கலைமன்றம் வழங்கிய காணிக்கை

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

பாரி பூபாலன்


1958-ல் ஆரம்பித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாய் எங்கள் ஊரில் நடந்து கொண்டிருந்த நாடகக் கலை விழா ஒருவழியாய் முடிவுக்கு வந்து விடும் போலிருக்கிறது. என் தந்தையார் முயற்சியால் அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்தது கலைமன்றம். மன்றத்தினர் சேர்ந்து வருடாவருடம் கோடையில் நாடகம் நடத்துவர். எண்ணிப் பார்த்தேன், சிறுவனாய் இருந்தபோது நடந்த நாடகங்கள் எப்படி இருந்தது என்று. நடந்த நாடகத்தைவிட அதனுடன் இணைந்த நிகழ்ச்சிகளே இன்னும் நினைவில் இருந்தன.

நாடக நாளன்று அதிகாலையிலேயே அவசரமாய் சைக்கிளை மிதித்துச் செல்வேன். பக்கத்து ஊர்களில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுக்க. அவர்கள் வீட்டுக்குச் சென்றவுடன், ‘நாடகம் பார்க்க வந்துடுங்க. அழைச்சுகிட்டு வரச்சொன்னாங்க ‘ என்று சத்தமாய் கூறியபடி திரும்பி விடுவேன். வருடாவருடம் நடக்கும் செயல்முறை இது. காணும் பொங்கல், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு வருவது போன்று, ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த நாடக விழாவை காண்பதற்கும் உறவினர்கள் வந்துவிடுவார்கள்.

ரொம்பவும் ஜாலியாக இருக்கும். அன்று இரவு நடக்க இருக்கும் நாடகத்தை எண்ணிப் பார்த்தபடி வேகமாக வீட்டுக்கு திரும்பி விடுவேன். சீக்கிரம் திரும்பி மன்றத்துக்குச் செல்ல வேண்டும். நாடகத்தில் நடிக்க வரும் நடிகைகளும், பிண்ணனி இசைக் குழுவினரும் வந்து விடுவார்கள். சீக்கிரம் சென்று அவர்களைப் பார்த்தாக வேண்டும். அவர்கள் வருவதற்குள் சென்று விட்டால் பஸ் ஸ்டாண்ட் கூட சென்று விடலாம் அவர்களை வரவேற்பதற்கு வசதியாக இருக்கும். அவர்கள் கூடவே வண்டியில் வந்துவிடலாம்.

வீட்டுக்கு எதிராகவே கலைமன்ற கட்டிடம். கலைமன்றம் விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையிலேயே மன்றத்தினரும் மற்றவர்களும் குழும ஆரம்பித்து விடுவர். பொட்டு வண்டியில் நடிகைகளும், மற்ற வண்டிகளில் அவர்களது பெட்டிகளும் வந்து இறங்கும் போது நானும் ஓடிச் சென்று உதவலாவேன், அப்படி உதவி அவர்களது உறவினைப் பெற. என்னைப் போன்ற இதர சில சிறார்களும் என்னை மாதிரியே. ஆவலுடன் அங்கே குழுமி இருப்பார்கள். நடிகைக்கு தாகம் எடுக்கும் போது தண்ணீர் கொண்டு வந்து பொடுப்பதற்கும், தபேலா அடிப்பவர்க்கு சிகரெட் வாங்கி வந்து பொடுப்பதற்கும் எங்களிடையே போட்டி இருக்கும். இப்படிச் செய்து அவர்கள் அறிமுகத்தைப் பெற்றால் அதனைப் பற்றிப் பெருமையாக பேசிக் கொண்டிருக்கலாமே!

நாடகங்கள் அதிகமாய் சமூக நாடகங்களாய் இருக்கும். சில சமயம் சரித்திர நாடகங்களும் நடப்பதுண்டு. நாடகக்கதை பார்க்க வரும் மக்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்காய் இருக்கும். நாடகத்தில் ஒரு முக்கிய கதாநாயகனும் அவருக்கான நாயகியும் உண்டு. அவர்களுக்கு அடுத்ததாய் இரண்டாவது நாயகனும் நாயகியும் உண்டு. இவர்கள் இன்பமாய் ஆடிப்பாடி காதல் புரிய ஏராளமான டூயட் பாடல்களும் உண்டு. இந்தப் பாடல்கள் அந்த சமீபத்திய திரை இசைப் பாடல்களின் மறு பதிப்பாய் இருக்கும், – பாடல்களின் கருத்துக்கள் மற்றும் மாற்றப்பட்டதாய். மேலும் வில்லனும் உண்டு, சிரிப்பு நடிகர் நடிகையும் உண்டு. இவர்கள் செய்யும் சேட்டைகள் நாடகம் முடிந்தும் நாட்கணக்காய் பேசப்படும், பேசி மகிழப்படும்.

நாடக ஒத்திகை கூட சிறப்பாய் இருக்கும். பூஜை புனஸ்காரங்களுடன் விமரிசையாய் ஆரம்பிக்கப்படும். நாடக ஆசிரியர் உணர்ச்சி பூர்வமாய் சத்தமிட்டுக் கொண்டிருப்பார்.

‘கலைமன்றம் வழங்கும் காணீக்கை

இந்த கவினூறும் நாடகமே எங்கள் காணிக்கை… ‘

என்ற பாடலைப் பாடியபடி இன்னிசையுடன் ஒத்திகை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு காட்சியும், ஒத்திகை பார்க்கப்பட்டு ஒழுங்கு செய்யப்படும். நடக்கும் நாடகத்தை வெளியில் அமர்ந்து பார்ப்பதைவிட, இப்படி ஒத்திகை பார்ப்பதிலும், நாடகம் நடக்கையில் அரங்கினுள் சென்று நடிக நடிகையர் வேஷம் போடுவதையும், காட்சிகள் மாற்றி அமைக்கப் படுவதையும் பார்ப்பதில்தான் அதிக ஈடுபாடு.

காதுக்கு இதமாய் கண்ணெதிரே உருவாகும் இன்னிசையும், கண்ணசைக்காமல் பார்த்து பரவசப்பட வைக்கும் அந்த நடிகைகளின் அழகும், அவர்கள் சிங்காரமாய் சிரித்துப் பேசிடும் நளினமும் அங்கே ஒரு போதை கலந்த இன்பமய சூழலைத்தான் ஏற்படுத்தும். அந்த போதையின் வசத்தில் நாங்கள் இன்பமாய்த் திளைத்திருப்போம். அந்த போதை நடந்த நாடகத்தைப் பற்றி நாட்கணக்காய்ப் பேச வைக்கும். அடுத்த வருடம் நடக்க இருக்கும் நாடகத்தை ஆவலுடன் எதிர் நோக்க வைக்கும்.

***

pariboopalan@hotmail.com

***

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்