‘கல் பொரு சிறு நுரை…. ‘

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

ருத்ரா


கவிதையை எழுதிவிட்டு
பெயரைச் சொல்லாமலேயே
சென்றுவிட்ட
கவிஞனின்
கையெழுத்து இது.
பிாிவுத்துயரத்தில்
பிழிந்தெடுத்த
காதலின் சாறு இது.
சத்தம் இல்லாமல்
யுத்தம் புாியும்
சமுத்திரத்தின்
குருட்சேத்திரம் இது.
அன்பே!
உடைந்து உடைந்து
சிதறினாலும்
இந்த பூநுரையில்
காற்று கூட
காதலின் கல்வெட்டு.

2

வற்றாத காதலுக்கு
மை தேடி
கடைசியில்
இந்த
கடல் தொட்டு
கவிதை செய்தான்
சங்க காலக் கவிஞன்.
கல் மெய்யெழுத்து
நுரை உயிரெழுத்து.
காதலின் உயிர் மெய்யாய்
கரையோரத்துக் கனவு இது.
3

பிாிவு எனும்
கல்பட்டு
நொறுங்கிப்போகும்
நுரை பற்றி
குழைவுடன் எழுதினான்
குறுந்தொகைக் கவிஞன்.
குமிழியாய் வந்து
உதடு குவிக்கும் முன்னேயே
உடைந்து போன
முத்தத்தை
இழந்த வலி
அந்த கல்லுக்கு அல்லவா
தொியும்!
காதல் மூச்சின்
நுரை பட்டு
கல்லும் புல்லாித்த
கடற்கரைக் காட்சி இது.
4
பொறுத்து பொறுத்து
பார்த்த பின்
அந்த
நுரைக்குள்ளே
நுழைந்திருக்கும்
உயிர் கூட
சுமையானது.
தலைவன் வரவில்லை என்று
காலைச் சூாியன் முன்
தற்கொலை செய்து கொண்ட
அந்த பூவின்
குமிழியுடல் சிதறி
அங்கு
‘ஏழு வர்ண ‘ இரத்தம்.
5

உப்புக் காற்றே!
உன் உப்பாிகை
இந்த சிறு கல்.
உலா வந்த இடத்தில்
இந்த
அனிச்சங்களின்
நுரை முட்டைகளை
அடை காக்க விடாமல்
நொறுக்கிவிட்டுப் போகிறாயே.
இந்த கல்லுக்குள்ளிருந்து
காதல்
எப்போது சிறகு விாிக்கும் ?
6

சற்று நேரத்தில்
தலைவன் வந்து விடுவான்.
யாரும் இல்லை.
அதற்குள்
கசங்கிய உடையை
சாிசெய்து விடலாம்
என்று
அவிழ்த்து
அவிழ்த்து
அணியும்
அந்த கடல்மங்கையின்
சீலை அலைகளை
வேடிக்கை பார்த்தன
நாரைக்கூட்டங்கள்.
நாணங்கொண்டு
நுரைக்கையால் விரட்ட
அவள்
கல்லெடுத்து வீசுவதற்குள்
கையெல்லாம்
கரைந்து போயின.
தருணங்கள்
தகிக்கும் நெருப்பின்
தவிப்புச் சித்திரங்கள்
அவை.
7

ஆயிரம் முறைகள்.

ஆயிரம் நுரைகள்.
கன்னிக்குடம்
உடைத்து
உடைத்து
ஒரு சொல் கூட
பிரசவிக்காத
காதலின் மெளனம் இது
8

கல்லும் நுரையும்
கண்பொத்தி கண்பொத்தி
விளையாடும்
காதலின் கண்ணாமூச்சி இது.
அதில்
உடைந்து சிதறிய
கண்ணாடி நிமிடங்களின்
சில்லுகளை
உற்றுக்கேளுங்கள்.
காலம் தோற்ற பின்னும்
கால் சலங்கைகள்
கட்டிக்கொண்டு ஆடும்
காதல் எழுத்துக்களின்
நர்த்தனம் இது.
9

எழுத்துக்களின்
எதுகை-மோனைக்குள்ளிருந்து
எழுந்து கொண்டிருக்கும்
உணர்ச்சிகளின்
எாிமலை இது.
உருகியோடும்
இந்த
காலப்பிழம்பில்
‘காதலின் ‘
லாவா
இங்கு கவிதையானது.
10

உடலும்
உடல் சார்ந்த உணர்ச்சியுமே
கடலும்
கடல் சார்ந்த இடமாய்
இந்த கவிஞனின்
எழுத்தாணிக்குள்
காதலை நெசவு செய்தது.
அந்த ‘நெய்தல் ‘ இழைகளில்
சாதி மத வரதட்சிணைக்
கொடுமைகளின்
சிலந்திப்பூச்சிகள்
இழை பின்னியதில்லை.
மெல்லிய பூ நரம்பை
அந்த கல்லுக்குள்ளிருந்து
உாித்து
யாழ் மீட்டிய
கவிஞன் அவன்.
அந்த நுரைச்சிதிலங்களில்
காதலின் கற்கோட்டையை
அல்லவா
அவன் கட்டியிருக்கிறான்.

11

இந்த கணினி யுகத்தில்
காதல் கசிந்த
அந்த ‘மென் காந்தள் விரல்கள் ‘
வீணைமீட்டும்
விசைப்பலகை அல்லவா
அந்தக் கவிஞனின்
சங்கப்பலகை.
‘மடிப்பொறி ‘
எனும் ‘லேப் டாப்பில் ‘
ஒருநாள்
அவன் கை பட்டது.
ஓலைச்சுவடியில்
ஒலித்த குரல்களே
அந்த ஃப்ளாப்பிக்குள்ளும்
புகுந்தது.
‘மேண்டல்ப்ராட்டின் ‘
‘ஃப்ராக்டல் ‘ வடிவங்கள்
காதல் நுணுக்கங்களின்
சித்திரங்கள் ஆகின.
அந்த நுரைகள் எல்லாம்
‘பிளாஸ்மா ‘ மேகங்கள் ஆகின.
காதல் கடைக்கண்ணின்
‘சிக்கல் கணித சமன்பாடுகள் ‘
‘ஜ்யூலியா ‘க் கோடுகளின்
மாய பிம்பங்கள் ஆகின.
பூலியன் துடிப்புகளை
அவன் எழுத்துக்குள்
காதலின் தோகை விாிக்கும்
மயில் பீலிகள் ஆக்கினான்.
நிச்சயம்
அவன் பார்த்த சிறு கல்
‘கற்காலத்தை ‘
தாண்டிய
ஒரு ‘தற்காலத்தை ‘
தாிசித்திருக்கும்.
துயரம் கொண்டு
துவண்டு போகும்
அன்னக் கொடியல்ல
பெண் என்று
புாிந்து கொண்டிருப்பான்.
புதிருக்குள் கதிர் வீசி
மின்னல் வெட்டும்
கண்ணின்
காதல் நுரை பட்டு
‘கல்லும் நொறுங்கியது ‘
என்றொரு
புதுக்கவிதை
புனைந்திருப்பான்.

Series Navigation

ருத்ரா

ருத்ரா