காதலிக்க ஒரு விண்ணப்பம்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

க.ராஜம்ரஞ்சனி, மலேசியாமீண்டும் ஒரு முறை கடிதத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். நண்பனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட முகவரிக்குத் தபால் பெட்டியில் சேர்த்ததும் உள்ளம் குளிர்ந்தது அவனுக்கு. கடிதத்தின் உள்ளடக்கம் இது.
சித்தார்த், எண் 21, ஜாலான் பெர்மாய், 41000 கிள்ளான், சிலாங்கூர்.

பங்கயசெல்வி, எண் 52, ஜாலான் கமுனிங், 42450 ஷா ஆலாம், சிலாங்கூர். 11 ஜூன் 2009
அன்புடையீர்,
காதலிக்க அனுமதி
வணக்கம். மேற்குறிப்பட்டபடி நான் சித்தார்த் உங்களைக் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் கண்டபோது காதலில் வீழ்ந்ததாக உணர்ந்தேன். அதை உறுதிபடுத்தும் வகையில் கோயில் மணியோசை ஒலித்தது. மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் இருந்தது. என்னுடன் வந்த நண்பர் (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாதுகாப்பு கருதி பெயர் குறிப்பிடவில்லை) உங்களைப் பற்றி என்னிடம் கூறினார். அவரிடமிருந்துதான் உங்களின் பெயர், முகவரி பெற்றேன். சுலபமான காரியமல்ல, அதன் பலனாக அவருக்கு நான் மூன்று நாட்கள் நண்பகல் உணவு வாங்கி தர வேண்டியிருந்தது.
2. பார்த்த நாள் முதல் என் கனவில் நாம் இருவரும் மரத்தைச் சுற்றி பாடுவதும் ஆடுவதும் தொடங்கியுள்ளது. நம்முடன் சேர்ந்து வெள்ளை நிற உடை அணிந்த பெண்களும் சில சமயங்களில் குழுவாக தோன்றி ஆடுகின்றனர். என் கனவு வேலையிடத்திலும் தொடர்கின்றது. என் முதலாளி என்னை எழுப்பும்பொழுது தூக்கத்துடன் கனவும் கலைவதால் அவர் மீது கோபம் உண்டாகின்றது. கண்ணகியை என் அத்தையாக ஒரு கணம் நினைத்துக்கொண்டு அவரும் காதல் வயப்பட்டு கனவு தோன்றவேண்டும் என சாபமிட்டேன். கனவினால் நம் பாடலும் ஆடலும் தடைபடுவதால் நிஜ வாழ்க்கையில் அவை மெய்ப்பட செய்வதற்கே இந்த அனுமதியை உங்கள் முன் வைக்கின்றேன்.
3. இதற்கு முன் இரண்டு பெண்களை விரும்பியுள்ளேன். அது வெறும் புற கவர்ச்சி என்று பின்பு புரிந்து கொண்டேன். முதல் பெண் என்னுடன் ஐந்தாம் வகுப்பில் ஒன்றாய் படித்த வித்யா. ‘ஐ லவ் யூ’ என்று சொன்னதைக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் புகார் செய்ததால் எனக்குப் பலத்த உடற்சேதமும் உள்ளசேதமும் ஏற்பட்டன. தேறுவதற்குப் பல மாதங்கள் ஆகின. இதனால் என் வாழ்க்கையில் காதலைச் சற்று ஒத்தி வைக்கும் நிலை உருவானது. இரண்டு வருடங்களுக்கு முன் நான் வேலை செய்த இடத்தில் ஒரு பெண்ணைப் பிடித்துப் போயிற்று. அவளைப் பார்ப்பதற்கு த்ரிஷா போல இருந்ததே அதற்குக் காரணம். அவளிடம் என் காதலைக் கூறிய பொழுது நான் கறுப்பாய் இருப்பதால் பிடிக்கவில்லை என முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டாள். மறு வாரம் அவள் அந்நிய தொழிலாளியுடன் ஓடிவிட்டதாக செய்தி பரவியது என் காதுகளிலும் விழுந்தது. அதன் பின்னர் நான் த்ரிஷாவின் படங்களைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டேன். இப்பொழுது நான் தேர்ந்தெடுத்திருக்கும் நீங்கள் நல்ல குணமுடைய பெண் என எண்ணத் தோன்றுகிறது.
4. எனக்குத் தமிழ் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் உள்ளது. உங்களுக்குத் தமிழ் தெரியாவிட்டால் நான் கற்றுத் தருவேன். எனக்கு நாடக சீரியல் என்றால் அலர்ஜி. அதனால் அதன் பக்கம் நெருங்குவதே இல்லை. இந்த அலர்ஜிக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கபடாததால் நீங்களும் பார்க்காமல் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நான் ராமரைப் போன்று வில்லை உடைத்துத் திருமணம் செய்ய இயலாவிட்டாலும் எந்தத் தருணத்திலும் அவர் தீக்குளிக்க சொன்னதுபோல் சொல்லவே மாட்டேன். என் காதலை ஏற்றுக்கொண்டு நீங்கள் என் மனைவியானால்:
அ) திருமணத்திற்குப் பின்னரும் நம் காதல் தொடர வேண்டும் ஆ) என்னுயிர் தோழியாக நீங்கள் இருக்க விரும்புகிறேன் இ) நம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டும்
மேற்கண்டவை தவிர்த்து நானும் உங்களுடன் வீட்டு வேலைகளில் கைக் கொடுப்பேன். நீங்களும் வீடே கதியேன்று இராமல் என்னுடன் கைக்கோர்த்து வெளியுலகத்திற்கு வர மிகுந்த ஆவல் எனக்கு. இந்த உலகை உங்களுடன் ரசிக்க விரும்புகிறேன்.
5. எனக்குக் கோழிப் பிரியாணி, வடை, பாயாசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குச் சமைக்கத் தெரியாவிட்டால் நான் சமைக்கக் கற்றுக்கொள்கிறேன். இப்போதைக்கு முட்டையும் அப்பளமும் சுவையாக பொறிப்பேன். சொந்த வீடு, கார் உண்டு. என் வீட்டில் சிரமப்பட்டு குத்துவிளக்கேற்ற வேண்டியதில்லை. மின்சார விசையை அழுத்தினாலே வீடு மின்சார விளக்குகளால் ஜெகஜோதியாய் காட்சியளிக்கும். வார இறுதியில் சினிமாவுக்குச் செல்லலாம் (பேய் படங்கள் என்றால் எனக்குப் பயம், அதைத் தவிர மற்ற படங்கள் பார்க்கலாம்). நேரம் கிடைத்தால் கண்ணாமூச்சி, பல்லாங்குழி விளையாடலாம்.
6. இத்துடன் என் சுயக்குறிப்பு, அண்மையில் புலிப்பொம்மையுடன் நான் எடுத்துக் கொண்ட நிழற்படம், பிறப்புப் பத்திர நகல், அடையாள அட்டை நகல் ஆகியவற்றோடு முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் மருத்துவ பரிசோதனைக் குறிப்பையும் இணைத்துள்ளேன். என்னுடைய விண்ணப்பதைப் பரிசீலித்துப் பார்க்குமாறு காதலுடன் கேட்டுக் கொள்கிறேன். விருப்பமிருந்தால் இருவரும் சேர்ந்து ‘நெஞ்சே நெஞ்சே நீ எங்கே’ என்ற பாடலைப் பாடலாம். இல்லையென்றால் நான் மட்டும் ஒரே ஒரு நாள் மட்டும் ‘காதல் வளர்த்தேன்’ பாடலைப் பாடிக் கொள்வேன்.

நன்றி.
இப்படிக்கு,
சித்தார்த்
(பின்குறிப்பு : ‘அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்’ எனக் கடித்தை ஆரம்பிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் அதிகாரப்பூர்வ கடிதம் என்பதால் இயலவில்லை. மன்னிக்கவும்)

———-
ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா