குண்டுமணிமாலை

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சந்திரவதனா


அந்த இருளிலும் வடிவாகத் தொிந்தது. மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை. ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.

ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்த சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.

நான் இப்படித்தான். யேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும்போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.

எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும் ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் குடும்பமாக> குதுாகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.

ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே துாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தொியவில்லை. பயம்…! பயம்…!

கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன். யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்ணிலும் துறுதுறுப்பு இருக்க வில்லை.

பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.

ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து திறந்ததும் ஏறி தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த நம்பர் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.

சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.

அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ரீச்சராகவோ> அல்லது வேறு நல்ல பதவியிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து> ஞுாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.

எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணஞ் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் பொலிஸ் ரிப்போர்ட் வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.

‘ஏன் அப்பிடி ? என்னட்டை யேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..! ‘ சற்று எாிச்சலுடன் கேட்டேன்.

‘இதுக்கே எாிச்சல் பட்டால்….! இன்னும் எத்தனை அலங்கோலங்களையெல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய்ப் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி. ‘ சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.

என் எாிச்சல் யாரை என்ன செய்தது ? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேணும். வேறு வழியிருக்கவில்லை. இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்டேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.

அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் ‘என்ன சந்தியா நீ நித்திரையே கொள்ளேல்லையோ.. ? நேற்றிரவும் செக்கிங் அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..! ‘

நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.

பன்னிரண்டு வருஷத்தில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.

மாமா மீண்டும் தூங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும் வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்டேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட> அடுத்து வரப்போகும் நாகொல்லகம வில>; ரெயில்வே குவார்ட்டர்ஸில்> நாங்களெல்லோரும் லீவில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள் தான் அதிகம்.

நாகொல்லம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்டேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்டேசன் அல்ல. அழகாகக் கட்டப் பட்ட பொிய கட்டடம். அழகான பொிய குடயவகழசஅ. குடயவகழசஅ இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.

அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல் (ஏழடடநலடியடட) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநுாறு மீற்றர் நடந்து போனால்> பொிய தாமரைக்குளம். தாமரையும் அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.

அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். ‘நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..! ‘ தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு

நாட்களில் பயம் தெளிய வைத்து….

ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.

நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை லீவு. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.

ரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டான் வந்து ‘மாத்தயா..! மாத்தயா..! ‘

என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.

சண்டிங்ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து ‘நல்ல ரோஸ் பாணும் கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா. ‘ என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிாிசிாியென்று சிாித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிாித்தேன்.

சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப் பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தொிந்தது. வீட்டின் இடதுபக்க முற்றம் வழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும் வாழைக்குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தொிந்தது.

முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் – அஸிஸ்டென்ட் டிக்சன்- இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு> சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.

அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டானின் கையில் சில்லறையைத் திணிக்க> அம்மா தேநீர் தயாாிக்க> நானும் அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.

பின் முற்றத்தில் பொிய பொிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும்> மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு> கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.

‘அது சாியான ஆழம். இங்காலை வாங்கோ. ‘ அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.

அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும் மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.

‘வாவ்..! குண்டுமணி மரம். ‘ வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க நான் துள்ளினேன்.

பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமொிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.

அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பாலு குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.

குண்டுமணி காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது.

மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊாில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. லீவு முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.

அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே துாங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காயவைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.

‘குருவி தூக்கிக் கொண்டு போயிருக்கும். ‘ அப்பா சொன்னார்.

குருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.

‘நங்கி….! நங்கி….! ‘

குரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக..

‘துரத்தாதை குருவிகளை..! வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும். ‘

சிங்களத்தில் தடுத்தார்.

இப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தொிந்தது.

‘கிளி மூக்கு ‘ மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி ‘சொறி அங்கிள் ‘ என்றேன்.

எனக்குக் கவலை. எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காயவைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காயவைத்துப் பலதடவைகள்> கோர்த்த குண்டுமணி மாலையைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காயவைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். லீவும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பாலுவும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடி கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.

இரண்டு நாளில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு> நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.

தங்கையை இடுப்பில் தூக்கிய படியே ‘உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா..! ‘ அம்மா சத்தம் போட்டா. எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக. ‘ என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தொிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்க வில்லை.

ஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.

‘நானே கோர்த்தேன். ‘ என்று பெருமையாகச் சொல்ல> ஊாில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.

ரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.

‘ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப்போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா.. ?! எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் யேர்மனிக்கு ஓடிப் போனேன்! ‘

‘ஏன்…. ? ஏன்…. ? ‘

பருத்தித்துறைக் கடலிலிருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா ? ஹெலியிலிருந்து நீண்ட துப்பாக்கிகளிலிருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா ? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி> பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா ? குறுக்கே கட்டியபடி> குளித்த குறையில்> துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணிவாளியைப் பிடித்துக் கொண்டு> நேரம் போவதே தொியாமல் தங்கையுடன் கதையளந்த காலம்> எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ! எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ! என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா ? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா ?

‘ஏன் ஓடிப் போனேன் ? ‘

‘போய்…. என்ன கண்டேன் யேர்மனியில்..! ‘

வெறுமை> தனிமை> குளிாின் கொடுமை> பாஷை தொியாத பாிதவிப்பு> ‘தொங்கிக் குதிக்கக் கூட தடையா இங்கே.. ? ‘ என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தொிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப் படும் எனது கணவன். இவை தவிர வேறு என்ன கண்டேன். தமிழ் முகங்களையே காணமுடியாத ஒரு நகரம்.

பல்லைத் தீட்டித் துலாவிலை தண்ணியை இழுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி வர> சுடச்சுட ஆட்டுப்பால்தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால்> ‘அக்கா நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ. ‘ அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை.

‘அக்கா நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா அம்மாக்குத் தொியாமல் உப்பும் தூளும் கொண்டு வாங்கோ. ‘ என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிாித்து மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும்> குரங்கும் அப்பமும்…. கதைகள் சொல்லும் அப்பா இல்லை.

இன்னும் எத்தனை இல்லைகள்.!

‘இருந்தும் ஏன் போனேன் யேர்மனிக்கு.. ? ‘

…. ? …. ?

போகாமலிருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். தம்பியைத் தேடி வந்த இந்தியன் ஆமி எங்கட குடும்பத்தைப் படுத்தின பாட்டைத் தங்கை பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருப்பாள்.

ஓரு கடிதத்தில் ‘அக்கா…! அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு குடைஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள்> எவர்சில்வர் சாமான்கள்…. என்று எல்லாத்தையும் கொண்டு போறாங்கள்…. ‘ என்று எழுதியிருந்தாள்.

‘அதையிட்டு ஒண்டும் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வசெயலே….! ‘ நானும் ஆறுதல் கூறிக் கடிதங்களாய் எழுதினேன்.

என்ன கஷ்டத்திலும் ‘அக்கா…! ‘ என்று அன்பைத் தோய்த்து எழுதும் தங்கையின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனமாகவே வந்தன.

அப்படி வந்ததில் ‘தம்பியை இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து> அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில – பசூக்கா ஷெல்லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி தம்பி வீரமரணமடைந்து விட்டான்….! ‘ என்ற வாக்கியங்களுடன் சுமைதாளாத சோகத்துக்கு என்னை ஆளாக்கிய அந்தக் கடிதத்துக்கு முதல் கடிதத்தில் வந்த செய்தி…

‘அக்கா..! இம்முறை இந்தியன் பிசாசுகள் ஐந்து பேர் வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு ‘தம்பி மொறிஸ் எங்கே.. ? ‘ என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து> நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து> ‘எங்கே மொறிஸ்.. ? சொல்லு..! ‘ என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல் வார்த்தை வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் பட வில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.

மற்றவன் மைத்துனர் கணேசைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து> இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும் உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லோரும் போய் நாங்கள் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து கணேஸ் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை…! ‘

ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகியிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தொிந்தது.

வெள்ளை சேர்ட்> வெள்ளை ரவுசர்> வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் வுயடிடநவ உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தொிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.

அப்பா….! உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.

ரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.

(20.11.1997)

சந்திரவதனா

யேர்மனி.

1999

பிரசுரம் – முதல்பாகம் – 15-21 ய+லை 1999 ஈழமுரசு

இரண்டாம் பாகம் – 22- 28 யூலை 1999 ஈழமுரசு

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா