கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

ஜெயமோகன்

என் விவாதங்களுக்கு எதிர்வினையாக எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் பல வந்தன.அவற்றுக்கு பதில்களை அனுப்பினேன் . நண்பர் ஒருவர் அப்பதில்களையும் பதிவு செய்வது அவசியம், பலர் அந்த ஐயங்களை எழுதாமலே இருந்திருக்கக் கூடுமென்று கருத்து தெரிவித்திருந்தார். ஆகவே சில முக்கியமான வினாக்களை மட்டும் பதிவு செய்ய எண்ணுகிறேன்– அனுமதியுடன் . ஜெயமோகன்

*******

1] இம்மாதிரி விவாதங்களில் ஒரு படைப்பிலக்கியவாதி ஈடுபடலாமா ?இது அவனது வாசகர்களுக்கு தடையாக அமையாதா ?அப்படைப்பாளியின் படைப்பு முயற்சிகளுக்கும் ஊறு விளைவிக்காதா ?[திருமதி வசந்தி செல்லப்பா ]

பதில்

—–

நான் எழுதத் தொடங்கிய காலம் முதலே இவ்வினாவை என்னிடம் பலர் கேட்டதுண்டு. நலம் நாடிகள் பலர் இது தேவையில்லை என அறிவுரை சொன்னதுமுண்டு . என் பதிலை 1998 ல் இலக்கு இதழில் விவாதங்கள் பற்றி என்ற கட்டுரையில் விளக்கியது நினைவுள்ளது.

தமிழ் சூழலில் விவாதத்தில் ஈடுபடுவது எழுத்தாளனுக்கு பெரிதும் ஊறு விளைவிக்கும் என்பது உண்மையே.என் மீதான கணிசமான கோபதாபங்கள் என் விவாதங்கள் மூலம் உருவானவைதான்.என் படைப்புகளுக்கு அவற்றில் அதிக பங்கு இல்லை.என் படைப்புகளுக்கு ஒரு வகை தடையாகவும் இவை அமைகின்றன என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன்.

இதற்கு காரணம் தமிழ் சூழலில் உள்ள இரு மனோபவங்களே .ஒன்று :இங்குள்ள வாசகர்கள் பலர் எழுத்து அல்லது படைப்பு என்பது முற்றிலும் அந்தரங்கமான ஒரு இயக்கம் என எண்ணுகிறார்கள்.ஆகவே எழுத்தாளன் என்பவன் தன் அந்தரங்கத்தின் குரலை மட்டுமே செவிகொடுத்தபடி , தனித்து மெளனித்திருக்கவேண்டுமென்று எண்ணுகிறார்கள் .அதற்கேற்ப நமது எழுத்தாளர்களில் மிகப்பெரும்பாலோர் அப்படிப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் .இங்கு எழுத்தாளர்களை பற்றி பேசப்படும் பெரும்பாலான மதிப்பீடுகளை பார்த்தால் இத்தகைய ஒதுங்கல் சிலாகிக்கப்படுவதை காணலாம்.

தமிழ் எழுத்தாளர்களின் இந்த உள்ளொதுங்கலுக்கு இரு முக்கியமான காரணங்களை நான் காண்கிறேன். ஒன்று அவர்கள் இங்கு மதிக்கப்படுவதில்லை ,சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவமதிக்கவும் படுகிறார்கள். ஆகவே தாங்கள் முக்கியமானவர்கள் என்றும் தங்கள் கருத்து அவசியமானது என்றும் அவர்கள் கருதுவது இல்லை .இரண்டு அவர்களில் பலருக்கு கருத்தியல் ரீதியான படிப்பு மிகவும் குறைவு.ஆகவே அவர்களுக்கு சொல்ல அதிகம் ஏதும் இருப்பதில்லை . ஆகவே ஒரு சராசரித் தமிழ் வாசகன் விவாதிக்க முற்படும் எழுத்தாளன் ஏதோ உகக்காத விஷயத்தை செய்துவிட்டது போல எண்ணுகிறான்.உண்மையில் இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி முக்கியமான படைப்பிலக்கிய வாதிகள் பலதளங்களில் தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபட்டு ஏராளமாக எழுதியவர்களே என்ற உண்மை அவர்கள் பார்வைக்கு வருவது இல்லை.

