காதல் கடிவாளம்

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

ஸ்ரீனி.


வண்டுகளின் தாகத்திற்கு தேன் தரும் பூக்கள்,
ஞாயிறின் தீண்டலால் முகம் மலரும் தாமரைகள்,
யுகம் யுகமாய் இடம்பெறும்
கட்டுப்பாடு இல்லாத இந்தக் காதல் கதைகள்.
உதிர்ந்த பூக்களை வண்டுகளும் தேடுவதில்லை,
தாமரைகளின் மறைவில் ஞாயிறு மறைவதில்லை.
ஒப்பந்தம் இல்லா இந்த
ஒரு நிமிடக் காதல் கதைகள்
உணர்த்தாதோ நமக்கு உலக நியதியை !
காதல் என்னும் சொல்லின் விளக்கம்
ஒரு வரி துவங்கி ஓராயிரம் எழுதினும்
எழுதிய வரிகளின் வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் !
சேர்ந்திருக்கும் வரை சேர்க்கையை உணராது
பிரித்து வைப்பின்
நீருக்குத் துடிக்கும் மீனின் உணர்வா ?
மொட்டுக்கள் இதழ் விரிக்கப்
படபடத்துக் காத்திருக்கும்
பட்டாம்பூச்சியின் நிலையா ?
அடைக்கலம் ஆன பூமியில்
மேலும் மேலும் வேர்களைச் செலுத்தி
பின்னிப்பிணையும் விதையின் செயலா ?
தேவைகளை உணர்த்தும் இவை அனைத்தும் காதலெனில்,
காதலும் ஒரு தேவையே !
மனதிற்கும் உடலுக்கும் மயக்கங்கள் கோடி..
மருந்து ஒன்று என்னும் மருத்துவன் எவனுமில்லை
நிலைமைகள் மாறும் போது நிலைகளும் மாறுதல்
தொன்று தொட்டு, இன்று வரை,
எழுதிவைக்கப் படாத விதி.
உயிர்நாடியாம் மூச்சுக்காற்றை
உள்ளடக்கி வாழ்வதில்லை..
உணர்வுகளுக்கு மட்டும் ஒரு விதி இல்லை
காதல் செய்வீர் !
கட்டுப்பாடுகள் தேவையில்லை…
***

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி