காரைக்கால் அம்மையார் பின்தள்ளப் பெற்றதன் சூழலும் அதில் உள்ள ஆணாதிக்க அரசியலும்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

முனைவர் மு. பழனியப்பன்


தமிழில் பக்தி இலக்கியங்கள் வாசிக்கப் பயன்படுவதைவிட அதிகம் பூசிக்கப் படுகின்றன. அவற்றுக்கென ஒரு வைப்புமுறை தற்போது ஏற்கப் பெற்றுள்ளது. இந்த வைப்புமுறையை ஏற்படுத்தியவராக ஏற்கப் பெறுபவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

இதனை உறுதிப்படுத்துவது திருமுறை கண்ட புராணம் ஆகும். இதனை இயற்றியவர் உமாபதிசிவம் ஆவார். இவரது கருத்துப்படி நம்பியாண்டார் நம்பியே பின்வருமாறு திருமுறைகளை வரிசைப்படுத்தினார் என்பது உறுதியாகின்றது.சம்பந்தர்(1,2,3), அப்பர்( 4,5,6), சுந்தரர்(7), மாணிக்கவாசகர்(8), ஒன்பதின்மர்(9), திருமூலர் (10), பன்னிருவர் (11) என்பது நம்பியாண்டார் நம்பி வைத்த வைப்புமுறை ஆகும். இதன்பின் பெரியபுராணம் 12ம் திருமுறையாக வைக்கப்பெற்றது.

மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும்
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்தூயமனு எழுகோடி என்பதுன்னி
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந்தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே
( திருமுறை கண்டபுராணம் 24 )

ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள் (திருமுறை கண்டபுராணம் 26)

மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார் (திருமுறை கண்டபுராணம் 28)

இம்மூன்று பாடல்களும் திருமுறை வைப்புமுறை குறித்ததமைந்தனவாகும்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரைவிடக் காலத்தால் முந்தியவராகக் கருதத் தக்கவர் காரைக்கால் அம்மையார் ஆவார். எனினும் அவரது பனுவல் பதினொன்றாம் திருமுறையுள் வைக்கப் பெற்றுள்ளது. பதிகம் என்ற முறைமையை திருமுறைகளுக்கு உரியதாக்கிய பெருமைக்கு உரியவர் என்பது அனைவராலும் கருதத்தக்கது. அது போல திருமுறையுள் அதிகமாகப் பயன்படுத்தப் பெற்றுள்ள நட்டபாடையை முதன்முதலில் கையாண்டவரும் இவரே. அதனால் இவர் திராவிட இசையின் தாயாகக் கருதப் பெறுகிறார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த காரைக்காலம்மையார் பாடல்கள் பதினோராம் திருமுறையில் அடக்கப் பெற்றதன் நோக்கம் என்ன எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

நம்பியாண்டார் இத்திருமுறைகளை வரிசைப்படுத்தினார் என்பதற்கு அவரது பாடல்களில் தெளிவான அகச்சான்றுகள் இல்லை. சில மறைமுகமானக் குறிப்புகள் உள்ளன. அவர் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் குறித்தப் பல பனுவல்களைப் பாடியுள்ளார்.அவற்றுள் இக்குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

அவை பின்வருமாறு

1, நம்பியாண்டார் நம்பியின் பாடல்கள் அவரால் தொகுக்கப் பெற்றதாகக் கருதப்படும் பதினோராம் திருமுறையின் நிறைவில் அமைக்கப் பெற்றுள்ளன.

2,நகரம் கெடப்பண்டு திண்சேர் மிசை நின்று நான்மறைகள்
பகர்அம் கழலவ னைப்பதினாறாயிரம் பதிகம்
மகரம் கிளர்கடல் வையந் துயரகெட மொழிந்த
நிகரங் கிலகலிக் காழிப் பிரான் என்பர் நீள்நிலத்தே (ஆளுடைய பிள்ளையார் அந்தாதி 15)

இப்பாடலில் சம்பந்தர் பதினாயிரம் பதிகங்கள் பாடியுள்ளதாக இவர் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு அவர்க்கு முன்னதாகவே சம்பந்தர் பாடல்கள் தொகுக்கப் பெற்று வழக்கில் இருந்தது என்பதை உணர்த்துகிறது. இதன் வழியே அத்தொகுப்பை அப்படியே இவர் ஏற்று சம்பந்தருக்கு முதலிடம் தந்து முறைப்படுத்தியிருக்க முடியும் என் எண்ண முடிகின்றது.

3,பதிகமே எழுநூறு பகருமா கவியோகி
பரசு நாவரசான பரமாகரணவீசன் (திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை 8)

இவ்வடிகள் நாவுக்கரசரின் பதிக எண்ணிக்கையைக் குறிப்பன. இதன்வழியாக நம்பியாண்டார் நம்பி காலத்தில் அப்பர் சம்பந்தர் பதிகங்கள் வழக்கில் இருந்தமை தெரியவருகிறது.

4, சுந்தரரின் திருத்தொண்டத் தொகை இவரால் பின்பற்றப் பெற்று திருத் தொண்டர் திருவந்தாதியாக வளர்க்கப் பெற்றது.
தேவார மூவரை வணங்கிவரும் வழக்கம் இவர்காலத்தில் இருந்தமைக்கு இவை சான்றுகளாகும்.

இக்குறிப்புகள் வழியாக திருமுறை மூவர் என்ற நிலை பெருவழக்காக நம்பி காலத்தில் இருந்தமையை உணரமுடிகின்றது.
இந்த வழக்கின்படி இம்மூவரை முன்னதாக நம்பி வைத்ததற்கு இம்மரபு காரணமாகும். இதன்பின் திருவாசகம், ஒன்பதாந் திருமுறை, திருமந்திரம் ஆகியன ஏதோ ஒரு தொடர்பு கருதி தொடர்ந்துள்ளன. இருப்பினும் பதினொன்றாம் திருமுறை சற்று வேறுபாடானது. பல காலங்களில் எழுந்தப் பனுவல்கள் இங்குத் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன. சங்க நூலாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படையும், நம்பியாண்டார் நம்பி பாடிய பனுவல்களும் இங்குத் தொகுக்கப் பெற்றுள்ளன. சித்தி தரும் இறை மொழிந்த திருமுகபா சுரமுதலாம்
உய்த்தபதி கங்களையும் ஒருமுறையாச் செய்க எனத் பத்தி தருதிருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்(திருமுறை கண்டபுராணம் 27) என்பது இத்திருமுறை தொகுக்கப் பெற்றதன் காரணம் ஆகும். எனவே பதினொன்றாம் திருமுறை பல காலகட்டங்களில் எழுந்த திருப்பாடல்களின் தொகுப்பு என்பது அறியத் தக்கது. இது சிவபெருமான் தந்த திருமுகப்பாசுரம் என்ற பகுதியை முன்னதாக வைத்துத்
தொகுக்கப் பெற்றுள்ளது. முருகன் குறித்த பாடல்களும் இதில் இணைவு பெற்றுள்ளமை இதன் நெகிழ் தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

திருமுகப்பாசுரத்தின் அடுத்து அமைவது காரைக்கால் அம்மையாரின் பாடல்கள். இவர் சுந்தரரால் திருத்தொண்டத் தொகையுள் அப்பருக்கும் சம்பந்தருக்கும் முன்பே காட்டப் பெற்றிருப்பவர் என்பது இங்குக் கருதத்தக்கது. இவரது பாடல்கள் மூத்த திருப்பதிகம் என்றழைக்கப் பெறும் பெருமையின. இவ்வாறு இருக்கையில் இவர் பின்தள்ளப் பெற்றிருப்பதன் காரணம் என்ன என்று
ஆராய வேண்டியுள்ளது.

திருமுறை வைப்புமுறையில் பின்பற்றப் பெற்றுள்ள சில பொது முறைமைகள் இறைவனைப் பற்றிஅதிகம் பாடினோர்க்கு முன்னிடம் தரப் பெற்றுள்ளது என்பது முழுக்க உண்மையாகும். பொதுத் தத்துவம் பாடிய மந்திரம் இதனால் பின்தள்ளப் பெற்றிருக்கலாம்.

இறைவனால் அதிக நிகழ்வுகளில் ஆட்கொள்ளப் பெற்றவர்களுக்கு முன்னிடம்தரப்பெற்றுள்ளது.

ஆண்களுக்கு முன்னிடம் தரப் பெற்றுள்ளது. பதினோராம் திருமுறையில் திருமுகப் பாசுரம் என்ற இறைவன் பாடிய பகுதி இதன்வழி காரைக்காலம்மையாரின் பதிகங்களுக்கு முன் இடம்பெற்றுள்மை இங்குக் கவனிக்கத் தக்கது. பஞ்சபுராணம் பாடும் மரபு சைவக் கோயில்களில் உண்டு. அவற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருப்பல்லாண்டு (9ம் திருமுறை) ஆகியன மட்டுமே இன்று வரை பாடப் பெற்றுவருகின்றன.இம்மரபில் காரைக்காலம்மையார் பாடல் இடம்பெறாதது கவனிக்கத்தக்கது.

நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் காரைக்காலம்மையாரின் பாடல்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லாமல்
இருப்பதும் இங்குக் கவனிக்கத் தக்கது. திருவந்தாதி எழுதும் வரை அளவில் கூட நம்பியாண்டார் நம்பிக்கு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் கிடைத்தல என்றுகூட முடியலாம். பின் வந்த சேக்கிழார் அம்மையார் பனுவல்கள் குறித்த செய்திகளைக் குறிக்க
நல்ல வேளையாக பதினோராம் திருமுறையில் அவை தொகுக்கப் பெற்றுவிட்டன.

முன்னவர், இசை வல்லுநர், தெய்வச்சிறப்பினர் என எல்லாம் இருந்தும் பத்தோடு பதினொன்றாக அம்மையாரின் பாடல்கள் கருதப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதை மிகத் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.

வெண்பா யாப்பில் அமைந்தவை அற்புதத் திருவந்தாதி. சங்க காலத்திற்குப் பின் நீதி இலக்கிய காலத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தியது வெண்பாதான். வெண்பா எழுதுவதுக் கடினம் என்ற சூழலில் அந்தாதி நிலையில் இவர் செய்துள்ள இப்படைப்பு மூத்தது,புதுமையானது என்றால் அது மிகையாகாது.

இறைவனால் ஆட்கொள்ளப் பெறுதல், பாடல் புனைதல், கயிலாயம் வரை யாத்திரை மேற்கொள்ளல் என்ற பல நிலைகளில் மற்ற திருமுறை ஆசிரியர்களிடம் காணலாகும் அனைத்துப் பண்புகளையும் பெற்றுள்ள இவர் அனைவருக்கும் முன்னதாக இடம் பெற
வேண்டியவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவ்வளவில் முன்னிடம் பெறவேண்டிய இவரைப் பின்தள்ளியிருப்பதன் ஒரே நோக்கம் அவர் மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு முரண்பட்டவர் என்ற ஒன்றே அன்றி வேறில்லை. இவரின் வாழ்வு தரும் செய்தி பெண்கள் தனித்து வாழஇயலும் என்பதைக் காட்டுவது. இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இவரை முன்மாதிரியாகக் கொண்டால் அதன்மூலம் தமக்கான முன்வாய்ப்புகளை ஆண் உலகம் இழக்க வேண்டி வரலாம் என்ற தயக்கமே இவரின் பின்தள்ளலுக்குக் காரணம். இது கருதியே இவரின் பாடல்கள் பஞ்சபுராணப் பாடல்மரபில் இணைக்கப்படுவது இல்லை.


முனைவர் மு. பழனியப்பன்,தமிழ் விரிவுரையாளர், மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

muppalam2003@yahoo.co.in

manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்