பி. ஏ. கிருஷ்ணன்
(இந்தக் கட்டுரை தில்லியிலிருந்து வந்து கொண்டிருக்கும் வடக்கு வாசல் பத்திரிகைக்காக எழுதப் பட்டது. பத்திரிகையை திரு. பென்னேஸ்வரன் பல பிரச்சினைகளுக்கிடையே நடத்தி வருகிறார். இது வரை மாதம் தவறாமல் ஐந்து இதழ்கள் வெளிவந்துள்ளன.
பத்திரிகைக்கு சந்தா கட்டிப் படித்துப் பாருங்கள். அது தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிற மாதிரி நீங்களும் விரும்பினால், உங்களால் முடிந்த அளவு திரு. பென்னேஸ்வரனுக்கு உதவி செய்யுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Vadakku Vaasal Publications
5210 Basant Road,
Near Karnail Singh Stadium,
Paharganj,
New Delhi 110055,
INDIA
Phones: 011 55937606, 09313302077)
கத்ரீனா அமெரிக்காவைத் தாக்கிக் கொண்டிருந்த போது நான் பாஸ்டன் நகரில் இருந்தேன். விடாத மழை. வீட்டில் நான் மட்டும். பொழுது போகாமல் என் மருமகனின் விடியோ குவியல்களைத் துழாவிய போது கிடைத்த புதையல் விட்டோரியோ டி சிகாவின் “ சைக்கிள் திருடன்” (The Bicycle Thief). இந்தப் படத்தை நான் முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறேன். என் தந்தையுடன் பார்த்த மிகச் சில படங்களில் இது ஒன்று. ஐந்து வயதில் பார்த்தது. எனக்கு ஐம்பது வயது ஆன பின்பும் என் தந்தை நினைவு படுத்திக் கொண்டிருந்த படம். (“என்ன படம்டா இப்பல்லாம் எடுக்கறான். சைக்கிள் திருடன் மாதிரி வருமா ? நான் நீ குழந்தையாக இருக்கும் போது கூட்டிண்டு போயிருக்கேனே!”). மற்றொரு மிகப் பெரிய மனிதரையும் இந்தப் படம் கவர்ந்திருக்கிறது. லண்டனில் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் தன் மனதில் தோன்றியதாக சத்தியஜித் ரே சொல்கிறார்: எனக்கு உடனே தோன்றி விட்டது. நான் பதேர் பாஞ்சாலியை படமாக எடுத்தால் இந்தப் படம் மாதிரி தான் எடுப்பேன். இயற்கையான (செட்டுகள் இல்லாத) சூழலில், புகழ் அடைந்திராத நடிகர்களைக் கொண்டு.
குழந்தைப் பருவத்தில் பார்த்த படம் நினைவில் நிற்பதால் அது சிறந்த படம் என்று அர்த்தம் இல்லை. நான் குழந்தைப் பருவத்தில் பார்த்த படங்களில் ஒன்று ‘பாதாள பைரவி ‘. எனது நினைவில் இன்றும் நிற்கும் படம். அது சிறந்த படம் என்று அதன் தயாரிப்பாளர்கள் கூடச் சொல்ல மாட்டார்கள். டி சிகாவின் சைக்கிள் திருடன் கதையோ அல்லது படத்தில் என்ன நடக்கிறது என்பதோ எனக்கு நினைவில் இல்லை. எந்த ஊரில் பார்த்தேன் என்ற நினைவு கூட இல்லை. ஆனால் அந்தப் படத்தில் ஒரு தந்தையும் மகனும் படம் முழுவதும் வந்த நினைவு. அந்தப் பையனைப் போலவே நானும் படம் முடிந்ததும் என் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த நினைவு. சிறிது தூரம் நடந்ததும் குனிந்து வெற்றிலைச்சாறு ஒட்டிய உதடுகளால் என் கன்னத்தில் அவர் முத்தம் கொடுத்த நினைவு. சாற்றுச் சுவடுகளைத் துடைத்துக் கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்துச் சிரித்த நினைவு. என்னை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று (மாருதி விலாஸ் ?) எனக்கு ஒரு தோசை வாங்கிக் கொடுத்து அதை நான் சாப்பிடுவதை அவர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நினைவு.
பாஸ்டனில் இந்தப் படத்தை இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்து முடித்ததும் கைகால் பரபரத்துக் கொண்டு வந்தது. என் தந்தையின் நினைவு வந்தது. வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. படத்தை மறுபடியும் பார்த்தேன். அடையமுடியாத சிகரங்களை மனிதன் சில சமயங்களில் அடைந்து விடுகிறான். அத்தகைய தருணங்களில் ஒன்று இந்தப் படத்தை எடுத்தது என்று எனக்குத் தோன்றியது. பல சிறந்த படங்கள் சாதாரண மக்களால் நிராகரிக்கப் பட்டு விடுகின்றன.
ஆனால் எல்லாத் தளங்களிலிருந்தும் பார்க்கும் மக்களுக்கும் ஒரு படம் பிடிக்கலாம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்க முடியும்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த காலம். ரோம் நகரில் வேலை கிடைப்பது மிகக் கடினம். ஒருவனுக்குக் கிடைக்கிறது. சுவரொட்டி ஒட்டும் வேலை. ஒரு நிபந்தனையுடன். அவனிடம் ஒரு சைக்கிள் இருக்க வேண்டும். இருந்த சைக்கிளை அடகு வைத்து விட்ட அவன் – பெயர் ரிச்சி – வேலையை இழக்க விரும்பவில்லை. தனது படுக்கை விரிப்புகளை (சிறிது விலை உயர்ந்தவை) அடகு வைத்து சைக்கிளை மீட்கிறான். வேலைச் சேர்ந்த முதல் நாளிலேயே அவனது சைக்கிள் திருட்டுப் போய் விடுகிறது. அவன் ஏணியில் சுவரொட்டியை (ரீடா ஹேவொர்த் நடிக்கும் ஹாலிவுட் படம் – அவனது வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் இருக்கும் படம்) ஒட்டுவதற்காக நிற்கும் போது அவன் கண் முன்னாலேயே ஒருவன் சைக்கிளை ஓட்டிச் சென்று விடுகிறான். ரிச்சி திருடனைத் துரத்த அவனது கூட்டாளி ஒருவன் இவனைத் திசை மாற்றி விடுகிறான். போலீஸிடம் செல்கிறான். இத்தாலிய போலீசுக்கும் நமது போலீசுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நீயே உன் சைக்கிளைத் தேடிக்கொள் என்று சொல்லி விடுகிறார்கள். எப்படித் தேடுகிறான் என்பதையே இந்தப் படம் சொல்கிறது. மனித வாழ்க்கை முழுவதும் தொலைந்ததையோ தொலைந்ததாக நினைத்தவையையோ தேடுவதிலேயே கழிந்து விடுகிறது. தேடல்களில் பல சமயம் இருப்பவையும் தொலைந்து விடுகின்றன. ஆனால் தேடல்களின் தீவிரம் பெரும்பாலும் குறைவதில்லை. வாழ்க்கையின் முடிவு வரை. வாழ்க்கை முடிந்தாலும் தேடலின் வரைபடங்கள் வாழத் தொடங்குபவர்களிடம் கொடுக்கப் படுகின்றன.
சினிமாவின் அற்புதங்கள் பலவற்றை இந்தத் திரைப்படம் நிகழ்த்திக் காட்டுகிறது. அடகுக்கடையில் ரிச்சி கொடுத்த விரிப்புகளை வைக்க கடைக்காரர் இடம் தேடும் காட்சி. காமிரா தரையிலிருந்து தொடங்கி அவர் கூரைக்கு அருகே இடம் கண்டுபிடிக்கும் வரை செல்கிறது. இவனது வறுமை தனியானது அல்ல. வறுமை தனிமைப் படுத்தப் படாததனால் வறுமையுற்றவர்கள் தனிமை ஆகி விடுகிறார்கள். ஆனாலும் அமெரிக்க நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லர் சொன்னது போல சைக்கிள் திருடன் மனிதன் தனது கண்ணியத்தை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காததைப் பறை சாற்றும் படம். அவனுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சைக்கிளைத் தேட உதவி செய்கிறார்கள். ஆனால் உதவுபவர்களில் மிக அணுக்கமானவன் ரிச்சியின் மகன். எட்டு வயதான ப்ரூனோ. சினிமா குழந்தைகளில் இறவாக் குழந்தை இவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். பெட்ரோல் விற்கும் கடையில் வேலை செய்யும் அவன் தந்தையுடன் அவன் செல்லும் இடம் எல்லாம் செல்கிறான். பழைய சைக்கிள்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்து விலைமகளிர் இல்லம் வரை. தந்தையை விட உலகத்தை ஓரளவு அதிகம் புரிந்து கொண்டிருப்பவனோ என்று நமக்குத் தோன்ற வைக்கிறான். ஒரு இடத்தில் ரிச்சியே எரிச்சலில் கேட்கிறான் – ‘நீ என்ன எனது மனச்சாட்சியா ‘ என்று.
திருடனைக் கடைசியில் தந்தையும் மகனும் கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆனால் திருடன் இருக்கும் இடத்தில் எல்லோரும் அவனுக்குத் துணை போகிறவர்கள். அவர்கள் வறுமையும் இரக்கத்தைச் சுரண்ட வைப்பது. போலீஸ் வந்தும் அவனால் திருடனை ஒன்றும் செய்ய முடிவதில்லை. கடைசியில் ரிச்சி விளையாட்டு அரங்கு ஒன்றிற்கு அருகே ஒரு சைக்கிளைப் பார்க்கிறான். அதன் உடைமையாளர் அருகே இருப்பதாகத் தெரியவில்லை. பையனை பஸ்ஸில் போ என்று சொல்லி விட்டு அவன் சைக்கிளைத் திருடிக் கொண்டு ஓட முயற்சி செய்கிறான். ஆனால் அவனுக்கு திருட்டில் தேர்ச்சி இல்லை. எளிதாகப் பிடிபட்டு விடுகிறான். பொது மக்கள் அவனை சைக்கிளின் உடைமையாளரிடம் கொண்டு வருகிறார்கள். ப்ரூனோவும் நடப்பதைப் பார்த்து தந்தையிடம் வந்து விடுகிறான். சைக்கிளின் உடைமையாளர் சொல்கிறார்: இவன் ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டிருக்கிறான். நான் மேலும் ஏது செய்ய விரும்பவில்லை என்று. மகன் கையைப் பிடித்துக் கொண்டு தந்தை நடந்து செல்கிறான்.
கடைசி காட்சிகளில் விளையாட்டு அரங்கில் அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பல சைக்கிள்கள் காட்டப் படுகின்றன. ஒன்று கூட ரிச்சிக்கு சொந்தமானதில்லை என்று நினைக்கும் போது நமக்கு சைக்கிள்கள் மீதே வெறுப்பு வருகிறது. திருடன் தான் திருடவில்லை என்று சாதிக்கும் போது அவன் மீது கோபம் வருகிறது. அந்தக் கோபத்தின் நியாயத்தை நம்மையே சந்தேகப்பட வைப்பது ரிச்சியின் திருடல் முயற்சி.
படத்தின் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று ரிச்சி ப்ரூனோவை அடித்து விட்டு அவனைச் சமாதானம் செய்யும் விதமாக ரெஸ்டாரண்ட்(அவன் தகுதிக்கு மேற்பட்டது அது என்று நமக்குத் தெரிந்து விடுகிறது) ஒன்றிற்குச் சாப்பிட அழைத்துச் செல்வது. படத்தில் அந்தக் குழந்தை சிறிது மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் இது ஒன்றுதான் என்று நாம் நினைக்கும் போது, ப்ரூனோ அருகே ஒரு குடும்பத்தினர் பாஸ்டா சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அக்குடும்பத்துக் குழந்தை ஒன்று தன்னை அறியாமலே தனது செல்வத்தின் சக்தியை ப்ரூனோவிடம் காட்ட முயற்சி செய்கிறது. ப்ரூனோவின் தந்தை சொல்கிறான் ‘அந்தப் பாஸ்டாவின் விலை ஒரு மில்லியன் லிராவாவது இருக்கும் ‘. நீளத் திரிந்துழலும் நீங்கா நிழல் வறுமை. மகிழ்ச்சியின் மீதும் படிவது.
இந்தப் படத்தின் பெண் பாத்திரங்கள் சில காட்சிகளிலிலேயே வந்தாலும் மிக அழுத்தமாகச் சித்தரிக்கப் படுகிறார்கள். ரிச்சியின் மனைவி, சோதிடம் சொல்பவர், திருடனின் அன்னை போன்றவர்கள் தங்களது தனித்தன்மையை மிகச் சில சொற்களிலில் உறுதிப் படுத்தி விடுகிறார்கள். எனக்கு இந்தப் படத்தில் மிகப் பிடித்த பெண் பாத்திரம் திருடனின அன்னை. ஒரே காட்சியில் வந்தாலும் அவர் வறுமையின் கசப்பிற்கும், பொய்மைக்கும், அது திணிக்கும் இரட்டை நிலைகளைக்கும் உதாரணம்.
இந்தப் படத்தை எடுத்த விட்டோரியா டி சிகா ஒரு புகழ் பெற்ற நடிகர் கூட. கிட்டத்தட்ட நமது எம்ஜியார் மாதிரி. இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்னால் ‘ வெள்ளைத் தொலைபேசி ‘ படங்களில் ( (ஹாலிவுட்டைத் தழுவி இத்தாலியில் எடுக்கப் பட்ட படங்கள் அவ்வாறு அழைக்கப் பட்டன) நடித்துக் கொண்டிருந்த அவர் Neorealist படங்கள் எடுக்கத் தொடங்கியது நமது நற்பயன். அவரது Shoeshine படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் அடுத்தப் படத்திற்குக் கதை தேடிக் கொண்டிருந்த போது திரைக்கதை எழுத்தாளர் ஸவாட்டினி ஒரு புத்தகத்தை டி சிகாவிற்குப் படிக்கக் கொடுத்தார். அது ஒரு சைக்கிள் திருட்டைப் பற்றிய கதை. ஆனால் திருட்டுக் கொடுத்தவன் ஒரு வரட்டுக் கலைஞன். பிற்போக்கு வாதி. மேலாக, அவனிடம் இன்னொரு சைக்கிள் இருந்தது. இந்தக் கதையின் கருவை வைத்துக் கொண்டு, டி சிகா அவர் மிகவும் மதிக்கும் கிங் விடோர் எடுத்த ‘கூட்டம் ‘ (The Crowd) படத்தையும், சார்லி சாப்ளினின் ‘ஒரு நாயின் வாழ்க்கை ‘(A Dog ‘s Life) மற்றும் ‘சிறுவன் ‘ (The Kid) படங்களையும் நினைவில் நிறுத்தி எடுத்த படம் சைக்கிள் திருடன். படம் எடுக்க பணம் கிடைக்காமல் மிகவும் தவித்தார் டி சிகா. ஹாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளரான ஸெல்னிக் உதவி செய்யத் தயாராக இருந்தார் – ஆனால் அவர் விதித்த நிபந்தனை படத்தின் கதா நாயகன் காரி கிராண்டாக இருக்க வேண்டும் என்பது! மிக முயற்சி எடுத்து இதாலியிலேயே டி சிகாவால் பணம் திரட்ட முடிந்தது. ப்ரூனோ பாத்திர நடிகர் தேர்விற்காக தனது மகனைக் கூட்டிக் கொண்டு வந்தவர் லம்பார்டோ மாஜியரோனி. மகனுக்குப் பதிலாக அவரே ரிச்சியின் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ப்ரூனோ பாத்திரத்தில் நடிக்க சரியான சிறுவன் கிடைக்காததால் மாஜியரோனியை வைத்துக் கொண்டு படம் எடுக்கத் தொடங்கிய டி சிகா ஒரு நாள் படத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் என்ஸோ ஸ்டாயோலாவைக் கண்டு பிடித்தார். ‘எனது நேப்பிள்ஸ் நகரத்துப் புனிதர்(Saint) ஜானாரியஸ் அனுப்பிய குழந்தை அவன் ‘ என்று டி சிகாவே கூறியிருக்கிறார்.
படத்தில் ஒரு இடத்தில் ரிச்சி சொல்கிறான் ‘எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது-மரணத்தைத் தவிர ‘ என்று. இந்தப் படம் மரணத்தை வெல்லும் மருந்தையும் சாப்பிட்டு வந்திருக்கிறது என்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் நினைத்தார்கள்.
டி சிகாவும் இந்தப் படத்திற்குப் பிறகு பல படங்களை எடுத்திருக்கிறார். ‘இரு பெண்கள் ‘ ( ஸோபியா லாரனிற்கு ஆஸ்கார் பரிசு வாங்கிக் கொடுத்த படம்) ‘நேற்று, இன்று நாளை ‘ போன்ற படங்கள். ‘சைக்கிள் திருடன் ‘ போல அவராலேயெ எடுக்க முடியவில்லை.
இந்தப் படத்திற்கு உரிமை கொண்டாடியவர் பலர். உதாரணமாக மிகச் சிறந்த கத்தோலிக்கப் படங்களில் ஒன்றாக இது கருதப் படுகிறது. ஏனென்றால் கதை வெள்ளிக் கிழமை ஆரம்பித்து ஞாயிற்றுக் கிழமை முடிகிறது. கிறிஸ்துவின் மரணத்தில் ஆரம்பித்து அவர் மீண்டெழும் வரை. இடையில் படத்தில் நரகம், சொர்க்கம், இடைப்புலம் எல்லாவற்றையும் நாம் சந்திக்கிறோம்.
பாஸீன் என்ற திரைப் பட விமரிசகர் இந்தப் படத்தின் மார்க்சீய தாக்கத்தைப் பற்றிப் பேசும் போது சொன்னார்: In the world where this workman lives, the poor must steal from each other in order to survive. ஆனால் படத்தின் கடைசி காட்சிகள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இணக்கம் வலுப் படுவதே மானிட வாழ்வு உயர்வு நிலையை அடைவதற்கு வழி என்பதையே கூறுகின்றன. இதனாலேயே சில மார்க்சீய விமரிசகர்கள் படத்தின் கடைசிக் காட்சி படம் முழுவதும் காட்டப் படும் சமுதாய விமரிசனத்தை மழுங்க அடிக்கிறது என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. மானிடத்தின் மகத்தான தருணங்களைச் சித்தரிக்கும் எந்த படமும் மார்க்சீயத்திற்கு எதிராக இருக்க முடியாது.
டி சிகாவிடம் ஒரு முறை நியோரியலிஸம் (புதிய நேரியம்)என்றால் என்ன என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இது: புதிய நேரியம் என்பது உண்மையான இடங்களில் படம் எடுப்பது அல்ல. புதிய நேரியம் என்பது உண்மை அல்ல. அது கவிதையில் வடிகட்டிய உண்மை.
என் தந்தை என்னிடம் சொன்னது போல நானும் என்னுடைய மகனிடம் தொலைபேசியில் இந்தப் படத்தை நீ நிச்சயம் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
‘அது ஏன் உன் குரல் இத்தனை பதட்டமா இருக்கு ? ‘
‘நான் உன்கிட்ட சொல்றது போல நீயும் உன் குழந்தைகிட்ட சொல்லுவியான்னு நினைச்சேன். பதறறது. ‘
‘புரியல்லை. ‘
‘படத்தைப் பாரு. புரியும் ‘
நீங்களும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். உங்களுக்கும் புரியும்.
பி. ஏ. கிருஷ்ணன்
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- இன்று சொல்லிச் சென்றது
- அணுவும் ஆன்மீகமும்
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- கற்பு என்றால் என்ன ?
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- அந்த பொசங்களின் வாழ்வு….
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- சிவா ! ராமா ! – 2060
- சிரிப்பு
- கடிதம்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- மலர்களும் முட்களும்
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- கடிதம் – ஆங்கிலம்
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- கறுப்புப் பூனை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- பாலம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- எடின்பரோ குறிப்புகள்-8
- மீள் வாசிப்பில் சூபிசம்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இளமையா முதுமையா
- எதுவுமில்லாத போது
- மீண்டும் மரணம் மீதான பயம்
- கவிதைகள்
- சிரிப்பு
- புனித உறவுகள்