கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

சத்தி சக்திதாசன்


வண்ண நிலவே கொஞ்சம் நில்
அன்று என் அன்னை
எனக்கு
அழகிய கிண்ணத்தில் சோறூட்டும் வேளை
அழைத்தது உதவிக்கு உன்னைத் தானே ?
சொல் !

இன்று
இந்த குப்பைத்தொட்டியில்
இலை பொறுக்க ஒளி வேண்டி
இரைஞ்சி நானிற்பதும் உன் உதவி
வேண்டித்தானே !

நானின்று தெருப்பிச்சைக்காரன்

அழியா நிலவே !
தேயும் நேரம் எப்படி ?
தேற்றிடுவாய் உன் மனதை
தெரிந்தால் நானும் ஆற்றிடுவேன்
தேய்பிறை உந்தன் கதைகூறி

வளர்வது நிச்சயம் தேய்ந்ததன் பின்னால்
வண்ணநிலவு உன்
வாழ்க்கையின் காலங்கள் நிச்சயம்
வறுமையின் பிடியில்
வாடும் எனது ஆயுளில் இனி
வசந்தங்கள் வருவது எங்ஙனம் நிச்சயம் ?

நானின்று ஒரு தெருப்பிச்சைக்காரன்.

அரிசிக் கடையினில்
அடுக்கார் என்னை
ஆலயவாசலில்
அடைக்கலம் இல்லை
அடங்காப் பசியை
அடைக்கும் வழி
அறியேன் நானே !

வானத்து நிலவே ! என்
வேதனைகளின் சாட்சியே நீதான்

கடற்கரை மணலில் குடும்பமாய்
கடலை வாங்ககிக்
கடித்திடும் மனிதர்
கண்கள் கலங்கக் கையை ஏந்தும்
காட்சியை மறுத்து
கலைத்தே என்னை
காணவும் மறுப்பர்
கடலையை எறிந்து
குழந்தைகள் விளையாட்டு !

நானின்று தெருப்பிச்சைக்காரன்

கெடுத்தான் ஒரு பாவி அன்னையை
உதித்தேன் இப்பாவி பூமியில்
அனுபவித்தேன் அன்னபை அன்னை வாழுமட்டும்
இழந்தேன் என்னையே அவள் மறைவினில்

ஜாதிகள் பலவுண்டாம் என
ஜகத்தினில் முழங்கிடும் மனிதர் பல
அழித்திடுவோம் அதனை, மேடைகளில்
அலறிடும் மனிதர்கள் ஆயிரம்
ஏழை என்றொரு ஜாதி இருப்பதை
ஏன் தான் மறந்தனரோ ?

தமிழுக்காய்ப் பிறந்து
தமிழுக்காய் வாழ்ந்து
தமிழுக்காய் மடிந்த அந்த
தமிழ்ப்புலவன் பாரதியை
தவிக்க விட்டததிந்தச் சமூகம்
தணிக்குமோ இந்த விலாசமற்றவனின்
தவிப்புக்களை

குழந்தையாய்க் கேட்டது பாற்பிச்சை
சிறுவனாய்க் கேட்டது கல்விப் பிச்சை
குமரனாய்க் கேட்டது வேலைப் பிச்சை
இன்று
முதுமையில் கேட்பது வயிற்றுப் பிச்சை

அன்றும் நீயே சாட்சி
இன்றும் நீயே சாட்சி
என்றும் வாழும் வண்ண நிலவே
வென்றும் ஏழை வாழ்ந்தால்
நன்றும் பூமியில் மானிடர் வாழ்க்கை

நான் நிச்சயமாய் ஒரு தெருப்பிச்சைக்காரன் !

0000

இயற்கையை ரசித்தேன்

சத்தி சக்திதாசன்

மழை பொழிந்தது மணல் கரைந்தது முகில் கலைந்தது – அந்த
மழையின் வாசம் மட்டும் என மனத்திலிருந்து அகல மறுத்தது
தென்றலடித்தது இலைகள் அசைந்தன செடிகள் வளைந்தன – அந்த
குளிர்மையின் இனிமை நெஞ்சத்தில் உறைந்து படர்ந்தது
குயிலிசைத்தது குரலினித்தது மனம் துள்ளியது தேன் கசந்தது – அந்தக்
காலையின் போர்வை பனியின் கூதலைக் கதகதப்பாக்கியது
மலர் மலர்ந்தது மாலை பிறந்தது உள்ளங்கள் கலந்தன காதல் கசிந்தது – அந்த
மயக்கம் கொடுத்த சுகம் மனதின் சுவர்களை மெதுமையாய்த் தீண்டியது
வண்டமர்ந்து தேனருந்தியது , வண்ணத்திப் பூச்சி வட்டமடித்தது – அந்த
வர்ணங்கள் தீட்டிய ஓவியம் இதயம் எனும் திரையில் மிளிர்ந்தது
தவளை பாய்ந்தது நத்தை ஊர்ந்தது அட்டை ஒட்டிக் கொண்டது – அந்த
தருணம் மட்டும் வாழ்க்கையில் ஏனோ கல்லில் எழுத்தானது
நான் இருப்பதும் நான் வாழ்வதும் நான் மடிவதும் – அந்த
நல்லதொரு இயற்கை விரித்த இந்தப் பூமியின் பூவடையின் மேல் தான்
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation