கழிவுகள்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

புதியமாதவி


எங்கள் நினைவுகளில்
என்ன எழுதுகின்றாய் ?
எச்சில், மலம்,
வேர்வை நாற்றம்
சொறி சிரங்கு
நகம் அழுக்கு
கண்ணீர் ரத்தம்..
இப்படித்தானே!

வானம் பூமி
நிலா நட்சத்திரம்
மலர் மது
நதி நாற்றங்கால்
எல்லாம்
உன்னிடமிருந்தாலும்
உன் சுவாசக்காற்று
உன் நினைவுப்புத்தகத்தில்
உன்னிலிருந்து தெறித்த
உன் எச்சிலை மட்டுமே
ஏன் தொட்டுச்செல்கிறது ?

தீண்டாதக் கழிவுகள்
தீண்டியதோ நினைவுகள்
முகம் சுளித்து
கை கழுவி
கால் துடைத்து
கண்ணாடியில்
முகம் பார்த்து
தூய்மையுடன்
பொய்முகத்தில்
சிரிக்கின்றாய்.

கழிவுகள் உரமாகும்
கற்பனையல்ல-
இனி-
உறங்காது
உரங்கள்.
புதைப்பட புதைப்பட
புறப்படும்
உயிர்களின் விதைகள்
கழிவுகளின் மடியில்.

…. அன்புடன்,

புதியமாதவி, மும்பை 42.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை