காதலுக்கு மரியாதை ?

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

லாவண்யா


சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, இன்றைய தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பேச்சு வந்தது, பேசும்போதே அவருக்கு முக சுளிப்பு, ஆர்ப்பாட்ட இசை, பாடல் வரிகளை அமுக்கி விடுவதாகவும், தப்பித் தவறி வெளியே கேட்கிற சிற்சில பாடல் வரிகளையும் ‘தமிழ் தெரியாத பாடகர்கலும் பாடகிகலும் சேர்ந்து கொன்று விடுகிறார்கல் ‘ என்றும், அதையும் மீறி ஒழுங்காய் வரும் பாடல் வரிகளில்கூட, பெரிதாய் சிலாகித்துச் சொல்வதற்கு ஏதும் இல்லை என்றும் மிக வருத்தப் பட்டார். நான் வழக்கம் போல இன்றைய பாடல்களுக்கு வக்காலத்து வாங்க முயற்சித்தேன், ‘ஏன் சார், நல்ல பாட்டெல்லாம் இப்பவும் வந்துட்டுதானே இருக்கு, பழநி பாரதி இல்லையா, அறிவுமதி இல்லையா, புதுசா பா. விஜய் இல்லையா., இருபது வருஷமா பொளந்து கட்டிட்டு வைரமுத்து இல்லையா, நாலு தலைமுறையா எழுதற வாலி சார் இல்லையா, என்ன குறைஞ்சு போச்சு உங்களுக்கு ? எல்லாம் நல்லாத்தான் எழுதறாங்க ‘ என்றேன். புதிய பாடல்களில் வந்த சில நல்ல வரிகளையும் உதாரணம் காட்டினேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘எல்லாம் எழுதறாங்கதான், நீ சொன்ன வரிகள் எல்லாமே நல்லாதான் இருக்கு, ஆனா எல்லாம் காதல், காதல், காதல்., காதல் பாட்டு மட்டும்தான்., மாத்திமாத்தி அதே சிந்தனைதான்., அதைத் தவிர வேற எதாவது உருப்படியா இருக்கா இன்னிக்கு தமிழ்ப் பாட்டிலே ? ‘ என்றார்.

யோசிக்க வேண்டிய கேள்வி.

தமிழில் திரைப் பாடல்களின் வளர்ச்சியைப் பார்த்தோம் என்றால், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பாடல்கள் மிகுந்து இருந்திருக்கின்றன, தமிழ்ப் படங்களில் பாடல்கள் வரத் துவங்கின புதிதில், பாடல் வரிகளில் பக்தி ஓங்கியிருந்தது, திரைப் படத்திற்கு இருபது முப்பது என்று பாட்டுக்கள் வந்து கொண்டிருந்த அந்த சூழலிலும், அவை எல்லாமே பக்திப் பாடல்களாகத்தான் இருந்தன. கவிஞர்களை மட்டும் இதற்கு காரணமாக சொல்லிவிட முடியாது, பக்தி மற்றும் புராணக் கதைகள் மட்டுமே படங்களாக எடுக்கப் பட்ட காலம் அது, பாடல்களும் கதையை ஒட்டியே அமைய வேண்டியிருந்தது., சினிமா இன்னும் கொஞ்சம் முதிர்வடைந்து, சமூகக் கதைகளும், குடும்பக் கதைகளும் படமாக எடுக்கப் படும் காலம் வந்தபோதுதான் இயற்கை வர்ணனைப் பாடல்களும், குடும்பப் பாடல்களும், குழுவாகச் சேர்ந்து பாடுகிற மகிழ்ச்சிப் பாடல்களும், காதல் பாடல்களும் தமிழில் அதிகமாய் வரத் துவங்கின. அதன்பிறகு எம் ஜி ஆர் காலத்தில் சமூகக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள் அதிகமாய் வந்தன, கிட்டத்தட்ட எம் ஜி ஆரின் சினிமாப் பயணம் முடிந்த காலகட்டத்தில்தான் பாரதிராஜா தமிழ் சினிமாவுக்குள் வந்தார், இளையராஜாவோடு சேர்ந்து பாரதி ராஜா தந்த கிராமிய மணம் கமழ்கிற வெற்றிப் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு கிராமியப் பாடல்களுக்கு பெரும் மரியாதையை உருவாக்கித் தந்தது. இந்த சமயத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரும் குறிப்பிடத்தக்க கதாநாயகர்களாய் வளர்ந்தபோதும், திரைப் பாடல்களில் அவர்களால் எந்த பாதிப்பும் உண்டாக்க இயலவில்லை, முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற பாதையிலேயே அவர்கள் பயணித்தார்கள், எம் ஜி ஆரின் பாடல்பாணியை ரஜினி பின்பற்றத் துவங்கி பெரும் வெற்றி அடைந்ததை உதாரணமாய்ச் சொல்லலாம்.,

இந்தக் கால கட்டத்தில்தான் தமிழில் காதல் பாடல்களின் எண்ணிக்கை அதிகமாகத் துவங்கியது என்று சொல்ல வேண்டும், பாரதிராஜாவால் அறிமுகப் படுத்தப் பட்ட கவிஞர் வைரமுத்து இதற்கு முக்கியக் காரணமாய் இருந்தார்., சவசவ பாணியை மாற்றி, தமிழில் காதல் பாடல்கள் எழுதப் பட்ட விதத்தையே மாற்றுகிற தைரியம் அவருக்கு இருந்தது. ‘வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன், இலையுதிர் காலம் முழுக்க மகிழ்ந்து உனக்கு வேராவேன் ‘ போன்ற புதுமையான காதல் சிந்தனைகளை எழுதத் துவங்கி, ஒரே மாதிரியாய் சுற்றி வந்து கொண்டிருந்த காதல் பாடல்களுக்கு புது ரத்தம் பாய்ச்சினதில் வைரமுத்துவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால் இந்த புதுமைச் சாதனையின் இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதை பின்னால் பார்ப்போம்.

இதே பாணிதான் தொன்னூறுகளில் இன்னும் தீவீரமாகி, இன்று கதை இல்லாத சினிமாகூட இருந்து விடலாம், காதல் பாட்டு இல்லாத தமிழ் சினிமா எங்கும் இல்லை என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. பக்திக் காலத்தில் துவங்கிய தமிழ்த் திரைப் பாடல்களுக்கு இது காதல் காலம்.

மேற்சொன்னதுபோல, ஒவ்வொரு காலப்பிரிவையும் ஒருவிதமான பாடல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அதற்காக அந்த மாதிரியான பாடல்கள் மட்டும்தான் வந்தன என்று சொல்லிவிட முடியாது., பக்திமயமான பாடல்களுக்கு இடையே ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ ‘ என்று கேட்கிற பாடல்களும், சமூகத்திற்காகக் கொடிபிடித்துப் பாடின நாயகன் ‘பச்சைக் கிளி, முத்துச்சரம், முல்லைக்கொடி யாரோ ‘ என்று காதல் பாட்டு பாடுவதும் இருந்தது., இன்றைக்கு காதல் பாட்டுக்கள் ரூபாய்க்கு மூன்று கிடைக்கிற நிலையிலும் ‘நிற்பதுவே, நடப்பதுவே ‘ என்கிற பாரதியின் தத்துவம் பாடலாகி மக்களிடையே மணக்கிறது. எனவே, ஒவ்வொரு சமயத்திலும் பெரும்பான்மை என்பது இருந்ததே தவிர, மற்ற வகைப் பாடல்களும் வந்து கொண்டுதான் இருந்தன. அப்படி மற்ற வகைப் பாடல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது அல்லது கொடுக்கப் படுகிறது என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். எல்லா வகைப் பாடல்களும் வந்தால்தான், கருத்துச் சமநிலை என்பதை எதிர்பார்க்க முடியும். என்னதான் பிள்ளை விளையாட்டில் சூட்டிகையாய் இருந்து கோப்பைகள் பல வென்று வந்தாலும், படிப்பில் சுமாரான மார்க்காவது எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பதில்லையா, அது போல.

அந்த வகையில் பார்த்தால், நண்பர் கேட்ட கேள்வி நியாயமானதே, இன்றும் நல்ல பாடல்கள் வருகின்றன, நல்ல கவிஞர்கள் எழுதுகிறார்கள், தினம்தினம் புதிய கவிஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், புதிதாய் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்று உள்ள அளவு அதிக எண்ணிக்கையிலான திரைக் கவிஞர்கள் என்றைக்கும் தமிழ்த் திரை உலகத்தில் இருந்ததில்லை. மிக நல்ல பாடல்வரிகள் எழுதப் படுகின்றன – இவை எல்லாமே ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம், ஆனால் இப்படி எழுதப் படுகிற நல்ல வரிகளில் எதைப் பற்றி சொல்கிறார்கள் என்பதே

முக்கியம்.

இன்றைய பாடல்களை அப்படி யோசித்துப் பார்த்தால், காதல் என்பதே முக்கியமான பாடுபொருளாக இருக்கிறது என்பதைத் தனியாய் சொல்ல வேண்டியதில்லை, மேற்சொன்ன வரலாற்றைச் சிந்தித்துப் பார்க்கும்போது, இப்படி ஒரு ஆளுமையில் தவறு இல்லை. ஆனால் அதே சமயத்தில் மற்ற வகைப் பாடல்கள் அதிகம் எழுதப் படுவதில்லை, அப்படியே எழுதப் பட்டாலும் அவை அதிகம் கவனிக்கப் படாமல் போகிறது என்பதே சோகம். ஒரு கேசட் கடைக்குள் நுழைந்து, சமீபத்தில் வெளிவந்த பத்து படங்களின் பாடல் கேசட்டுகள் எடுத்துப் பாருங்கள், அதில் எத்தனை காதல் பாடல்கள், எத்தனை காதல் அல்லாத பாடல்கள் என்று ஒரு சிறிய கணக்கெடுப்பு நடத்திப் பார்த்தால் உண்மை விளங்கும். இரண்டாம் கட்சிக்கு டெபாசிட் தேறுவதே கஷ்டம்.

கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை மட்டும் இதற்கு முழுப் பொறுப்பாக சொல்வதற்கில்லை. இன்றைய தமிழ்த் திரைப் படங்களை மேலோட்டமாய் கவனிக்கிறவர்களுக்குக் கூட தெரியும், ஆண்டில் வெளிவருகிற நூற்றில் நூற்றிருபது படங்கள் காதல் கதைகளாகதான் இருக்கின்றன, அப்படியே தப்பித் தவறி வேறு கதைகள் (பக்தி, நகைச்சுவை, க்ரைம் இத்யாதி.,) வந்தாலும், அதில் ஒரு கதாநாயகன், கதாநாயகி இருக்கிறார்கள், அதனால் காதல் இருக்கிறது. இவ்வாறாக வருகிற படங்கள் எல்லாவற்றிலும் காதல் நேரடியாகவோ மறைமுகமாகவோ இடம் பிடித்து விடுகிறது. நிலைமை இப்படி இருக்க, காதல் பாட்டுக்கள் மட்டுமே எழுதுகிறீர்கள், அல்லது இசையமைக்கிறீர்கள் என்று அவர்களை சண்டைபிடித்து என்ன ஆகப் போகிறது ?

காதல் பாடல்கள் அதிகமாகிக் கொண்டு வருவதும், பிற வகைப் பாடல்கள் அநேகமாய் இல்லை என்பதும் மட்டும் பிரச்சனையில்லை, இன்னொரு பெரிய துயரமும் சமீப காலத்தில் நேர்ந்திருக்கிறது – புதுமையாய் எழுதினால்தான் காதலைச் சொல்ல முடியும் என்கிற தவறான இலக்கணம் இன்றைய சினிமாக் காதல் பாடல்களுக்கு வந்துவிட்டது. அதனால், ஒவ்வொருவரின் உள்ளத்திருக்க வேண்டிய காதல், சில திரைப் பாடல்களில் ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையே பறந்து கொண்டிருக்கிற ஒரு அபூர்வ ஜந்து போல வர்ணிக்கப் படுகிறது., எல்லாப் பாடல்களையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் சில பாடல்கள் புதுமை என்கிற பெயரில் தெரிந்தே விஷம் தூவுகின்றன. அப்படி எழுதினால்தான் கவனிக்கிறார்கள் என்பது ஒரு காரணம், ஆனால் அப்படி கவனிக்கப் படுபவற்றை அவர்கள் உண்மை என்று நம்பத் துவங்கி விட்டால் ?

புதுமைக்கும் யதார்த்தத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்., இயக்குநர் விக்கிரமன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது, அவருடைய முதல் திரைப்படம் புது வசந்தம், நான்கு இளைஞர்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருந்த தூய்மையான நட்பைச் சொன்னது. தொட்டதற்கெல்லாம் காதல் கதைகள் வந்து கொண்டிருந்த சினிமாவில், இது ஒரு புதுமையாகப் பார்க்கப் பட்டது, மக்கள் படத்தை ஏற்றுக் கொண்டார்கள், படம் வெற்றி பெற்றது, அதே கால கட்டத்தில் வெளிவந்த இன்னொரு படம், அந்த படத்தின் கதை – அண்ணன், தங்கையைக் காதலிப்பது., கல்யாணம் செய்து கொண்டால் என்ன தவறு என்று யோசிப்பது, இதுவும் ஒரு புதுமையான கதைதான்., ஆனால் யதார்த்தத்துக்குப் பொருந்தாத கதை. அதனாலே, மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று அந்தப் படத்தின் பெயர்கூட நம் நினைவில் இல்லை. எனவே, புதுமை இருக்க வேண்டியதுதான், ஆனால் அது இயல்பை விட்டு விலகி எங்கேயோ வானத்தில் பறக்கும் புதுமையாக இருப்பது ஆபத்து.

இன்றைய காதல் பாடல்களில் இந்த வித்தியாசம்தான் புரிந்து கொள்ளப் படவில்லை என்று தோன்றுகிறது. புதுமை என்கிற பெயரில் ஏதேதோ எழுதப் படுகிறது. ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ‘ என்று இயல்பாய் ஆசைப் பட்டுக் கொண்டிருந்த சினிமாக் காதலர்கள், இன்று ‘தின்னாதே, என்னைத் தின்னாதே, நீ சைவம்தானே, அதனால் என்னைத் தின்னாதே ‘ என்றெல்லாம் நரபட்சிணிகள் போல பாடிக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம்தான் சொல்ல முடிகிறது – அதிகமாய்த் தின்றால் அமுதும் திகட்டும் என்பதைப் புரிந்துகொண்டு கட்டுப் பாடுகள் இடாமல், இருபது வருடங்களுக்கு மேலாய் மாற்றிமாற்றி காதலுக்கு மட்டுமே தமிழ் சினிமாப் பாடல் வரிகளில் முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது. சில சமயங்களில், காதல் பற்றி எழுதப் பட வேண்டியவை எல்லாம் எழுதப் பட்டுவிட்டது போன்ற ஒரு ஆயாசம்கூட உண்டாகிறது. ஆனால் சினிமா ஒரு பகாசுரன் போல, இன்னும் காதல் எழுதச் சொல்லி கேட்கிறது, விளைவு – மேற்சொன்ன விநோத சிந்தனைகளும், வித்தியாசமான சித்தரிப்புகளும்.

இவைதவிர இன்னொரு கவலைதரும் விஷயம் – பாடல்களில் ஆங்கிலக் கலப்பு. கவிஞர் பழநிபாரதி ஒரு விளையாட்டாய் நினைத்து இதைத் துவங்கி வைத்தார், அதை எல்லோரும் சிக்கெனப் பிடித்துக் கொண்டு விட்டார்கள், இன்று அவர் ஒழுங்காய் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார், ஆனால் மற்றவர்கள் ஆங்கிலத்தை விட்டு வர மறுக்கிறதை காலத்தின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல தமிழ்ப் பாடல்களை ஏற்றுக் கொள்ள ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் பல பாடல்கள் நிரூபித்திருக்கின்றன. அப்படியிருக்க, ஆங்கிலத்தில்தான் எழுதியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது யார் என்று தெரியவில்லை. அந்தக் காலத்திலேயே இது இருந்திருக்கிறது என்று ‘ஜாலிலோ ஜிம்கானா ‘வை உதாரணம் காட்டி இன்றுவரை அதை நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள், தெரியாமல்தான் கேட்கிறோம், என்ன வளம் இல்லை இந்த மொழியில் ?

