காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

குமரிமைந்தன்


தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி, சமற்கிருதம் போன்றவற்றில் உள்ளமையால் அவற்றை நாம் கவனிக்கவில்லை.

இற்றை ஐரோப்பிய நாகரீக மீட்சியின் போது இந்தியா வந்த ஐரோப்பியர் முதலில் சமற்கிருத மொழியைத் தனித்து ஆய்ந்து “ஆரிய இனம்” என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கினர். இதில் செருமானியரின் பங்கு பெரிது. நாடு பிடிக்கும் போட்டியில் பிரான்சை வெல்ல அதற்கெதிராக செருமனியைத் தூண்டி விட்டு ஐரோப்பாவினுள் அதன் செயற்பாடுகளைக் குறுக்கி அதற்கு குடியேற்ற நாடுகள் எதுவுமே இல்லாமலாக்கிய பிரிட்டனை பழிவாங்க, தாங்களே “தூய” ஆரியர்கள்; தங்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்று களத்தில் இறங்கி இரண்டு உலகப் போர்களைத் தொடங்கிவைத்துத் தன்னை ஏமாற்றி பிரிட்டன் பிடித்த நாடுகளை இழக்க வைத்த செருமனியும் சிறந்த நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த “திராவிடர்களை” (இதுவும் ஒரு கற்பனை இனம்) வென்றவர்கள் என்ற கற்பனை ஊட்டிய உளவியல் ஊக்கத்தால் பிற ஐரோப்பிய மக்களும் பார்ப்பனர் , பார்ப்பனரல்லாதார் பூசலில் பார்ப்பனரல்லாதாரின் மூதாதையினர் என்று தவறாகக் கற்பிக்கப்பட்ட“திராவிடர்களை” வென்றவர்கள் என்ற மதர்ப்பை ஊட்டுவதால் பார்ப்பனர்களும் தத்தமக்குக் கீழுள்ள சாதிகள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் சாதியக் கொடுமைகளுக்கு “ஆரியர்களான” பார்ப்பனர்களே காரணம் என்று திசைதிருப்ப முடிவதால் பார்ப்பனரல்லாதோரும் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போலிக் கோட்பாடு வரலாற்றியல் – குமுகியல் அடிப்படை அணுகலில் முதலிடம் பெற்று விளங்குகிறது.

“ஆரிய இனம்” இல்லை என்றால் அவர்களது தாய்மொழி என்று இனங்காணப்பட்ட மறைமொழியும் சமற்கிருதமும் எவருடையவை என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது. உண்மையில் இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு விடையின்றி நின்ற வெற்றிடம் தான் அதை நிரப்புவதற்கென்று ஒரு போலி இனம் உருவாகக் காரணமாக இருந்தது. இன்று அதே கேள்வி விடைகேட்டு நம் முன் எழுந்து நிற்கிறது.

தமிழ் ஓர் இயன்மொழி என்கிறோம். தமிழ் இந்த வகைப்பாட்டினுள் வரலாம். ஆனால் அம்மொழியைக் கையாண்ட மக்களின் தலையீடு, அதாவது ஒழங்குபடுத்தல், அதாவது செயற்கைக் கூறு அதில் சிறிதும் இல்லையா? எந்தவொரு மொழிக்கும் என்று இலக்கணம் வகுக்கப்படுகிறதோ அன்றே அம்மொழியில் செயற்கைக் கூறு புகுந்து விடுகிறது.

மொழி ஒரு கருத்தறி கருவி என்கிறார்கள். கருத்தை அறிவிப்பதிலும் அரசியல் இருக்கிறது. உலக வரலாற்றில் மொழி பற்றிய ஒரு பொது நடைமுறை, பெரும்பாலான நேர்வுகளில், உண்மையான மக்களாட்சி மரபுகள் வேர்கொள்ளாத குமுகங்களில் வழிபாடும் ஆட்சியும் மக்களுக்குப் புரியாத மொழிகளில் நடைபெறுவதாகும்.

ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் சட்டமும் சமய நூல்களும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளில் இருந்தன. காந்தியார் கூட இங்கிலாந்தில் சட்டம் படித்தபோது சட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள இலத்தீனும் கிரேக்கமும் படிக்க தனிப்பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த மொழிசார் அரசியல் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழ், மறைமொழி சமற்கிருதம் என்ற மொழிகளின் பிரிவினை, தோற்றம், மாற்றம், வளர்ச்சி, தளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் புரியும்.

இயல்பாக உருவான, ஒரு விரிந்த பரப்பிலுள்ள மக்கள் பேசும் பேச்சு வழக்குகளைத் தொகுத்து முதல் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது அகத்தியம் ஆக இருக்க வேண்டும்.

மாந்தவியலின் படி முதலில் பூசாரியர் ஆட்சி இருந்தது. அது பெண் பூசாரியர் ஆட்சியாக இருந்தது. அது பின்னர் ஆண் பூசாரியர் ஆட்சியாக மாற்றம் கண்டது.

உண்மையான ஏழு மாதர் பட்டியல் கிடைக்கவில்லை சிலப்பதிகாரம் “வழக்குரை காதை”யில் அச்சம் தரும் தோற்றம் கொண்டிருந்த கண்ணகிக்கு “அறுவர்க்கிளைய நங்கை”யை உவமையாக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாயிலோன் கூறுகிறான். இதற்கு “ஏழு மாதரில் இளையவளான பிடாரி” என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

பிடாரி என்ற சொல்லுக்குக் காளி என்று அகரமுதலிகள் பொருள் தருகின்றன. உண்மையில் அவள் நாகர்களின் முதல் தாய். பிடாரன் – பிடாரி. சிலப்பதிகாரமும் அவளை “துளை யெயிற்றுரகக் கச்சுடை முலைச்சி” (துளை கொண்ட பற்களை உடைய நச்சுப் பாம்பை முலைக்கச்சாய் அணிந்தவள்) என்றே “வேட்டுவ வரி”யில் கூறுகிறது.

குமரிக் கண்ட மக்கள் எனும் போது உலக மக்கள் அனைவருமே இந்த 7 பெண்களின் வழி வந்தவர்களே. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதி வரலாறுகள் தாங்கள் 7 மாதர்கள் (கன்னியர், தாயர்) வழி வந்தவர்கள் என்று கூறுகின்றன. சில சாதியினர் அல்லது சாதி உட்பிரிவினர் தாங்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டதின் அடையாளமாக ஏதோவொரு முனிவர் வழிவந்தோராகக் கூறுகின்றனர். மனித இனமே 5 முதல் 10 பெண்களின் வழி வந்தது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. குமரிக் கண்டத்திலிருந்து முழுகியதாக இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் பட்டியலிட்டுள்ள நாடுகளும் ஏழேழாக உள்ளமை இன்னோர் சான்று. இவ்வாறு ஒரு மூதாதையரின் வழி வந்த மக்கள் தொகுதியைக் குக்குலம் (Tribe) என்கிறோம். மூலக்குடிகள் தொல்குடியினர் ஆதிவாசிகள் என்ற சொற்களும் பயனில் உள்ளன. ஆனால் இன்று அந்த 7 மாதர்களில் எந்தவொரு தனிமாதரின் நேரடி வழிவந்தவர்களென்று எவராவது உள்ளனரா என்ற அறிவது கடினம்.

ஓரணுவுயிரியாகிய அமீபா தொடங்கி உடலளவில் மனிதனாக திரிவாக்கம் பெற்றதற்கு இணையாக குமுக அமைப்பு, செய்தித் தொடர்பு முதலியனவும் முழுமை நோக்கி நடைபோட்டன. செய்தி தொடர்பு வளர்ச்சி தான் மொழி. இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று, ஏழு பெண்களின் வழியினராக தனித்தனி கட்டமைப்புகளோடு மலை முகடு முதல் கடற்கரை மணல் மேடுகள் வரை வாழ்ந்த ஒவ்வொரு குக்குல மக்களுக்கிடையிலும் நிலத்தின் வேறுபாட்டால் ஏற்பட்ட நில எல்லைகள் அடிப்படையிலான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு நில எல்லைக்கும் உட்பட்ட மக்களிடையிலுள்ள குக்குல வேறுபாடுகளை புறந்தள்ளி அந்தந்த மண்ணின் மைந்தர்களாகத் தொகுத்தன. இந்தப் பணியை அந்தந்த நிலத்துக்குரிய ஏழு குக்குல பூசாரியார் இணைந்து செய்தனர் என்பதற்குத் தடயங்கள் உள்ளன.

குமரிக் கண்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு எகிப்திய தொல் வரலாற்றையும் சீனத் தொல்வரலாற்றையும் ஒப்பு நோக்க வேண்டும். தமிழர் வரலாற்றில் உள்ள இடைவெளிகளை அவை நிரப்பும். மறைகள், சமற்கிருத இலக்கியங்கள் துணை இன்றி இதை நிறைவேற்ற முடியாது.

Masks of Gods – Primitive Mythology என்ற நூலில் சோசப் காம்பல் என்பவர் எகிப்தில் பூசாரித் தலைவர்கள் ஒன்றுகூடி சில விண்மீன்கள் ஒன்றுகூடும் ஒரு நாளில் ஒருவனை அரசனாக அமர்த்துவர் என்றும் அடுத்த முறை அதே விண்மீன்கள் கூடும் நாளில் அவனை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்குவர் என்றும் எகிப்தியத் தொன்மங்களிலிருந்து விளக்குகிறார். அதே நடைமுறை இங்கும் இடம் பெற்றுள்ளது. இந்திர பதவியடைவோர் மாறிக்கொண்டே இருப்பர்; இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் நகுசன் எனும் பாண்டவர்களின் மூதாதை வேள்வி செய்து இந்திர பதவி அடைந்தான். ஏழு முனிவர்களும் தாங்கிய பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் நோக்கிச் சென்றவன் அவர்களை அதட்ட, சினமுற்ற அகத்தியர் அவனை நாகமாகுமாறு சபித்தார். இந்திரன் அவையில் உருப்பசி ஆடும் போது அவளும் இந்திரன் மகனும் காதல் குறிப்புகளைப் பரிமாறியதால் ஆட்டம் பிசக சினமுற்ற அகத்தியர் அவர்களைப் புவிக்குச் செல்லுமாறு சபித்தார்(சிலம்பு). இந்திரன் அவையில் முனிவர்களுக்கிருந்த மேலாளுமை தொன்மங்களில் தெளிவாகக் காணக் கிடக்கிறது.

வானுலகில் இருப்பவனாக நம் தொன்மங்களில் குறிப்படப்பட்டிருக்கும் இந்திரன் நம் மருத நிலத் தெய்வம். அதாவது குக்குலங்களிலிருந்த மருத நிலப் பூசாரித் தலைவர்களால் மருத நிலத் தலைவனாக அமர்த்தப்பட்டவன். அவனுக்கு அளிக்கப்பட்ட வேலை கோட்டைகளை அழிப்பது.

கோட்டை என்பது ஒரு வகை குமுக அமைப்பென்று தோன்றுகிறது. நடுவில் தலைவனது குடிலும் சுற்றிலும் அவனைச் சார்ந்து வாழ்வோரின் குடில்களுமாக வட்டவடிவில் அமைந்த குடியிருப்புகள் அவை. அண்டை அயலிலுள்ள இது போன்ற குடியிருப்புகளோடு தொடர்பின்றித் தனிமையாக, “தன்னிறைவுடன்” அவை வாழ்ந்தன. ஒரு நிலப்பரப்பில் ஏழு குக்குலங்களில் ஒன்றோ பலவோ குக்குலங்களைச் சார்ந்த இது போன்ற கோட்டைகள் ஒன்றோடொன்று தொடர்பற்று இருந்தன. அவற்றை ஒரு பொது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்திரன் போன்ற நிலத்தலைவன் ஒருவனை அவ்வட்டாரத்திலுள்ள குக்குலப் பூசாரிகள் உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுபடுத்தும் தேவை ஏதாவது வெளிவிசையின் தாக்குதலினால் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த வெளிவிசை பெரும்பாலும் நெய்தல் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும்.

உலகில் இது போன்று தனித்தனியே வாழும் குழுக்களை ஆங்காங்குள்ள அரசுகளின் முழு அதிகாரத்தினுள் கொண்டு வரும் முயற்சிகள் இன்று வரை முழு வெற்றி பெறவில்லை. குறும்பர் போன்ற சில குழுக்களை கரிகாலன் அடக்கினான் என்று அறிகிறோம். இன்று ஊர் பஞ்சாயங்கள் என்ற அமைப்புகள் அரசின் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். மலைவாழ் மக்களைப் பிற மக்களுடன் இணைக்கும் அரசின் முயற்சிகளை வெளிநாட்டுப் பணத்தில் செயல்படும் “தொண்டர்கள்” பண்பாட்டைக் காப்பது என்ற பெயரால் தடுக்க முயல்கின்றனர். மக்களுக்கிடையிலிருக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்க ஒருபுறம் சிலர் உள்ளத் தூய்மையுடன் முயலுகையில் பொதுவான வளர்ச்சிச் சூழலில் சென்ற தலைமுறையில் கீழ்நிலையிலிருந்த சிலருக்குக் கிடைத்த வளர்ச்சி நிலையைத் தம் பிறங்கடையினருக்கு மட்டும் தொடர்ந்தும் கிடைப்பதற்காக படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஒதுக்கீடு என்ற சாக்கில் பண்பாட்டைப் பேணுதல் என்ற முழக்கத்தைத் தம் சாதி அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிலர் இவர்களோடு சேர்ந்து முன்வைக்கின்றனர்.

பண்பாடு என்பது பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப எளிதில் மாறக்கூடியது. சில பண்பாட்டு எச்சங்கள் வெறும் சடங்குகளாக மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். சென்ற ஒரு தலைமுறைக்குள் நம் குமுகத்தில் பண்பாட்டின் பல கூறுகள் மாறிவிட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பெண்கள் சேலை அணிவதைக் கைவிட்டு வருகின்றனர். ஆனால் திருமணம் போன்ற நிகழ்வுகளில் மட்டும் கட்டாயம் சேலை அணிகின்றனர். அத்தகைய எச்சங்களைக் கூடக் கைவிட்டு ஒரு பண்பாட்டு ஒருமைப்பாடு ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களிடையில் ஏற்படுவது அவர்களது ஒற்றுமைக்கும் வலிமைக்கும் இன்றியமையாதது. அத்தகைய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்திரன் போன்ற நிலம் சார்ந்த தலைவர்களுக்கு அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பூசாரித் தலைவர்கள் வகுத்த கடமையாகும்.

நானிலத் தெய்வங்கள் வரிசையில் “வருணன் மேய பெருமணல் உலகமும்” என்ற தொல்காப்பிய வரியில் வருவதன்றி கழக இலக்கியங்கள், சிலம்பு போன்ற பழந்தமிழ் இலக்கியம் எதிலும் வருணனின் தடமே இல்லை. ஆனால் இந்திரனைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் உள்ளன. இவ்விரு தெய்வங்களைப் பற்றிய விரிவான செய்திகள் மறைகளிலும் தொன்மங்களிலும் உள்ளன.

வருணனைப் புகழ்ந்தும் பழித்தும் கூறும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அது போலவே வருணனால் துன்புற்றவர்களுக்குத் துணை செய்தவனாக இந்திரனைப் புகழ்ந்தும் கொடியவனாகப் பழித்தும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அதே போல் இந்திரனை வென்று ஆயர்களைக் காத்தவனாகக் கண்ணன் தொன்மங்களில் போற்றப்படுகிறான். அவனை ஒரு வேடன் கொன்றதாக மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சேரன். நாகர்களாகிய சேரர்களின் கொடி நாகத்திலிருந்து வில்லாக மாறியதும் இந்நிகழ்ச்சியின் விளைவாகத்தானோ? உலகில் “பொதுமை” நாடுகள் தவிர செயற்கைப் பொருட்களைக் கொடியில் கொண்டவர்கள் தமிழர்களே. சேரனின் வில், பலதேவனின்(பலராமன்) கலப்பை முதலியன.

இந்நிகழ்ச்சிகளை நாம் இவ்வாறு விளக்கலாம். மனித வரலாற்றில் ஒரு கட்டத்தில் கடற்கரை முதல் மலைமுகடு வரை தம் ஆளுமையின் கீழும் பின்னர் ஆளுகையின் கீழும் கொண்டு வந்தவர்கள் நெய்தல் நில மக்கள். அந்நிலப் பூசாரியர் குக்குலக் குழுக்களைக் குலைத்து மக்களை ஒன்றுசேர்க்கத் தேர்ந்தெடுத்த தலைவன் வருணன். கடல் வழியாகக் கடலில் விழும் ஆற்றுக் கழிமுகங்களுக்கும் அங்கிருந்து ஆறுகள் வழியாக உள்நாடு செல்லவும் அவர்களால் முடிந்தது. ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் வழி என்பது நீரின் வழிதல் எனும் தன்மை தொடர்பாகவும் இருத்தல் காண்க. உப்பு, கருவாடு போன்ற பண்டங்களை வைத்துப் பண்டமாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் அவர்கள் என்று கொள்ளலாம். உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெய்தல் நில மக்களின் உறவாலும் வேளாண்மை வளர்ச்சியாலும் விழிப்புற்ற மருத நிலப்பரப்பிலுள்ள பூசாரிகளின் தேர்வு இந்திரன். இக்காலகட்டத்து மறைப் பதிவுகளே இந்திரனுக்குக் கோட்டைகளை அழிப்பவன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தன. உண்மையில் வருணன் முதல் சேயோன் வரை நானிலத் தெய்வங்களாக கூறப்படுவோர் தத்தம் நிலப்பரப்புகளில் “கோட்டை”களை அழித்தவாகளே.

மருத நில வளர்ச்சி முல்லை நிலத்தின் மீது அதிகாரத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது. அதன் எதிர்வினையாக முல்லை நிலத்து பலதேவன் பாசனத்தையும் கலப்பையையும் அறிமுகம் செய்து அங்கும் வேளாண்மையைத் தொடங்கினான். மலையிலிருந்து ஓடிவரும் ஆறுகள் சுமந்து வந்து பரப்பும் வண்டலில் மருத நில மக்கள் பயிரிட்டனர். பலதேவன் ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீரைத் திருப்பி கலப்பையால் உழுது நிலத்தைச் சேறாக்கி வேளாண்மை செய்ததைக் கலப்பையால் ஆற்றைத் தன் பக்கம் இழுத்தான் என்ற தொன்மக் கதை கூறுகிறது. ஏறு தழுவல் மூலம் காளையை வசக்கி உழவு, பாரம்சுமத்தல் வண்டியிழுத்தல் போன்றவற்றில் பழக்கி அதை ஓர் உழைப்புக் கருவியாக்கிய, ஆவின் பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் நெய் முதலியவற்றை உருவாக்கி நெய்யில் எரியும் அக(ல்) விளக்கின் தோற்றத்திற்கு வழியமைத்து வெட்டவெளியில் எரியும் நெருப்பை வீட்டினுள் வெளிச்சம் தருவதாக மாற்றி நந்து எனப்படும் இருளை விரட்டிய கண்ணனை உடன்பிறந்தான் ஆக்கியுள்ளது தொன்மம். இந்தக் கண்ணன் இந்திரனின் மேலதிகாரத்தை முறியடித்ததால் முல்லை நிலத் தெய்வமானான்.

நெய்தல், மருதம், முல்லை முதலிய நிலங்களில் தனியாட்சிகள் ஏற்பட்ட போது அவற்றுக்கிடையில் போர்களும் உருவாயின. யானையை வசக்கிய சேயோன் அது குறிஞ்சி நிலத்தின் பொருளியல் அடிப்படைகளில் ஒன்றான மரங்களைச் சுமப்பதுடன் அது ஒரு போர்க் கருவியாக இருப்பதையும் கொண்டு மலைபடுபொருள் வாணிகத்துடன் மரம், யானை ஆகியவற்றின் வாணிகத்தையும் வளர்த்து அண்டை நிலமான முல்லை நிலத்தார் அதிகாரத்தை முறியடித்து குறிஞ்சி நிலத் தெய்வமானான். வள்ளியை வசப்படுத்த அவளை யானையைக் கொண்டு அச்சுறுத்தியது, அவனது ஊர்தியாகிய யானை, மயில் போன்றவை கொடியாகிய சேவல் ஆகியவை முருகனுக்கு குறிஞ்சி நிலப் பொருளியலிலுள்ள பங்கை காட்டுகின்றன.

தொல்காப்பியம் நானிலங்களை மட்டுமே கூறி அவற்றுக்கு உரிய தெய்வங்களை வரிசைப்படுத்தினாலும் விடப்பட்டுள்ள பாலையும் உட்படும் வகையில் ஐந்நிலத்தைப் பற்றிய குறிப்பும் அதில் உள்ளது.

முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே …….
(தொல். பொருள். களவியல்: 15)

முதற்கழகத் தலைநகரான தென்மதுரை கடலுள் முழுகிய பின்பு கபாடபுறத்தைத் தலைநகராகக் கொண்ட எஞ்சிய நிலத்தில் பாலைநிலம் இல்லாமையால் “அது ஒழிய” எஞ்சிய நிலத்தை வைத்து நூல் யாத்த தொல்காப்பியரின் கவனத்தை மீறி இவ்வரிகள் இடம் பெற்றதாகத் தான் கொள்ள வேண்டும்.

தொல்காப்பியர் பாலை நிலம் இல்லையென்று கூறி அதற்குத் தெய்வம் கூறாது விட்டாலும் உரையாசிரியர்கள் கொற்றவை எனும் பெண் தெய்வத்தைப் பாலை நிலத் தெய்வமாகக் கூறியுள்ளனர்.

பாலை நிலம் மக்கள் வாழத் தகுதியற்ற வளமில்லாப் பகுதி எனவே இங்குள்ள மக்கள் ஆறு அலைத்தல் எனும் வழிப்பறியையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். வழிப்பறிக்கு அவ்வழியில் மக்கள் போக்குவரத்து இன்றியமையாதது. தாங்கொணாக் கொடும் வெய்யிலையும் உயிர் பறிக்கும் வழிப்பறியாளர்களையும், பொருட்படுத்தாமல் அவ்வழியில் செலவு மேற்கொள்வோர் வாணிகராகவே இருக்க வேண்டும். அப்படியானால் பெருமளவு வாணிகமும் ஆதாயமும் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வழிப்பறியை நம்பி அங்கு ஒரு மக்கள் குழு உருவாக முடியும். பாலைக்கு இருமருங்கிலும் உள்ள மருதம், முல்லை நிலங்களிலிருந்து மிகுதியாகவும் பிற நிலங்களிலிருந்து வாணிகக் குழுக்களில் வந்து வழிப்பறியாளர்களாக மாறியோர் சிறுபான்மையராகவும் அவர்கள் இருந்திருக்க வேண்டும் வாணிகர்களும் எப்போதும் வழிப்பறியாளர்களை எதிர்த்து போருக்கு ஆயத்த நிலையில் உள்ள வீரர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள்(பாலை நில மக்கள் நானிலத் தெய்வங்கள் உருவாவதற்கு முன்பிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்பதை கொற்றவை வழிபாடு காட்டுகிறது.

இந்த ஐந்து தெய்வங்கள் பற்றிய தொன்ம வரலாறுகள் மறைகளிலும் சமற்கிருதத் தொன்மங்களிலும் விரிவாகக் காணப்படுவதால் இந்நூல்களுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான உறவிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். சீன, எகிப்திய வரலாறுகளில் கூறப்படும் நான்கு தொல் பேரரசுகள் மேலே விளக்கிய நானில ஆட்சிகளைக் குறிப்பதாக இருக்கலாம்.

மாபாரதத்தில் வரும் நகுசன் மகன் யயாதி சுக்கிராச்சாரியின் மகள் தெய்வானையை மணக்கிறான். ஒரு பூசலின் விளைவாக அவளது வேலைக்காரியாக அசுர அரசன் விடபன்மன் மகளிடம் மூன்று மக்களைப் பெற்றான். இதையறிந்த சுக்கிரன் அவனை முதுமையடையச் செய்து பின்னர் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றான். தெய்வானையின் மக்கள் மறுக்க ஒப்புக்கொண்ட வேலைக்காரியின் மகன் பூரு அவனுக்குப் பின் அரசனானான். மனைவியின் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யது என்பவனது வழிவந்தவர்கள் யாதவர் எனப்படுவர். பூகு வழி வந்தவர்கள் துரியோதனன் முதலியோர். யது வழி வந்தவர்களாக கண்ணனும் சேர, சோழ, பாண்டியர்களும் கூறப்படுகின்றனர். கபாடபுரம் கழக தலைநகராக இருந்த போது துவரைக் கோமான் என்ற பெயரில் ஆண்டவன் இவர்களில் ஒருவனாய் இருக்கலாம். துவாரகை எனப்படும் துவரையையும் அதற்கு முன் வட மதுரையையும் ஆண்டவனாகக் கூறப்படும் கிருட்டினன் அதே குலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம்.

யூதர்களின் பழைய ஏற்பாட்டின்படி ஆபிரகாம் என்பவனுக்கு குழந்தைகள் இல்லை மனைவி சாராளின் வேண்டுகோள்படி வேலைக்காரியைக் கூடி ஒரு ஆண் பிள்ளை பிறக்கிறது. பின்னர் அவனுக்கு 99ம் மனைவிக்கு 90ம் அகவை ஆனபோது மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது. மூத்தவன் வெளியேறுகிறான். இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றும் மூத்தவன் வழி வந்தவர்கள் அரேபியர்களென்றும் கூறப்படுகிறது.

மிசிரத்தானம் என்ற சொல்லுக்கு ஐரோப்பியரால் எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூறுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற்சென்று அத்தேசத்தாராகி அந்த தேசத்துச் சனங்ககோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று. மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு என்பது ஒரு பொருள்.

இக்கதைகளிலுள்ள கருக்களின் ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இரு கதைகளிலும் வேலைக்காரிக்குப் பிள்ளைகள் பிறப்பது, தந்தையரின் முதுமை ஆகியவை அவை. அத்துடன் யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர் என்ற செய்தியை எரிக் வான் டெனிக்கன் போன்ற ஆய்வாளர்கள் ஏற்கின்ற போதும் மோசே எகிப்திய இளவரசன் என்றும் அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட அவன் எகிப்திய அடிமைகளைத் திரட்டி வெளியேறி புதிய ஒரு சமயத்தையும் அதைச் சார்ந்து ஒரு புதிய மக்களினத்தையும் உருவாக்கினான் என்றும் கருதுகிறார்கள். எகிப்திய அரண்மனை நூலகத்திலிருந்து தான் படித்த வரலாறுகளை இணைத்து யூதர்களின் பழைய ஏற்பாட்டை எழுதினான் என்றும் கருதுகின்றனர். மிசிரத்தானம் என்ற சொல்லின் பொருள் தெளிவாகவே இக்கதைக்கரு குமரிக்கண்டத்திலிருந்து அங்கு சென்றதற்கு அசைக்க முடியாத சான்றாகும். மூவாரியின் புதிர்கள் என்ற நூல் எழுதிய உருசிய ஆய்வாளர் கோந்திரத்தோவ், பண்டை எகிப்திய நாகரிகம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து திடீரென்று ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளமை, நல்ல உயர்ந்த நாகரிக நிலையை எய்திய ஒரு புதிய மக்கள் அங்கு குடியேறியுள்ளதற்குச் சான்று என்று கூறுகிறார். மிசிரத்தாநம் என்ற சொற்பொருள் அதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது.

மனித இன முன்னேற்றத்தில் மிக முகாமையான கட்டம் அவர்கள் நெருப்பைக் கையாளக் கற்றது. கொல் விலங்குகள் தங்களை நெருங்காமலிருக்க நெருப்பை அவர்கள் ஓம்பினர். நெருப்பு தெய்வமானது. நெருப்போம்புவோர் பூசகராயினர்.

தாம் நேசிக்கும், மதிக்கும் அல்லது அஞ்சும் மனிதர்களுக்குத் தாம் மிக விரும்பியுண்ணும் பொருட்களையும் வழக்கமாக உண்ணும் உணவுகளையும் அன்பளிப்பாக அளிப்பது மனித இயல்பு. அதுபோலவே அவற்றைத் தெய்வத்திற்குப் படையலாக்குவதும் வழக்கம். அவ்வாறே அண்டையிலுள்ள குழுக்களோடு நடைபெற்ற சண்டைகளில் செத்தோரையும் பிடிபட்டோரையும் உண்ணும் நரவுண்ணி வாழ்க்கைக் கட்டத்தில் மனிதர்களைக் காவு கொடுத்து நெருப்பிலிட்டு உண்டனர்.

இந்த வரலாற்றுக் கட்டத்தில் தமிழ் மக்கள் இருந்ததற்கு ஐயத்திற்கிடமில்லாத சான்று உள்ளது. தென் மாவட்டங்களில் வழிபடப்படும் சுடலை மாடன் கோயில் திருவிழாவில் (தென் மாவட்டங்களில் சிறு தெய்வக் கோயில் திருவிழாவினை கொடை விழா என்பர்.) நடைபெறும் கணியாட்டில் (கணியான் கூத்து) பெண் வேடமிட்டு ஆடும் கணியான் வகுப்பு ஆடவர்கள் தங்கள் கையை அறுத்து வடிக்கும் குருதி கலந்த சோற்றையும் சுடுகாடு சென்று எரியும் பிணத்தையும் தெய்வங்கொண்டாடுவோன் உண்ணும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.

குழந்தைகளை வருணனுக்குக் காவு கொடுப்பதாக நேர்ந்த செய்தி மறைகளில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் தனக்குப் பிள்ளை பிறந்தால் அவனை வேள்வியில் பலியிடுவதாக வேண்ட வருணன் அளித்த வரத்தால் பிறந்த பிள்ளை அச்சத்தால் நாட்டைவிட்டோட அரிச்சந்திரனுக்கு வருணன் நோயை உண்டாக்குகிறான். அறிந்த மகன் தன்னைக் காவு கொடுக்க புறப்பட்டுவரும்போது இந்திரன் 6 ஆண்டுகள் அவனை தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். பின்னர் சுனச்சேபன் என்பவனது தந்தைக்கு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கித் தந்தை அரிச்சந்திரன் மூலம் அவனைக் காவு கொடுத்து வருணனிடமிருந்து இருவரும் விடுதலை பெறுகின்றனர்.

தென்னிந்தியக் கடற்கரையில் இருந்து சென்று அசிரியாவில் குடியேறியவர்களாக கூறப்படும் பினீசியர்கள் முதல் ஆண் மகவைக் காவு கொடுத்த செய்தியும் உள்ளது. யூதர்களின் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் எனப்படுபவன் காவு கொடுப்பதாகக் கடவுளுக்கு நேர்ந்து பெற்றப் பிள்ளையை காவு கொடுக்கச் செல்லும்போது மகவுக்குப் பகரம் ஆட்டைக் காவு கேட்டு மகனை விடுவித்த கதை உள்ளது. இக்கதை குரானிலும் இடம்பெற்றுள்ளது.

பிறந்தால் காவு கொடுப்பதாக வேண்டி ஆண்மகவைப் பெற்றுக்கொள்வது விந்தையாகத் தோன்றுகிறது. ஒரு பெண்தலைமைக் குமுகத்தில் ஆண்களின் எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியது என்ற அடிப்படையில் இது இருக்கலாம் அல்லது பெண்தலைமை நீங்கி ஆண்தலைமைக் குமுகமாக மலரும் சூழலில் மிகவும் வேண்டப்படும் ஆண் மகவைக் காவு கொடுப்பது கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.

மேலேயுள்ள இரு கதைகளிலும் உள்ள இந்த பொதுக்கூறு தவிர இந்தியக் கதையில் தன் மகனை மீட்க மாட்டைக் கொடுக்கிறான் அரிச்சந்திரன். சுனச்சேபனின் தந்தையோ மாட்டைப் பெற தன் மகனைக் கொடுக்கிறான். இரண்டு நேர்வுகளிலும் மாட்டுக்காக மகன் மாற்றப்படுகிறான். ஒரு வகையில் காவு கொடுப்பவன் வாக்குறுதியை நிறைவேற்றினாலும் இன்னொரு வகையில் தன் மகனை காப்பாற்றியதன் மூலம் வாக்குத் தவறுகிறான் அரிச்சந்திரன். பழைய ஏற்பாடு கதையில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன் வந்தமைக்காக தந்தையையும், மகனையும் கடவுள் பாராட்டுகிறார். இதே அரிச்சந்திரன் இராமாயணத்தில் இராமனின் முன்னோனாகக் காட்டப்பட்டு வாய்மைக்குத் தனக்கு வழிகாட்டியாக இருந்தவனாக மோகன்தாசு கரம் சந்து காந்தியால் பாராட்டப்பட்டவன். இந்தக் கதையிலும் ஆண் மகவு பாம்பால் சாகும் நிகழ்வு மூலம் குழந்தைச் சாவு எனும் கதைக்கரு வருகிறது. மொத்தத்தில் மனிதக் காவு விலங்குக் காவாக மாறிய மனித குல வரலாற்றுச் செய்தி வேத, யூத மரபுகளில் பதிவாகியுள்ளது. தமிழ் மண்ணில் கோவில் சடங்காக குருதியும் சதையுமாக இன்றும் நிலவுகிறது. இது தமிழகத்தின் தென்கோடியில் மட்டும் நிலவுகிறது என்ற உண்மை இது குமரிக்கண்டத்தில் நிகழ்ந்தது என்பதற்கு ஆணித்தரமான சான்று. அத்துடன் பெண்வேடமிட்ட ஆடவர் இதை நிகழ்த்துவது பெண் பூசாரியர் தலைமையில் இந்தக் காவுகள் நடைபெற்றன என்பதைச் சுட்டி நிற்கிறது.

உணவுப் பண்டங்களாக இருந்த காளையும் ஆவும் முறையே உழைப்புக் கருவியாகவும், பால் முதலியவற்றின் விளைப்பு வகைதுறையாகவும் மாறிய பின் மாடுகளைக் காவு கொடுத்து நெருப்பிலிடும் வேள்விகளுக்கு ஒட்டுமொத்த குமுகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதிலும் பெண்களே தலைமைதாங்கியுள்ளனர். தாடகை போன்ற பெண்கள் (அரக்கிகள்) வேள்விகளை அழித்தனர் என்று பொதுவாகத் தொன்மங்கள் கூறினாலும் தக்கன் வேள்வியை அழித்த காளியை மட்டும் தெய்வமாகக் கொண்டுள்ள உண்மை, மக்கள் இந்த வேள்வி அழிப்புகளை வரவேற்றனர் என்பதற்கு தொன்ம பூசாரியரையும் மீறிப் படிந்து விட்ட வரலாற்று எச்சமாகும்.

இங்கு பூசாரியருக்கும் அரசர்களுக்குமான போட்டி தொடங்குகிறது. மாட்டு வேள்விகள் தகர்க்கப்பட்டதும் பின்னர் போர்க்கருவியான தேர்க்குதிரைகளை (இரட்டையர்களான அசுவினி தேவர்களை)க் கொண்டு அவை மீண்டதையும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா தன் Lokayatha(லோகாயதா) நூலில். அது போல் அழிந்துபட்ட வேள்வியை மீட்க அரசனும் பூசாரியும் முயன்றதில் அரசன் தோற்று பூசாரியிடம் அடிபணிந்ததற்கு அவர் சான்று காட்டியுள்ளார். காமதேனு போன்ற கேட்டது அனைத்தையும் அளவின்றி வழங்கும் ஆவுக்காக முனிவர்களுடன் அரசர்கள் போரிட்டு அழிந்த பல கதைகள் தொன்மங்களில் உள்ளன. இவற்றுடன் பரசுராமன் 21 தலைமுறைகள் அரசர்களை அழித்ததைத் தொடர்ந்து நாரிகவசன் என்பவன் பெண்களை அரணாகக் கொண்டு அரசாட்சியை மீட்டான். எனவே அவனுக்கு மூலகன் என்ற பெயரும் உண்டு என்கிறது அபிதான சிந்தாமணி. இது பூசாரியர் – அரசர் போட்டியில் பூசாரியின் கட்டுக்கடங்கிய அரசர்கள் என்ற இறுதி அமைப்பு உருவானதற்கான ஒரு தடயம்.

பரசுராமனே இன்றைய சேரநாட்டை உருவாக்கினான் என்கிறது தொன்மக் கேரளத்தை கோடாரியை கடலில் வீசி உருவாக்கினான் என்பதற்கு இரும்புக் கோடாரியை கண்டுபிடித்து அடர்ந்த காட்டை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருந்தும். இரணியனைக் கொன்று அவன் மகன் பிரகலாதனுக்கு பட்டஞ்சூட்டியது, அவனது பெயரனான மாவலியை நிலத்தில் அழுத்தியது என்று மூன்று தலைமுறைகளுக்கு சேரநாட்டில் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான போட்டியில் பார்ப்பனர்கள் வென்றது தொன்மத்தில் பதிவாகியுள்ளது.

நாமறிந்த தமிழரசர் அனைவரும் பூசாரியரின் இந்தக் கட்டுக்கு அடங்கியவர்களே என்பதற்குக் கழக இலக்கியத்தில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.

உலக முழுவதும் அரசுக்கும் சமயத்துக்குமான இந்தப் போட்டி நடந்திருக்கிறது, இன்றும் தொடர்கிறது. அதே வேளையில் பொதுமக்களை ஒடுக்குவதில் பொதுவில் அவை இணைந்தே செயல்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் அவற்றுக்கிடையில் நிகழ்ந்த பூசல்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். மார்ட்டின் லூதருக்கும் வாட்டிக்கனுக்கும் நடந்த மோதலில் ஐரோப்பியச் சிற்றரசர் சிலர் லூதர் பக்கம் நின்றனர். இங்கிலாந்தின் 4-ஆம் என்ரிக்கும் போப்புக்கும் உருவான மோதலில் இங்கிலாந்தின் சமயத் தலைமையை அவனே மேற்கொண்டான். அவனுடன் சேர்ந்து கோயில் சொத்துக்களைப் பங்கு போட்டுக்கொண்ட அவனது நண்பர்களே அங்கு முதலாளியக் குமுகம் உருவாகக் காரணமாயினர். அதிலிருந்தே பாராளுமன்ற மக்களாட்சி, மதச்சார்பற்ற அரசு போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில் உருவாகியன. நம் நாட்டிலும் அதனுடைய வீச்சு இருப்பதாக நம்புகிறோம். ஆனால் நிலக்கிழமைப் பொருளியல் அடித்தளத்தின் மீது பரவிய வல்லரசிய சுரண்டலில் வளங்களனைத்தையும் இழந்து நிற்கும் நம் நாட்டில் ஆயுத பூசை என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்துகள் நாம் சமயச் சார்பான ஆட்சியிலிருந்து விடுபடவில்லை என்பதை விளக்குகின்றன.

இவ்வாறு அரசும் சமயமும் சேர்ந்து மக்களை ஒடுக்குவற்குத் தோதாக மக்களுக்குப் புரியாத ஒரு மொழி தேவைப்பட்டது. அது ஒருவேளை ஐந்திர இலக்கணப்படி அமைந்த ஒரு மொழியாக இருக்கலாம். அல்லது பூசகர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மறைமொழி போன்ற ஒரு குழுஉக்குறி மொழியை முறைப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம். அரசன் என்ற பதவியின் வளர்ச்சி பெற்ற ஒரு கட்டமாக இந்திரனைக் கொண்டால், இந்திரனால் அல்லது இந்திரனின் முன்முயற்சியால் உருவானது என்று கூறலாம். அதிலேயே இன்றைய தமிழ் இலக்கணம் உருவாகியிருக்கலாம்.

ஐரோப்பாவில் உருவான இற்றைப் பல்துறை வளர்ச்சியில் புதிதாக உருவான கலைச் சொற்களையும் புதிய பொருளில் கலைச்சொற்களாகக் கையாளப்பட்ட பழைய சொற்களையும் கொண்ட துறை அகரமுதலிகளும் கலைக் களஞ்சியங்களும் உருவாயின. அதே வேளையில் புதிய சூழலில் உருவான இலக்கியப் படைப்புகள் அறிவியல் செய்திகளைக் கூறியதோடு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாகவும் இருந்தன. எனவே பொது அகரமுதலிகளும் அனைத்து கலைச் சொற்களுடன் உருவாக வேண்டி வந்தது. அதே நேரத்தல் கணினி போன்று எண்ணற்ற புதுத் துறைகளின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றால் அவற்றுக்குரிய சிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் அவை மீண்டும் பொது அகரமுதலிகளை வளப்படுத்துவதும் ஒன்று மாற்றி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சி நிலைகள்.

இதே வளர்ச்சி நிலைகள் நாம் இங்கு அலசும் காலகட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால் தான் பூசாரியர் அரசன் என்ற ஒரு பதவியை உருவாக்க வேண்டி வந்தது. அவ்வாறு அரச பதவி உருவான பின் புதிய வளர்ச்சி நிலைகள் வேகம் கொண்டிருக்கும். புதிய புதிய துறைகள் தோன்றி வளர்ந்திருக்கும். அப்போது உருவான துறைநூற்களில் உள்ள சொற்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் இருந்ததால் அவற்றை மறை நூல்கள் என்றனர். தொல்காப்பியரும் இசை நூலை நரம்பின் மறை என்றார்.

தமிழ் எழுத்து அமைப்பு மிக உயர்வானதாக, கணினிப் பயன்பாட்டுக்கு பிற எந்த மொழியையும்விட பொருத்தமாக இருப்பதாக எழுத்தாளர் சுசாதா கூறியிருக்கிறார். அவர் அதன் எந்த தன்மையை வைத்துக் கூறினார் என்பது தெரியவில்லை. அனால் இன்றைய தமிழ் எழுத்து முறையில் விடை தேட வேண்டிய பல கேள்விகள் உள்ளன.

1. தமிழ் எழத்துக்கள் 33 என்கிறது தொல்காப்பியம்.
உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18
சார்பெழுத்துகள் 3 – ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம். ஆனால் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் போன்றவை இந்த எண்ணிக்கையில் வரவில்லை.

2. தந்தை, பந்து போன்ற சொற்களில் தகரத்துக்கு முன் நகரத்துக்கு உள்ள ஒலி நகரம் முதலெழத்தாகும் போது மாறுகிறது. னகர ஒலியேமுதலெழுத்தாவதற்குப் பொருந்துகிறது.

3. உ, ஊ, இ, ஈ, எ, ஏ, ஒ, ஓ, ஆகிய எழுத்தக்களுடன் குழம்பும் என்பதால் முறையே வு, வூ, யி, யீ, யெ, யே, வொ, வோ, என்ற எழுத்துக்கள் மொழி முதலாவது தடுக்கப்பட்டுள்ளது சரிதான். ஆனால்,

அ) ச, சை, சௌ, மூன்றும் முதலெழுத்தாவதற்கிருக்கும் தடைக்கு மொழியியல் அல்லது ஒலியியல் காரணம் என்ன?
அ, ஐ, ஒளி எனும் மூன்றலங்கடையே என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு “அவை ஒள எனும் ஒன்றலங்கடையே” என்று பாடவேறுபாடு காட்டினும் சௌ மொழி முதலாவதற்குள்ள தடைக்குக் காரணம் யாது?

தமிழிலும் சரி ஆங்கிலத்தலும் சரி சகர வரிசையிலுள்ள சொற்கள் பிற எந்த வரிசையிலுள்ள சொற்களையும் விட மிகுதி. இந்த விதி தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை மிகவும் குறுக்கிவிடும். ஆதனால் இந்த விதி பற்றிய கருத்துப்போர் நெடுங்காலமாக நடைபெறுகிறது. திருவள்ளுவர் இவ்விதியை ஏற்றுள்ளார்; இளங்கொவடிகள் புறக்கணித்துள்ளார்.

ஆ) ய, யு, யூ, யை, யொ, யோ, யௌ, ட முதல் டௌ வரை, ர முதல் ரௌ வரை, ல முதல் லௌ வரை, ழ முதல் ழெள வரை, ள முதல் ளௌ வரை, ற முதல் றெள வரை, ன முதல் னௌ வரை சொல் முதலில் வரக்கூடாது என்பதன் நோக்கமென்ன?

இ) ட, ர, ல, போன்ற எழுத்துக்களுக்கு இ, உ, எ போன்ற உயிரெழுத்துக்களை முன்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதி ஆங்கிலத்தில் Write, Wrong, Wrought போன்ற சொற்களில் கையாளப்பட்டிருப்பதைப் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் வரியனில் இருக்கும் இந்த அமைப்பு ஒலிப்பில் இடம்பெறவில்லை.

Log என்ற ஆங்கிலச் சொல்லுக்கு

1. Log (லோகு) என்ற ஈபுரூச் சொல்லிலிருந்து ஒரு முகத்தலளவைப் பெயர், ஏறக்குறைய ½ லிட்டர் அளவு கொண்டது – தமிழில் உழக்குக்கு இணையானது.

2. Log (லோகு) தடிமனான மரக்கட்டை – தமிழில் உலக்கை.

3. கப்பல் மற்றும் பிறவற்றின் செயற்பாடு அல்லது பட்டறிவுகளின் பதிவு – உலவு – உலா
Log book – உலவுச் சுவடு
அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பதை (உ)லாத்துதல் என்பது வழக்கு. லாந்துதல் என்பது குமரி மாவட்ட வழக்கு.

4. Locus: இடம் — இலக்கு; பொது வழக்கில் லெக்கு. இதுபோன்று எண்ணற்ற சொற்களைக் காட்ட முடியும்.

இந்தக் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்படும் முன்னரும் பின்னரும் குமரிக்கண்ட மக்கள் அவர்களது மொழி வழக்குகளுடன் உலகில் பரவியுள்ளனர் என்று கொள்ளலாம்.

4. சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் கசடதப ஆகிய 5 வல்லெழத்துகளுக்கும் முறையே நன்னான்கு ஒலியன்களும் வரியன்களும் உண்டு. தமிழில் 6 வல்லெழுத்துகளுக்கும் அவற்றிலிருந்து சிறு மாறுபாட்டுடன் இடத்திற்கேற்ப வெவ்வேறு ஒலிகள் உண்டு.

1. குடம் அகம் அக்காள் அங்கணம் அழகு
2. செல்வம் வசம் வச்சிரம் வஞ்சகம் வீசு
3. — படம் பட்டம் பண்டம் பாடு
4. தவிடு விதம் வித்தை விந்தை விதை
5. புனுகு கோபுரம் கோப்பியம் கோம்பை கோபி
6. — முறம் முற்றம் முன்றில் மறை

இந்த ஒலிகள் வரியனின்றி மரபு அடிப்படையில் பேணப்படுகின்றன. மறைகளைக் குறிப்பிட நாம் கையாளும் “எழுதாக் கிளவி”த் தன்மையை இந்த ஒலிப்புகள் தமிழுக்குத் தருகின்றன. அதே நேரத்தில் இத்தன்மையைப் பயன்படுத்தி க,ச,ட,த,ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் ஒவ்வொரு ஒலி மட்டும் இருப்பது போல் ஒலிக்கும் முறை தொடங்கிவிட்டது. அகம் என்பதை Aham என்று ஒலிக்காமல் Akam என்றும் பல்கலைக்கழகம் என்பதை Palhalaikkazhaham என்று ஒலிக்காமல் Palkalaikazhakam என்றும் இதுபோன்றும் ஒலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தத் தவறுக்கான அடித்தளம் தமிழ் ஆட்பெயர்களையும் இடப்பெயர்களையும் ஒலிபெயர்த்த சமற்கிருதம் அறிந்தவர்களிடமிருந்து தொடங்கியது. நாகப்பட்டினம் என்பதை Nahappattinam என்று எழுதாமல் Nagapattinam என்றும் நடராஜன் என்பதை Nadarajan என்று எழுதாமல் Natarajann என்றும் பாலன் என்பதை Palan என்று எழுதாமல் Balan என்றும் கணபதி என்பதை Kanabathi என்று எழுதாமல் Ganapathi என்றும் இவ்வாறெல்லாம் இது தொடங்கியது.

இவ்வாறு பல ஒலிகள் முற்றிலும் கைவிடப்பட்டும் இருக்கின்ற ஒலிகளுக்கு வரியன்கள் இன்றியும் வகுக்கப்பட்ட இந்த இலக்கணம் ஒரு கட்டத்தில் மறைமொழியாக இருந்திருக்கலாமா என்றொரு ஐயம் எழுகிறது.

நாமறிந்த தமிழ் மொழி வரலாற்றைப் பார்ப்போம். கழக இலக்கியங்களாயினும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களாயினும் தமிழக அரசர்கள் மறை வேள்விகளையும் பார்ப்பனப் பூசாரிகளைக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு செய்யும் கோயில்களையும் புரந்தனர் என்பதையே காட்டுகின்றன. பின்னர் சமற்கிருதத்தில் இலக்கியங்களையும் ஆட்சியையும் கண்ட களப்பிரர் ஆட்சியைக் காண்கிறோம்.

அறைபோகு குடிகளோ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்

என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டிய ( அந்திமாலை சிறப்புச் செய்காதை 10-12 ) அறைபோகு குடிகள் (தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்து தம் வளத்தைப் பெருக்கிக்கொள்வோர்) நாள்தோறும் பெருகிவந்தனர். புத்த – சமணத்தின் பின்னணியில் நிகழ்ந்த சுரண்டலுக்கு எதிராக வாணிகர்கள் தொடங்கிய இயக்கத்திற்குப் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் தலைமை தாங்க ஒரு மொழி மீட்பியக்கமாகவும் அது வடிவம் கொண்டது. அதனைக் கைப்பற்றி வளர்ந்த சோழப் பேரரசு மக்களைக் கசக்கிப் பிழிந்து எண்ணற்ற ஆகமக் கோயில்களை எழுப்பி பிறமொழிப் பூசாரியரையும் தேவரடியாரையும் இறக்குமதி செய்து சமற்கிருதத்தைப் பூசை மொழியாக்கியது. மக்களின் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க ஓதுவார்களை அமர்த்தி வெளியில் நின்று தமிழைப் பாட வைத்தது.

பேரரசுச் சோழர்களின் ஆண் வழியினருக்கும் இராசராசனின் பெண் வழியினருக்கும் உருவான போட்டியில் ஆண்வழியில் வந்த அதிராசேந்திரன் என்பவன் மக்களின் ஒரு புரட்சியைப் பயன்படுத்தி கொல்லப்பட்டு இராசராசன் அவன் மகன் இராசேந்திரன் ஆகியோரின் பெண்களின் வழியில் வந்தவனும் சாளுக்கிய அரசனாக ஆண்டு கொண்டிருந்தவனுமான இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரியணையில் அமர்ந்தான். அவனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடையிலும் மோதல்கள் நடந்ததற்கு தடயங்கள் உள்ளன. எதிர்த்தவர் ஒடுக்கப்பட்டனர்; பக்கஞ்சார்ந்து காட்டிக்கொடுத்தவர் பயன் பெற்றனர். அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இது நடந்தாலும் அன்றிலிருந்து நாட்டைக் காட்டிக்கொடுப்பதே ஆதாயம் என்ற மனப்பான்மை மேல்மட்டத் தமிழர்களிடம் ஆழ வேரூன்றிவிட்டது. தமிழகத்தைக் கைப்பற்ற நினைப்போர் இதைத் தெரிந்து எளிதில் இங்கு காலூன்றிவிட முடிகிறது.

விருதுகள் என்பவை சில அடிப்படை உரிமைகளுடன் சிறப்புரிமைகளும் கொண்ட ஒரு கலப்பாகும் (பட்டங்கள் வழங்குவதையும் விருதுகள் என்ற பெயரில் குறிப்பிடுவதுண்டு). தெருவில் செருப்பணிந்து செல்வது, வெற்றிலைப் பெட்டி வைத்துக்கொள்வது, பல்லக்கில் செல்வது, வாள் வைத்துக்கொள்வது, குடைபிடிப்பது போன்ற அடிப்படை உரிமைகளுடன் பகலில் விளக்கேந்திச் செல்வது, நடைபாவாடை மேல் பாவாடை விரிப்பது, முன்னும் பின்னும் சதிராடுதல், முன் சங்கு, பின் சங்கு ஒற்றைச் சங்கு, இரட்டைச்சங்கு ஊதுதல் போன்ற சிறப்புரிமைகளுமாக மொத்தம் 72 விருதுகளை நம் பண்டை அரசர்கள் மக்களுக்கு வழங்கிவந்தனர். இவற்றுள் அடிப்படை உரிமைகள் சிலவற்றை அடித்தள மக்களில் ஒரு பிரிவினருக்கு மறுப்பதன் மூலம் அவர்களையொத்த பிற பிரிவினருடன் இடைவிடாத கொலைவெறி மோதல்களை உருவாக்கிவிட்டுத் தாங்கள் நடுநிலை தாங்குவோர் போல் காட்டித் தங்கள் மேலாளுமையை உறுதிப்படுத்தியதோடு சிறப்புரிமைகளைத் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் வைத்துக்கொண்டனர். முகம்மதியர் படையெடுப்புகளின்போது தங்கள் பெருநில உடமைகளைக் காப்பதற்காக மதம் மாறி அந்தந்த வட்டார மக்கள் மீது ஆளுமை செலுத்திய சிவனிய வேளாளராயினும் சரி (இவர்கள் பெரும்பாலும் மாட்டிறைச்சி உண்பதில்லை) நாயக்கர் காலத்தில் நாடுகள் என்ற ஆட்சியியல் நிலப்பிரிவுகளையும் அவற்றுள் ஆள்வினை புரிந்த நாடான்கள் என்ற பதவிகளையும் ஒழித்து பாளையங்களை உருவாக்கிய அரியநாத முதலியாராயினும் சரி அவருக்குத் துணையாய் நின்று நாடுகளாகிய தங்கள் உடமைகளைக் காத்துக் கொண்ட மறவர் பாளையக்காரர்களாகிய முன்னாள் நாடான்களாயினும் சரி, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அமைத்துத் தந்த முதன் முதல் முல்லை நிலத்தில் அமைந்த பெருமாள் கோயில்களைச் சுற்றியுள்ள நிலங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் பணிபுரிந்த ஆயர்களாயினும் சரி ( இந்த ஊர்கள் இன்றும் கிருட்டிணாபுரம், முத்துக்கிருட்டிணாபுரம், கிருட்டிணன்கோயில் போன்ற பெயர்களுடன் விளங்குகின்றன) வெள்ளையர் வந்தபோது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும் தரகர்களாகவும் செயல்பட்டு வாணிகர்களாக வந்தவர்களுக்கு நாடுபிடிக்கும் அவாவை மூட்டி உளவும் சொன்ன அனந்தரங்கம் பிள்ளை (ஆயர்) பச்சையப்ப முதலியார் போன்ற பார்ப்பனரல்லா மேல் சாதியினராயினும் சரி, பின்னர் கோயில் தேவரடியாரைப் பயன்படுத்தி அவர்களது இடத்தைப் பிடித்துக்கொண்ட பார்ப்பனராயினும் சரி, இன்று நம் நாட்டு மக்கள் மீது தம் சாதிய ஒடுக்குமுறையைத் தக்கவைத்துக்கொள்ளவும் இயன்ற வழியிலெல்லாம் பொருள் சேர்க்கவும் சேர்த்த பொருளைப் பாதுகாக்கவும் எந்த வரைமுறையும் இன்றி மேடைபோட்டு காலில் விழுந்து புகைப்படம் எடுத்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும் “வீரம் செறிந்த” மரபினராயினும் சரி , திரை நடிகர்கள் போடும் எச்சிற்காசுக்கு அவர்களுக்குக் கொடிபிடித்து கட்சியமைத்து அரியணை நோக்கி அழைத்தச் செல்லத் துடிக்கும் இந்தத் தலைமுறை இளையோராயினும் சரி, நாட்டைக் காட்டிக் கொடுப்பது தமிழ் நாட்டு “மேல் தட்டை” நோக்கிப் போவோரின் இயல்பாகிப் போய்விட்டது. தாங்கள் நாட்டை ஆண்ட சாதி என்று சாதி வரலாற்றாசிரியர்கள்” காட்டும் சான்றுகளை ஆய்ந்தால் அவற்றுள் மிகப் பெரும்பாலானவை தம் நாட்டை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தமைக்காக வழங்கப்பட்ட நல்கைகளும் பட்டயங்களுமாகவே (விருதுகளுமாகவே) இருப்பதைக் காணலாம். மொத்தத்தில் இன்றைய நிலையில் மேல் சாதியினரும் கீழ்ச்சாதிகளில் மேல்நிலையிலிருப்போர், குறிப்பாக மரபுரிமையாக பெருநிலவுடைமை கொண்டிருப்போரும் என்றோ ஒருநாள் தம் சொந்த நாட்டைப் பகைவர்களுக்குக் காட்டிக்கொடுத்தோரின் வழியினராக இருப்பதைக் காணலாம்.

நம் மக்களின் இந்தப் போக்குக்கு ஆழமான பண்பாட்டுப் பின்னணி உண்டு. நாம் மிகப்பழமையான நாகரிகம் உள்ள மக்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதை மிகத் தொல்பழங்காலத்திலேயே நுட்பமான கலையாக்கியவர்கள். குபேரன் எனும் செல்வக் கடவுளுக்கு மனிதனையே ஊர்தியாக்கி சுரண்டலுக்குத் தெய்வப் படிமம் வகுத்தவர்கள். அதற்கும் அப்பால் சென்று உழைக்கும் மக்களையும் அவர்களோடு நின்று அவர்களை இயக்கும் விளைவிப்போரையும் குமுக மதிப்பில் தாழ்த்துவதற்கென்றே வயிற்றுப்பாட்டுக்கு பாடுபடுவது வினைகளைச் சேர்க்கும் என்றும் அதனால் அவ்வாறு செயல்படுவோர் இழிந்த பிறவியினரென்றும் “அவாவை அறுத்து” உழைப்பவனும் விளைப்பவனும் “கடமையாக”த் தருவனவற்றை வயிராற உண்டு “வீடு” தேடி வாளாவிருப்போரே மேன்மக்கள் என்றும் அவர்கள் பிறப்பறுத்து பேரான்மாவோடு இரண்டறக் கலக்கும் பேறுடையவர்களென்றும் கூறும் வினைமறுப்புக் கோட்பாடென்னும் மலட்டுக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்கள். இன்னொருபக்கம் பணி செய்வோருக்கும் பண்டம் படைப்போருக்கும் ஒழுக்க வரையறை கிடையாது என்னும் பொருளில்,

“அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்,
கடிவரை யில ………”

என்று அகத்திணை இலக்கணமும் வகுத்து வைத்துள்ளோம். இவற்றின் வெளிப்பாடு தான் ஆசிரியர்கள் பிஞ்சியிலேயே பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சாக “மாடு மேய்க்கத்தான் போகவேண்டும்”, “சுமை தூக்கத்தான் போகவேண்டும்”, “சிரைக்கத்தான் போகவேண்டு”மென்று, உழைப்பு, தொழில் ஆகியவை மீது வெறுப்பையும், கசப்பையும் ஊட்டுவது. இந்த நஞ்சூட்டுதலை ஊடகங்கள் இன்னும் நன்றாகவே செய்கின்றன. இந்தப் பின்னணியில் அவாவறுத்தல் என்ற நச்சுக் கோட்பாட்டோடு உருவாகிய புத்தமும் சமணமும் ஆட்சியாளர் பூசாரியர் கூட்டணியை எதிர்ப்பதென்ற பெயரில் உழைப்பு, விளைப்பு அகியவற்றோடு தொடர்புடைய பங்கீட்டுப் பணியைச் செய்யும் வாணிகரிடமும் அதனைப் புகுத்தி அவர்களை உழைப்போர், விளைப்போரிடமிருந்து முற்றிலும் அயற்படுத்தி வைத்துள்ளன. முகம்மதியமும், கிறித்துவமும் உழைப்போரைத் தாழ்த்தி வைத்திருந்தாலும் விளைப்போரையும் வாணிகர்களையும் மதித்தன. இந்நிலையில் விளைப்பு வாணிக வகுப்புகளுக்கு மதிப்பளித்த ஆங்கிலர் ஆட்சி அகன்றதும் பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் ஒட்டுண்ணி வாழ்க்கையினரான அரசூழியர்களும் ஆசிரியர்களும் – அதிகாரிகளும் மேலேறி அமர்ந்து விளைப்புச் செயல்முறையில் தவிர்க்க இயலாமல் சேர்ந்தியங்க வேண்டிய உழைப்பாளரையும் விளைவிப்போரையும் இணக்கம் காணா எதிரிகளாக்கி நம் விளைப்பு செயல்முறையையே முடக்கிவிட்டனர்.

இது போன்ற ஒட்டுண்ணி வாய்ப்பைத் தங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்வதற்கு மேற்சாதியினர் கடந்த காலத்தில் சமற்கிருதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும், உள்ளுர்ப் பார்ப்பனருக்கும் அயலிலிருந்து வந்த பார்ப்பனருக்கும் மற்றும் பிறருக்கும் போட்டிகள் ஏற்பட்டபோது உள்நாட்டுக் கீழ்ச்சாதி மக்களையும் தமிழ் மொழியையும் இணைத்துத் துணையாக்கிக்கொண்டு வேலை முடிந்ததும் வீசியெறிந்து விட்டனர். இந்நிகழ்சிகளில் கீழ்ச்சாதிகளிலுள்ள சிலர் மேற்சாதிகளில் உட்பிரிவுகளாக ஏறி அமர்ந்து கொண்டனர். இவ்வாறு சிக்கலான பலகலப்பான ஒரு நிகழ்முறையில் தமிழ் தன் இருப்பைக் காப்பாற்றி வந்துள்ளது. அவ்வாறு தமிழ் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பாய் அமைந்தது இந்த மேலடுக்குகளுடன் போதிய தொடர்பின்றி எழுத்தறிவும் இன்றி இருந்த கீழச்சாதி மக்களின் தமிழ் வழக்குகளே. இன்று அந்த இரும்புக் கோட்டையும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களாலும் கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் இலக்கு தவறிய எழுத்தறிவாலும் தகர்ந்து போய்விட்டது. இப்போது தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் வேறுபாடு காண முடியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குக் காரணம் உள்நாட்டு பண, இயற்கை, மனித வளங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு மக்களை தாங்கத் தக்க ஒரு பொருளியல் கோட்பாட்டையும் கட்டமைப்பையும் உருவாக்க இயலாத குமுகமும் பிழைப்பு தேடி நாட்டைவிட்டோடுவதும் அயலவருக்காகத் தாய் நாட்டினுள் அடிமை செய்வதும் இழுக்கென்றும் அழிவென்றும் உணராத, உணர்த்தாத “தமிழப் பற்றாளர்களும்” தாம் ஆட்சியிலிருக்கும் போது தமிழை அழிக்கும் சட்டங்களை இயற்றிவிட்டு இன்று செம்மொழிக்கும் தில்லியில் ஆட்சி மொழி உரிமைக்கும் போராடுவதாக பசப்புவோரை தமிழ்க் காவலர், தமிழினக் காவலர் என்று புகழ்வதும் செம்மொழி ஆகவேண்டுமானால் செத்தமொழி ஆகவேண்டுமென்று அப்போது ஆட்சியிலிருந்த நடுவண் அமைச்சர் கூறியதை மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளேயாகும்.

நல்வாழ்வு வாழவேண்டுமாயின் நாட்டைவிட்டுச்செல்ல வேண்டும் அல்லது உள்நாட்டிலேயே வெளிநாட்டினருக்கு அடிமை செய்யவேண்டும் என்றிருக்கும் நிலையை மாற்றாமல், அதற்கு நூற்றுக்கு ஒருவருக்கும் குறைவாக இருக்கும் வாய்ப்புக்காக நூறு பேரும் ஆங்கிலமும் இந்தியும் கற்கும் நிலையை, அதற்கான அரசியல், பொருளியல், குமுகியல், பண்பாட்டியல் சூழ்நிலைகளை கண்டுகொள்ளாமல், தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும், கல்விமொழியாக வேண்டும், வழிபாட்டுமொழியாக வேண்டும் செம்மொழியாக வேண்டும் என்று குரல் எழுப்புவது உலகப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்புள்ளவையாக அவர்கள் கூறும் ஆய்வு இருக்கைகளில் பணியாற்றத் துடிப்போருக்கன்றி தமிழுக்கோ தமிழ் மக்களுக்கோ எவ்வாறு உதவும்? அவர்கள் அங்கு சென்று நிகழ்த்தும் ஆய்வுகள் கூட தமிழிலிருக்குமா? அந்த ஆய்வுகள் தமிழை வளப்படுத்துமா அல்லது அவ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் மொழிகளை வளப்படுத்துமா?

இன்று மக்களிடையில் எழுத்தறிவு பரவப் பரவ தமிழ் அவர்களிடமிருந்து அகன்று கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பேச இயலாவிடினும் ஓரளவு புரிந்து கொள்ளும் சூழல் பெரும்பான்மையரிடத்து உருவாகிக்கொண்டிருக்கிறது. எனவே மேல்மட்டத்தினரிடையில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை விரிவடைந்து கொண்டிருக்கிறது. அயல்நாடுகளிலிருந்தும் இந்திய அரசிடமிருந்தும் பணம் பெற்றுத் “தொண்டாற்று”வோராகக் கருதப்படும் அரசு சாரா நிறுவனங்களிலுள்ளோர் இன்று தமக்குள் இந்தி பேசுவோராக மாறிக்கொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் கூட, பொதுவாகப் புரியாத, அவர்களுக்கென்று உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு குழுஉக்குறிப் பிரிவு உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தி என்று இன்று கற்பிக்கப்படும் மொழி கூட இந்தி மண்டலத்தில் வழங்கும் 18 கிளை மொழிகள் எதனொடும் நெருங்கியதல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி. ஒருவேளை இன்றைய ஆங்கிலமோ, இந்தியோ ஆட்சிமொழியாகி நாளடைவில் அதே வடிவில் அல்லது தமிழுடன் கலந்து ஒரு புது மொழி உருவாகி அது புழக்கத்திற்கு வந்து தமிழ் வழக்கொழிந்து போனால் அதே மொழி மக்களுக்குப் புரியாது என்ற தகுதியில் ஆட்சிமொழியாகிவிடக் கூடும். இது தான் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு. முழுமையான மக்களாட்சி மலர்ந்து எந்த மறையமும் இன்றி ஆட்சி நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும் போது தான் இந்த முரண்பாடு அகலும்.

தமிழுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடுமோ என்று நாம் ஐயுறும் ஒரு நிகழ்வு முன்னர் ஒருமுறை நிகழ்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. வானிலுள்ள மண்டலங்களுக்குச் சென்று வந்தவர் போல் அவற்றைப்பற்றி கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் என்ற பொருளில்

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதரும் திசையும்
வறிது நில இய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே
(புறம் 30: 1 – 6)

வலவன் இல்லா வானவூர்தி,

என்ற சீவகசிந்தாமணி வரிகள், பால்வழி எனப்படும் விண்மீன் தொகுதியைச்(Galaxy)த் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் நிலையை குறிப்பிடும் புறநானூற்று பாடல்,

மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
(புறம் 365: 1 – 3)

எரிக் வான் டெனிக்கன் என்பவர் கடவுளர்களின் தேர்கள் (Chariots of Gods) எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ள, தொல்லுலகில் நடந்திருக்கும் அணுப்போர், விண் வழிச் செலவுகள், மகாபாரதத்திலுள்ள சிறப்புச் செய்திகள், இவற்றை வைத்துப் பார்க்கும் போது எழுத்தாளர் சுசாதா வியப்புறும் தமிழ் எழுத்தமைப்பு இத்தகைய ஒரு சூழலில் உருவாகியிருககக்கூடும். மறைமொழியாகத் தோன்றிய தமிழ் நாளடைவில் மக்கள் மொழியாகி விட, புதிதாக மறைமொழியும் (வேதமொழி) சமற்கிருதமும் உருவாகியிருக்கலாம்.

உலக வரலாற்றில் முதலில் ஓரணு உயிரியக்கமும் படிப்படையான வளர்ச்சியில் அணுவூழிவரை சென்று போரில் அழிந்து காட்டுவிலங்காண்டிகளிடமிருந்து மீண்டும் பலமுறை நாகரிகம் வளர்ந்து பனிவூழிகள், பனிவூடுருவல், எரிமலைகள், கண்ட நகர்வுகள், நிலப்பகுதிகள் உயர்தல், அமிழ்தல், நிலநடுக்கங்கள், ஆகிய மீள் நிகழ்ச்சிகளால் அனைத்தையும் இழந்து புதிது புதிதாகக் குடியேறிய இடங்களில் மீண்டும் பழைய வளர்ச்சியைப் படிப்படியாக எய்துதல் என்று மறைநூல்கள் சமற்கிருதத் தொன்மங்கள் அடங்கிய நம் பண்பாட்டினுள் ஒன்றின் மீது ஒன்று, ஒன்றனுள் ஒன்று எனப் பல படிவுகளான பதிவுகள் உள்ளன. அவற்றை உரிய அணுகலில் இழை பிரித்து இனங்காண முடியும். வல்லரசுகள் தம் மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பண்டங்களையும் இங்கு கடைவிரிக்கவும் நம்மிடமுள்ள மூலப்பொருட்களை நாமே திரட்டி அவர்களுக்குத் தேவைப்படும் பக்குவத்தில் அவர்கள் “அறப்பணி” என்றும் “தொண்டு” என்றும் அளிக்கும் பயிற்சிகளால் செய்து ஏற்றுமதியால் வளம் பெறுகிறோம் என்ற ஏமாற்றை நம்பி அவர்களுக்கு அளிக்கவும் மார்வாரிகளுக்குப் போட்டி வராமல் தடுக்கவும் செயல்படும் வருமான வரித்துறையையும் தொழில் தொடங்குவதற்கு நம் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற தடைகளையும் மார்க்சியம் என்று பாட்டாளியரைக் காட்டி நம் நாட்டுத் தொழில்வளம் தற்சார்புடையதாக மலராமல் கோட்பாட்டாலும் செயற்பாட்டாலும் தடுப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட ஒட்டுண்ணிகளின் கூட்டாளிகளாக இருந்துகொண்டு பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்ற பொய்யுருத்தாங்கிகளையும் கொண்ட கூட்டணியைக் களத்திலிருந்து அகற்றி மறைநூற்கள், சமற்கிருத நூற்கள், ஆகமங்கள், நம் மக்களிடையே நிலவும் மரபுகள், மருத்துவ நூல்கள், கணிய நூல்கள், ஆகிய அனைத்தையும் ஆய்ந்தால் வல்லரசுகளின் அறிவியல்-தொழில் நுட்பங்களை வெல்லும் வல்iமையை நாம் பெற முடியும். மக்களாட்சி மலரச்செய்து ஆட்சிக்காயினும் கல்விக்காயினும் வழிபாட்டுக்காயினும் மக்கள் பேசும் ஒரு மொழியே போதும் என்ற நிலையை உருவாக்க முடியும்.

ஒலிப்பெயர்வு (Transition) எளிதாக இருக்குமாறு தமிழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
செல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறம்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே
(தொல். எழுத்து: 102)

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்
(தொல். எழுத்து: 33)

அந்தணர் மறைகளின் எழுத்திலக்கணம் கூறாது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட மொழிவழக்குகளுக்கே தாம் இலக்கணம் வகுத்திருப்பதாகத் தொல்காப்பியர் தெளிவாகவே கூறுகிறார். ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதும் ஆசிரியர் தான் இங்கு இன்னொரு மொழிக்கு இலக்கணம் எழுதவில்லை என்று கூறத் தேவையில்லை. அவ்வாறு கூறுவது ஏளனத்துக்குரியதாகும். அப்படி இருக்கும் போது இங்கு இவ்வாறு கூறுவதன் பொருள் யாது? அந்தணர் மறைகள் நரம்பின் மறை போன்றவற்றுக்கு வேறு ஒலிப்பு முறைகள் இருந்தன, அவை தமிழக மொழிவரம்பிற்குட்பட்டவை, தமிழ் வரம்புக்குள் வழங்கப்பட்டவை என்று சொல்லுவது தான் முறையாகும்.

இன எழுத்துக்கள் எனப்படும் வல்லெழுத்துகளுக்கு நான்கு ஒலிப்புகள் இந்தியாவுக்கு வெளியில் எந்த மொழியிலும் இல்லை. தமிழில் நாம் சுட்டிக்காட்டிய ஒரே வரியனுக்கு இடத்துக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் வழக்கிலிருப்பதையும் சேர்த்தால் இந்த முறை முற்றிலும் குமரிக்கண்டத்திலேயே உருவானது என்பது ஐயத்திற்கிடமின்றி விளங்கும். கடந்த 50 ஆயிரம் முதல் ஓரிலக்கம் ஆண்டுகளுக்குள் நடைபெற்றிருக்கக்கூடிய இந்த நிகழ்முறையை மனதிற் கொள்ளாமல் சமற்கிருதத்தில் இருக்கிறது என்பதாலேயே அறுபதாண்டுச் சுழற்சி முறையையும் அது சார்ந்த ஐந்திறத்தையும் நமக்குரியனவல்ல என்பது நம் பண்டைநாள் எய்தல்களுக்கான உரிமையை நாமே மறுப்பதாகும்.

மற்றொன்று கூறல் என்ற குற்றமாயினும் இன்று தமிழின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை எதிர்கொள்வது எவ்வாறு என்பதைப் பற்றி சிறிது சிந்திப்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

கல்வி என்பது அரசுப் பணி போன்ற ஒட்டுண்ணி வேலைகளுக்கே என்ற மனப்பான்மையின் பின்னணியில் உழைப்பு விளைப்பு சார்ந்தோருக்கு நம் குமுகத்திலுள்ள இழிவு உள்ளது. சாதி உயர்வு தாழ்வும் அதன் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. இவ்வாறு உழைப்பு – விளைப்பு சார்ந்த “கீழச்சாதி”யினருக்கும் அதனைத் தவிர்த்து விட்ட மேல் சாதியினருக்கும் ஒரு பண்பாட்டு முரண்பாடு உள்ளது. உணவு, உடை, தெய்வம், ஆண் – பெண் உறவு என்று ஏறக்குறைய பண்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் அது செயற்படுகிறது. மொழி அதில் ஒரு இன்றியமையாத கூறாகும். அந்த வகையில் பொருளியல் நிலையில் உயர்ந்தோர் பிற பண்பாட்டுக் கூறுகளோடு மொழி சார்ந்தும் தங்களை மாறுபடுத்திக் கொள்கின்றனர். “மேற்சாதி” பண்பாட்டுக் கூறுகளைக் கடைபிடிக்க ஒரு குறிப்பிட்ட பொருளியல் பின்புலம் வேண்டும். அது இல்லாத “கீழ்ச்சாதி” மக்கள் அந்த “மேல்ச்சாதி”ப் பண்பாட்டை உயர்வானதென்ற தவறான கணிப்பில் அந்தப் பண்பாட்டுக் கூறுகளை கடைபிடிக்க முடியாததால் தாம் தாழ்ந்தவரென்றும் கடைபிடிக்க இயல்கின்ற மேற்சாதியினர் உயர்ந்தவர் என்றும் தங்களைத் தாங்களே தாழ்த்தி மதிப்பிட்டுக்கொண்டுள்ளனர். பண்பாடு சார்ந்த இந்த இழுவிசைக்கு “கீழச்சாதி” மக்களிடையிலுள்ள தாழ்வு மனப்பான்மையில் பெரும் பங்குண்டு. “மேல்ச்சாதி”யினர் கடைப்பிடிக்கும் இந்தப் பண்பாட்டுத் தொகுதியைத் தான் நாம் பார்ப்பனியம் என்கிறோம். நெல்லை மாவட்ட ஊர்ப்புறங்களில் சென்ற நூற்றாண்டில் வெள்ளாளக்கட்டு என்றனர். இந்த வெள்ளாளக்கட்டுப் பண்பாட்டுக்கு எதிராக சாதியொழிப்பிலும் தமிழ் வளர்ச்சியிலும் நாட்டம் கொண்டோர் வன்மையாகப் போராடவேண்டும்.

அடுத்து கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் எழுத்தறிவு மனப்பாடம் செய்தல் என்ற ஒரேயொரு திறனை மட்டும் சார்ந்துள்ளது. ஆய்வகப் பயிற்சி என்பது கூட பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவைப்படாத உயர் கோட்பாட்டு மட்டத்திலேயே உள்ளது. மருத்துவர் படிப்பிலுள்ள பயிற்சி கூட மேலெழுந்தவாரியாக உள்ளதேயன்றி அடித்தளத்திருந்து ஆழமாக அமையவில்லை. பொறியாளர்கள், குறிப்பாக கட்டுமானம், இயந்திரம், மின்சாரம், போன்ற துறை மாணவர்கள் நடைமுறைக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைத் தங்கள் கல்வி நிலையங்களில் பெறமுடியாதவர்கள்.

நமக்கு, கட்டடம் கட்டுவதிலுள்ள பலதரப்பட்ட வேலைகள், முடிதிருத்துதல், துணி வெளுத்தல், வேளாண்மை தொடர்பான பல்வேறு கருவிகளை இயக்குதல். வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், கால்நடைப் பண்ணையில் உள்ள தொழிலாளர்கள், உணவு விடுதியில் சமையல் மற்றும் பரிமாறுவோர் என்று மக்களின் தேவைகளுக்கான பணிகளைப் புரிவோருக்கு எந்தவித முறையான கல்வியோ பாடத்திட்டமோ இல்லை. இவற்றைப் பாடத்திட்டத்தினுள் கொண்டுவந்தால் நம் நாட்டு மக்களுக்குத் தரமான பணிகளைப் பெற முடியும். உள்நாட்டிலேயே வேலைபெற முடியும். தமிழில் பாடத்திட்டங்களை வகுத்துத் தமிழுக்குப் பள்ளிகளில் இடம் பெற்றுக்கொடுக்க முடியும்.

இருக்கிற ஒரு கல்வி முறையை மாற்றுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாத கடும் பணி. ஆனால் தமிழார்வலர்களுக்கு இருக்கின்ற ஈடுபாடும் அதற்கென்று நாம் செலவிடும் ஆற்றலும் சரியான திசையில் திரும்பினால் இது இயலாத ஒன்றல்ல.

இன்று திசை தெரியாமல் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் நம் ஆட்சியாளர் வாக்களித்துள்ள கடன்களைப் பெற்றும் ஓரிலக்கத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புள்ள படிப்புகளுக்காகச் செலவிட்டு நாடெல்லாம் நச்சுத் தொழிற்சாலைகள் போல் கல்வி நிலையங்கள் முளைத்துள்ளன. விரும்பும் வேலை கிடைக்காத இலக்கம் பேரில் எஞ்சியோர் அனைவரும் எதற்கும் உதவாமல் தங்களையும் தங்கள் குமுகத்தையும் வெறுக்கும் கும்பலாக மாறிவருகின்றனர். அவர்களிடமுள்ள அனைத்துத் திறமைகளும் கல்வி நிலையங்களுக்குள் அழிந்து போகின்றன. இது நம் குமுகத்துக்கு நல்லதல்ல. தொழில் வளர்ச்சிக்கும் தங்கள் வாழ்க்கைத்தரமும் பண்பாடும் மேம்படவும் பயன்பட வேண்டிய நம் பணத்திரட்சி இவ்வாறு அழிக்கப் பயன்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழருக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ மீட்சியில்லை. சிந்தித்து செயலாற்றுவோமாக!

இனி, இவ்வாறு தமிழும் சமற்கிருதமும் வேத மொழியும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என்றால் தமிழ் எழுத்துமறை, சொற்கள், இலக்கணம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது சமற்கிருதத்தோடு கலந்துவிடலாமா, தனித்தமிழ், தூயதமிழ் என்பனவெல்லாம் தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் முழுகிப்போன குமரிக் கண்டத்தில் மக்கள் மொழியாயிருந்து இன்றைய தமிழகத்தில் நிலம் சார்ந்து தொடர்ந்து வரும் ஒன்று. அங்கு உருவாகி இங்கும் தொடர்ந்த மக்களின் உள் முரண்பாடுகளினால் வலுவிழந்து தங்களின் பெரும்பான்மை மக்களை இழிந்தோராக வைத்ததனால் தானும் செல்வாக்கிழந்து இழிமொழியாகி, சேரிமொழியாகிச் சிறுமைப்பட்டு நிற்கிறது. இந்த இழிநிலையை மாற்றி இழிவுக்குள்ளான மக்களின் குமுக செயற்பாடுகளான உழைப்புக்கும் விளைப்புக்கும் உரிய மதிப்பளித்து அவர்களது தொழில்முறைகளை இம்மொழியில் பாடத்திட்டங்களாக்கி கல்விமொழியாக்கி ஒட்டுமொத்த குமுகமும் பொருளியலில் வளர்ந்து மக்களும் மொழியும் நிலமும் உலகில் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கத் தேவையான அரசியலின் ஊடகமாக இந்த மொழியின் இருப்பு தேவையாகிறது. அந்த அரசியலில் வெற்றி பெற்றபின் தேவையானால் இம்மொழியில் மாற்றங்களோ மேம்பாடுகளோ செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இந்தக் குமுகியல் – பொருளியல் – அரசியல் நடவடிக்கைகளின்றி எவராலும் எந்த உத்தியாலும் இந்த மொழியை இனி காக்க முடியாது.
————————————————————–
kumarimainthan@sify.com

Series Navigation