குறிப்பேட்டுப் பக்கங்கள் – 2!

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

வ.ந.கிரிதரன்


[அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த வகையிலென் இரண்டாவது பதிவு. காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை. இவற்றில் பாரதி பற்றி எழுதிய சில கட்டுரைகளும், கவிதைகள் சிலவும் அவ்வப்போது சஞ்சிகைகள் மற்றும் பதிவுகள் இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அனறைய என் மனநிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில், நான் பாவித்த சொற்பிரயோகங்களையெல்லாம் அவ்விதமே மாற்றாமல் பதிவு செய்தலே சரியென்று பட்டதால், அதுவே என் உண்மையான அப்போதிருந்த மனநிலையினைப் புலபப்டுத்துமென்பதால் அவற்றை அவ்விதமே இங்கு பதிவுசெய்கின்றேன். – வ.ந.கி -]

20-09-1982.
-அண்மையில் பெய்ரூட்டில் பாலஸ்த்தீன அகதிகளை லெபனான் வலதுசாரிப் படைகளும், இஸ்ரேலியப் படைகளும் கொன்றொழித்ததையிட்டெழுந்த உணர்வுகள். –

பெய்ரூட்டின் அகதிகள் முகாம்களில்
அடிபட்டு, மிதிபட்டு, துவைபட்டு,
வதையுற்று வெடிபட்டுக் கிடக்கும்
இரத்தம் தோயந்த மாமிசப் பிண்டங்களின்
மேல்…
அட மானிடா! என்னடா! உன்னைத்தான்!
அட மானிடா! முட்டாளே!
முழிக்கிறாயாடா? முழியடா! முட்டாளே!
முழியடா!
கர்த்தரின் சீடப்பிள்ளைகளின்
கூத்தினைப் பார்த்தாயாடா! பாரடா!
பாரடா! பைத்தியக்காரா!
பாரடா!
திருநீலகண்டனின் திருப்புதலவர்கள்;
புத்தனின் பாலகர்கள்;
அல்லாவின் அருமைந்தர்கள்;
பாரடா! இவர்களை. ஏய் உன்னைத்தான்!
யாரடா ? இவர்க்ளெல்லாரும்?
இவர்களின் கூத்தினால் எரியும்
குமுறும் இன்றைய உலகினைப்
பாரடா! பைத்தியக்காரா!
பாரடா! பைத்தியக்காரா!
தத்துவம் மட்டும் பேசிடும்
வித்தர்கள் – நெஞ்சினில் நீதி
செத்தவர்கள்.
அட! மானிடா! என்னடா! உன்னைத்தான்.
அட! மானிடா! முட்டாளே!
முழிக்கிறாயாடா? முழியடா! முட்டாளே!
முழியடா!
கொலம்பியாக்களில் ஏறிக்
கும்மாளம் மட்டும்தான் போடமுடியுமுன்னால்;
அப்பாவிகளின் சிரங்களில்
தர்மத்தின் தலைகளில
எப்-16களில் , மிக்-23களில்,
மிராஜ்களிலேறிக்
குண்டுகளை மட்டும் வேண்டுமானால்
உன்னால் கொட்டித்தள்ளிவிட
முடியும்! வேறென்னடா முடியும்?
அடி முட்டாளே! ஏய்! படு
முட்டாளே!
ஆயிரத்து ஐந்நூற்றுக்குமதிகமான
அப்பாவி உயிர்கள்…
அவர்கள் என்னடா குற்றம் செய்தார்கள்?
கண்டும் காணாதது போல் நிற்கிறாயே?
கயவனே! வெட்கமாயில்லை, நாயே!
வாயென்ன உனக்கு அடைத்துத்தான்
விட்டதா?
அமெரிக்கனொருவனின் தலைமயிருதிரட்டும்.
ஆகா! அயோக்கிய ‘ராஸ்கலே’!
தத்துவம் பேசமட்டும், கருத்தரின், நீல
கண்டனின், புத்தனின், அல்லாவின்
பொன்மொழிகளைப் புடம்போடமட்டும்
வந்துவிடுவாய்! வரிந்து கட்டிக் கொண்டு
வந்து விடுவாய்! இல்லையாடா?
சுயநலநாயே! நயவஞ்சகப் பேயே!
அவர்கள் அப்பாவிகளடா!
அவர்கள் அப்பாவிகள்.
எந்தக் குற்றமும் செய்யாத
அப்பாவிப் பெண்டுகள், மழலைகளடா!
ஈவு இரக்கமற்ற அயோக்கிய ராஸ்கலே!
உனக்கென்னடா தெரியும் அவைபற்றி.
தத்துவம் மட்டும் பேசமுடியும்.
பேசு! பேசு! பேசிக்கொண்டேயிரு!
முட்டாளே! பேசு!
ஐயோ! என் பிரிய நண்பர்களே!
நண்பிகளே! செல்வங்களே!
உங்கள் இலட்சியக் கனவுகள் பூத்துக் குலுங்குவதாக!
பூத்துக் குலுங்குவதாக! பூத்துக் குலுங்குவதாக!

20-09-1982.

எதற்காக!

தனிமைகளென்னைத் தகிக்கும் வேளைகளில்
இனிமைகள் சிலநாடி உள்ளமேங்கும்; இம்
மண்ணில் வந்து பிறந்தோம்; பின்னொருநாள்
மண்ணோடு மண்ணாகிக் கலந்திடுவோம்.
இதுதான் வாழ்க்கையென்றால்…..
எண்ணங்கள் எழுந்து தலை விரித்தாடும்.
பயனற்று வாழ்க்கை கழிவதாயின், பிறந்த
பயனென்றொன்றுண்டா? உதவாத
உயிரற்ற ஒரு வாழ்வுக்காய்த்தானா இவ்
உலகில் வந்து பிறந்தோம்? சீறியெழும்
சிந்தனைகளின் தாக்கத்தால்
சிந்தை சுழன்று தடுமாறும்.
உயர்ந்து வீணே வளர்ந்து விட்டோம்.
‘உவற்றாலேதும்’ பயன்தானுண்டோ?
எண்ணங்கள் சில தோன்றிச் சலிப்பொன்று
எழுந்தாடத் தோட்டத்துப் பக்கம்
எழுந்து செல்வேன்.
கூழைக் குடித்தொருவன் பிறரைக்
கும்பிட்டே வாழ்வான்; அவ்
ஏழைகள் வயிற்றிலடித்தே மற்றவனோ
ஏப்பமொன்றை மெல்ல விடுவான்.
குடத்தினிலிட்ட விளக்காய் ஒருத்தி
குடிசையில் முடங்கிக் கிடப்பாள்.
‘மிடியும்’ ‘மக்ஸி’களுமென்று மற்றவள்
மதர்ப்புடன் திரிந்து செல்வாள்.
படிப்பதற்கு மனமிருந்தும் ஒருத்தன்
பட்டினியால் கெட்டலைவான்.
குடியும், கூத்துமென்றே அடுத்தவன்
காரினில் கூடித்திரிவான்.
ஏற்றத் தாழ்வுகளால் இங்கு
எல்லாமே இரண்டு பட்டாச்சு;
மாற்றங்கள் எதுவுமின்றி
மனிதன் மறுகியே வாழலாச்சு; இம்
மாற்றத்தைக் கொணர மனதில்
சீற்றங்களிருந்துமென்ன?
முயற்சியைத் தொடங்கத் துணிவின்றி
அயற்சியில் ஆழ்ந்து கிடப்பேன்.

20-09-1982.

கவி மகாகவியின் ‘குறும்பா’வைப் படித்த்தன் விளைவான முயற்சியில்…….
நகைச்சுவைக்கு இரு குறும்பாக்கள்:

இரண்டிற்குமேல் ஒருபோதும் இல்லை.
இவ்வாறு சொல்லி நின்றாள் முல்லை.
முல்லையவள் சொற் கேட்டு
முத்தனவள் கணவன் சொன்னான்:
ஆதலினால் இல்லைபெருந் தொல்லை.

காதலியைக் காண்பதற்காய் ஓடி.
காளையவன் சென்றிட்டானுளம் வாடி.
காத்திருந்த கன்னியவள்
காதலனைக் கண்டு மனங்
கனிந்து தழுவினாள் இன்பம் கோடி.

20-09-1982.

15-01-1983!
[கட்டுரையுமல்ல; கவிதையுமல்ல. ஒரு கருத்துருவம்] மனிதனே!

மனிதனே! நான் உனக்கொன்று சொல்வேன்; கேள்!
மற்றைய உயிர்கள் யாவினும் உன்னை உயர்ந்தவனாக
உருவகித்துப் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாய்.
இப்பிரபஞ்சமே நீதான் என்பதுபோல் பெரிதுமே
இறுமாந்து கிடக்கின்றாய்.
‘தர்மம்’, ‘நீதி’, ‘நியாயம்’, ‘தர்மிஷ்ட்டம்’, ‘காருண்யம்”
என்றெல்லாம் பெரிதாகப் பெரிதும் அலட்டிக் கொள்கின்றாய்.
ஆனால் உண்மையில் நீ செய்வதென்ன?
உன் சக இனத்தவர்களையே வர்க்கங்களாக்கி
ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமையென்று பிரிவுபடுத்தி
சிறுமைப்படுத்திக் கொண்டு வாழ்கின்றாய்.
இத்தகைய சிறுமைகளை உள்ளடக்கிய அமைப்பினைக் கட்டிக்
காப்பதனையே ‘தர்மம்’ என்கின்றாய். இதனிலும் பெரியதொரு
அதர்மம் வேறுண்டோ?
புசிப்பிற்காய், கேவலம் உன் வயிற்றுப் பசியிற்காய் நாள்தோறும்
உயிர்களைக் கொன்றொழித்துக் கொண்டே ‘காருண்யம்’
பேசுகின்றாய். வெட்கமாயில்லை.
மனிதனே! உனக்கொன்று சொல்வேன் கேள்.
ஒவ்வொரு முடிவினையும் செய்யும் போதும்,
ஒவ்வொரு செயலினையும் புரியும் போதும்,
உன் சிந்தையை ஒருகணம் தீட்டிக் கொள்!
எப்போதும் உன் அறிவிற்கு எது சரியென்று படுகின்றதோ
அதனைச் செய்திட ஒருபோதுமே தயங்கிடாதே!
எத்தகைய எதிர்ப்புகள் வந்திடினும் சிறிதுமே
வளைந்து விட்டிடாதே!
உன் முடிவு மட்டும் சரியானதாக, தர்மமானதாகயிருக்குமாயின்
முடிவினைப்பற்றி நீ கவலைப்படுவதை விட்டுவிட்டு
காரியத்தினை ஆற்றிடு.
ஒருபோதுமே அதர்மமானதொன்றினை அறிந்தும் , அதற்கு
அடிபணிவதன் மூலம் உன் சுயமரியாதையினை இழந்து
வாழ்ந்திடாதே!
இஃது எவ்வாறோ, அவ்வாறே மற்றைய
மனிதனையும் சுயமரியாதை
தனையிழந்து வாழ்திடும்படியான செயல்களை
ஒருபோதுமே ஆற்றிடாதே!

15-01-1983!

14-01-1983!

இயற்கையின் விதியொன்று!

இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாவிதமான உயிர்களையும், எல்லாவிதமான உயிர்களின் குணவியல்புகளையும் அல்லது எல்லாவிதமான செயல்களையும் ஆராய்ந்து பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே உணர்ந்து கொள்ளலாம். ஒருபுறத்தில் ஆக்ரோஷமான, ஆவேசமான போக்குகளென்றால் மறுபுறமோ எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாத அமைதியான போக்குகள் நிலவுவதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது. அதாவது ஒரு புறத்தில் மூர்க்காவேசமிக்க, புலாலுண்ணும் உயிர்கள்; கோபம்,. பொறாமை முதலிய பொங்கும் குணவியல்புகள். சீறி வெடிக்கும் சூறாவளி, புவி நடுக்கம், பெருகிடும் ஆறுகள், பீறிடும் எரிமலை, குமுறும் அலைகடல் போன்ற செயல்கள். இவை ஒருபுறமென்றால்… மறுபுறமோ இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறான இய்லபுகளை உள்ளடக்கிய உயிர்கள். சாந்தமே உருவான சாதுவான பசு, ஆடு போன்ற பிராணிகள். அமைதியான , இரக்கம் மிக்க, குணவியல்புகளை. சீறிக் குமுறிடும் இயற்கையின் விளைவுகளுக்கு நேர் எதிரான தன்மை மிக்க இயற்கையின் செல்வங்கள். மென் தென்றல். ஆனந்தம் மிக்க அமைதியான அருவிகள்.

இவ்வாறு இருபெரும் பிரிவுகளாக பிரிவுபட்டுக் கிடக்கும் உயிர்கள், குணங்கள், செயல்களில் முதலாவது வகையான் மூர்க்காவேசம், கோபாவேசம் மிக்க போக்குகளினால் விளைவதெல்லாம் நாசம்தான். அழிவுதான். கேடுதான். புலாலுண்ணிகள் மற்றைய உயிர்களை அழித்து நாசம் செய்கின்றன. எரிமலை வெடிப்புகள், பொங்கும் கடல், ஆறுகள், சூறாவளி போன்றவை பெருங்கேடுகளை நாசத்தினையே விளைவிக்கின்றன. கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற இயல்புகளோ பேரழிவுகளையே தோற்றுவிக்கின்றன. மாறாக இரண்டாவது வகையான அன்பான, அமைதியான, இரக்கம்மிக்க போக்குகளோவெனில் இன்பத்தினைத் தருகின்றன; ஆனந்தத்தினைத் தருகின்றன. முதல் போக்கு அழிவினை ஏற்படுத்துகின்றதெனில் இரண்டாவது போக்கோ புத்தாக்கத்தினைப, பொழிவினைத் தந்து விடுகின்றன.

இனி ஒரு மனிதனது வாழ்வையே எடுத்துப் பார்ப்போம். அறியாமையின் விளைவான மிருகங்களைப் போன்றே இம்மனிதனும் தன் நாவிற்காக, வயிற்றிற்காக மீன், தவளை, பாம்புக் கறி, கோழி, கவுதாரி, காடை, ஆடு, மாடு, எருமை, பன்றி, மான், மரை, அணிலென்று, இன்னும் பல்வேறு வகையான உயிர்களை நாள்தோறும் இலட்சக் கணக்கினில் கொன்று குழித்துக் கொண்டிருக்கிறான். இதன் மூலம் சிந்திக்குமாற்றலற்ற மிருகங்கள், பட்சிகளைப் போன்ற உயிர்களிற்கும், சிந்திக்கும் ஆற்றல் பெற்ற தனக்கும் எவ்வித வித்தியாசங்களுமில்லையென்பதனைக் காட்டிக் கொண்டிருக்கின்றான்.

உண்மையில் நவீன இயற்கை விஞ்ஞானம் கூறுவதென்ன்? புலாலுண்ணுதல் தற்காலிகமாக மனிதனுக்கு வேண்டுமானால் சக்தியினைப் பொலிவினைத் தந்திடலாம். ஆனால் உண்மையில் இவை உடல் நலத்திற்குப் பெருங்கேட்டினையே விளைவிப்பன. ஒரு மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளுமே இயல்பாக அவற்றிற்கு வேண்டிய சக்தியை விட மேலதிகமான சக்தியினைப் புலாலுண்ணுதலின் போது பெறுவதால் கூடுதலாக அவை வேலை செய்வதால் தங்களது வாழ்நாளைக் குறுக்கிக் கொள்கின்றன. அபப்டியானால் இந்த மனிதன் ஏன் தனக்குக் கேடு விளைவிக்கும் செயல்களை ஆற்றுகின்றான்?

அதற்குக் காரணம் மனிதனின் அறியாமைதான்; இவ்வுலகின் முக்கால்வாசிக்குமதிகமான மனிதர்கள் வறுமையிலும், பசி, பிணி, , கவலைகளால் சீரழிந்து கொண்டிருக்கையில், இயல்பாகவே பெருமளவிலான மனிதர்கள் அறியாமையில் உழன்று விட வழி ஏற்படுகின்றது. ஆனால் அதே சமயம் அளவிற்கு அதிகமான செல்வக் குவியலில் புரளும், ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டமோ தனது அறியாமையால் தன்னையே அழிப்பதோடு மட்டுமல்லாமல், சக உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் காரணம். இதுதான் சரியான காரணம்.

இதேபோல்தான் மனிதனது வாழ்நாளினைக் கோபம், பொறாமை, ஆசை போன்ற உணர்வுகள் சிதைத்து விடுகின்றன என்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. மனிதன் இத்தகைய குணங்களினால் தன்னை மட்டுமல்ல சக மனிதர்களையுமே அழித்துக் கொண்டிருக்கின்றான். நாடுகளுக்குள், நாடுகளிற்கிடையில் நாள்தோறும் போட்டி, பூசல்கள், போர்களினால, தனி மனிதர்கிடையிலேற்படும் மோதல்களினால் நாள்தோறும் எத்தனையோ இலட்சக்கணக்கான உயிர்கள் அழிந்துகொண்டிருக்கின்றனவே.

இவையெல்லாம் உணர்த்தி நிற்பவைதான் எவை? அன்பு, இரக்கம், அமைதியான பண்பு இவையே இப்பூவுலகின் ஆனந்தத்திற்கு அத்தியாவசியமென்பதையல்லவா. கஷ்ட்டத்தில் உழன்று கிடப்பவனுக்கு உதவிடும்போதினில்தான் எத்துணை இன்பமயமானதாகவிருக்கின்றது. அன்பு செலுத்துகையில்தான் எத்துணை மகிழ்ச்சிகரமானதாகவிருக்கிறது.

ஆனால் இதற்காக ஏற்றத்தாழ்வுகளை, ஒருபக்கச்சார்பான சட்டதிட்டங்களை, சுரண்டல் ச்முதாய அமைப்பினை, ஒருபுறம் கோடிக்கணக்கில் ஏழைகளையும், இன்னுமொருபுறத்தில் ஒரு செல்வந்தக் கூட்டத்தினையும் உருவாக்கிட அனுமதித்திடும் சமுதாய அமைப்பினை அங்கீகரித்துக்கொண்டே ‘அன்பு’ பற்றிப் போதிப்பது கேலிக்கிடமானது. இருக்கின்ற பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கிடவே அவை வழிவகுத்திடும். மாறாக மானுடவர்க்கத்தினைச் சரியான வழியில் , பொதுவுடமை அமைப்பினை நோக்கித் திருப்பிக் கோண்டே அன்பினைப் போதிப்பதே சரியான வழி.

15-01-83.

சமர்ப்பணமொன்று……..

இந்தச் சொல் மாலையை நானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏனேனில் என்னால் தற்சமயம் மட்டுமல்ல
இப்பிறவியிலேயே செய்யக் கூடியது இது ஒன்றுதான்.
சிலவற்றைச் சோல்லாமலிருக்க முடிவதில்லை.
இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான். இதயத்தின்
கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய நினைவு;.
உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாத்தொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில்.. இன்றோ
விடுபட முடியாததொரு நிலை. அது
உனக்கும் புரியும். எனக்கும் தெரிகின்றது.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில் அமைதி நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்கையில்
கூடவே ஒரு சோகமும் படர்வதை
என்னால் அறிய முடிகின்றது.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை…
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்…
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.

30-05-1983.

போரொன்றெழுந்து……

தலைக்குமேல் விமானங்கள் சீறிச் செல்லும்;
தலைகள் பல சிதறிச் செந்நீரில் மூழ்கும்;
படபடக்கும் ‘மெஷின்கன்’களின் பேரிரைச்சலில்
பாலகர்கள் மார்புகள் துளைபட்டுக் கிடக்கும்;
கலைஞர் இரத்ததிலுருவான கட்டடங்கள்
நிலைகுலைந்து வீழ்ந்து சிதறிடும்;
ஆடைகள் நிலைகுலைந்து அங்கங்கள் பற்றி
அரிவையர் மானம் மதிலேறும்;
போரொன்றெழுந்து இப்பாரெங்கும்
பிணக்காடாகும்;
காரிருள் எங்கும் சூழம்;
கயவர்கள் செயல்கள் பரவும்;
மோதி மோதியே மக்களிங்கு
மாண்டு போவர்; அழிவர்;
அறிந்தவர் இறுமாப்பழியும்;
ஆள்பவர் கொட்டம் அடங்கும்;
பண்பாட்டுச் சிகரம் சரியும்;
பஞ்சத்தின் பிடியில் உலகம்
தஞ்சம்.

21-01-83.

சமர்ப்பணம்…

மீண்டும் இலங்கை பற்றியெரிகின்றது.
தூய மிருதுவான நெஞ்சங்களைச்
சிதைப்பதில்,
மீண்டும் நொந்த உள்ளங்களின்
மரண ஓலங்கள்.. பிலாக்கணங்கள்…
சோகநிழல்கள்…
சிதறிய பாதைகளில்
வாழ்வேயொரு கேள்விக்குறியாக….
அவமானம், அச்சம், வேதனை, சோகம்
அடியே! புரிகிறதாடீ! உன்னவர்
இங்கு புரியும் கூத்து.
என்ன செய்தாரிவர்? எடியே!
ஏன் மெளனித்து விட்டாய்? உன்னைத்தான்.
உன்னைத்தானடி!
மீண்டும், மீண்டும்.. முடிந்த கதை
தொடர்ந்த கதையாய்…
பென்சீன் வளையமாய்… அடியே!
இங்கு நடக்குமிந்தக் கூத்து..
இதற்கொரு முடிவு?
அன்பே! எனக்குப் பாலஸ்த்தீனத்துக்
கவிஞனொருவனின்
சொற்கள்தான் ஞாபகத்தில் வருகின்றன:
“கோழிக்குஞ்சுக்குக் கோதும்,
முயலிற்கு வளையும் உண்டு.
ஆயின் பாலஸ்த்தீனியனுக்கோ…?”
அன்பே! புரிகின்றதா?
‘எலி வளையானாலும் தனிவளை’.
ஆமாம். அது இல்லாததுதான்.

9-06-1983.


ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்