கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நெடுங்காலம் எடுக்கிறது,
என் பயணம்!
நீண்ட தூரம் போகிறது,
என் பாதை!
விண்கோள்கள், விண்மீன்களில் என்
தடம் பதித்து
முதல் ஒளிவீச்சில்
தேரிலிருந்து கீழிறங்கிப் பயணம்
தொடர்ந்தேன்,
நாடுகளின்
காடுகள், புதர்கள் வழியே!
பக்கத்தில் தெரியும்
பயணப் பாதை
உன்னை
நெடுந்தூரம் இழுத்துச் செல்வது!
எளிய முறையில் இசையை மீட்ட
செய்ய வேண்டி யுள்ளது,
சிரமப் பயிற்சி!

தன் சொந்த வீடு வந்தடைய
ஒவ்வோர்
அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி
தட்ட வேண்டி யுள்ளது!
புனித கோயிலின் உள்ளே
உன்னரிய
சன்னதியை வந்தடைய
ஒருவன்
வெளி உலக மெல்லாம் சுற்றி
உலவ வேண்டி யுள்ளது!
இங்கும் அங்கும் உன்னைத்
தேடிப் போன என் கண்கள்,
மூடிப் போகும் முன்பு
மொழிந்தன,
‘இதோ! இங்கு இருக்கிறாய் ‘
என்று!
கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்
பொங்கி
‘எங்கே ? எங்கே ? ‘ என்று
கேள்வியும் கூக்குரலும்
கேட்ட போது,
உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,
‘இங்கே நான் ‘ என்னும்
சங்க நாதம்,
எங்கும் உனை
உறுதிப் படுத்தும்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 11, 2005)]

Series Navigation