத்துக்கு சிக்குவதைப்பற்றிப் பேசுகிறது. ஆனால் அடிபப்டையான மனஎழுச்சிகள் தர்க்கத்துக்கு சிக்குபவையல்ல. கோயில்பட்டி நெல்லை சாலையில் ஒரு ஈழ அகதிகள் முகாம் இருந்தது. அங்கே மனிதர்கள் நெருக்கியடித்து வாழ்வதைக் கண்டேன். இப்போது அதே இடத்தில் ஒரு கறிக்கோழிப் பண்ணை இருக்கிறது. அந்தக் காட்சி என்னில் உருவாக்கும் அதிர்வுகளை நான் மிகைக் கற்பனை வழியாகவே சொல்ல முடியும் என்றார். பலகை வழியாக தெரியும் கோழிகளின் சிவந்த கால்களையே நான் எழுதுவேன் ”என்றார்.
காலபைரவன் தனக்கு மிகைக் கற்பனைகளில் ஆர்வமில்லை என்றார். ”அவை புனைவை விளையாட்டாக ஆக்கிவிடுகின்றன. இலக்கியத்தின் அரசியல்செறிவை அவை நீர்த்துப்போகச் செய்கின்றன. கோணங்கி சொன்ன அதே விஷயம் மிகைக் கற்பனையாக எழுதப்பட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படாமலேயே போகும். கதைகள் சமூக யதார்த்தங்களையே பேசவேண்டும், அந்த யதார்த்தமே முன்னிற்க வேண்டும் புனைவு பின்னால்தான் நிற்க வேண்டும் என்றார். ஒரு கதைக்குள் தேவையென்றால் மிகைக் கற்பனையின் ஒரு கூறை அளவோடு உபயோகிக்கலாமே ஒழிய அதை மையப்படுத்தினால் அது செயற்கையாக ஆகிவிடுகிறது” என்றார். பல இளம் படைப்பாளிகளும் மிகைக் கற்பனை மீது ஆர்வமில்லை என்றே சொன்னார்கள்.
தொடர்ந்து பேசிய பா.வெங்கடேசன் ”தமிழில் மாய யதார்த்தவாதம் முறையாக வந்துசேரவில்லை என்றும் அதனாலேயே இளம் படைப்பாளிகள் அதன் மேல் அவநம்பிக்கை கொள்கிறார்கள் என்றார். மாய யதார்த்தவாதம் சரியாக கையாளப்பட்டால் ஆழமான அரசியல் உள்ளடக்கம் கொண்டதாக அமைய முடியும். மார்க்யூஸ் அப்படிப்பட்ட கதைகளை உருவாக்கியிருக்கிறார். தமிழில் மாய யதார்த்தவாதம் வரவில்லை. கோணங்கி ஓரளவு எழுதியிருக்கிறார். ஜெயமோகன் பலவீனமாக எழுதியிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் மாய யதார்த்தவாதத்தை சீரழித்தார்.ஒருவன் கொலைசெய்த பின் குற்றவுணர்வால் மருகுவதை கொல்லப்பட்டவன் காயம்பட்ட துளையில் குருதியை விரலால் அழுத்தியபடி வந்து கொன்றவனின் கதவுகளைத் தட்டுவதாக எழுதியிருக்கிறார் மார்க்யூஸ்” என்றார்.
ஜெயமோகன் ”மாய யதாத்தவாதம் என்பது ஒரு மிகைக் கற்பனையை யதார்த்தவாதத்துக்கு உரிய சித்தரிப்பு முறையில் சொல்வது. அப்படிப்பார்த்தால் தமிழில் தமிழவன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரே மாய யதார்த்தவாதத்தை எழுதியவர்கள். பா வெங்கடேசன் முயற்சி செய்துள்ளார். கோணங்கி எழுதியது மிகைக்கற்பனை மட்டுமே” என்றார். ”நான் எழுதியது மிகைக் கற்பனை. நான் என்னை ஒரு நவீனச் செவ்வியல்வாதி என்று மட்டுமே அடையாளப்படுத்த விரும்புவேன். மாய யதார்த்தவாதம் ஏதும் நான் எழுதியதில்லை. செவ்வியலில் எப்போதுமே ஒரு மிகைக் கற்பனை அம்சம் உண்டு. அது ஒருவகை தர்க்க ஒழுங்கும் கொண்டிருக்கும். பா.வெங்கடேசன் சொல்லிய மார்க்யூஸின் சித்தரிப்பு அதேபோல ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் வருகிறது. டங்கனை மாக்பெத் கொல்கிறான். அன்றிரவு மாக்பெத்தின் அரண்மனையில் சேவகன் கதவுகள் மாறித் மாறி தட்டப்படுவதைக் கேட்கிறான். ”Knock !knock !Who is there?” என்ற வாசகம் புகபெற்றது. செவ்வியலின் எல்லைக்குள் நின்றபடியே நான் மிகைகற்பனையை கையாள்கிறேன், கொற்றவை வரை அதைக் காணலாம்” என்றார்.
தொடர்ந்து நவீன எழுத்துமுறையில் மிகைக் கற்பனையின் இடம் குறித்து விரிவான விவாதம் நிகழ்ந்தது. மிகைக் கற்பனைக்கு முக்கியத்துவம் குறைந்தது தமிழில் மட்டுமல்ல. அதற்குக் காரணம் இரண்டு. நவீன கேளிக்கை ஊடகங்கள் மிகைக்கற்பனையை கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஆகவே யதார்த்தத்தைச் சொல்லவேண்டியதாக கலை மாறுகிறது. காட்சி ஊடகங்கள் படிமங்களை ஏராளமாக உற்பத்திசெய்கின்றன. ஆகவே கவிதைகள் படிமங்களை விட்டுவிடுகின்றன. மேலும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்று கிழக்கையும் அரேபியாவையும் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆகவே அதற்குரிய இலக்கிய அழகியலாக யதார்த்தவாதம் மேலெழுகிறது.தமிழிலும் தலித்தியம் பேசப்பட்டபோதுதான் மிகைக் கற்பனையின் முக்கியத்துவம் குறைந்தது போன்ற கருத்துக்கள் பேசப்பட்டன.
அ.ராமசாமி ”கோணங்கி,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் மூவரும் தமிழ்ச் சிறுகதையின் இன்றைய தேக்கநிலைக்குக் காரணம்” என்றார். ”சிறுகதை என்பது ஒரு நகர்வு. நின்ற இடத்தில் இருந்து ஒரு நிலைமாற்றம் அது. அதற்கு யதார்த்தவாதம்தான் சரிவரும். ஒரளவு மாய யதார்த்தவாதம். பல அடுக்குகள் பல குரல்களை ஒலிக்கச்செய்வதற்கு சிறுகதை உகந்த வடிவமே அல்ல. அதை சிறுகதையில் நிகழ்த்தமுயன்ற இம்மூவரும் சில கதைகளை எழுதியதும் அவ்வடிவத்தை மேலே கொண்டுசெல்ல முடியாமல் அப்படியே விட்டுவிட்டு நாவலுக்குச் சென்றுவிட்டார்கள். புதிய படைப்பாளிகள் வண்ணதாசனுக்கு திரும்பிச்செல்வதா என்று யோசிக்கிறார்கள்” என்றார்.
”ஆனால் சிறுகதை வடிவில் உள்ள இச்சிக்கல் உலகளாவியதாக உள்ளது” என்றார் ஜெயமோகன். ”நான்கு வருடங்களுக்கு முன்னர் பதிவுகள் அரங்கு நிகழ்ந்தபோது பேசப்பட்ட பல விஷயங்கள் இன்று தாண்டிச்செல்லபப்ட்டுவிட்டன. அன்று வரலாற்றை அழிப்போம், புனிதங்களை கட்டுடைப்போம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இன்று அக்குரலை உலகநாடுகளின் சந்தையை முழுக்க வெல்லமுயலும் ஏகாதிபத்தியம் ஓங்கி ஒலிக்கிறது. லாபம் தவிர வேறு புனிதமே இல்லை என்று அது சொல்கிறது. மணிரத்தினத்தின் குரு போன்ற படங்கள் அதை எதிரொலிக்கின்றன. இப்போது கலைஞன் சொல்லவேண்டியது என்ன?
புனிதம் என்பது ஒன்றில் வரலாற்றை ஏற்றுவதன் மூலம் உருவாவதாகும். நம் வரலாற்றை அழித்தால் மட்டுமே நாம் புனிதமற்றவர்களாக ஆவோம். அப்போது நாம் வெறும் பண்டங்களும் நுகர்வோருமாக மாறுவோம். அதர்கு எதிரான போராட்டம் என்பது புதிய புனிதங்களை உருவாக்குவதாகவே உள்ளது. தாமிரவருணியை கொகோகோலா கையகபடுத்துவதை அதன் வரலாற்றுப்புனிதத்தை முன்வைத்துதான் எதிர்க்க முடிகிறது
அதேபோல சென்ற பதிவுகளில் பின் நவீனத்துவம் இங்கே ஓங்கி பேசப்பட்டது. வரலாற்று வாதத்தை நிராகரிக்கும் அதன் கோணமே இங்கே முன்வைக்கப்பட்டது. இன்று பின் நவீனத்துவத்தின் வரலாறு சார்ந்த அணுகுமுறை விரிவாகவே மறுக்கபப்ட்டுள்ளது. புது வரலாற்றுவாதம் [New Historicism] வரலாற்றை ஒரு மாபெரும் பிரதியாக உருவகித்து அனைத்துப் பிரதிகளையும் அதற்குள் வைத்து வாசிக்க முனைகிறது
இச்சூழலில் நம் கதைகள் ஒட்டுமொத்தமான வரலாற்றுப்பார்வையை முன்வைக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்கான முயற்சியே இன்று நிகழ்கிறது. இந்த பிரக்ஞையுடன் எளிமையான ஒருதருணக்கதைகளை எழுத முடியாது. யுவன் சந்திரசேகர் உதிரிக்கதைகளின் தொகையாக கதைகளை எழுத முயல்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் இதழியல் கட்டுரை, அறிக்கை, வாழ்க்கைக்குறிப்பு போன்ற பல வடிவங்களைக் கையாண்டு கதைகளுக்குள் மடிப்புகளை உருவாக்க முயல்கிறார்” என்றார்
அஜாதசத்ரு கோணங்கியின் கதைகள் கலைக்கு இன்றியமையாத அகத்தொடர்ச்சியை தவறவிட்டவை என்றார். மிகைக் கற்பனையின் நோக்கமே அன்றாடவாழ்க்கையில் இல்லாத அழகியல் தொடர்ச்சியை கற்பனைமூலம் உருவாக்குவது. அதை கோணங்கியின் கதைகளில் காணமுடியவில்லை அவை துண்டுகளாக உள்ளன என்றார். மேலும் மிகைக்கற்பனை என்பது இயல்பான செறிவான நடைமூலம் கனவை உருவாக்குவது. கோணங்கியின் சிடுக்கான தேர்ச்சியற்ற நடை சோர்வை உருவாக்குகிறது என்றார்
கோணங்கி ஜெயமோகனின் ‘கொற்றவை’ குறித்து விரிவாகபேசினார். அது தமிழில் எழுதபப்ட்ட படைப்புகளில் மிக முக்கியமான ஒன்று என்றும் அதை மீண்டும் மீண்டும் படிபப்தகாவும் சொல்லி ஆனால் அது எழுதப்பட்ட வரலாறுகளுக்குள் மட்டுமே ஊடுருவுகிறது தமிழ் நிலத்தின் எழுதபப்டாத இனக்குழு வரலாறுகளுக்குள் சென்றிருக்கவேண்டும் என்றார். மதியம் பதிவுகளுக்கு புதிதாக வந்தவர்களிடம் மனப்பதிவுகள் கோரப்பட்டன. அத்துடன் சந்திப்பு முடிவடைந்தது
வழக்கம்போல உணவும் தங்குமிடமும் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. கலாப்ரியாவின் குடும்பமும் நண்பர் தர்மராஜனும் அதில் பங்காற்றினர். அரங்குக்கு வெளியே நடந்த விரிவான தனிப்பட்ட விவாதங்கள் எப்போதுமே முக்கியமானவை. இரவெல்லாம் நடந்த மதுக் கொண்டாட்டத்தில் யுவன் சந்திரசேகர் பழைய சினிமாப் பாடல்களை சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் குரல்களில் பாடினார். முருகேச பாண்டியன், கண்டராதித்யன், யவனிகா ஸ்ரீராம் ஆகியோர் ஆடினார்கள். நள்ளிரவின் குளிரில் அருவிக்குளியல் சிறப்பான அனுபவமாக எப்போதுமே அமைவது.
இந்த முறை பதிவுகள் சந்திப்பு நிறைவான அனுபவமாக அமைந்தது என்ற கருத்து பொதுவாக இருப்பதை உணர முடிந்தது.
jeyamoohannn@rediffmail.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)
- சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
- இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்
- காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7
- சாருவின் ஜனனி:
- கோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு
- பொது ஒழுக்கம்
- தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு
- வானப்பிரஸ்தம்
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்
- நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்
- காந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்
- பன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre
- திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை
- சும்மா
- கால நதிக்கரையில்……(நாவல்)- 28
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 32
- நாக்குநூல்
- இறந்தது யார்?
- சிறுகதையில் என்ன நடக்கிறது?
- குற்றாலம் பதிவுகள்
- படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்
- புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)
- கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
- திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்
- எங்கள் தாய் !
- வெள்ளைக்காதல்
- வஞ்சியென்றால் என்னை…
- “ நிற்பவர்கள்”
- வாசம்