கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

தமிழில் / எஸ். ஷங்கரநாராயணன்


நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள். புதிதாய் முளைத்தவை. சில இன்னும் முடிவடையாதவை. தாண்டி வயல்கள். சாலையின் இருமருங்கும் மரங்கள். மூப்பாகிப்போன, தாழத் தொங்கும் அதன் கிளைகள். சாலையில் சில இடங்களில் தார் மிச்சமிருந்தது. இடையிடையே மொண்ணையாயும் இருந்தது சாலை. கிளைப்பாதையில் சரளைக்கல் எடுப்பு. நடைபாதை போல அழகாய்க் கிடக்கிறது. சாலை, மற்றும் கூடச் சரிந்திறங்கும் கிளைப்பாதை, இரண்டன் நடுவே சிறு புல்லும் காட்டு மலர்களுமாய்ப் பள்ளம்.

வசந்தம் விடைபெற்ற கோடையின் துவக்க காலம். உலகம் அற்புதமாய்க் காட்சியளித்தது. ஆண்டவரின் நீல வானில்ி சிறிய உருண்டு திரண்ட பனிபூத்த வெளிளை மேகத் துணுக்குகள் மிதந்தபடி. கிளைகளில் பறவையொலிகள். பிரதேசமெங்கும் சிறு காற்றின் ஊடுருவல்.

அருகாமை கிராமத்தில் இருந்து பட்டணம் நோக்கி ஒரு வாகனம், சாலையில் தடக் புடக்கென்று போனது. டிரைவர் காலைத் தளர வைத்துக்கொண்டபடி எதோ விசிலில் பாடியபடி போனான். வாகனத்தின் பின்பக்கம், டிரைவருக்கு முதுகு காட்டியபடி ஒரு மஞ்சள் நாய். உட்கார்ந்து கூரிய நாசியால் அது ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொண்டே செல்கிறது. அருமையான நாய். யாருக்குமே அதைப் பிடிக்கும். ஆனால் நாம் சொல்லப் போகிற விஷயம் இதைப்பற்றி யெல்லாம் இல்லை. விட்டு விடலாம் –

ராணுவ ஆட்கள் கொத்தாய் வந்து கொண்டிருக்கிறார்கள். தரையில் அடித்த அணிவகுப்பு நடை. புழுதி கிளப்பி அதோடு பாடலாயினர். பட்டணத்தில் இருந்து மற்றொரு வாகனம் இப்போது அடுத்த கிராமம் நோக்கிக் கடந்து போனது. டிரைவர் துீங்கி வழிந்தான். நாய் எதுவும் இல்லை. சுவாரஸ்யமாயும் இல்லை அந்தக் காட்சி. இரு யாத்ரீகர்கள் அடுத்து போகிறார்கள். ஒருவன் பேருருவக்காரன். மற்றவன் கூனன். செருப்புகளை முதுகுப் பக்கம் தொங்க விட்டுக் கொண்டு வெறுங்காலுடன் நடந்து வந்தார்கள். ‘வணக்கோம் டிரைவர் அண்ணே ‘ என்று துீக்கக் கலக்கத்துடன் போய்க்கொண்டிருந்த டிரைவருக்குச் சத்தங் கொடுத்தபடி தங்கள் வழி போனார்கள். போக்குவரத்து என்று அதிகம் இல்லைதான். போகிற வருகிற வாகனங்கள் இடைஞ்சல் இல்லாமல் போய்க் கொண்டிருந்தன.

வளாகம் நோக்கிப் போகிற பாதையில் ஒராள். தளர்ந்த நடை. தலையைச் சரித்து கருப்பு கைத்தடியை அழுத்தி அழுத்தி ஒரு நடை. அவன் பெயர் பியப்சாம். யேசுமகிமை பியப்சாம். வேறு பெயர் கிடையாது. அதை வலியுறுத்திய காரணம் அவனது குணாதிசயம்தான்.

கருப்பு உடை அணிந்திருந்தான். தனது பிரியமான உறவினர்களின் கல்லறை நோக்கி அவன் போய்க் கொண்டிருந்தான். புசுபுசு ரோமத் தொப்பி அகலமான பெருவட்ட விளிம்புகளுடன் அணிந்திருந்தான். ஒருநொந்த பளபளப்பில் நீண்ட அங்கி மேலாடை, எந்தக் காலத்தியதோ. இறுக்கமான குட்டை ட்ரெளசர் சம்பந்தம் இல்லாதபடி. குழந்தைகள் மாட்டிக்கொள்ளும் கையுறைகள் பளபளப்பு இழந்து சொரசொரவென்றிருந்தன. நெட்டைக் கழுத்து. தொண்டையெலும்பு துறுத்தித் தெரிகிறது. சட்டைக் காலர் பிதுங்கி உறுத்துவதாய் இருந்தது. கல்லறைத் தேவாலயத்துக்கு இன்னும் எவ்வளவு துீரம் என்று அடிக்கடி பார்த்துக் கொண்டான். மறக்க முடியாதபடி ஏதோ ஒன்று அந்த முகத்தில் இருந்தது.

வெளுறிய, மழுமழுவென சவரம் செய்த முகம். உள்ளொடுங்கிய கன்னம், உறுத்தலான மூக்கு சிவந்து புள்ளியிட்டுக் கிடந்தது. எப்படியெப்படியோ நெளுந்து கிடந்தது அது. முகம் வெளுறிக் கிடந்ததற்கும் அதற்கும் மூக்கின் பளபளப்பு, தனியே திருவிழாவுக்கு ஒட்ட வெச்சிக்கிட்டாப்போல, இறுதிச்சடங்கில் கேளிக்கை போலக் கிடந்தது. பெரிய வாய் – ஓரங்கள் சரிந்திருந்தன. வாயை அழுத்தி மூடிக் கொண்டிருந்தான் கிழவன். கரிய புருவங்களில் சிறிய நரைகள் ஆனால் தலைதுீக்கிப் பார்க்கையில் தொப்பியடியே காணாமல் போயின. சிவந்த அந்தக் கண்களில் சோகம். பாவப்பட்ட மனுசன்.

யேசுமகிமை பியப்சாம் அந்த மந்தார சூழலுக்குள் ஒட்டவில்லை. உறவினர் கல்லறை நோக்கிப் போகிற வேறு எவரையும் விட அலாதி துக்கம் அவனிடமிருந்தது. உள்ளும் புறமும் நொறுங்கிக் கிடந்தான். எதுவும் திடுதிப்பென்று விபரீதமாய் நடந்து விடவில்லைதான் அவனுக்கு, என்றாலும் முழு வாழ்க்கையுமே அவனை ஏறியமுக்கி விழுத்தாட்டியிருந்தது.

முதல் விஷயம், அவன் குடிகாரன். அதைப் பிறகு பார்க்கலாம். மனைவி இறந்து போனாள். அவனை நேசிக்க இப்பரந்த லோகத்தில் ஒரு குஞ்சும் கிடையாது. சம்சாரம் ஆறுமாசம் முன்னால் ஒரு குழந்தையைப் பிரசவித்துச் செத்தாள். குழந்தையும் இறந்தே பிறந்தது. அது மூன்றாம் குழந்தை. மற்ற ரெண்டுங்கூட இறந்து விட்டன. டிப்தீரியாவில் ஒண்ணு. அடுத்தது தெம்பு பற்றாமல் செத்தது. பத்தும் பத்தாததற்கு அவனுக்கு வேலை போய்விட்டது. திமிர்த்தனமும் கெளரவமும் அடங்கி விட்டது. அகங்காரத்தை விடவும் பசி பிரதான விஷயமாய் ஆகிப்போன காலம்.

தாக்கு பிடிக்க முயல்கிறான். பெருமளவில் குப்புறவிழவே நேர்ந்து விடுகிறது. மெல்ல மனம் பலவீனமாகிக் கொண்டே வந்தது. ஒரு நலச்சங்கத்தில் குமாஸ்தாவாய் இருந்தவன். கெத்தான தட்டச்சுக்காரன். தொண்ணுீறு மார்க் அவன் மாதச் சம்பளம். குடிப்பழக்கத்தாலும் யாமார்க்கும் குடியல்லேம், தான்தோணிப் போக்காலும், பலமுறை எச்சரிக்கப் பட்டு, பிறகு துீக்கி யெறியப் பட்டான்.

தன் தோல்வியை அவன் ஒத்துக் கொள்ள மறுத்தான். அலட்சியப் போக்கு நாளடைவில் ஒரு ஆளின் சுயமரியாதையையும் கெளரவத்தையும் சீரழித்து விடுகிறது. அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். தான்தோணித்தனம், சித்தம் போக்கு சிவம் போக்கு எனத் திரிவதில் ஒரு தெனாவெட்டும் எடுபடப்போவதில்லை. எம்மேல என்னா தப்பு இருக்குது என்று சும்மாங் காட்டியும் வீம்பு காட்டி என்ன செய்வது ? தானே வருத்திக்கிட்ட வம்புதானே இது. மனுஷாளிடையே ஒட்ட விடாமல் செய்து விடுகிறது பிடிவாதம். அப்பிடித்தான் நம்மாளுக்கும் ஆகிப் போனது. சுயமரியாதை இழந்தான். அதனால் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. தொடர்ச்சியான சரிவுகள். அவனது வீட்டு பீரோவில் விஷம் போன்ற திரவம், பேர் தேவையில்லை, எப்போதும் இருந்தது. போதைக்கு எத்தனை கேவலமாய் அடிமையாகிப் போனான் இந்நாட்களில்!

இப்போது கருப்புக் கைத்தடியைத் தட்டிக் கொண்டே அவன் கல்லறை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். சிலுசிலுவென்ற காற்று அவன் மூக்கருகிலும் வீசியது என்றாலும் அவன் அதை உணர்ந்தானில்லை. பாவப்பட்ட, தன்னையே தொலைத்துவிட்ட மனுஷாத்மா, நேர்ப்பார்வை புருவம் துீக்கிப் பார்த்தான். திடாரென முதுகுப் பக்கமிருந்து என்னவோ சத்தம். கவனித்தான். துீரத்தில் இருந்து பரபரவென்று சத்தம். திரும்பி அப்படியே நின்றான். செமத்தியான வேகத்தில் ஒரு சைக்கிள் சரளையில் உருண்டபடி. வண்டி வேகம் மட்டுப்பட்டது. நடுவழியில் சாம் நின்றிருந்தான்.

வாலிபன். சைக்கிள் சீட்டில் கெத்தாய் உட்கார்ந்திருந்தான். அவன் ஒண்ணும் உலகத்தின் மகாபுருஷனாகவெல்லாம் உதார் காட்டவில்லை. ஒரு சாதா சைக்கிளை ஓட்டிவருகிறான். அவ்வளவே. மலிவு சைக்கிள் அது. விலை இருநுீறு மார்க் இருக்கலாம். நகரத்தில் இருந்து வருகிறவன். உற்சாகத்துக்குக் குறைவில்லை. சைக்கிள் கால்பட்டை சூரியனில் மினுமினுக்க கடவுளின் பிரம்மாண்ட வெளு வளாகத்துக்கு அவன் சவாரி போய்க் கொண்டிருந்தான். வண்ணச் சட்டை. பழுப்பு மேல்சட்டை வேறு. விநோதமான தொப்பி. வரிகளிடடு உயரத்தில் பித்தான் வைத்த தொப்பி. அதைமீறி முன்நெற்றியில் விழும் மயிர்க்கற்றை. நீல மின்னல் கண்கள். அந்தப் பிரதேசத்தின் உயிர்போல அவன் மணியை ஒலித்துக் கொண்டே வந்தான். ஆனால் பியப்சாம் வழி ஒதுங்குவதாய் இல்லை. வாழ்க்கையின் உயிர்ப்புக்கு மசிந்து கொடுக்கிறாப்போல இல்லை.

ஜீவன் ஒரு கோபப்பார்வை விட்டபடி சிறிது நெருங்கினான். பியப்சாமும் ஓரடி முன்னால் வந்தான். ஜீவனின் குறுக்கே நின்று அவன் அழுத்தமாய்ச் சொன்னான். ‘ஒன்பதாயிரத்து எழுநுீத்தி ஏழு… ‘ தரைப்பக்கம் தாழ்ந்து பார்த்தபடி பேசினான். ஜீவனின் கண்களின் கனலை அவனால் உணர முடிந்தது.

ஜீவன் ஒரு சுத்துவட்டம் அடித்தான் சைக்கிள் சீட்டைப் பின்பக்கம் பிடித்தபடி. ‘என்ன சொல்றீங்க நீங்க ? ‘ என்று கேட்டான்.

‘ஒன்பதாயிரத்து எழுநுீத்தி ஏழுல்ல ? ‘ என்றான் சாம் திரும்பவும். ‘அது வேற ஒண்ணில்ல, உன்னைப் பத்தி ஒரு பிராது குடுக்கலாம்னுதான். ‘

‘கம்ப்ளெயின்டா ? என்னைப் பத்தியா ? ‘ இன்னும் பெரிய வட்டமாய் எடுத்தபடி மேலும் மெதுவாகச் சுற்றி வந்தான் ஜீவன். ஹேன்ட்பாரை ஒடிக்க கொள்ள செளகரியமாய் இருந்தது இப்போது.

‘கண்டிப்பா! ‘ என்றான் சாம்.

‘எதுக்கு ? ‘ என்றபடி வண்டியில் முன்னிறங்கிக் கொண்டான். வண்டி கிழவன் பக்கமாய்ச் சரிந்து நின்றிருந்தது, பதிலுக்கான எதிர்பார்ப்புடன்.

‘காரணம் உனக்கே தெரியும். ‘

‘இல்ல. தெரியல. ‘

‘உனக்குத் தெரிஞ்சிருக்கணும்ல ?… ‘

‘தெரியல எனக்கு ‘ என்றான் ஜீவன். ‘அதப்பத்தி என்ன இப்ப. ‘ மீண்டும் சைக்கிளில் ஏறப் போனான். அவனை அலட்சியப் படுத்தியதைச் சொல்லாமல் சொன்னது அது.

‘இந்த வழியில் சைக்கிளில் ஏறி மிதிச்சி வர்றே நீ. ரோட்டுப் பாதையில் ஓட்டி வந்திருக்க வேணாமா நீ ? ‘

‘ஆனா ஐயா… ‘ என்னும்போதே சிரிப்பு முந்திக் கொண்டது அவனை. திரும்ப ஒரு சுத்து வலம் வந்தான். ‘வழிபூராவும் சைக்கிள் தடம் பாருங்க. எல்லாரும் இதேவழிதான் வர்றாங்க. ‘

‘அந்தக் கதைல்லா வேணாம். நான் உன்னைப் பத்தி பிராது குடுக்கப் போறேன்… ‘

‘அது உம்ம இஷ்டம். ‘ ஜீவன் திரும்ப வண்டியில் ஏறி, ஒற்றை மிதி. முன் குவிந்து முடிந்த வேகமெடுக்க முன்வந்தான்.

‘சர்த்தான். நீ இப்பிடி இறங்காமப் போயிட்டே இருந்தா பிராது குடுத்துற வேண்டிதான். ‘ அவன் குரல் உயர்ந்து கோபத்தில் சிறிது கிரீச்சிட்டது. ஆனா ஜீவன் அவனை மதிக்கிறாப்போல இல்லை. வேகமெடுத்து அவன் பாட்டுக்குக் கிளம்பினான்.

அப்பமட்டும் யேசுமகிமை பியப்சாமைப் பார்த்தவர் பயந்து போவார்கள். பல்லையும் உதட்டையும் நெளுத்து மூக்கை விகாரமாக்கி கன்னம் மேலும் டொக்கு விழுந்து… வேகமெடுத்த சைக்கிளை ஒரு வைரிப்பார்வை பார்த்தான் அவன். சிறிது முன்விரைந்து அவனுக்கும் ஜீவனுக்குமான இடைவெளுயைக் குறைத்துக் கொண்டு சைக்கிள் பின்பக்கத்து தோல்மூடியைப் பிடித்து முடிந்தமட்டுக்கு பலமாய் இழுத்து நிறுத்தினான். முகத்தில் விகார வரிகள் நெளுந்தன. ஓடிப்போய் அவன் சைக்கிளை எட்டிப் பற்றியது அதை நிறுத்தவா, அல்லது அதில் அவனும் சவாரி விடவா என்றிருந்தது! ஆண்டவரின் பெரிய விஸ்தீரணக் களம் அல்லவா அது. கிழவனின் அந்தத் துரித நடவடிக்கையில் தடுமாறி சைக்கிள் சரிந்து, பின் வீழ்ந்தது கீழே.

ஆனால் ஜீவனுக்கு இப்ப ஆத்திரம் வந்திருந்தது. ஒரு காலை ஊன்றிய வாக்கில் அவன் நின்றிருந்தான். ஐயா பியப்சாமை நெஞ்சில் கைவைத்து ஒரு தள்ளு தள்ளினான் அவன். பியப்சாம் தள்ளாடி ரெண்டடி பின்வாங்க நேர்ந்தது. எச்சரித்தான் ஜீவன் –

‘குடிச்சிருக்கீராக்கும். ஆனா மறுபடியும் தொந்தரவு கிந்தரவு குடுத்தீருன்னா, துண்டு துண்டா உம்ம வகுந்திருவேன்! புரியுதா. கையக் காலை பேத்துருவேன். மூளைல உறைக்குதா ? ‘ பிறகு சைக்கிளைத் திருப்பிக் கொண்டு தொப்பியைச் சரிசெய்து இறக்கிக் கொண்டு வண்டியைக் கிளப்பினான். வாழ்க்கை ஆமாம், கிழவனை விட்டு விலகிச் செல்ல ஆயத்தம் காட்டியது. எல்லாம் பழைய சகஜ நிலைக்கு மீண்டது. அதன் போக்கில் வேகம் எடுத்துப் போவதை, தன்னை விட்டு விலகி விலகிப் போவதை சாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

நெஞ்சு ஏறியேறி இறங்க வெறித்த பார்வையில் சாம் பார்த்தவாறிருந்தான். ஆனால் வாழ்க்கையோ ஒரு சேதாரம் இல்லாமல் தடுமாறாமல் கீழே விழாமல் போனது. போய்க் கொண்டிருந்தது.

பியப்சாமுக்கு ஆவேசம், ஆக்ரோஷம் வந்தது. கிட்டத்தட்ட அவன் கர்ஜனை செய்தான். ‘நீ போகக்கூடாது. நீ போக முடியாது. ரஸ்தாவில் போ. இது கல்லறை வழி. கேக்குதா ? இறங்கு. இப்பவே இறங்கு. உன்னைப் பத்தி பிராது எழுதிப்பிடறேன் பார். அட கடவுளே. அருமை ஆண்டவரே. ஏய் நீ கீழ விழ! அட ராஸ்கோல் உன்னை மிதிப்பேன். சரியா உன்னை செருப்புக் காலால மூஞ்சில மிதிப்பேன். ரெளடித்தனமா பண்றே இங்க… ‘

அப்பிடியொரு காட்சியை யாரும் அதுவரை அங்கே கண்டதில்லை. கல்லறைப் பாதையில் ஒரு கிறுக்குத்தனமான காட்டுக் கத்தல். மூஞ்சி கீஞ்சில்லாம் சிவுசிவுக்க ஆளைத் தள்ளாட்டிய கோபத்துடன் உடம்பே பதறி வெடவெடக்க… சைக்கிள் எப்பவோ போயிட்டது. ஆனால் இன்னும் பியப்சாம் அங்கேயே. அதே கோபாக்னி கொதிக்க.

‘அட அவனை நிறுத்துங்க. நிப்பாட்டுங்க. கல்லறை வழில வண்டிய சவாரி விடறதா ? அவன் விட்ருவானா ? நான் விட்ருவேனா ? அட பிசாசே. அட எடுபட்ட நாயே. கேடுகெட்ட குரங்கே. உன்னைத் தோலை உரிச்சி உப்பு கண்டம் போடணும். யார்ட்ட காட்ற உன் வேலையை. பிச்சிப் பிடுவேன் பிச்சி. இறங்கு நீ. மொதல்ல இறங்கிப்போ. இப்பவே. ஏய் யாராவது அவனைப் பிடிச்சி புழுதில தள்ளுங்கடா. சவாரி கேக்குதா உனக்கு… ம்ஹும். மவனே நீ மட்டும் என் கையில கெடச்சா உன் கண்ணைப் பிடுங்கி அடுப்புல போட. தடித் தாண்டவராயன். தடித் தாண்டவராயன்… ‘

இப்படி மேலும் மேலுமாய், எழுதத் தகாத, முடியாத அளவுக்கு அவன் வார்த்தையாடிக்கொண்டே போனான். வாயெல்லாம் நுரை தள்ள நாக்கூசும் வார்த்தைகளை அள்ளி வீசினான். தொண்டை உடைந்து வார்த்தை குழறித் தடுமாறியது. தெருவில் போய்க்கொண்டிருந்த சின்னப் பசங்கள் சிலர். அவர்கள் கூட நாட்டு நாய் ஒன்று… பள்ளத்தில் இறங்கிக் கடந்து வந்து கைக்கூடைகள் சகிதம் அவனைச் சுற்றிக் கொண்டார்கள். ஒரே கேலிக்கூத்தாய் இருந்தது அவர்களுக்கு. தினக்கூலிகள் வீடு கட்டிக்கொண்டிருந்த மேஸ்திரிகள் – மதிய உணவு உண்டபின்னான ஓய்வு நேரம் அவர்களுக்கு – எல்லாரும் வந்தார்கள். என்னவோ ஏதோ என்று பார்க்க வந்தார்கள் அவர்கள். ஆண்கள் பெண்கள் எல்லாரும் வந்தார்கள். ஆனால் பியப்சாம் நிறுத்துகிறாப் போல இல்லை. அவன் நிலைமை மோசமாய் இன்னும் மோசமாய் ஆகிக் கொண்டிருந்தது. கண்மண் தெரியாத கோபம். கையை நாலாபக்கமும் வீசி வீசிப் பேசிக் கொண்டேயிருந்தான். முன்னைவிடவும் பெருங்குரல் எடுக்க அவன் முயன்று கொண்டிருந்தான். மூச்சுவிடக் கூட நிறுத்தவில்லை. எங்கிருந்து எப்படி அவனில் இருந்து இத்தனை வார்த்தைகள் வந்தன, அதிசயம். முகத்தின் அஷ்டகோணல். தொப்பி பின் சரிந்திருந்தது. சட்டை அவிழ்ந்து இடுப்புவரை நெகிழ்ந்திருந்தது. இப்ப எதற்காக ஆத்திரப் பட்டானோ அது விடுபட்டிருந்தது. சூழலுக்கு சம்பந்தமே யில்லாதபடி பிதற்ற ஆரம்பித்திருந்தான். தன் வாழ்க்கைக் குறிக்கோள் பற்றி எடுத்து விட ஆரம்பித்திருந்தான். மத சம்பிரதாயங்கள். அவை அப்போதைய அவனது குரலில் விசித்திரமாய் ஒலித்தன. ஊடே ஊடே வசைகளும் இருந்தன அவற்றில்.

‘வாங்க வாங்க, எல்லாரும் வாங்க ‘ என அவன் கூவினான். ‘ஏய் நீ… அப்பறம் நீ, எல்லாப் பயல்களும் வாங்க. நீலமின்னல் கண்ணா, பட்டன் வெச்ச தொப்பிக்காரா. எல்லாம் எடுத்துச் சொல்றேன். காதாரக் கேளுங்க. எடேய் சிரிக்கவா செய்யறீங்க. தோளைக் குலுக்கறீங்களா ? நான் குடிகாரன்தான். ஆமா, நான் இப்ப குடிச்சிருக்கேன். என்னான்றே ? உலகம் அழிய இன்னுங் காலம் கெடக்கு. அந்த நாள் வரும், உருப்படாதவர்களே. கடவுள் நம்ம பாவ புண்ணியங்களைக் கணக்குப் பார்ப்பார். ஆமடா, மேகங்கள் வழியா மனித வடிவத்தில் தேவபுருஷன் வருவாரு. பேமானிகளா. அவரது தீர்ப்பில் இந்த உலகம் இராது. பேரிருள்தான் நரகந்தான் அனுபவிக்கணும் நீங்க, பாவிகளே…. ‘

இப்ப கணிசமாய்க் கூட்டம் சேர்ந்து விட்டது அங்கே. சிரிப்பும் கும்மாளமுமாய் சுற்றிவர ஜனங்கள். மேலும் ஆட்கள் சேர ஆரம்பித்திருந்தார்கள். ஆண்கள். பெண்கள். மேஸ்திரிகள். பெரியாட்கள். சித்தாட்கள். ஒரு டிரைவர் தெருவில் இருந்து பள்ளத்தில் இறங்கி அவர்களைப் பார்க்க வந்தான். கையில் சவுக்கு எடுத்து வந்திருந்தான். ஒருத்தன் சாமைக் கையமர்த்தப் பார்த்தான். சாம் அடங்குவதாய் இல்லை. அணிவகுத்துச் சென்ற சில சிப்பாய்கள் அவனைப் பார்த்தபடி சிரித்துச் சென்றார்கள். அந்தத் தெருநாய் அவன் முகத்தைப் பார்க்க வாலை ஆட்டியபடி ஊளையிட்டது.

யேசுமகிமை பியப்சாம் இன்னொரு தரம் அலறி ‘நகரு நகரு கேடுகெட்ட சனியனே ‘ என்று கையசைத்தபடி கீழே விழுந்தான். குரல் பாதியில் உள்வாங்கி அமைதி சூழ்ந்தது. பெருவிளிம்புத் தொப்பி சற்று த ள் ளி ப் ப ற ந் து தரையில் சிறு துள்ளலுடன் வி ழு ந் து ஓய்ந்தது.

அசைவின்றிக் கிடந்த பியப்சாமை இரண்டு மேஸ்திரிகள் சோதித்தார்கள். முகத்தில் தண்ணீர் அடித்தார்கள். பிராந்தியால் அவன் நெற்றிப் பொட்டில் கதகதப்பூட்டிப் பார்த்தார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஆம்புலன்ஸ் சிறிது நேரத்தில் வந்து பியப்சாமை அள்ளிக்கொண்டு போனது. எல்லாம் நாடகக் காட்சிபோலவே இருந்தது இறுதிவரை.

The way to the churchyard/Thomas Mann

நிறைய நிறைய வர்ணிக்கிறார் இல்லையா ? இந்தக் கதை 1901ல் எழுதியது. அது இலக்கிய உலகில் வர்ணனைக் காலம். ஒரு நாடகக்காட்சி போல வர்ணிக்கப் பிரியம் கொண்டிருக்கிறார் மன். மதத்தில் பிடிப்பு கொண்டவராய்த் தெரிகிறார். வறுமை சார்ந்த கருப்பொருட்கள் அவரைக் கவர்ந்திழுக்கின்றன. கொஞ்சம் குறியீட்டு வகைமை எழுத்து. தத்துவ போதை. வார்த்தைகளை வாரியிறைத்து விஸ்தாரம் காட்டுகிறார். வாழ்வின் சிறு காட்சியையும் தத்துவக் குறுக்குவெட்டுப் பார்வையில் அளவெடுக்கிற பயிற்சியை வாசகனுக்கு அளிக்க வல்ல எழுத்து அல்லவா ? மன் பிற்காலத்தில், 1929ல் நோபல் பரிசு பெற்றார்.

storysankar@gmail.com

Series Navigation