மேற்சொன்ன பிரச்சனைகளின் விளைவுகள் என்ன என்பதையும் யோசிக்க வேண்டும். இதில் நேரிடையாக பாதிக்கப் படப் போவது இன்றைய இளைஞ,இளைஞிகள்தான். சினிமா ஒரு வலுவான ஊடகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, இளைய சமுதாயத்தை அது பெரிதும் பாதிக்கிறது. சினிமாவில் வருவது போன்ற உடை அலங்காரங்களும், பேச்சு மொழியும் அவர்களிடையே விரைவாய்ப் பரவுகிறது, வருங்காலத்தில் அதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகிறது. அதனால், திரைப் படங்களின் வாயிலாக நாம் அவர்களுக்கு என்ன தருகிறோம் என்பதில் பெரும் கவனம் வேண்டும்.

ஏற்கெனவே நம்மைச் சுற்றி காதல் தோல்விகளும், அதனால் தற்கொலைகளையும் பார்க்கிறோம்., இந்த நிலையில், காதல் ஒன்றுதான் உலகம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை அவர்கள் மத்தியில் நம் படங்களின் பாடல்கள் உருவாக்குவது பெரும் பிழை. அதற்காக காதலே சொல்ல வேண்டாம் என்பதில்லை, மருத்துவர்களின் மொழியில் சொன்னால், உயிர் காக்கும் மருந்தாகவே இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாய்க் கொடுப்பது போல காதலைத் திணிக்கலாகாது. அது அவர்களின் சிந்தனையை வேறுபுறம் செல்ல விடாது, கவனமான இளைஞர்கள் தவிர ஏனையோர் நிச்சயம் கொஞ்சமாவது பாதிக்கப் படுவார்கள். அது மட்டுமில்லை, அப்படி சொல்லப் படுகிற காதலும் இயல்பாய் இருக்காமல் யதார்த்தத்தை விட்டு விலகியிருந்தால், அதுவும் இளையோரை பெரிய பாதிப்புக்குள்ளாக்கும். போதாக்குறைக்கு, பாடல்களில் துவங்கி, திரைப் படங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என்று வெகுஜன ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருப்பதால், நாளைய தமிழகம் தமிழில் சிந்திப்பதையே மறந்து விடுகிற அபாயம் இருக்கிறது. நம் கண்ணுக்குத் தெரிந்தே ஒரு விரிசல் நாளைய தலைமுறையின் பாதையில் விழுவதை நாம் அனுமதிக்கலாமா ?

இதற்கான மிக எளிமையான தீர்வு, பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சினிமாவில் இருக்கிறது – காதலை அளவாகச் சொல்வது, காதல் தவிர்த்த மற்ற விஷயங்களையும் சம அளவில் சொல்வது., காதல் சொல்கிறபோதும், அநாவசிய அலங்காரங்கள் அதிகமில்லாது காதலில் உள்ளதை உள்ளபடி சொல்வது., அப்படிச் சொல்லப் படும் காதலில் அழகு இருக்கும். கேட்பவர்களை அது நல்லவிதமாய் பாதிக்கும். மொழிவளத்தைப் பொறுத்தவரை நாம் எல்லோரும் அளவிட முடியாத செல்வத்திற்கு சொந்தக் காரர்கள். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ‘ என்றான் பாரதி, தமிழால் சொல்ல முடியாது என்று வேற்று மொழி தேடிப் போகிற அவசியம் நமக்கு என்றைக்கும் நேரப் போவதில்லை, இதை திரைப் பாடல்களும் பிரதிபலிக்க வேண்டும், வேற்று மொழியின் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது போனாலும், அது அளவோடு இருக்க வேண்டும்.

சுருக்கமாய்ச் சொன்னால், காதலுக்கு முதல் மரியாதை கொடுப்பது தவறில்லை, முழு மரியாதையையும் அதற்கே கொடுத்து, அதை ஆணவப் பண்ணையாராய் ஆக்குவதுதான் தவிர்க்கப் பட வேண்டியது. இன்னும் மரியாதை பெற வேண்டிய எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன., அவற்றையும் கவனிக்கலாமே,

இன்றைய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், கவிஞர்களும் யோசிக்க வேண்டும். யோசிப்பார்களா ?

***

Email : lavanya_baan@rediffmail.com

Series Navigation

லாவண்யா

லாவண்யா