காமராஜர் 100

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஞாநி


காமராஜரை விட நான்கு வயது சின்னவர் என் அப்பா வேம்புசாமி. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நிருபராக இருந்த அவர் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தார். அவருடன் பலமுறை தமிழகத்தை சுற்றி வந்து செய்திக் கட்டுரைகள் எழுதினார். அண்ணாவின் வகுப்புத் தோழராக கல்லூரியில் இருந்தபோதும், அப்பாவின் அரசியல் ஈடுபாடு காந்தி, நேரு, காமராஜர், இந்திரா, ராஜீவ் காந்தி என்றே இருந்தது. நிருபராக ராஜாஜியுடன் நல்ல பழக்கம் இருந்தபோதும், அப்பா எப்போதும் ராஜாஜி எதிர்ப்பாளராகவும் காமராஜர் ஆதரவாளராகவுமே விளங்கினார். காமராஜர்- இந்திரா பிரிவு அப்பாவுக்கு வருத்தம் தந்தது.அதிலும் ராஜாஜியின் சதி இருந்திருக்கும் என்பது அப்பாவின் கருத்து.

இப்படி சிறு வயதிலிருந்தே காமராஜர் பற்றிய ஒரு ஆக்கப்பூர்வமான சித்திரம் என் மனதில் பதிந்திருக்கிறது.

எந்த ஆட்சிக் காலத்தையும் பொற்காலம் என்று சொல்வது எனக்கு உடன்பாடில்லை. என்றாலும், பின்னாளில் தி.மு.க, அ.தி.மு.க, ஆட்சிகளில் ஏற்பட்ட சீரழிவுகளின் ஒப்பீட்டினாலே காமராஜர் ஆட்சிக் காலத்துக்கு கூடுதல் மரியாதை கிடைத்திருக்கிறது. காமராஜர் இந்திராவுடன் சமரசம் செய்திருந்தால், காமராஜர் எம்.ஜி.ஆருடன் சமரசம் செய்திருந்தால், இந்திய , தமிழக அரசியல் வரலாறு வேறு திசையில் சென்றிருக்குமா என்று கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் அப்படிப்பட்ட சமரசங்கள் காமராஜருக்கு சாத்தியப்படவில்லை. தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற அவருடைய பிரகடனம்,இன்று இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பி.ஜேபிக்கு சேவை செய்யும் நிலையில் மிகவும் சத்தியமாகிவிட்டது.

காமராஜரின் சாதனைகளாக நான் எப்போதும் மதிக்கும் சில உண்டு. காமராஜர் கம்யூனிஸ்ட்டோ பகுத்தறிவாளரோ அல்ல. ஆனால் அவரது வரம்புக்குள்ளேயே அவர் செய்த பல நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களுக்குப் பயனளித்தவை. அவருடைய தனிப்பட்ட பலவீனங்கள் அல்லது தனி வாழ்க்கையை அவர் ஒரு போதும் பொது வாழ்வில், அரசியலில் குறுக்கிட அனுமதித்ததே இல்லை. அப்படி அனுமதித்ததால்தான் கலைஞர் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பல அரசியல் சீரழிவுகளுக்கு வித்திட்டார்கள்.

பொது மக்களுக்கு நன்மை செய்வதற்கு படிப்பறிவை விட அனுபவ அறிவே முக்கியம் என்பதை நிரூபித்தவர் காமராஜர். கல்வியை பரவலாக்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள்தான் இன்று வரை அடிப்படை பலமாக இருக்கின்றன. 1954லேயே தன் அமைச்சரவையில் இருந்த தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவரான பரமேஸ்வரனிடம் இந்து அற நிலையத் துறையை அவர் ஒப்படைத்தது மிகப் பெரும் சாதனை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது பசும்பொன் முத்துரமாலிஙத்தேவரை கைது செய்து கலவரத்தைக் கட்டுப்படுத்தியது மறக்கக்கூடாத அரசியல் துணிச்சல்.

இன்று எல்லாருக்கும் ஒரே மாதிரி கல்வி தரப்படும் வசதியும் ஏற்பாடும் இல்லாத நிலையும், தொடர்ந்து நடக்கும் தலித்கள் மீதான கொடுமைகளும் காமராஜர் நூற்றாண்டின் களங்கங்கள். இவை துடைக்கப்படுவதுதான் காமராஜருக்கான சரியான நினைவு கூரலாக இருக்க முடியும்.

தீம்தரிகிட ஜூலை 2003 dheemtharikida @hotmail.com

Series Navigation