கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

சத்தி சக்திதாசன்


வீதியெல்லாம் அழுகுரல்
விதியென்றொரு
ஓலம்
நாதியற்ற குழந்தைகள்
நசுங்கும் காட்சிகள்
நாட்டின் மீதொரு
குண்டு மழை
பொழியும் சோகம்
ஜயகோ மறைந்தது
அங்கே
மனிதம் தான்

போரென்றோர் கோரம்
ஏன் தோழனே ?
புனிதம் என்றோர்
சுகந்தத்தை
பூமியில் ஏனோ
தூவ மறந்திவர்
பாதுகாப்பது இந்தப்
பாரினில் எதையாம் ?
மறைந்தது
அங்கே
மனிதம் தான்

வாழும் இந்தப் பாழும்
வாழ்க்கைக்காய்
விதமான வேடங்கள்
விடிந்தும் இருளில்
வீழ்ந்திடும் பலரும்
இரவைப் பகலாய்
விடித்திடும் சிலரும்
உருட்டும் உலகின்
இருட்டைக் கலைக்க
கொளுத்தும் வெளிச்சம்
குண்டு மழையில்
பிறந்ததுவோ

கருத்து வேற்றுமைகளைக்
களைக்க நாடுகள்
நாடுவது போரானால்
நாளையின் விளக்குகள்
கக்கப் போவது
இருளைத்தான்; இங்கே
நாம்
தொலைத்தது மனிதமே
தெரிந்துகொள் தோழா !

வாழ வகை தெரியாமல்
வாடித் தள்ளாடும்
உயிர்கள்
உன்மத்தம் கொண்டு
உலகக் காவலர் எனும்
உள்ளமற்ரோரின்
உண்மையற்ற யுத்தம்
தனை எதிர் கொண்டு
வாழ எப்படி வகை
அறிவர் ?

உலகில் அமைதி
உலா வர
உருவாக வேண்டிய
புரிந்துணர்வுகளுக்கான
அடித்தளங்களை
ஆயுத பலம் கொண்டோர்
ஆணித்தரமாய்
அடிநாட்டினால் மட்டுமே
அமைதி என்றோர்
தாமரை மலர்ந்திடும்

இழந்த மனிதத்தை நாம்
மயக்கத்திலிருந்து
எழுப்பிக் கொள்வோம்
தோழர்களே
மடிய மட்டும் விட்டு
விடாதீர்
0000

தந்தையைப் பூஜிப்போம்
சத்தி சக்திதாசன்

தந்தையர் தினமிது ; தந்தையர் தினமிது மனங்களிலெல்லாம் கொண்டாட்டம்
தவறாமல் எண்ணிடுவீர் உம் தவத்திரு தந்தையரை இத்திருநாளில்

அன்னை எனும் அன்பு விளக்கு ஒளி வீசிக்கொண்டிருக்க அதைக் காலமெல்லாம்
அணையாது பாதுகாத்திடுவார் தந்தையர் அவர் எம் மற்றொரு கண்ணல்லோ

மந்திரம் வேறொன்றில்லை இப்புவியினில் மனத்தினில் ஒலித்திடவே , எம்முயிர்
மண்ணில் உதித்திங்கு நாம் வாழும் வாழ்வதனை எமக்களித்த தந்தையர் சொல் தவிர

அனுபவம் எனும் கசப்புக் கனியதனை அன்பெனும் இனிமை தடவி அறிவின் துணையோடு
அழகாய் எமக்குப் பாடமாய்ப் புகட்டிடும் நல்லறிவு மிளிரும் உண்மை ஆசான் அவரே

குடும்பம் எனும் அந்தக் கூட்டினை அழகாய் அமைத்து அதன் நலன் தினம் கருதி
சுறு சுறுப்பாய் உழைத்து எமை உயர்த்தி வாழ்வில் ஓர் நிலைக்கு வளர்க்கும் கருணையவரே

அப்பா என்றொரு சொல்லில் நான் கண்டது வாழ்வின் பல விளக்கங்கள் ; அன்று கிடைத்தது
அர்த்தங்கள் ஆயிரம் கூறிடும் அகராதி ஆயினும் ஏனொ அப்போ நான் அறிவிலா மூடன்.
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்