கவர்ச்சி, அடக்கம் X மரியாதை!

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(7.1.2004 துக்ளக் இதழில் திரு குருமூர்த்தி அவர்கள் எழுதியிருந்த ‘பெண்கள் உடை – கவர்ச்சி vs மரியாதை’ என்னும் கட்டுரை பற்றியது.)

….

சில வாரங்களுக்கு முன்பு துக்ளக் கேள்வி-பதில் பகுதியில் ‘பெண்ணுரிமையின் முடிவு என்ன ?’ எனும் கேள்விக்குப் ‘பெண்மை’ என்று சோ அவர்கள் பதிலளித்திருந்தார்! கட்டுப்பாடற்ற சுதந்திரம் பெண்களிடையே நம் மூதாதையர்கள் காலங் காலமாக வளர்த்து வந்திருக்கும் சில சிறப்பியல்புகளை அவர்களிடமிருந்து போக்கடித்துவிடும் என்னும் பொருளில் அந்தப் பதில் சொல்லப் பட்டிருந்ததாக நமக்குத் தோன்றியது. உண்மைதான். ‘சுதந்திரம்’ என்று சொல்லும் போதே, ‘கட்டுப்பாடு’ எனும் சொல்லும் ஒருவருக்கு ஞாபகம் வர வேண்டும். கட்டுப்பாடற்ற சுதந்திரம் மனிதர்களை – அவர்கள் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி – படுகுழியில்தான் தள்ளும்.

ஆனால், ‘பெண்களிடம் போதனை மூலம் தோற்றுவிக்கப்பட்டு வந்துள்ள சிறப்பியல்புகளை ஆண்களிடமும் ஓரளவுக்கேனும் தோற்றுவிக்க வேண்டும் என்னும் அடிப்படை நியாயத்தை நம் பெரியவர்கள் புரிந்துகொண்டு செயல்பட்டிருந்தால் நம் நாடு எத்தகைய உயர்வை அடைந்திருக்கும்’ என்று ஒரு குமுறல் கேள்வியை எழுப்பாதிருக்க முடியவில்லை!

உடை விஷயத்தில் பெண்களில் சிலர் சீரழியத் தொடங்கி யிருப்பது கண்கூடான உண்மைதான். அந்தச் சீரழிவுக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமல் பொத்தாம் பொதுவில் விமர்சிப்பது சரியாகப்படவில்லை. பன்னெடுங்காலமாகவே பெண் ஒரு நுகர்வுப் பண்டமாகவே கருதப்பட்டும் அவ்வடிப்படையிலேயே நடத்தப்பட்டும் வந்திருக்கிறாள். ஆணைச் சார்ந்து வாழ்ந்தால்தான் வயிற்றுக்குச் சோறே கிடைக்கும் என்கிற நிலையில் அவள் அவனை என்றென்றும் தன்னுடன் தக்க வைத்துக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்பட்டது. அதன் பொருட்டே பெண் ஓர் ‘அலங்காரப் பிரியை’ ஆனாள்! பெண்ணின் உடல் வலுவின்மையை ஆண் தனக்கு ஆதாயப் படுத்திக்கொண்டு அவளை அடக்கியாள முற்பட்ட நிலையில், பெண் அவனது மனவலுவின்மையைப் பதிலுக்குத் தனக்கு ஆதாயமாக்கிக்கொள்ள முற்பட்டாள். தான் அழகாகக் காணப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒரு பெண்ணை ஆட்டிப் படைப்பதே அதனால்தான். ஆணைக் கவரும் வண்ணமாய்த் தன்னை அலங்கரித்து (அலங்கோலப்படுத்தி) க்கொள்ள ஒரு பெண் முனைவதற்கு ஆணே காரணமாவான்.

பெண்ணின் தற்கால நடவடிக்கை அருவுருப்புக்கும் கண்டனத்துக்கும் உரியதே என்பதில் எள்ளளவும் ஐயமே கிடையாது. அதற்கான பழியை ஆண்களின் மீது சுமத்திப் பெண்களின் ஆபாச நடை யுடை பாவனைகளை நாம் நியாயப் படுத்துவதாக யாரும் உடனே தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். சம உரிமை என்பதன் பெயரால் சில விஷயங்களில் பெண்கள் ஆண்களுக்குச் சரிக்குச் சரியாக நடக்கவோ, ‘உங்கள் அசிங்கங்களுக்குச் சரியாக எங்களாலும் அசிங்கமாக நடக்க முடியும்’ என்பதாய்த் தங்கள் ‘சமத் திறமை’ யை வெளிப்படுத்தவோ, ஆண் செய்துவரும் தவறுகளைக் தாங்களும் செய்து தம் சமத்துவத்தை எடுத்துக்காட்டவோ முனைவதில் எந்தப் பெருமையும் கிடையாது என்பதே நமது கருத்தாகும். தாங்களும் ஆண்களும் சமம் என்று கூறுவதன் மூலம் பெண்கள் ஆண்களின் மட்டத்துக்குத் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளுகிறார்கள் என்பதும் நமது எண்ணமாகும்.

மேல் நாட்டு ஆண் பெண்களின் உடைகளைக் கவனித்தால் நமக்கு ஒன்று புரியும். அங்கெல்லாம் ஆண்கள் முழு உடையிலும் (full suit) பெண்கள் அரைகுறை ஆடைகளிலும் காணப் படுவார்கள். உலகம் முழுவதுமே பெண்ணை ஒரு துய்பொருளாகவே ஆண் கருதி அதற்குத் தோதாகவே அவளுக்குரிய உடைகளில் முதற்கொண்டு தலையிட்டு வந்துள்ளதும் அதிலிருந்து தெரியும்.

ஆனால், நல்ல வேளையாக, நம் நாட்டில் விஷயம் நேர்மாறாக இருந்து வந்துள்ளது. பெண்களுக்கு அடக்கமான உடைகளே அணிவிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், அந்த அடக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் ‘அடக்கம்’ செய்யப்பட்டு வருவது ஏன் என்பதற்குச் சில காரணங்களும் சூழ்நிலைகளும் உள்ளன.

அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்துள்ள பெண்கள் தற்போது சில ஆண்டுகளாய்த்தான் சற்றே அதிக எண்ணிக்கையில் பரவலாக வெளியே வரத்தொடங்கி யிருக்கிறார்கள். பல நாள்கள் கட்டிப்போடப்படும் பிராணி ஒன்று அவிழ்த்துவிடப்பட்டதும் புதிதாய்க் கிடைத்த சுதந்திரத்தில், ‘அவிழ்த்து விட்டதும் கழுதை, எடுத்துவிட்டதாம் ஒட்டம்’ எனும் தமிழ்ப் பழமொழிக்கேற்ப, தலைகால் தெரியாமல் – மேடு எது, பள்ளம் எது என்று கூடப் பார்க்காமல் – தெறி கெட்டு ஓடுவது போல் ஓடத் தொடங்கியுள்ளனர் என்பதே கசப்பான உண்மை. இந்த ஓட்டம் ரொம்ப நாளுக்கு இருக்காது. நம் பெண்கள் பொதுவாக நமது பாரம்பரியப் பண்பாடுகளைக் கட்டிக் காப்பவர்கள். அப்பண்பாடு அவர்களது ரத்தத்திலேயே இருக்குமாறு பார்த்துக்கொண்ட பெருமை நம் முன்னோர்களுக்கு உரியது. சில குணங்களைத் தலைமுறை தலைமுறையாகக் கைக்கொண்டு நடந்தால் அக் குணங்கள் – அவை நற்குணங்களோ, தீயவையோ – மனிதர்களின் உடம்போடு பிறக்கும் தன்மைகளாகி விடும் என்பது அறிவியல் சார்ந்த விதி! பெண்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இவ்விதி ஆண்கள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டிருப்பின், அடக்கமான பெண்களைக்கூடத் துரத்தித் துரத்தி ஆண்கள் கற்பழிக்கிற கேவலம் இன்றிருப்பது போன்ற மோசமான அளவுக்கு வந்திராது.

சமுதாயத்தைக் கெடுக்கும் ‘பணி’யில் தற்கால ‘மாசு’ மீடியா மிகவும் முனைப்பாகவே ருந்துவருகிறது. (‘மாசு’ என்னும் சொல் “ஸ்” என்கிற எழுத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பயன் படுத்தியுள்ள சொல்லன்று. அச் சொல்லுக்குரிய பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.) பத்திரிகைகளைப் புரட்டினால் அரை, முக்கால் நிர்வாண ஆண்-பெண் படங்கள். தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால் கீழ்த்தரமான அங்க அசைவுகளுடன் பேயாட்டப் பொறுக்கித்தனமான – ஈனத்தனமான – மனித மனத்தின் வக்கிரங்களுக்குத் தீனி போடும் விதமான – குரங்காட்டங்கள்.

திரைப்படங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. இவ்வளவு

கேவலமான சூழலில் நம் இளைஞர்கள் இம்மட்டேனும் இருக்கிறார்களே என்று திருப்திப்பட வேண்டியதே நியாயமோ என்று கூடச் சில சமயங்களிில் தோன்றுகிறது.

பெண்களின் பண்பாட்டுச் சிதைவுக்கு மற்றுமொரு காரணமும் உண்டு. வழி நடத்தப்பட வேண்டிய இளம் பெண்களின் தாய்மார்கள் அந்தப் பெண்களின் சின்னஞ் சிறு வயதிலிருந்தே வேலைக்குப் போய் வருவதுதான் அது. கூட்டுக் குடும்ப அமைப்பும் சிதைந்து வருகிறது. வீட்டில் முந்திய தலைமுறையைச் சேர்ந்த வயதான அத்தை, பாட்டி போன்றவர்கள் உடன் வசித்தால், அவர்கள் பெண் குழந்தைகளைக் கண்டித்தும் அவசியமான வெட்க உணர்வுகளைப் போதித்தும் வளர்ப்பார்கள். அதற்கும் வாய்ப்பின்றிப் போய்க்கொண்டிருக்கிறது. சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்னும் எண்ணத்தைப் பெண்களிடம் தோற்றுவித்ததே ஆண்களின் அராஜகங்கள்தான்.

எனினும், அத்தகைய காரணங்களைக் கடந்து, சிறு வயதில் அடக்க உணர்வு பற்றிப் போதிக்கப்பட முடியாத நிலையில் வளர்ந்திருப்பினும், கல்வி கற்ற நவநாகரிகப் பெண்கள் சிந்தித்துப் பார்த்துத் திருந்த வேண்டும் என்பதே நமது கருத்தாகும். என்ன ஆடை அணிவது என்பது தங்கள் உரிமை என்று பெண்ணுரிமைவாதிகளில் ஒரு சாரார் கருதுகிறார்கள். அது ஓர் அறிவார்ந்த கருத்தன்று என்பது நமது தாழ்மையான கருத்தாகும். தன் செயலின் பின் விளைவுகளைப் பற்றி எண்ணிப் பாராமல் எதையும் எவரும் செய்யக்கூடாது. உரிமை என்பதன் பெயரால் செய்யப்படும் ஒரு செயல் பிறரைக் கெட்டது செய்யத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், அதைச் செய்பவருக்கே ஆபத்தை விளைவிக்கின்ற சாத்தியக்கூற்றையும் அடக்கியுள்ள நிலையை ‘எப்படி வேண்டுமானாலும் நான் ஆடை யணிவேன், அது எனது தனிப்பட்ட உரிமை’ என்று கூறும் (அசட்டுப்) பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆண்கள் உள்ளத்தால் மிகவும் பலவீனமானவர்கள். அவர்களை மேலும் கெட்டவர்களாக ஆக்குவதோடு பெண்கள் தங்களுக்கும் கூடவன்றோ அபாயத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள் ? இந்த அற்ப உண்மை ஏன் வர்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது ?

பெண்கள் வெளிப்பாடாக உடுப்பது தவறு என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார தழில் நாம் எழுதிய கட்டுரை நாம் ‘சேம்சைட் கோல்’ போடுவதாக ஒரு கசப்பைப் பெண்ணுரிமைவாதிகளிடம் ஏற்படுத்தியது. உரிமை என்பதன் பெயரால் எந்த அசட்டுத்தனத்தை வேண்டுமானாலும் செய்யலாமா ? அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டாமா ? அப்படி எடுத்துக்கொள்ளும் உரிமை தனக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலையிலும் கூட அதை செய்ய அடம் பிடிப்பது அசட்டுத்தனத்தின் உச்சமல்லவா!

சீன நாட்டுச் சிந்தனையாளர் ஒருவர் பெண்கள் அணியும் உடையின் பின்னணியில் உள்ள மனத்தத்துவம் பற்றிக் கூறியுள்ளது நமக்கு ஏற்புடையதன்று. ‘ஆடையை அடக்கமாக உடுக்க வேண்டும் என்கிற வெளிப்புற ஆசையும், ஆடையக் குறைக்க வேண்டும் என்கிற அந்தரங்க ஆசையும் உள்ளவர்கள்’ என்னும் அவரது ‘கண்டுபிடிப்பு’ அறிவியல் ரீதியானதன்று. பெரும்பாலான மனத்தத்துவங்கள் ஒரு மனத்தத்துவவாதியின் தனிப்பட்ட ஊகங்களையும், அனுபவங்களையும், சில சோதனைகளையும் மட்டுமே அடிப்படையாய்க் கொண்டவை. அவற்றை மெய்ப்பிக்க முடியாது. எனவே எம்மைப் பொறுத்தவரை அது ஒரு பிதற்றலேயாகும். (தேர்தல் கருத்துக் கணிப்புப் போன்றதே அது.)

அடுத்து, பெண்கள் கால்சராய் அணிவது தமக்கு ஏற்புடையதன்று என்று குருமூர்த்தி கூறுவதைக் கற்பழிப்புகளும் பெண்சீண்டல்களும் பெருகிவிட்ட நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஏதேனும் ஆபத்து என்றால் சட்டென்று ஓட சல்வார்-கமீஸ்தான் வசதியான உடை. ஒரு கல்லூரி முதல்வர் சல்வார் கமீஸ் அணியும் மாணவிகள் கண்டிப்பாய்த் துப்பட்டா அணியவேண்டும், அதையும் ஊக்குகள் குத்திக்கொண்டு உரிய முறையில் அணிந்து அடக்கமாய்த் தென்படவேண்டும் என்று மாணவிகளுக்கு விதிசெய்தது சில பெண்ணுரிமைக்காரர்களுக்கு உடன் பாடாயில்லை. பெண்ணுரிமைவாதிகளின் அந்தக் கருத்தில் நமக்கு உடன்பாடு அறவே கிடையாது! பெண்களின் அங்க அவயவங்களைத் தாய்மையின் சின்னங்களாய்ப் பார்க்கத்தவறி அவற்றை விகாரமாக மட்டுமே பார்க்கும் சுபாவம் படைத்தவர்களாகவே பெரும்பாலான ஆண்கள் உள்ள நிலையில் பெண்கள் கவனமாகத்தான் இருந்தாக வேண்டும்.

சேலை பார்க்க அழகும் நளினமும் உடைய ஆடையே தவிர, அது காலை வாரிவிட்டுவிடும். (பன்னிரண்டு முழப் புடைவையைக் கூட அணிய வேண்டிய முறையில் அணிந்தால்தான் ஒரு பெண் அடக்கமுள்ளவளாய்த் தெரிவாள். ) அடக்கமாக உடை யணிந்தால் ஏன் பெண்சீண்டல் ஏற்படப் போகிறது என்று குருமூர்த்தி வினவக்கூடும்.

அய்யா! மதிப்புக்குரிய குருமூர்த்தி அவர்களே! பெண்சீண்டலுக்கு ஆளாகிற பெண்களில் பெரும்பாலோர் அடக்கமே உருவான கிராமப்புறத்துப் பெண்கள் என்பதையும், ஆபாசமாக உடுக்காத பல நகர்ப்புறத்துப் பெண்களும் சீண்டல் / கற்பழிப்புக் கொடுமைக்கு ஆளகிறார்கள் என்பதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். நாம் முரண்பாட்டுடன் எழுதுவதாக உடனே அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம்.

இங்கே ஒரு கசப்பான உண்மையைச் சொல்லித்தானாக வேண்டும். பெண்களுக்குச் செய்து வந்துள்ள போதனைகளில் பத்தில் ஒரு பங்கைக் கூட இந்த நாட்டு மேதாவிகள் ஆண்களுக்குச் சொல்லத் தவறிய ஓரவஞ்சனையே பெரும்பாலான அவலங்களுக்கும் காரணம். மறுபடி, மறுபடி நாம் கூறியது கூறலாக எழுதுவதைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

நமது சமுதாயம் சீரழிந்துகொண்டிருப்பதற்கு இந்த அநீதியே காரணமாகும். உடன் கல்வி பயிலும் பெண்களையும் பணி புரியும் பெண்களையும் சகோதரிகளாய்க் கருதும் பண்பை நம் ஆண்களிடம் வளர்க்கத் தவறிய பொறுப்பின்மையையோ அப் பொறுப்பின்மை ததும்பி வழியும் கல்வித்திட்டத்தையோ குருமூர்த்தி போன்றவர்கள் சுட்டிக்காட்டவேண்டாமா ?

பெண்கள் ஆபாசமாக உடுக்கக் கூடாது. ரொம்பவும் சரியே. மாற்றுக் கருத்துக்கே தில் இடம் கிடையாது. ஆனால் நகர்ப்புறமோ, கிராமப் புறமோ, அடக்கமான பெண்களே அதிக அளவில் பெண்சீண்டலுக்கும் கற்பழிப்புக்கும் ஆளாகிறார்களே! தற்கொலை வரை அவர்கள் துரத்தப் படுகிறர்களே ? இந்நிலையில் யார் குற்றவாளி ? இந்தக் கேள்விக்கு என்ன பதில் ? குமூர்த்தி போன்ற அறிவுஜீவிகள் கொஞ்சம் யோசிக்கட்டும். ஆண்கள் செய்கின்ற தப்புகளுக்குக்கூடப் பெண்களையே குற்றவாளிகளாக்கும் போக்கு நம் மக்களிடையே மிக அதிகமாக உள்ளது. ‘நான் ஆண்பிள்ளை. முன்னே பின்னேதான் ருப்பேன். நீ தான் சரியாக இருக்க வேண்டும்’ என்கிற ஆணாதிக்க மனப்போக்குக்கு எப்படிப்பட்ட அறிவாளியும் விதிவிலக்கல்லர் என்பதையே குருமூர்த்தியின் கட்டுரை சொல்லுகிறது. குருமூர்த்தி நல்ல பல விஷயங்களைச் சொல்லும் தேசபக்தி நிறைந்தவர், நல்லவர், நம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கவலைப்படுபவர் என்பவை ஐயமற வெளிப்படும் அதே நேரத்தில், பெண்களைப் பொறுத்த மட்டில் பத்தாம் பசலித்தனமான ஓரவஞ்சனைச் சிந்தனை அவரது அடி மனத்தில் உறைந்துள்ளது என்னும் முடிவுக்கே அவருடைய சில கட்டுரைகைளைப் படித்த நம்மைப் போன்றவர்கள் வரவேண்டியுள்ளது. மேலும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து, குருமூர்த்தி அவர்கள் ஆண்களுக்கும் அவர் அறிவுரைகளைக் கூறி அவர்களைத் திருத்த முற்படுவார் என்று நம்புகிறோம்.

. . . . . . . . .

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா