கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றதும், கலைஞரின் அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இருந்திருக்கின்றன. சட்டமன்றத்தில் அவர் மைக்கை இறுக்கமாகப் பிடித்து எழுதி வைத்திருப்பதை திருத்தமாக படித்து கூறிய சட்டங்களில் பல பாராட்டத்தகுந்தவை.

தத்தம் கருமமே கட்டளைக்கல்லாக அவர் செய்யும் காரியங்களே அவரது புகழை நிலைநிறுத்துபவையாக பல அறிவிப்புக்களைச் செய்திருக்கிறார். ஏன் இவற்றை எல்லாம் தான் முன்பு ஆண்டு நான்கு முறைகளில் செய்யவில்லை என்பது ஒரு சிறு கேள்வியாக புறந்தள்ளப்பட வேண்டியது என்று கருதுகிறேன்.

உழவர் சந்தையை மீண்டும் கொண்டு வரும் அறிவிப்பை செய்வார் என்று நான் எதிர்பார்ப்பதால், பாராட்டை அதற்கு முதலாக கூறிக்கொண்டு மற்ற அறிவிப்புகளுக்குச் செல்கிறேன்.

கோவிலில் அர்ச்சராக அனைத்து சாதியினரும் ஆகலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். வரவேற்கத்தகுந்த ஒன்று. தற்போது தமிழ்நாட்டு அறநிலையத்துறையில் (உதாரணமாக குமாஸ்தா பணியில்) பணி சேர வேண்டுமென்றால் அதற்கென ஒரு பரிட்சை இருக்கிறது. அந்த பரிட்சை படித்து தேர்ந்தவர்களே அற நிலையத்துறையில் சேர முடியும். அற நிலையத்துறை அரசாங்கத்தின் ஒரு பகுதி என்பதால், அதில் தமிழ்நாட்டு அரசாங்கம் கொடுக்கும் அனைத்து இட ஒதுக்கீடும் உண்டு. அதாவது 63 சதவீத பிற்பட்டோர் இட ஒதுக்கீடும், 18 சதவீத தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடும் உண்டு. ஆனால், அற நிலையத்துறை ஒரு தனியான அமைப்பாக இல்லாமல், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளதால், ஒட்டு மொத்த அரசாங்கத்துக்குத்தான் அந்த இட ஒதுக்கீடாக இருக்குமே அல்லாமல், தனியாக அற நிலையத்துறைக்கு என்று தனி இட ஒதுக்கீடு அளவுகள் இருக்கும் என்று தோன்றவில்லை. துறை வாரியாக ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் என்றே கருதுகிறேன். அப்படிப்பட்ட துறைவாரியாக (பொதுப்பணித்துறை, காவல்துறை, அறநிலையத்துறை ஆகியனவற்றில் ) இட ஒதுக்கீடு அளவீடுகளை தமிழக அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.

கோவில் அர்ச்சகராக தற்போது பாரம்பரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே குருக்களாகவும், அர்ச்சகர்களாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் குடும்பங்களில் அடுத்த தலைமுறை ஆட்கள் இந்த அர்ச்சகர்கள் தொழிலுக்கு வராமல் வேறு தொழில்களில் அக்கறை கொண்டு சென்றுவிட்டார்கள். ஆகையால், அர்ச்சகர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. பல கோவில்கள் சிதிலமடைந்து பராமரிக்க ஆளின்றி ஆனதற்கும் இதுவே காரணம் என்பது வெளிப்படை. எங்கள் ஊருக்கு அருகாமையில் இருக்கும் ஒரு ஊரில் உள்ள கோவிலில் உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு செல்வதற்கு மட்டுமே வருவார் ஒரு அறநிலையத்துறை ஊழியர். அந்த கோவில் அர்ச்சகர் கோவிலில் அர்ச்சகராக இருப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து 300 ரூபாய் (ஆமாம் அவ்வளவுதான்) பெற்று வந்தார். அவரது பிள்ளைகளில் ஒருவர் லாரி ஓட்டுனராக ஆகி திருச்சி நகரத்துக்கு குடிபெயர்ந்துவிட்டார். மற்றவர் தறுதலையாக சுற்றிக்கொண்டிருக்கிறார். கிழவனாரால் கோவிலை பராமரிக்க முடியாமல் பாழடைந்துகொண்டிருக்கிறது. எனக்குப் பின்னால் யார் இந்த கோவிலுக்கு அர்ச்சகராக ஆகப்போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று கூறிக்கொண்டிருந்தார். இப்போது ஆள்பவர் பதில் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கோவிலில்லாத ஊரை பார்ப்பது அரிது. கிராம மையங்களாகவும் நகர மையங்களாகவும் கலாச்சார பண்பாட்டு மையங்களாகவும் இருந்த கோவில்கள் இன்று சிதிலமடைந்து அரசாங்கத்தின் பெருகும் ஊழல் சுழல்களில் சிக்கியும் சாதி சழக்குகளில் சிக்கியும், சிலைக்கொள்ளைகளுக்கும், சொத்து கொள்ளைகளுக்கும் குறியாக ஆகியிருக்கின்றன. இவற்றை காப்பாற்றுவது நம் பழங்கால வரலாற்றில் ஒரு பகுதியை மீட்டெடுப்பது என்று நாம் உணர வேண்டியது. நம் வரலாறு எப்படிப்பட்ட வரலாறாக இருந்தாலும், அந்த வரலாற்றை ஆவணப்படுத்துவதும், அதனை நேர்மையான முறையில் ஆராய்வதும், அதன் அறிவுகளை அது இன்று பயன்படுகிறதோ அல்லவோ, எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதும் நம் கடமைகளில் ஒன்று என்று நான் கருதுகிறேன்.

உதாரணமாக, பழங்கால கட்டடக் கலையை ஆராய ஒரு புதையல் போன்ற ஒரு விஷயம் கோவிலும் கோவிலைச்சுற்றியுள்ள பழங்காலத்திய கட்டடங்கள் என்பது என் கருத்து. அந்த கோவிலை தாண்டி அடுத்த வீதிக்குள் புகுந்துவிட்டால் அபார்ட்மெண்டுகளும் நவீன மோஸ்தரில் கட்டப்பட்ட கட்டிடங்களுமே இருக்கின்றன. கோவிலுக்குள் இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் நந்தவனங்களும், சமையல் கூடங்களும், உள்ளே ஒலிக்கும் இசையும், பாட்டும் கூத்தும் நமது வரலாற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. எத்தனையோ வருமானம் வரும் சிரீரங்கத்து கோவில் கூட பாராமரிப்பு இன்றி, சிதிலமடைந்து குப்பையும் கோலமுமாக கிடப்பது அதனை பார்க்கும் எல்லோருக்கும் கண்ணீரை வரவழைக்கும். அது இந்துக்கோவில் என்பதால் அல்ல. அது நம் வரலாற்றின் ஆவணம் என்பதால். அங்கே உட்கார்ந்திருந்த இசைக்கலைஞரோடு சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தேன். ரங்கநாதா ரங்கநாதா என்று புலம்பும் அவர் தன்னை இந்த நிலையில் அநாதரவாக விட்டாலும் இறைவனுக்கு இசைப்பதை நிறுத்தபோவதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். இன்று சிரீரங்கத்துக்குக் கோவிலுக்குள் ஓதுவார்களையும் நடனக்கலைஞர்களையும் பார்க்க முடியவில்லை. அவர்களது கலை வடிவம் காணாமல் போய்விட்டது என்றே தோன்றுகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட சட்டம் என்பது எனக்கு தெரிந்திருந்தாலும், இதன் நீட்சியாக, குடும்பங்களில் உறைந்து போன நமது பாரம்பரியக் கலைகளின் விடுதலையை நோக்கியதாக இருக்க வேண்டும், அதனை நோக்கிய நமது மறுசிந்தனை இருக்கவேண்டும் என்று கோருகிறேன்.

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் என்ற அறிவிப்பு எப்போதோ வந்திருக்க வேண்டியது. இத்தனைக்கும் தமிழ்நாடு தவிர வேறெந்த மாநிலத்தில் ஒரு இந்தியர் படித்திருந்தாலும் அந்த மாநிலத்து மொழியை கட்டாயமாக படிக்காமல் தேர்வெழுதவே முடியாது என்ற நிலை வெகு காலமாக இருந்தாலும் இவ்வளவு தாமதமாக தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது அதுவும் மொழியை அரசியல் படுத்திய முதல் மாநிலமான தமிழ்நாட்டில் வந்திருப்பது வெட்கக்கேடானதாக இருந்தாலும் தாமதாக இருந்தாலும் வரவேற்க வேண்டியது.

இருப்பினும், பாமக உறுப்பினர் ஜி.கே மணி கூறியதை இங்கு ஆதரிக்கிறேன். இது முதல் வகுப்புக்கு மட்டுமே கட்டாயம், ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்துக்கு கட்டாயம் என்று இருப்பதை நீக்க வேண்டும். எல்லா வகுப்புகளுக்கும் இந்த வருடமே கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆனால், சென்ற வருடம் தமிழ் படிக்காமல் இந்த வருடம் தமிழ் படிப்பவர்களுக்கு இளகிய மதிப்பீடு முறை இருக்கலாம். அதே போல காங்கிரஸ் உறுப்பினர் விடியல் சேகர் கூறியுள்ளபடி தமிழை சிபிஎஸ்ஈ உட்பட எல்லா பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு எதிராக இந்தி படிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு சில வினோதர்கள் தமிழ் கட்டாயமாக்கப்படுவதை எதிர்ப்பதையும் பார்க்கிறேன். இந்த அபத்தங்களுக்கு பதில் எழுதுவது கூட தேவையற்றது என்பதே என் கருத்து. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வேலைக்கும் செல்பவர்களில் பலர் தமிழ் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருப்பதும், அதுவே ·பேஷன் என்ற மனோபாவம் வளர்வதும் விரும்பத்தக்கதல்ல. சமூக ஒருங்கிணைப்பையும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருப்பதற்கும் அனைவரும் தமிழ் படிக்க அறிந்திருப்பது கல்வியறிவின் நிச்சயமான பகுதியாகத்தான் இருக்க வேண்டும். இதே நீட்சியாக ஆங்கிலம் படிக்க அறிவதும் இந்தி படிக்க அறிவதும் தமிழ்நாட்டில் இலகுவானதாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டுமே நான் கண்ட “என்க்கு டமில் டெரியாது” என்று பீற்றுவது ஒழிக்கப்பட வேண்டும்.

ஹிந்து செய்தியிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்.

As per the scheme, students would learn Tamil in part 1; English in part 2 and other subjects (mathematics, science, social science etc) in part 3. In part 4, students, who do not have either Tamil or English as their mother tongue can study their mother tongue as an optional subject.

இதுவரை எந்த மும்மொழி திட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் எதிர்த்து வந்ததோ அதனை இன்று ஒப்புக்கொண்டு தமிழை அரங்கேற்றியிருக்கிறார் கலைஞர். இதுதான் முந்தைய மும்மொழித் திட்டமும். மும்மொழித்திட்டத்தின் கீழ், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு கட்டாயப்பாடமாகவும், மூன்றாவது ஒரு மொழி தேர்வுப்பாடமாகவும் இருந்தது. அந்த மூன்றாவது மொழியாக இந்தி இருந்தது. இந்தி மாநிலங்களில், அந்த மூன்றாவது மொழியாக ஒரு தென்னிந்திய மொழி தேர்வு செய்யப்பட வேண்டும். அதனை இவ்வளவு காலம் சென்று, தமிழறிஞர் தமிழண்ணல் சுட்டிக்காட்டியபோதும் விதண்டாவாதம் செய்துவிட்டு இன்று ஒப்புக்கொண்டிருக்கிறார் கலைஞர். ஒப்புக்கொண்டது மட்டுமல்ல, எந்த விதமான ஈகோ பிரச்னைக்கும் இடம் கொடாமல், தமிழை அரசேற்றியும் இருக்கிறார். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மேற்கோள்களும் விவரங்களுக்கும் நன்றி:

http://www.languageinindia.com/feb2004/lucknowpaper.html

சிறுபான்மை முத்திரை கொண்ட கல்வி நிலையங்கள் தவிர்த்த மற்ற எல்லா கல்வி நிலையங்களிலும் தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும் இட ஒதுக்கீடு அளவு பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார் கலைஞர்.

அடிப்படையில் பாராட்டப்படக்கூடியதாக இருந்தாலும், இது பல மோசடிகளுக்கு இட்டுச் செல்லும் என்பது என் கருத்து. முதலாவது சிறுபான்மை முத்திரை கொண்ட கல்வி நிலையங்களும் இந்த இட ஒதுக்கீடுக்கு விலக்கானவை அல்ல என்ற அறிவிப்பு வந்திருக்க வேண்டும்.

இல்லையேல், தமிழ்நாட்டில் இத்தனை மக்கள் தொகையில் இத்தனை சதவீத சிறுபான்மையினர் உள்ளனர். ஆகவே இருக்கும் கல்வி நிலையங்களில் இத்தனை சதவீதம் மட்டுமே சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் என்று இருக்கலாம் என்று அறிவிப்பு வர வேண்டும்.

இல்லையேல், எல்லோரும் தங்களை சிறுபான்மையின கல்வி நிலையங்கள் என்றே அறிவிப்பார்கள். நாளை சண்முகானந்தா பொறியியல் கல்லூரி, செயிண்ட் ஜோஸப் பொறியியல் கல்லூரி என்று பெயர் மாற்றம் அடைந்தால் அதனை வரவேற்க தயாராக இருக்க வேண்டும்.

டா வின்ஸி கோடு படத்தை தடை செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். ஏன் இது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரது தற்போதைய அரசியலுக்கு இது உதவலாம். உதவிப்போகட்டும். இப்படிப்பட்ட தடைகள், வாக்குவங்கி அரசியலை குறிவைத்து நடத்தப்பட்டாலும், இவற்றின் விளைவுகளோ, இந்த வாக்கு வங்கி அரசியலின் மனவியலோ இரண்டு வரிகளில் எழுதிவிடக்கூடியவை அல்ல. அது பிறிதொரு கட்டுரை.

karuppanchinna@yahoo.com

Series Navigation