காவிரி ஆறு – ஒரு சோகக் கதை

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

மஞ்சுளா நவநீதன்


பெரும்பாலான இந்திய ஆறுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியே பாய்கின்றன. ஆனால், தமிழ்நாடு கர்னாடகாவுக்கு நடுவே பாயும் காவிரி போன்று பிரச்னையான ஆறு வேறெதும் கிடையாது.

அதுவும் சமீபத்தில் ஜெயலலிதாவும் கிருஷ்ணாவும் போட்ட தெருச்சண்டையில் இரண்டு பக்கமும் நடிகர்கள் புகுந்து கொண்டு அடிக்கும் கூத்தில், மக்களோடு மக்கள் ஒத்துழைத்து தீர்க்கவேண்டிய பிரச்னை, காவிரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவருக்கு கோவில் கட்டி, முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்று மரியாதை செய்து தீவிரமாக்கப்பட்டுவிட்டிருக்கிறது.

நம் ஊரில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கமாட்டேன் என்று சொல்வது பெருமையாக ஆகிக்கொண்டு வருகிறது. நர்மதா பச்சொவ் அந்தோலன் ஆட்களும் சரி, விஹெச்பி ஆட்களும் சரி, பாபர் மசூதி காப்பாற்றும் கமிட்டியினரும் சரி, அருந்ததி ராயும் சரி, இவர்கள் எல்லோரும் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கமாட்டேன், ஆனால் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்ற கருத்துக்கொண்டவர்கள். இந்த கூட்டத்தில் சமீபத்தில் கர்னாடக முதல்வர் கிருஷ்ணாவும் சேர்ந்திருக்கிறார்.

ஆனால், கர்னாடக மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. கர்னாடக மக்கள் உண்மையான பிரச்னைக்கு போராடுபவர்கள். அவர்களது நிலைப்பாடு தவறானதாக இருந்தாலும். ஆனால், தமிழக மக்கள் போலியான பிரச்னைக்குப் போராடுபவர்கள். தமிழகத்தில் சமீபத்திய மிகப்பெரிய பிரச்னை என்பது ரஜினிகாந்த் சிகரட் குடிப்பது பற்றியது. அதற்காக பாபா படம் ஓடும் தியேட்டர்கள் முன்னால் போராட்டம் நடத்தப்பட்டது உங்களுக்கெல்லாம் தெரியும். காவிரியில் தண்ணீர் வரவில்லையே என்று கேட்டால், தமிழக மக்கள் என்ன சொல்வார்கள் ? கர்னாடகாகாரன் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறான். அதற்கு அந்தம்மா என்ன செய்யும் ? என்று சொல்வார்கள்.

தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாப்பாடு அல்ல என்ற தோற்றம் வெளி மானிலங்களில் கிடைத்தால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ரஜினி சிகரெட் குடிப்பது, தமிழ் கும்பாபிஷேகம், கண்ணகி சிலை நீக்கம், ‘பணப்புழக்கம் ‘, செக்ஸ் டாக்டர், திருவள்ளுவர் சிலை – இதெல்லாம் தான் தமிழ் மக்களை உணர்ச்சிமயமாக்கும் பிரசினை.

சென்ற தேர்தலில் ‘பணப்புழக்கத்துக்காக ‘ ஓட்டுப்போட்டவர்கள் தமிழக மக்கள். அவர்களுக்கு என்ன கிடைக்கும் ? ‘பணப்புழக்கத்தின் ‘ விளைவு என்னவோ அதுதான் கிடைக்கும்.

ஆரம்பம் முதலே, வறட்சி காலத்தின் போது கமுக்கமாக, தண்ணீர் பெற்றுக்கொள்வதில் குறியாக இருந்து, கர்னாடகத்தின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, பொதுவாக தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் தமிழக அரசு முனைந்திருந்தால் பிரச்னை இவ்வளவு தீவிரமாக ஆகியிருக்காது. இன்று ‘சொட்டுத்தண்ணீர் கூட கொடுக்க முடியாது ‘ என்ற நிலைப்பாட்டை கர்னாடக அரசு எடுத்திருக்காது. எடுத்தவுடனேயே வாய்ச்சவடாலாக ஊரைக்கூட்டி உரக்க முழங்கினால் அதன் விளவு இப்படி மாண்டியா பகுதி விவசாயிகள் தண்ணீர் விடாதே என்று மறியல் பண்ணுவதில்தான் போய் முடியும். எஸ் எம் கிருஷ்ணாவிற்கு மாண்டியா தொகுதி ஓட்டுகள் முக்கியம். மாண்டியா மாவட்டம் தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் போன்றது. தமிழ்நாட்டு மகாராணியும் மற்ற அரசியல் தலைவர்களும் போட்ட கூச்சலின் விளைவு, இப்போது மாண்டியா பிரசினையுடன் தொடர்பில்லாத பெல்காம் காரர்களும், தஞ்சாவூர் மாவட்டத்துடன் தொடர்பில்லாத கன்னியாகுமரி ஆட்களும் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று கர்னாடக அரசை மத்திய அரசு கலைத்தாலும் பிரச்னை, கலைக்காவிட்டாலும் பிரச்னை. அதைவிட பெரிய பிரச்னை, ஜெயலலிதா கேட்டு கர்னாடக அரசு கலைக்கப்படுவது. இதுவெல்லாம் புரிந்து கொண்டு செய்கிறார்களா ? இல்லை, தமிழ்நாட்டு முதல்வர், தன்னை தமிழ்நாட்டு தாதாவாகக் காண்பித்துக்கொள்ள இப்படி மிகையாக தடாலடி அடிக்கிறார்களா என்று தெரியவில்லை.

திண்ணையில் படித்த காவிரி பற்றிய கட்டுரையின் முடிவு மிகவும் சோகமானது. இந்தப் பிரச்னை தீராது என்பதை தெளிவாக்கி விட்டது. தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் காடுகள், நீர் சேமிப்பு பற்றிய அக்கறையின்மை, மழை நீர் தேக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, தொடர்ந்து அடுக்கு மாடிக் கட்டடங்களாக ஆக்கப்பட்டு வரும் ஏரிகள், ஆறுகளிலிருந்து தொடர்ந்து மணல் திருடப்படுவது ஆகியவை தடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே இல்லாமல் இருப்பதால், இந்த தண்ணீர் பிரச்னை எதிர்காலத்தில் மிகவும் தீவிரமாகத்தான் ஆகும்.

காவிரி பிரச்னைக்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன.

ஒன்று மேற்குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து காவிரி நீரின் மீது இருக்கும் தேவையை குறைத்துக்கொள்வது. காவிரி நீருக்குப் போராட்டம் பண்ணுவது ஒரு புறம் இருக்க, நீரைப் பாதுகாக்கும் திட்டங்களும், நீரைச் சேமித்து வைக்கும் திட்டங்களும், காவிரி ஆறு பாயும் போது, நிலத்தடி நீரை மறு நிரப்பல் செய்யும் திட்டங்களும், மற்றும் நீரைச் சிக்கனமாய்ப் பயன் படுத்தும் சொட்டு நீர்ப்பாசனத் திட்டங்களும் தான் இன்றைய தேவை.

இரண்டாவது, காவிரி ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே மாநிலமாக ஆக்குவது. காவிரி டெல்டா பகுதிகள் காவிரி மானிலமாய் ஆகிவிட்டால், குறைந்தபட்சம், காவிரி நீர்ச்சண்டை மொழிச்சண்டையாக ஆகாமலாவது இருக்கும். மொழி வாரி மாநிலங்களின் தோல்வி இன்று, காவிரிக்கு சம்பந்தமில்லாத பெல்காம் ஆட்களும், மதுரை ஆட்களும் மொழி ரீதியாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அபாயத்தில் போய் நிற்கிறது.

அப்போதும் தண்ணீர் வராதுதான். ஆனால், பணப்புழக்கத்துக்காக ஓட்டுப்போடும் மக்கள், அதற்காக ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொன்று கொள்ளமாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட மானில அமைப்பு இனிமேல் ஆகும் என்று தோன்றவில்லை.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation