காலிமண்டபமும், கடவுள்களும்…..

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

மா.சித்திவினாயகம்.அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தது. பெரிய பண்ணையென்றில்லா விட்டாலும் பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15 பேர் வரை வேலை செய்தார்கள்.அந்தத் தெரு வீதியெங்கணும் பன்றிகளின் இரத்தவெடிலும், சேற்று நாற்றமும் மூக்கைத் துளைத்துப் படாத பாடு படுத்தும். சற்றேனும் யன்னலைத் திறக்கமுயலும் அக்கம் பக்க வீட்டுக்காரரின் முகத்தில் குப்பென அடிக்கும் அக்கொடூர மணத்தினை எண்ணிப் பலகாலமாக திறபடாமலேயே சாத்தியிருந்தன அந்தத் தெருவோரத்தின் பல யன்னல்கள். அம்மணத்தினைத் தவிர்த்துகொள்வதற்காகத் தூரமென்றாலும் அந்தத் தெருவில் வாழ்கிறவர்கள் பின்புறவழியாகச் சுற்றியே பெருந்தெருவையடைவார்கள்.
ஆனால் பணம் சம்பாதிக்க,வயிறைக்கழுவ என்று அந்தப் பன்றிப் பண்ணைகளிலே வேலை செய்கின்ற கூலியாட்கள் மணத்தைப் பெரிதாய் எண்ணினால் பணத்திற்கும், வாழ்விற்குமெங்கே போவது?
மணம் என்று வீட்டில் உட்கார்ந்தால் வாழ்வதற்குத் தீனி ?
சிவலிங்கத்தார் இந்தப் பன்றிப் பண்ணையிலே வேலைக்கென்று சேர்ந்து சுமார் 4 வருடங்கள் பறந்தோடி விட்டன. பன்றிகளுக்குத் தீனி போட்டு, பன்றிகளின் மலச் சேற்றில் தினமும் கிடந்து அல்லாடி, அந்த நாற்றமெடுக்கும் இரத்த வெடிலினுள்,இறைச்சி பதனிட்டு, மணத்தோடு உடன்பாடாகி எல்லாமே பழக்கமாய்ப் போயிற்று. கிழக்கிலிருந்து வந்து மேற்கில் அகதி என்ற பெயரெடுத்தும் சிரித்த முகத்தோடு வாழப்பழகிய மனிதர்கள் மாதிரி, வேகாத வெயிலினுள் கல்லுடைத்த காசைச் சினிமாக்கொட்டகையினுள் குந்தியிருந்து அழுது, சிரித்து, நெகிழ்ந்து ஆத்திரப்பட்டுப், பின் மகிழ்ந்து படம் முடிந்ததும் பட்டினியாய் படுத்துறங்கப் பழக்கப்பட்ட ஒருவன் மாதிரி, நான்கு பெண்களை மணம் முடிக்கலாம் என்றெழுதிய குரானின் அனுமதிப்படி, கிழமாகிப் போன முகமதியனுக்கு வாழ்க்கைப்பட்டு சுகமிழந்து மூலையில் மொட்டாக்கோடு முடக்கி வைக்கப்பட்டுப் பழக்கப்பட்ட பெண்கள் மாதிரி, பன்றிப் பண்ணையின் மணமும், அதன் சேற்றுக் கூளும், குடலைப் பிடுங்கும் பன்றியின் இரத்த வெடிலும் சிவலிங்கத்தாருக்குப் பழக்கமாய்ப் போயிற்று.
இந்தப் பன்றிப்பண்ணையின் முதலாளிக்குப் பணம் பெருகிய போது அவன் பெரிய பண்ணையொன்றை நவீன தொழில் நுட்பங்களோடு நகர்ப்புறத்துக்கு வெளியே நிறுவிக் கொண்டான். பன்றிகள் அகன்று, வெளிப்பாகிப் போன அந்தப் பழைய மண்டபத்தை கழுவிச் சுத்தமாக்கி கிறிஸ்தவ மதத்தின் ஒரு பகுதியினர் தங்கள் பிரச்சார மண்டபமாக்கிக் கொண்டார்கள்.வரப்போகும் “அர்மகதொன்” பற்றியும், அதற்குள் சிங்கங்களும், புலிகளும், மனிதர்களும் ஒன்றாய்க் கலந்து மகிழ்ந்து வாழுகின்ற அதிசய வாழ்க்கை பற்றியும் அவர்கள் கலந்துரையாடினர். ஆடலும்,பாடலும், கொண்டாட்டமும்,கூதுகலமுமாய் உருமாறப் போகிற உலகம், உலக அழிவிற்குப்பின்னால் தான் உருவாகும் என்று அவர்கள் அடித்துப் பேசினார்கள். அதுவரை தொடரும் இத்துன்ப வாழ்வியல் என்பதாய் பைபிள் வசனங்களை அவர்கள் வாசித்துத் தள்ளுவார்கள்.பைபிளின் மூலப் பிரதியில் பல இடங்களில் இருந்த தங்கள் தலையாய இறைவனின் பெயரை புதிய பதிப்புகளில் திட்டமிட்டு நீக்கிவிட்டதாகக் குற்றம் சுமத்திக் குறைப்பட்டார்கள். தங்கள் தங்கள் வல்லமைக்கேற்ப உதாரணங்களை எடுத்து விளாசுவார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய்க் குதூகலித்த அந்த மன்றம் ஒரு நாள் வேறு சபையுடன் இணந்து நகரத்தின் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டது. முன்னாளில் பன்றிகள் வளர்த்த அந்த மண்டபம் மீண்டும் காலியானது.
பன்றிப்பண்னையில் சிவலிங்கத்தாருடன் வேலை செய்த மற்றுமொருவன் “பல்விந்தர் சிங் ” இவன் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர்ப் பகுதியில் இருந்து வந்தவன் என பெருமையாகச் சொல்லிக்கொள்ளூவான். அவ்ன் நல்ல உழைப்பாளி. உழைப்பாளி என்பதைவிட சுளுவான மூளைசாலி. அவன்பன்றிகள் அகன்ற அந்த காலி மண்டபத்தில் தனது “குர்துவாடா ” ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னான் “குருநானுக்” தொடக்கம் “குரு கோவிந்த சிங்” வரையிலான 10 தாடிக்காரச் சுவாமிகளையும் பெரிய அளவில் திரைசீலைகளிலும், சுவர்களிலும் பொறித்தபின் அவர்களின் மத்தியில் சீக்கியத் திருப்புனிதப் புத்தகமான “கிறாந்சாகிப் ” பை வைத்திருந்தான். “குர்துவாரா”விற்கு கூட்டம் அலை போல் பெருக்கெடுத்தது. பக்த கோடிகள் அள்ளி வளங்கிய நன்கொடை மழையினுள் பல்விந்தர் நனைந்து போனான். 18 மாதம் ஆவதற்குள் அவன் குர்துவாராவிற்குபுதிய நிலம் வாங்கி சொந்தமாய் மண்டபம் கட்டிக் கொண்டான். பழைய மண்டபம் மீண்டும் காலியானது.
காலியான அம் மண்டபத்தை ‘பல்விந்தர் சிங் ‘ பாகிஸ்தானைச் சேர்ந்த தன் கூட்டாளியான மண்டிக்கானிடம் கையளித்தான், நெடிதுயர்ந்து எடுப்பான தோற்றம் கொண்ட ” மண்டிகான்” பார்க்கும் நேரமெப்போதும் “கோட்சூட்” அணிந்திருப்பான். அவன் கையில் பணம் தாராளமாகவே தடம் புரளும்.அவனைப் பற்றிப் பல்விந்தர் உட்பட அவனது நண்பர்கள் பலரும் பல்வேறு விதமான கதைகளை அவனின் பின்புறமாகக்கதைத்துக் கொள்வர். அவன் லாகூரிலுள்ள தன் மூத்த மனைவியைக் கொன்றுவிட்டு, இளம் பெண்ணொருத்தியை”இஸ்லாமாபாத்” தில் மணம் முடித்தவன் என்றும், நிரந்தர வதிவிடம் பெறூவதற்காக வெளிநாட்டுப் பெண்ணொருத்தியை மறுபடியும் இங்கு மணம் புரிந்தவன் என்றும், அவன் பெரிய வியாபாரச் சந்தைகளில்திருடிப் பொருள்களை அரைவிலைக்கு விற்றுப்பிழைப்பவன் என்றும், குசுகுசுத்துக் கொண்டார்கள். ஆனாலும்அவனது நீண்ட மூக்கும், எடுப்பான முகமும், கண்களில் தெரியும் ஒளியும், கண்டிப்பு நிறைந்த கறாரான பேச்சும்,அவனை நல்லவனாகவே தோற்றமளிக்கச் செய்தது. அவன் அரசியல் ஞானி மாக்கியவல்லியின் தத்துவங்களைப் படித்தானோ இல்லையோ, ஆயினும் “தாக்குவதே தற்காப்பிற்குச் சிறந்தவழி” என்கிற கருத்தை ஆமோதித்து தனக்கு எதிரானவற்றைத் தாக்கி அழிப்பதில் வல்லவனாயிருந்தான்.அவன் கொடுக்கும் விலையுர்ந்த மதுப்புட்டிகளை
காலியாக்கி ஏப்பமிட்டுக் கொண்டு அவன் எதைச்சொன்னாலும் சகித்துச் சரியென்று செய்துமுடிக்கின்ற கூட்டாளிகள் அவனுக்கு நிறையவே இருந்தார்கள். உண்மையில் இன்றைய காலம் ஆதிக்கக வெறியர்களுக்கும், அடாவடிக்காரர்களுக்கும் பயந்து, பயந்து வெளிப்பகட்டுகளில் நம்பி ஏமாருகிற காலமாகவே உள்ளது..உடைகளை வைத்தே ஒருவனின் கௌரவம் கணிக்கப்படுகிற இந்தச் சமூக அமைப்பை உடைத்தெறிய பிரளயம் ஒன்று பிறந்து வர வேண்டியுள்ளது.
மண்டிகான் கையேற்ற அந்தப்பழைய மண்டபத்தில் ” முஸ்லிம் மசூதி “ஒன்று உருவாக்கப்பட்டு விட்டது. காலம் தவறாமல் “சலவாத் “ஓதும் ஓசை வீடு, வாசல், விளைநிலம் தாண்டிப் பெருந்தெருவரை நீண்டு ஒலித்தது. முகமதியர்கள் கூட்டம் கூட்டமாகத் “திருக்குரானை ‘ச் சுமந்து வந்து தொழுகை செய்தார்கள். திருக்குரானின் “ஸெரியா” ச் சட்டங்களை தொழுது ஆராய்ந்தார்கள். குற்றமிழைப்பவர்களுக்கான அதிக பட்ச தண்டனைகள் பற்றி விதந்துரைக்கிற சட்டமது.
ஸெரியாக் கூற்றுப்படி திருடனின் கைகள் துண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறாயின் இம் மசூதியின் ஸ்தாபகரும், பொய்யனும், பிரபல திருடனுமான மண்டிகானின் கரங்களே முதலில் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று அவன் முகமதியர்களில் முக்கியமானவனாக,சமூகத் தொண்டனாக காண்பிக்கப்பட்டு ஊரெங்கும் விலையுயர்ந்த கார்களில் பவனி வருகின்றான்.
இந்த மண்டபத்தில் சுமார் ஒரு வருடம் வரை உச்ச இலாபத்தில் ஓடிய மசூதியை மண்டிகான்
உடனேயே கைவிட நேர்ந்ததால் மறுபடியும் அம் மண்டபம் காலியானது. அவன் அவசரம் அவசரமாக மசூதியை காலி செய்த காரணம் எவருக்கும் புரியாதிருந்தது. பாகிஸ்தான்காரன் ஒருவன் தன் சொந்தக் குழந்தையையே துண்டு துண்டாய் வெட்டி குப்பைப் பைகளில் அடைத்து அந் நகரத்து மூலை முடுக்கெங்கணும் வீசி அந்நகரத்தையே பயப்பீதியால் அதிர வைத்தது தான் என்று சிலரும் , அவன் பெயர் பயங்கரவாதப் பட்டியலில் இருப்பதாகச் சிலரும் மறைமுகமாய்ச் சொல்லிக் கொண்டார்கள். எது எப்படியோ மசூதியமைத்த
மண்டிகான் இலட்சாதிபதியாகிவிட்டான் என்பது உண்மையிலும் உண்மை.
காலியான மண்டபத்தை பலசமயத் தரகர்களும் கபளீகரம் செய்ய முற்றுகையிட்டனர். பன்றிப் பண்ணையில் வேலைசெய்து பழக்கப்பட்ட சிவலிங்கம், தன் பழைய நண்பர்களின் துணையோடு, அந்த மண்டபத்தை படாதபாடு பட்டு எடுத்துவிட்டார். பன்றிகளோடு அல்லாடிய வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இந்தியாவின் பிரபலம் வாய்ந்த ஓர் ஆலயப் பெயரில் இந்து ஆலயம் திறப்பெதென முடிவு செய்தார். எந்தச் சாமி? எந்தப் பெயர் ? குழப்பமாயிருந்தது சிவலிங்கத்தாருக்கு. இந்து மக்கள் நம்பிக் காசினைப் பெருமளவில்க் கொட்டிக் கும்பிடும் கடவுள் யார்? எதுவும் பிடிபடுவதாயில்லை. இறுதியில் எல்லாச் சாமிகளையும் கொட்டிக் கலவையாக்கி ஒரு கோவில் அமைத்தார். சிவலிங்கம் என்ற பெயரைத் தவிர சமயம் பற்றி
எந்த அறிவும் எள்ளளவும் கிடையாதவர் .அவரின் மனைவி பிலோமினா ஒரு கத்தோலிக்க மதம் சார்ந்தவள். அவர்கள் கோவிலுக்கோ அல்லது தேவாலயத்திற்கோ வருடத்திற்கொருதடவையோ அல்லது அதுவுமில்லாமாலோ வாழ்ந்து பழகியவர்கள். ஆனால் இப்போதோ,
நாளும் பொழுதும் கோவிலிற்கே உடல், பொருள், ஆவி அத்தனையையும் கொடுத்து உழைக்கப் பிறந்தவன் என்று நடிக்க வேண்டியவராய் சிவலிங்கம் இருந்தார். இங்கே பெருகி நிற்கும் இந்துக்களின் தொகை சூடு பிடிக்க இந்த வியாபாரம் மேலும் வலுப்படும் என்கின்ற அவரின் கணிப்புத் தவறவில்லை. திறந்து மூன்று மாதத்திற்குள் மூலதனம் இல்லாமல் முழுக்க,முழுக்க வருமானம் தரும் ஒரு தொழில் இது என்பதை பெட்டியில் நிறைந்த பணத்தை வைத்துக் கணிப்பிட்டுக் கொண்டார் சிவலிங்கம். பெரிய மனிதர், தர்மகர்த்தா, ஆளுமையப்பன்,நலன்புரிக்கழகங்களின் காப்பாளர்,நாலும் தெரிந்த மாமேதை என்றெல்லாம் சும்மாயிருக்கச் சுற்றிச்,சுற்றி வருகின்றன பட்டங்களும், பதவிகளும். நான்கு வரித் தேவாரம் கூடச் சரியாகப் பாடவாராத சிவலிங்கத்தை இப்போதெல்லாம் வானொலிகள்,பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் சூழ்ந்து கொண்டு தங்கள் வயிறு வளர்க்க மாபெரும் சிந்தனாவாதி இவரென்று மணியாரம் சூட்டி மகிழ்கின்றன. இந்தவருடமோ, அடுத்த வருடமோ லட்சாதிபதியாகிச் சொந்த நிலம் வாங்கி மண்டபம் போடும் பட்டியலுக்குச் சிவலிங்கம் உயர்ந்து விடுவார் என்பது பேருண்மையாகிவிட்டது.
வாழ்க்கைக்குப் பின்னால் நாளை என்ன நடக்கும்? சாவிற்குப் பின்னே
என்னவாகின்றோம்? என்கிற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதவரை மனிதன் இப்படியே ஏமாந்து… ஏமாந்து… சாவதே வழியென்றாகிவிட்டது. இந்தக்கணத்தில், நம்பிக்கை வைக்காமல், குறுக்குவழிஆசையில், நம்பிக்கையில், கனவில் கடவுளிடம் கையேந்தி இலஞ்சம் கொடுப்பவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கடவுளையும் ஏமாற்றி இடையே உள்ள ஏமாற்றுத் தரகர்களையே வாழவைக்கின்றார்கள் என்ற உண்மையை உணர யாருமே இங்கு தயாராகவில்லை.
———————–

Series Navigation

author

மா.சித்திவினாயகம்

மா.சித்திவினாயகம்

Similar Posts