This entry is in the series 20040923_Issue

பாஷா


என் பெயர் விளித்து
யாரோ யாரையோ அழைக்க
திரும்பிபார்க்கும் உன் தேடலில்
தெரிவது காதலென்பேன்
தற்செயலென நீ மறுத்தாலும்!

மூன்றாம் பரிமாணத்தில்
மழைமேகமாய் மோதும் நம் விழிகள்
உனக்குள் பொழியும் மழையை
காதலென்பேன் நான்
காட்சிபிழையென நீ வெறுத்தாலும்!

ஏதேச்சையாய் மாடிப்படிகளில்
என்னெதிரில் நீ வர
தயங்கி துரிதமாகி பின் தயங்கும்
உன் நடையை
காதலென்பேன் நான்
கால்பிடிப்பென நீ சிரித்தாலும்!

இருவார காய்ச்சலுக்குபிறகு
என்னை அடிக்கடி
ஏறிட்டுப் பார்க்கும்
உன்விழிகளில் வழிவது
காதலென்பேன் நான்
கண்ணீரென நீ மறுத்தாலும்!

உணர்வுகளை கவிதையாக்கி
கடிதமாய் அனுப்பினேன்
திரும்பிவராத உன்பதிலில்
தெரிவது காதலென்பேன்
புறக்கணிப்பென நீ
போர்க்கொடி தூக்கினாலும்!

என் உயிரில் கலந்திருக்கும்
உன் எல்லா உணர்வுகளையும்
காதலித்துகொண்டிருப்பேன்
நீ எதுவாயினும்!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation