குறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையினை மத்திய அரசு அதிகரித்துள்ளதற்கு உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.மருத்துவ கவுன்சில் இது குறித்து விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ கல்வி இந்தியாவில் சரியான முறையில் நெறிப்படுத்தப்படுவதில்லை. சில மாநிலங்களில் மருத்துவ கல்லூரி துவங்குவது எளிதாக உள்ளது, பல கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாத போதும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உட்பட பல நிபந்தனைகள் பின்பற்றப்படுவதில்லை.

இது குறித்து அக்கறை காட்ட வேண்டிய அரசுகள் புதிய கல்லூரிகள் துவங்க, மாணவர் எண்ணிக்கையினை அதிகரிக்க உதவுவதுடன், அதை நியாயப்படுத்துகின்றன. கர்னாடகாவில் 23 மருத்துவ கல்லூரிகளும்,மகாராஷ்டிராவில் 41 கல்லூரிகளும் உள்ளன.அம்மாநில அரசுகளின் ‘தாராள ‘ அணுகுமுறைதான் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. இது போன்ற தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள EPW தலையங்கம் மருத்துவ கவுன்சிலின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக தன் மனைவியை இழந்த அயல்நாட்டில் வாழும் இந்தியர் தொடுத்த வழக்கில் இரண்டு மருத்துவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.அவர்கள் தொழில் செய்யும் உரிமையை நீக்கத் தவறிய கவுன்சில் மாநில கவுன்சில்தான் அதை செய்ய வேண்டும் எனக் கைவிரிவித்துவிட்டது.மாநில கவுன்சில் அவ்வாறு செய்யாத போது மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை.அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ கவுன்சிலின் கிளைகள் இல்லை. மருத்துவமனைகளை நெறிப்படுத்துவது குறித்து சட்டம் கொண்டுவர முட்டுக்கட்டை போடுவது மருத்துவர்கள்தான்.தமிழகத்தில் சில ஆண்டுகள் முன்பு அரசு முயன்ற போது அதை எதிர்த்தவர்கள் மருத்துவர்கள்.இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பல வழக்குகள்.

எப்படி கட்டணம் நிர்ணயிப்பது உட்பட பலவற்றில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டிய நிலையில் மருத்துவ கல்வி உள்ளது.மருத்துவ கவுன்சிலும், அரசும் இந்நிலைக்குப் பொறுப்பு.இந்த அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்காமல் மேலும் மருத்துவ கல்லூரிகளை திறப்பது முறையல்ல.


யாஹூ விவாதக்குழுக்களை இணையத்தில் பார்க்க தடை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு இணையத் தொடர்பு வழங்கும் நிறுவனங்களுக்கு (INTERNET SERVICE PROVIDERS) உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் அவ்வாறு செய்ய வில்லை. அரசு உத்தரவிடக் காரணம் கைன்ஹ்உன் என்ற மேகாலயப் பிரிவினைவாத குழு யாஹூவின் குழுக்களில் உள்ளது.இதன் காரணமாகவே இத்தடை. இதை தணிக்கை அல்ல, சீரான தகவல் பரிமாற்றம் குறித்த நடவடிக்கை என்கிறது அரசு.அந்த குழு என்னதான் சொல்கிறது என்று பார்த்தால் அதில் உள்ளவை பல ஆங்கில எழுத்துக்களில் உள்ளவை, ஆங்கில மொழியில் அல்ல.

மேலும் அது ஒரு சிறிய குழு, செய்திப் பரிமாற்ற அளவும் குறைவு. இதற்காக அனைத்து குழுக்களையும் பார்க்க இயலாதபடி செய்வது முட்டாள்தனமானது. மேலும் பலர் குழுக்களில் பரிமற்றப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலம் பெறுகின்றனர்.எனவே அவர்கள் இத்தடையை மீறியும் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இத்தடைக்கு சட்ட பூர்வமான அனுமதி தர அதிகாரம் உள்ள அமைப்பு என்ன, சட்டம் சரியன முறையில் இந்த தடை விவகாரத்தில் கையாளப்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியாக இத்தடையை மீறுவது எளிது எனவே இது வீண் முயற்சி எனவும் கூறப்படுள்ளது. சீனா இணையத்தில் உள்ள பல தளங்களை பார்க்கத் தடை விதித்துள்ளது. ஈராக் போரின் போது சில நாட்கள் அமெரிக்காவில் அல் ஜீரா தளத்தை பார்க்க முடியவில்லை.

ஆனால் இணையத்தைக் கட்டுப்படுத்த செய்யும் முயற்சிகள் வீண்.இறையாண்மை என்பதைக் காட்டி இணையம் தொடர்புடையவற்றில் முட்டாள்தனமாக செயல்படாமல் இருப்பதே மேல். இணையத்தில் ஹிந்த்துவவாதிகள் உட்பட பலரும் தங்கள் கருத்துக்களை தீவிரமாக வெளிப்படுத்தி வருகின்றனர். உதாரணமாக சில மாதங்கள் முன்பு ரோமிலா தாப்பர் அமெரிக்க காங்கிர்ஸின் நூலகத்தால் ஒரு ஆராய்ச்சிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட போது அதை எதிர்த்து இணையத்தளம் மூலம் ஒரு மனுவும், எதிர்ப்பு இயக்கமும் மேற்க்கொள்ளப்பட்டது.அதற்காக அந்தத் தளத்தை தடைய செய்ய வேண்டும் என்று கோருவது முட்டாள்த்தனம். இந்திய அரசின் செய்கையும் அது போல்தான். பாகிஸ்தான் ஆதரவு hackers இந்திய நிறுவனங்களின், அரசின் இணையத் தளங்களை தாக்கி, சேதப்படுத்த முயலும் போது இந்திய அரசு தலையிடுவது ஏற்கத்தக்கது. அதை விடுத்து ஒரு நாலு பேர் பிரிவினைவாதம் குறித்து இணையத்தில் கருத்துத் தெரிவிக்கிறார்கள் என்பதற்காக யாஹூ விவாதக்குழுக்களை இணையத்தில் பார்க்க தடை செய்ய வேண்டும் என்று ஆணையிடுவது கேலிகூத்து.

இணையம் எப்படி இறையாண்மைக்கு, அரசுகளுக்கு சவாலாக உள்ளது என்பது குறித்து பல நூல்கள், கட்டுரைகள் உள்ளன.இவையெல்லாம் இத்தகைய ஆணை பிறப்பிப்போருக்கு தெரியாது போலும். அமெரிக்காவில் இணையம் கருத்துச்சுதந்திரம் குறித்து Electronic Frontier Foundation, American Civil Liberties Union போன்றவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் இதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.இந்த ஆணை Information Technology Act யின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டம் கருத்துரிமையைப் பாதிக்கும் என்று வாதிடப்பட்டுள்ளது. சமீபத்தில் EPW ல் இது குறித்து ஒரு விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது.மத்திய அரசு தன் இறையாண்மையின் ‘எல்லைகளை ‘ உணர்ந்து செயல்படுவது நல்லது.


நகலாக்கம்(cloning) முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா குழு ஒன்று அடுத்த வாரம் விவாதிக்க உள்ளது. இனப்பெருக்க நகலாக்கம் தடை செய்யப்படலாம், ஆனால் சிகிச்சைக்கான நகலாக்க முயற்சிகள்,ஆய்வுகளை அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச அளவிலான தேசிய அறிவியல் அதாதெமிகளின்(national academies) சார்பாக கருத்துக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் முற்றிலுமாக தடை வேண்டும் என்று கோருகின்றன. இதில் கருக்கலைப்பு அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. வாடிகன் கருக்கலைப்பு ஒரு உரிமை என்பதை ஏற்கவில்லை. மாறாக கருவுற்ற 14ம் நாளிலிருந்து கரு மனிதர் என மதிக்கத்தக்கது என இறையியல் கருதுவதால் கருக்கலைப்பு எந்த வடிவத்திலும், எதற்காகவும் ஏற்க தக்கதல்ல என்கிறது. கருக்களை வளர்த்து பின் அவற்றிலிருந்து stem cell களை பெற முடியும்.இவை சிகிச்சை, ஆராய்ச்சிக்கு பயன்படும்.

சிகிச்சைக்கான நகலாக்கம் parkinson ‘s போன்ற சிதைவு நோய்கள், நீரிழிவு குறித்த சிகிச்சை, ஆராய்ச்சிக்கு உதவும் என்பதால் அதை அனுமதிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆயுள் அதிகரித்து வருவதால் உலகெங்கும் முதியோரின் எண்ணிக்கையும், மொத்த மக்கள் தொகையில் அவர்களின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. சிதைவு நோய்கள்(degenerative diseases) அவர்களையே அதிகம் பாதிக்கின்றன, எனவே இத்தகைய ஆய்வுகள் அவசியம். ஆனால் இந்த வாதம் எடுபடுமா என்பது தெரியவில்லை.

இத்தடை குறித்து கமிட்டி விவாதம் செய்த பின் விரிவாக எழுதுகிறேன்.

நகலாக்கம் குறித்து ஒரு கதையில் வரும் கேள்வி-நீ என் நகல் என்றால் நான் யார் ?

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation