கவிக்கட்டு 25-காதலின் மறுவடிவம்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சத்தி சக்திதாசன்


மறைந்த தன் காதல் ராணிக்கு
மன்னன் ஷாஜகான்
மனதின் காதலை தேக்கி
மகால் அமைத்து
மண்ணில் ஓர்
மறையா மகிமை படைத்தான்

முன்னூறோடு ஒரு ஜம்பது ஆண்டுகள்
முழுதாய் மறைந்தது
முழுமதிபோல் பூரணமான
மும்தாஜ் , ஷாஜகான் காதல் சரித்திரம்

காதலின் மகத்துவம்
காத்திடும் தாஜ்மகால்
காலத்தால் மாறாத உண்மையொன்றை
கருத்தாகக் கூறிடும்
காற்றோடு உயிர் கலந்தாலும்
கடைசிவரை அழியாது உண்மைக்
காதல் என்பதுவே !

தன்னுள்ளத்தில் ஆலயம்
தந்து
தரணிக்கோர்
தாஜ்மகாலைக் கொடுத்து
தனி உதாரணமாய் வாழ்ந்த
தலைவன் ஷாஜகான்

ஏற்றம் கொண்ட ஒர் ராஜனவன் – காதல்
ஏழையானான் ராணியை இழந்து

சீற்றம் பொங்குது இன்று
சில புல்லர்கள் காதல்தனை
சீரழிக்கும் செயலைக் கண்டே

இனிமையான பந்தத்திற்கு
இதயத்துக் காணிக்கையாய்
ஈந்தான் மொகாலய மன்னன்
ஈடில்லாத் தாஜ்மகால் தனையே

மலர்ந்த அதிசயங்களுள்
மறையாப் புகழுடைத்த தாஜ்மகால்
முன்னூற்றைம்பது ஆண்டுகள் கழித்த
முழுவிழா எடுக்கும் காலமிது

காதல் வாழ்க , உண்மைக்
காதலர் வாழ்க
காலத்தின் சிறப்பு தாஜ்மகால்
காதலின் வனப்பு
காலமெல்லாம் காதல் வாழ்க
கனிந்த இதயத்துடன் நாமும் வாழ்த்துவோம்.

0000

விளையாட்டு

சத்தி சக்திதாசன்

நான் கண்ட சோகம் அது காலத்தின் விளையாட்டு
நாளை ? அவர்களுக்கு நீண்டதோர் கனவே

ஏன் இந்த விளையாட்டு அந்த இளம் உள்ளங்களுடன்
எப்படிக் கிடைக்கும் விடை ஆண்டவன் லீலைக்கு ?

காண் அந்தக் காட்சிகளை சிறிதாகும் உன் துயரம்
கானல் நீர் தம் கனவுகளென கலங்கிடும் இளநெஞ்சங்கள்

தூண் எனத் தாங்கிய குடும்பத்தின் தலைவன் இன்று உடைந்து
தூளான கருங்கல்லைப் போலே கலங்கியவாறே

வான் உறைந்த தெய்வம் மனம் திறந்து மகிழ்வதனை
வழங்கிடுமா ? வாழத்துடிக்கும் இளம் குஇடும்பத்திற்கு
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation