கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

ஸ்டாவ் காங்கஸ்


ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமைமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. எல்லா இனங்களும், எல்லா கலாச்சாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்திமுறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் ஆக்கியவர்கள். வேறு எந்த அடிமை முறை கொண்ட பேரரசும், இந்த அளவிற்கு எண்ணிக்கையிலும், கொடுமைத்தனத்திலும், ஐரோப்பியர்கள் அருகே கூட வர முடியாது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்தது. சுமார் 60 மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும், துயரத்தாலும் இறந்தவர்களைக் கணக்கிடவே வழியில்லை.

அடிமைமுறையின் முக்கியமான காரணம், பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, ஆயினும், கிரிஸ்தவ சர்ச் இதில் மத்திய பங்கு வகித்து, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் , அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடங்கள் நீடிக்க சர்ச் தான் உதவி செய்தது. சர்ச் ஆசீர்வதிக்காமல் யாருமே எதையுமே செய்யவில்லை. சர்ச்சே, எது ‘நியாயமான அடிமை முறை என்பதையும், எது நியாயமற்ற அடிமை முறை என்பதையும் ‘ நிர்ணயித்தது. அரசர்களுக்கும், அரசிகளுக்கும், அடிமை முறையை உபயோகித்துக்கொள்ள ஒவ்வொரு தடவையும் சீர்தூக்கி அனுமதி அளித்தது. அடிமைமுறையில் சர்ச்சின் பங்கு, மனசாட்சியின் குற்ற உணர்வினை அமைதிப்படுத்தவும், ஒழுக்கரீதியிலும், மதபுத்தகங்களைக் காட்டி அதனை நியாயப்படுத்தவும் பயன் பட்டது.

போர்ச்சுக்கீஸ் 1452இல் போப் ஐந்தாவது நிக்கலஸ்இிடம் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைபிரதேசங்களிலிருந்து அடிமைகளை கடத்திக்கொண்டு வர அனுமதி கேட்டார்கள். கத்தோலிக்க சர்ச்சின் ‘நியாயமான அநியாயமான அடிமைமுறை ‘ சட்டங்களின் படி அப்பாவியான மக்களை அடிமைமுறைக்காக கடத்திக்கொண்டுவரக்கூடாது. ஆனால், போரில் தோற்றவர்களை, கைது செய்யப்பட்ட எதிர்ப்படைபோர்வீரர்களை அடிமைகளாக உபயோகப்படுத்திக்கொள்ள கிரிஸ்தவர்களுக்கு அனுமதி அளிக்கும். ஆகவே போப்பாண்டவர் ஆப்பிரிக்கர்களை கடத்திக்கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக, ஆப்பிரிக்கர்களை ‘சாரசன் ‘கள் அதாவது கிரிஸ்தவர்கள் சிலுவைப்போரில் வெகுகாலம் போரிட்டு வரும் முஸ்லீம் துருக்கர்கள் என்று வகைப்படுத்தி அனுமதி அளித்தது. சுமார் 2500 மைல் தொலைவில், வெவ்வேறு கண்டங்களில் வசிக்கும் துருக்கர்களையும், ஆப்பிரிக்கர்களையும் எந்தவகையிலும் யாரும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ள முடியாது. ஆனால், இதுவெல்லாம் அப்பாவி ஆப்பிரிக்கர்களை கடத்திக்கொண்டு வந்து அடிமைகளாக விற்க, ஏற்கெனவே வக்ரமான சர்ச்சின் ‘நியாயமான,அநியாயமான அடிமைமுறை ‘ சட்டங்களையும் சட்டரீதியாக வளைத்து, நியாயப்படுத்திய முறை இது.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் லாபகரமான வியாபாரமானதால், மற்ற நாடுகளும் இதில் போட்டியிடத்துவங்கின. இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆப்பிரிக்கர்களைக் கைப்பற்றி கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆப்பிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கின. அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆப்பிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தன. சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தது போருக்கு வித்திட்டது. கப்பல்களுக்குள் வந்ததும் ஆப்பிரிக்க கைதிகள் படுமோசமான நிலையை எதிர்கொண்டார்கள். கழுத்திலிருந்து கழுத்துக்குச் சங்கிலி போட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். அடிமையாகச் செல்வதைவிட ஆப்பிரிக்க தாய்மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர். இப்படிப்பட்ட துயரமான பயணத்தில் உயிர்பிழைத்தவர்களின் எண்ணிக்கையே 14 மில்லியனுக்கும் மேல்.

அமெரிக்காவிற்கு வந்ததும், பயங்கரம் தொடர்ந்தது. முதல் மூன்று அல்லது நான்கு வருடங்களில் முன்றில் ஒரு அடிமை இறந்தார். பெரும்பாலான வேலை பருத்தியை பிய்ப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி ரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதை பிய்ந்த்து போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிந்தது இந்த அடிமைகளுக்கு. அறுவடையின் போது 18 மணி நேரம் ஒவ்வொரு நாளும். கர்ப்பமான பெண்களும் பிரசவிக்கும் கடைசி நாள் வரைக்கும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள். தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள சற்று ஓய்வெடுத்த தாய்மார்கள் சவுக்கால் விளாசப்பட்டார்கள். வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவது.. ஒரு நீதிபதி, போராடிய ஒரு குழு அடிமைகளை மேடை மீது கட்டி, அவர்களது முகம் சூரியனைப் பார்க்கும் படி வைத்து, அவர்களது கைகளையும், தொடைகளையும், முதுகெலும்பையும், தாடைகளையும் உடைக்கும்படி உத்தரவிட்டார். ‘கடவுள் அவர்களை உயிரோடு வைத்திருக்க விரும்பும் வரைக்கும் அப்படியே இருக்கும்படிக்கு ‘ நீதி அளித்தார். அதன் பின்னர், அவர்களது தலைகள் வெட்டப்பட்டு, நீண்ட கழிகளில் ஊன்றப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன.

சொல்லத்தேவையின்றி, தற்கொலை விகிதமும் அதிகமாக இருந்தது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்த்தார்கள். மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில் , அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டார்கள், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

வெள்ளை அமெரிக்கர்கள், பைபிளின் பக்கங்களைக்கொண்டு இந்த கொடுமைகளை தொடர்ந்து நியாயப்படுத்தி வந்தார்கள். The Bible itself commanded: ‘Slaves, obey your earthly masters with respect and fear ‘ (Ephesians 6:5). பைபிளே கட்டளையிட்டது, ‘அடிமைகளே, பூமியில் உள்ள உங்கள் எஜமான்களுக்கு மரியாதையுடனும் பயத்துடனும் அடிபணியுங்கள் ‘(Ephesians 6:5). மேலும், பைபிள் எஜமான்கள் தங்கள் அடிமைகளை இரண்டு நாட்களுக்கு எழுந்திரிக்க முடியாத வண்ணம் தீவிரமாக அடிக்க அனுமதி அளித்தது(Exodus 21:21).. பைபிள் பல பொத்தாம்பொதுவான, மறைமுகமான வாதங்களை அடிமைத்தனத்துக்கு எதிராக கொண்டிருந்தாலும், அவை பைபிள் விதிகள் அடிமைமுறையை அங்கீகரிக்கவும், அதனை எவ்வாறு நடைமுறையில் உபயோகப்படுத்தவேண்டும் என்று இருப்பது போன்று நேரடியாகவும், வெளிப்படையாகவும் இல்லை.

Genesis 9:21-27, அடிமைமுறைக்கான எல்லா கிரிஸ்தவ நியாயப்படுத்தலுக்கும், ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகத் தேர்ந்தெடுத்தற்கும் உறுதியான அடித்தளமாக இருந்தது. திரிக்கப்பட்ட இந்த பொருள்படுத்தலின் காரணமாக, ஆப்பிரிக்கர்கள் என்றென்றும் ஐரோப்பியர்களின் அடிமைகளாக இருக்கவேண்டும், ஏனெனில், கனான்-ஐ ஷெம்-உக்கும் ஜாபாத்-உக்கும் ‘வேலையாட்களின் வேலையாளாக ‘ இருக்க சாபமிட்டது பைபிளில் இருக்கிறது. நவீன ஆராய்ச்சியாளர்கள், கனான் ஆப்பிரிக்காவின் மக்களின் தந்தை என்பதற்கும், ஷெம், ஜாபெத் ஆகியோர் ஐரோப்பாவுக்கும் ஆஸியாவுக்கும் தந்தையர் என்று கருதுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கருதுகிறார்கள். கனானின் சாபம் தலைமுறை தலைமுறையாக வருவதற்கும் எந்தவிதமான காரணமும் இல்லை என்றும் கருதுகிறார்கள். ஆனால், இந்த பைபிள் கதை, ஆப்பிரிக்கர்களை பெரும் பாவத்திற்கு உரியவர்களாக பார்ப்பதற்கும், அவர்களை அடிமைமுறைக்கு கட்டாயப்படுத்துவதற்கும் உரிய முக்கியமான நியாயமாக கிரிஸ்தவர்களுக்கு ஆகிவிட்டது.

அமெரிக்க புரட்சி போருக்கு முன்னர் கத்தோலிக்க சர்சுக்களும், புரோடஸ்டண்ட் சர்ச்சுகளும் இரண்டுமே தீவிரமாக அடிமைமுறையை நியாயப்படுத்தின. இதே நேரத்தில் ஒரே ஒரு சிறிய குழு, சொஸைட்டி ஆஃப் பிரண்ட்ஸ் என்ற குவேக்கர் குழு அடிமைமுறைக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வெளியிட ஆரம்பித்தன. 19ஆம் நூற்றாண்டில் பல கிரிஸ்தவ குழுக்கள் அடிமைமுறை பற்றிய தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தன. துரதிர்ஷ்டவசமாக, இப்படிப்பட்ட குழுக்கள், அடிமைமுறையை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் மிகவும் பின் தங்கியே இருந்தன. 1865இல் ரத்தக்களரியான பெரும் உள்நாட்டுப்போரின் முடிவில் அடிமைமுறையை தடைசெய்தது. சிலி நாடு 1823இல் அடிமைமுறையை தடை செய்தது. ஸ்பெயின் 1837இல் தடை செய்தது. டொமினிகன் ரிபப்ளிக் 1844இல் தடை செய்தது. ஈகுவடார் 1854இல் தடை செய்தது. பிரேசில் 1888இல் தடை செய்தது. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆப்பிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திவிட்டன. ஆனால், போப் பதின்மூன்றாம் லியோ உலகம் முழுவது இருக்கும் தனது பிஷப்புகளுக்கு அடிமைமுறையை பகிஷ்காரம் செய்து கடிதம் எழுதியது 1890இல் தான். அதே நேரத்தில் சர்ச்சின் கொடுமையான வரலாற்றை அடிமைமுறைக்கு எதிரான வரலாறாக திருத்தி எழுதியபின்னரே இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இதை விட நம்ப முடியாததாக, 1965இல்தான், இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் இறுதியாக தனது ‘நியாயமான,அநியாயமான அடிமைமுறை ‘ கொள்கையை கைவிட்டு, எல்லா வகை அடிமைமுறைகளும் ஒழுக்கரீதியில் தடைசெய்யப்பட்டவை என்று அறிவித்தது.

அடிமைகள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மோசமான எதிரியாக சர்ச் தொடர்ந்தது. தெற்கு அமெரிக்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது உள்நாட்டுப்போர் தோல்வியால் கசப்புண்டு, கு கிளக்ஸ் கிளான் என்ற ஒரு கிரிஸ்தவ அமைப்பை உருவாக்கினார்கள். இதன் முக்கிய நோக்கமே கறுப்பர்களை கொல்வதுதான். எல்லோருமே எரியும் சிலுவையின் பின்னே இருந்த படிமத்தை உணர்ந்திருந்தார்கள். ஆனால், இவர்கள் அணிந்த வெள்ளை ஆடைகளும், கூர்மையான தொப்பிகளும் மத்தியகால சர்ச்சின் அடையாளங்களே என்பதை பலர் அறியமாட்டார்கள். 1920களில் கு கிளக்ஸ் கிளானின் மொத்த உறுப்பினர் தொகை சுமார் 2 மில்லியனாக இருந்தது. (அப்போது அமெரிக்காவின் மக்கள்தொகை 105 மில்லியன்) ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இவர்களது அடிக்கும், கொள்ளைக்கும், பொது தூக்குக்கும்(lynching) பயந்து திகிலில் வாழ்ந்தார்கள்.

இங்கே, வரலாற்றின் பாடம், வெள்ளை அமெரிக்கர்கள் தங்களது ஐரோப்பிய கலாச்சாரமும் சமூகமும் ஆப்பிரிக்காவின் சமூகத்தை விட சிறந்தது என்று பொய்யான சிந்தனையில் இருக்க முடியாது என்பதே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் வரையறையான அம்சம் அதன் கிரிஸ்தவ மதம். ஆனால் அதுதான் உலக மனித வரலாற்றின் மிகக்கொடிய அத்தியாயத்துக்கு பொறுப்பாளி. அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு மிகுந்த நன்றி செலுத்த வேண்டும். ஹாரியர் பீச்சர் ஸ்டோவிலிருந்து மார்ட்டின் லூதர் கிங் வரை இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இல்லையென்றால், நமது கலாச்சாரம் உலகத்தின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரமாக (மதமாகவும்) இருந்திருக்கும்.

***

Published on: January 30, 1998

kangaroo@resurgent.com

Series Navigation

ஸ்டாவ் காங்கஸ்

ஸ்டாவ் காங்கஸ்