இரண்டு : இங்கு எழுத்தாளன் மதிக்கப்படுவது இல்லை . மதிக்கப்பட்டால் கூட அது அவனது எழுத்துக்காக இல்லை .சமகால கன்னட ,மலையாளச் சூழலை சாதாரணமாக ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியவரும்.இங்கு இன்னமும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் மனநிலையே இவ்விஷயத்தில் காணப்படுகிறது . கவிஞர்களும் கலைஞர்களும் அதிகாரத்தின் முன் பணிந்து நிற்கும் ‘கலாச்சார குற்றேவலாட்களாக ‘ காண்பது நிலப்பிரபுத்துவ மனநிலை.[பழங்காலத்தில் பொதுவாக அடைப்பக்காரனின் வேலையையும் கவிஞர்கள் செய்துவந்தார்கள் ] . கவிஞர்களும் கலைஞர்களும் கூட அப்படியே நம்பிவந்தார்கள் . ஜனநாயக யுகம் தொடங்கிய போதுகூட அம்மனநிலையிலிருந்து விடுபட இரு சாராராலும் முடியவில்லை .பாரதி அந்நிலையிலிருந்து விடுபட கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அந்த போராட்டத்தை அவரது சமகாலத்தவர்களான உ.வே.சா ,சர்க்கரை கவிராயர் போன்றோரிடம் சற்றும் காணமுடியாது .

அரை நூற்றாண்டுக்கு பிறகும் நிலைமை பெரிய அளவில் மாறவில்லை . அரசியல்வாதிகள் ,செல்வந்தர்கள் மட்டுமல்ல பெரிய இதழாசிரியர்கள் கூட இப்போதும் எழுத்தாளர்களை நடத்தும் விதம் இதுவே . தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் முன் மேடையில் ஏறும் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ‘ உடல்மொழி ‘யை பார்த்தால் இது தெரியும் . இன்று தமிழகத்துக்கு வெளியே உள்ள எழுத்தாளர்களிடம் அந்த பணிவை , குழைவை காணமுடியாது . சிறிய அளவில் லெளகீக வெற்றி அடைந்தவர்கள் கூட முக்கியமான படைப்பாளி ஒருவன் தனக்கு மரியாதை தந்து பணிவுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இங்கு சகஜம் .சிறிது ஆங்கிலக் கல்வியும் அவனுக்கு இருந்தால் அவன் எழுத்தாளனுக்கு அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்து விடுவான் .

ஜனநாயக யுகத்தில் எழுத்தாளர்கள் கருத்துக்களை உருவாக்குபவர்கள் என்ற அடிப்படையில் முன்பு மத/தத்துவ அறிஞர்கள் வகித்துவந்த இடத்தை உலகமெங்கும் வகித்து வருகிறார்கள் .அந்த இடம் இன்னமும் தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவில்லை .இங்குள்ள பொதுவான மனநிலை எழுத்தாளனை ஒரு வகை கேளிக்கையாளனாக மட்டுமே காணும்படியாக அமைந்துள்ளது .தமிழர்கள் எந்த தளத்தில் எத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர்களாக இருந்தபோதிலும் இலக்கியமென்றால் கேளிக்கை என்று எண்ணுவதில் ஒன்றுபடுவார்கள் . மற்ற துறைகளில் மிக ஆழமான ,சிக்கலான விஷயங்களை சிரமப்பட்டு புரிந்து கொள்பவர்கள் கூட இலக்கியம் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த தளத்தில் எளிதாக ரசிக்கத்தக்கதாக இருக்கவேண்டுமென எண்ணுவார்கள் .இந்த மனநிலையை திருப்திப்படுத்தாத எழுத்தாளர்கள் இங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் .திருப்திப்படுத்தும் கேளிக்கையாளர்கள் அங்கீகாரம் அடைகிறார்கள் .[அப்படி அங்கீகாரம் அடைபவர்களே முக்கியமானவர்கள் மற்றவர்கள் பம்மாத்துக்காரர்கள் என்று ஒரு பேச்சு இப்போது பிரபல ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது.இதற்கு காரணம் வெளிப்படை ]

கருத்தியல் விவாதங்களில் இங்கு எழுத்தாளன் குரல் ஒருபோதும் கவனிக்கப்பட்டது இல்லை .அரசியல் கட்சிகளில் எழுத்தளனின் இடம் நாம் அறிந்ததே .கருத்தியல் செயல்பாடு ஓரளவேனும் உள்ள இடதுசாரி இயக்கங்களின் 50 வருட வரலாற்றை எடுத்துப்பார்த்தால் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் வெளியேற்றப்பட்டதை காணலாம்.தத்துவத்தாலும் தலைமையாலும் கூறப்பட்டவற்றை பிரச்சாரம் செய்யவேண்டியனாகவே அவை எழுத்தாளனை கண்டன. தன்னை ஜனநாயக யுகத்தின் எழுத்தாளனாக கண்டவர்களால் அங்கு நீடிக்க முடியவில்லை. ஊடகங்களிலும் இதே நிலைதான். கடந்த 50 வருடங்களில் நடந்த எல்லா முக்கிய சந்தர்ப்பங்களிலும் மலையாள நாளிதழ்கள் எழுத்தாளர்களின் கருத்துக்களை முக்கியப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன என்பதுடன் இம்மின்னிதழிலேயே ஒரு ஊடக ஆசிரிக்ஷயர் சொன்ன கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கவும். இந்நிலையில் தமிழ் எழுத்தாளன் குறைந்தபட்சமாக தன்னை வெளிப்படுத்த என்ன செய்ய முடியுமோ அதற்கு அப்பால் ஏதும் செய்ய முடியாதவானாக ,தயக்கம் கொள்பவனாக இருப்பது இயல்பானதே.

அறிவியக்கத்தின் எல்லா தளங்களிலும் எழுத்தாளன் மட்டுமே சொல்லக்கூடிய சிீலவிஷயங்கள் உள்ளன .அத்தளத்தின் உண்மையான நிபுணர்கள் அவற்றை அங்கீகரிப்பார்கள் .ஊடகம் குறித்தோ ,அரசியல் குறித்தோ,வரலாறு குறித்தோ எழுத்தாளன் அத்தளத்தை சேர்ந்த நிபுணர்கள் காணாத தளங்களை கண்டு சொல்ல முடியுமென்பதை இப்போதைய கருத்தியல் இயக்கங்களை சற்று கூர்ந்து பார்ப்பவர்கள் உணரலாம் .ஆகவேதான் பண்பட்ட அறிவுச்சூழலில் எழுத்தாளனின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு எழுத்து குறித்துகூட எழுத்தளன் கருத்து சொல்ல அனுமதிக்கப்படுவது இல்லை .

இச்சூழலில் ஒரு எழுத்தாளன் கருத்தியல் ரீதியாக விவாதித்தால் அவன் மீது இங்குள்ள எளிய வாசகர்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்படுகிறது .எளிமையாக ,பணிவாக, கூனிக்குறுகி இருக்க வேண்டிய ஒரு சாதாரண ஆசாமி அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறான் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது .அவனை மட்டம்தட்டவோ புறக்கணிக்கவோ முயல்கிறார்கள் .ஆகவே பெரும் பாலான எழுத்தாளர்கள் மெளனம் காக்கிறார்கள் .எழுத்தாளனின் கருத்துக்களை மதிக்கும் ஒரு சமூகம் அவனது தடுமாற்றங்களை ,சிக்கல்களை ,தனிமையை அங்கீகரிக்கும். அவன் பலசமயம் உருவாக்கும் எரிச்சல்களை ,அதிர்ச்சியை மன்னிக்கும் — காரணம் அவை இல்லாமல் புதிய சிந்தனை சாத்தியமாவது இல்லை.

இந்த இழப்புகளை பற்றி கவலைப்பட போவது இல்லை என்று இவ்விஷயம் குறித்து 15 வருடம் முன்பு ஞானி எனக்கு சொன்னபோதே உறுதி கொண்டேன். நான் முன்னுதாரணமாக கொள்ளும் எழுத்தாளர்கள் பலர் — பி கே பாலகிருஷ்ணன் முதல் பால் சக்கரியா வரையிலான மலையாள எழுத்தாளர்கள் — ஓயாத விவாதத்தில் வாழ்ந்தவர்களே.இவ்விழப்புகளை மீறி நிற்கு வல்லமை என் படைப்புகளுக்கு உண்டு என்றும் நான் அறிவேன்.

*******

2 ] இந்த விவாதங்களால் எழுத்தாளனுக்கு என்ன பயன் ?வாசகன் இவற்றை எப்படி பயன்படுத்தி கொள்ளமுடியும் ?

[ திருமதி வசந்தி செல்லப்பா ]

பதில்

——

நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பே விவாதங்களை தொடங்கிவிட்டேன் . இந்திய தத்துவம் ,இலக்கியம் ,வரலாறு பல முக்கியமான அறிஞர்களுடன் நேரடியாக கடித விவாதம் நடத்தியிருக்கிறேன். மலையாள சிந்தனையாளர் கள் சச்சிதானந்தன் , ஆனந்த் ,பி கெ பாலகிருஷ்ணன் , கன்னட சிந்தனையாளர் டி.ஆர் நாகராஜ் என பலருடன் தொடர்ச்சியாக விவாதங்கள் செய்ததுண்டு.விவாதங்களில் நான் இல்லாமலிருந்த நாளே என் நினைவிீல் இல்லை . இப்போதும் மிக விரிவான விவாதங்கள் பலவற்றில் இருக்கிறேன்.உண்மையில் என் விவாதங்களில் மிகச்சிறிய பகுதி மட்டுமே அச்சில் வந்துள்ளது .பெரும்பாலான விவாதங்கள் அறிஞர்கள் மற்றும் நண்பர்களுடனான கடிதப் போகுவரத்துக்கள் . ஒவ்வொரு நாளும் சாதாரணமாக 5 பெரிய விவாதக் கடிதங்கள் எழுதவேண்டியிருக்கும் .[10 பிற கடிதங்கள் ]

இவ்வருடத்தில்[அச்சில் ]நான் ஈடுபட்ட முக்கியமான விவாதங்கள் இரண்டும் மலையாளத்தில் தான். பாஷாபோஷிணி இதழில் மலையாளக்கவிதை பற்றி நான் எழுதிய விமரிசனத்தை தொடர்ந்து ஒரு வருடமாக பத்து வெவ்வேறு பத்திரிகைகளிலாக நடந்துவரும் விவாதத்தில் அனேகமாக எல்லா விமரிசகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த வாரம் கூட கேரள கெளமுதி நாளிதழில் ஓர் எதிர்வினைக் கட்டுரை வந்திருப்பதாக தெரிகிறது . இந்திய பக்தி இயக்கத்துக்கும் பெளத்த சமண மதங்களுக்குமான உறவு பற்றி பேரா .பஹாவுதீன் அவர்களுக்கு நான் எதிர்வினை தெரிவித்து , அதிலிருந்து தொடங்கிய விவாதம் மாத்யமம் இதழில் இறுதியாக இந்திய வலாற்று ஆய்வு கழக தலைவரும் மூத்த வரலாற்றாசிரியருமான எம் ஜி எஸ் நாராயணன் அவர்களின் விரிவான பதிலுடன் சமீபத்தில் தான் முடிந்தது .

தனிப்பட்ட விவாதங்களென்றால்மார்க்ஸிய அடிப்படைகள் குறித்து மார்க்சிய ஆய்வாளர் அ.ஜோதிப்பிரகாசம் அவர்களுடனும் , இந்திய தத்துவமரபு குறித்து வெ.மு.பொதியவெற்பன் மற்றும் அவரது நண்பர்களுடனும் ,பழந்தமிழ் வரலாறு குறித்து குமரிமைந்தன் அவர்களுடனும் , கேரள வரலாறு குறித்து எம் கங்காதரன் அவர்களுடனும் நடந்து வரும் தொடர்கடித விவாதங்களை குறிப்பிட்டு சொல்லலாம். நண்பர்களுடனான சிறு விவாதங்கள் வேறு. இவையெல்லாம் பெரும்பாலும் பதிவாவதே இல்லை .குமரிமைந்தன் அவர்களின் சமீபத்திய கடிதத்தினை சற்று சுருக்கி வரும் சொல் இதழில் தனி கட்டுரையாக பிரசுரிக்கவிருக்கிறேன். ஜோதிப்பிரகாசம் அவர்களின் கடிதங்களை எப்போதாவது பிரசுரிக்கலாம். அதிக பட்சம் 300 பக்கம் உள்ள கடிதத்தை கூட நான் எழுதியதுண்டு [சுந்தர ராமசாமிக்கு ] .30 பக்க கடிதங்கள் எனக்கு வருவதும் சாதாரணம் . நான் இதுவரை எழுதி அச்சிடப்பட்ட பக்கங்களை விட மூன்றுமடங்கு விவாதக் கடிதங்கள் எழுதியுள்ளேன். அவற்றில் பத்துபதினைந்து கடிதங்கள் சம்பந்தப்பட்ட நண்பர்களால் அச்சிடப்பட்டுள்ளன. எனக்கு வரும் கடிதங்களை பத்திரமாக வைக்கும் ஒழுங்கு என்னிடமில்லை. இவற்றையெல்லாம் வீண்வேலை என்றோ ,அல்லது சமீப கால ‘புதுஅறிவுஜீவி ‘ களின் பாணியில் பம்மாத்து என்றோ சொல்லிவிடலாம். ஆனால் கருத்துக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே இப்படித்தான் உருவாகின்றன ,பரவுகின்றன.எக்கருத்தும் ஒரு விவாத நிலையில் தான் எப்போதும் உள்ளது.

இவற்றால் என்ன பயன் ?விவாதிக்கப்படாத ஒரு கருத்து மிக எளிமையானதாகவே இருக்கும் .எக்கருத்தும் அதன் முரண்கள் வெளிப்படும்போதுதான் இயக்கநிலைக்கு வருகிறது என்பது ஒரு ஆதார விதி . விவாதங்களே அவ்வியக்கத்தை உருவாக்குகின்றன. விவாதத்தின் தளங்கள் பல . நண்பர் மனுஷ்ய புத்திரனுடனான எனது விவாதங்கள் அவரை என் கருத்துக்களுக்கு அருகே கொண்டுவந்தன என்று அவர் சொன்னதுண்டு. ஞானி மற்றும் எம்.கங்காதரனின் கருத்துக்கள் படிப்படியாக வரலாறு பற்றிய என் புரிதலை மாற்றியமைத்தன .இது ஒரு தளம் . ஜோதிப்பிரகாசமோ பொதியவெற்பனோ ஒருபோதும் என் தரப்பை ஏற்கப்போவது இல்லை . நான் அவர்கள் தரப்பையும் . ஆனால் விவாதம் இருவருக்கும் தங்கள் தரப்பை செழுமைப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இது இன்னொரு தளம்.

விவாதம் என்பது என் தேடலின் ஒரு வழிமுறை . அவ்விவாதத்தின் ஒரு நீட்சியாகவே என் படைப்புகள் உள்ளன. என் படைப்புகளில் வலுவான ஒரு விவாத அம்சம் உள்ளதைக் காணலாம் .அவ்விவாதங்களின் பின்னணியாக உள்ள சமூகம் வரலாறு ,அவ்விவாதங்களை உள்வாங்கிக் கொள்ளும் மானுட அகத்தின் சிக்கல்கள் என்று அவற்றின் வடிவம் நீள்கிறது . என் நாவல்களை பற்றி விமரிசித்த அம்பை அவற்றில் விவாதம் மட்டுமே உள்ளது , ஆசிரியரின் தரப்பு தெளிவாக இல்லை என்று குறைப்பட்டார் .அவை ஆசிரியரின் தரப்பைக்கூட ஒரு விவாதப்புள்ளியாக மட்டுமே முன்வைக்கின்றன,அது அவற்றின் வடிவம் என்பதே என் பதில். விஷ்ணுபுரம் போன்ற நாவலில் அரசியல் வரலாறு ,தத்துவ வரலாறு,கலைவரலாறு முதலியவை ஒன்றாக பிணைந்துள்ளதை காணலாம். அந்த சிக்கலான சித்திரம் பலவருடம் முக்கியமான அறிஞர்களுடன் விவாதிப்பதனூடாக படிப்படியாக அறியாமல் என் அகத்தில் உருவான ஒன்று. .

தன் அக உண்மையை மட்டும் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் படைப்பாளிகள் உண்டு.நவீனத்துவ எழுத்திலும் ,கற்பனாவாத எழுத்திலும் அதற்குரிய வடிவங்கள் பல உள்ளன . அவ்வகை எழுத்தை முன்வைப்பவர்களுக்கு விவாதத்தின் அவசியம் இல்லை .நான் உத்தேசிக்கும் புதுச்செவ்வியல்வடிவம் அகயதார்த்ததுக்கும் பிற யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சமநிலையை எட்ட முனைவது . எல்லா தளங்களையும் தழுவி விரிவது. அதற்கு படைப்பிலும் , ஆக்கப் பின்னணியிலும் விரிவான விவாதத் தளம் தேவை . படைப்பு வாசிக்கப்படும்போதும் அவ்விவாதம் தொடர வேண்டியுள்ளது . படைப்பை நிலைநாட்டுவதற்கான விவாதம் என சில எளிய மனங்கள் அதை எண்ணக்கூடும் . உண்மையில் அது அந்த விவாத தளத்தினை விரிவுசெய்யும் முயற்சியே . அதுவே அடுத்த படைப்பை உருவாக்கும் தேடல் ஆகிறது .

*******

3] அடிப்படைகளை விவாதிக்க மறுப்பது என்பது எப்படி ஒரு அறிவார்ந்த செயல்பாடாக ஆகும் ?மானுட சிந்தனையின் தொடக்கம் முதலே இருந்துவந்துள்ளது அதுதானே ? [ஜீவானந்தம் ..ஜீவா]

பதில்

——

பத்து வருடம் முன்பு கன்னட விமரிசகரும் பின் நவீனத்துவ சிந்தனையாளருமான டி ஆர் நாகராஜ் அவர்களுடன் ஒரு பேட்டியை காலச்சுவடு இதழுக்காக எடுத்தேன். அப்போது நாகராஜ் அடிப்படை கருதுகோள்களை விவாதிக்க மறுக்கும் தன் பின் நவீனத்துவ தரப்பை முன்வைத்தார் .அது புதிய விஷயமல்ல பெளத்த சிந்தனையின் அடிப்படையே அதுதான், புத்தர் கடவுள் உட்பட அடிப்படைகளைப் பற்றி கருத்து கூற மறுத்தார் , இதையே புத்தரின் தங்க மெளனம் [The golden silence of Buddha] என்பார்கள் என்றார் நாகராஜ். இலக்கியத்தரம் என்றால் என்ன என்று வரையறை செய்ய மாட்டேன் , ஆனால் தரமானகன்னட படைப்புகள் என்றால் என்ன என்று கேட்டால் ஒரு பட்டியலை எப்போதுமே அளிப்பேன் ; அப்படைப்புகளை பற்றி பேசி அவை தேர்வு செய்யப்பட்ட காரணத்தையும் விளக்குவேன் என்றார் .பேட்டியில் விரிவாக இதை விளக்கிப் பேசினார் [காலச்சுவடு பேட்டிகள்-தொகை நூல் .காலச்சுவடு பதிப்பகம் ]

சிறிது யோசித்தால் இது புரியும் . அடிப்படைகள் என்பவை உண்மையில் புறவயமான அமைப்புகள் அல்ல. அவை உருவகங்களே . அவ்வுருவகங்கள் எப்படி உருவாயின ? பல ஆயிரம் விவாதக் களங்களின் வழியாக ,அர்த்தப்படுத்தப்ப ட்டு காலப்போக்கில் மெல்ல மெல்லத் திரண்டு வந்தவை அவை.அந்த அத்தனை விவாதக்களங்களின் நினைவுகளும் நம் அகத்தில் அச்சொல்லின் பின்னணியாக நிற்கின்றன. அச்சொல் பயன்படுத்தப்படும் தருணத்தின் தேவைக்கு ஏற்ப அவற்றில் ஒன்றால்/சிலவற்றால் அது நம் ‘மொழி நினைவு ‘ மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படித்தான் அச்சொற்களை நாம் பயன்படுத்துகிறோமே ஒழிய கறாரான புறவய வரையறைகளின் அடிப்படையில் அல்ல. இப்படி விள க்கலாம் .கணிப்பொறியின் மையத்தகடின் நினைவில் அன்பு என்ற சொல்லுக்கான முடிவற்ற அர்த்தங்கள் இடைவிடாது சேமிக்கப்பட்ட படியே உள்ளன என்று கொள்வோம். அச்சொல்லை நாம் தட்டச்சு செய்ததுமே அந்த தருணத்தின் பொருத்தத்துக்கு ஏற்ப கணிப்பொறி அச்சொல்லின் பொருள்களில் ஒன்றையோ பலவற்றையோ எடுத்து பயன்படுத்துவது போலத்தான் மொழி ‘புரிந்துகொள்ள ‘படுகிறது .

இந்த கருத்தை கடந்த அரை நூற்றாண்டாக சிந்தனைத்தளத்தில் மொழியியல் உருவாக்கிய சில அடிப்படை கருத்துக்களை அறிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்ளமுடியும். லாங் ,பரோல் என மொழி இரண்டாக பிரிக்கப்படுகிறது .பரோல் என்பது வெளிமொழி .அது சொல்லிக்கேட்கப்படுவது ,எழுதிவாசிக்கப்படுவது சொற்களாலானது. அச்சொற்களுக்கு பொருள் அளிப்பது அகமொழி அல்லது லாங் . மொழியின் நினைவுக்கிடங்கு இது.இதை கலாச்சாரத்தின் நினைவு வடிவம் எனலாம் . ஒரு கருத்துருவச்சொல்லை அகமொழி மிக விரிவான தளத்திலேயே பொருள்கொள்ளும் .புறா என்றால் ஒரு குறைந்த பட்ச புறவய பொருள் கொள்வதுபோல அன்பு என்பதற்கு கொள்ள முடியாது.[ புறா என்பதேகூட சமாதானம் என்றும் பொருள்கொள்ளலாம் .] அடிப்படைக் கருதுகோள்களை பொறுத்தவரை அவற்றின் அகவய அர்த்த தளம் முடிவின்மை வரை திறப்பதாகும்.

சிந்தனை அகவயமானது என்றும் மொழி அதை புறவயமாக்குகிறது என்றும் நம்பிய பழைய சிந்தனையாளர்கள்தான் மொழியில் புறவய வரையறைகளை உருவாக்க அதிகம் முயன்றனர் . மொழியின் அடிப்படையே அகவயமானது என்று மொழியியல் சொன்ன பின்பு சம கால சிந்தனையளர்கள் அம்மாதிரி வரையறைகளுக்கு முயல்வது இல்லை . ஒன்று அது வெற்று தத்துவ விளையாட்டாக முடியும் . இரண்டு. அவ்வரையறை நடத்தப்படும் தளத்தை மட்டும் கருத்தில் கொண்டு பிறவற்றை காண மறுக்கும்.அதாவது ஒரு சொல்லை வரையறை செய்கிறீர்கள் என்றால் சொல்லையல்ல ,சொற்களனை [அல்லது அச்சொல் பயன்படுத்தபடும் தளங்களை ] மட்டுமே வரையறை செய்கிறீர்கள்.

புத்தர் அவருக்கும் முந்திய நியாய மரபின் அடிப்படையிலேயே இம்முடிவுக்கு வருகிறார் .நியாய மரபின்படி பிரபஞ்சம் எப்படிப்பட்டது என்பது ஒரு பிரச்சினையே அல்ல .அதை எப்படி புரிந்துகொள்வது என்பதே பிரச்சினை.புரிதலுக்கு அப்பால் என்ன என்ற கேள்விக்கு அர்த்தமே இல்லை . அறியவேண்டிய பொருளை அந்த விவாத தளத்தில் எப்படி வகுத்து கொள்வது என்றே அது பேசுகிறது . அந்த விவாதத்தளத்தின்படி வகுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அர்த்தத்தின் ஒட்டுமொத்த விளைவு எதுவோ அது மட்டுமே அடுத்த விவாத தளத்துக்குப் போகிறது.பிற்கால பெளத்தம் நியாய மரபை விரிவாக வளர்த்தெடுத்தது.வரையறை செய்யும் போக்கைவிட மூத்தது இப்போக்கேயாகும்.

************

திரு கல்பனா செழியன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மிக விரிவாக எராளமான வினாக்களை அனுப்பியிருந்தனர். அவற்றை அவர்கள் தரப்புடன் சேர்த்து தனியாக பிரசுரிக்கலாம் என்று பட்டது. இப்போது சில முக்கிய வினாக்கள் மட்டும்.

அ ] கலாச்சாரம் என்பதன் தளங்களை எப்படி அடையாளம் காண்பது ? ஆ] முந்தைய காலகட்ட சிந்தனையாளர்கள் அதை வரையறுத்தார்களல்லவா ? இ] மேலான கலாச்சாரம்/சரியான கலாச்சாரம் என்று ஒன்று உண்டா ?[திருமதி கல்பனா செழியன் / , செல்வ குமார் ]

பதில்

——

டி எஸ் எலியட்டின் ‘ கலாச்சாரத்தை வரையறுப்பது பற்றி ….. ‘ என்ற பிரபலக் கட்டுரையை நான் சில மூறை மேற்கோள் காட்டியதுண்டு. அக்கட்டுரையின் தொடக்கத்தில் கலாச்சாரம் என்ற சொல் எப்படி பலவாறாக பயன் படுத்தப்படுகிறது அதிலுள்ள முரண்பாடுகளென்ன என்று எலியட் விரிவாக பேசுகிறார் . உதாரணமாக இசை கலாச்சாரத்தின் முக்கிய பகுதி என்பதை மறுக்க முடியாது , ஆனால் ஒரு இசைமேதை சற்றும் கலாச்சாரமில்லாத மூர்க்கனாக இருக்க வாய்ப்பு உண்டு என சொல்கிறார் எலியட். அதாவது அச்சொல்லை கறாராக வரையறுப்பது எப்படி சாத்தியமில்லை என்றுதான் அக்கட்டுரையில் சொல்கிறார் .பிறகு அவ்விவாதத்தில் பயன்படுத்தப்படும் குறைந்தபட்ச அர்த்தமென்ன என்று சொல்லி முடிக்கிறார் .

அடிப்படைகளை விவாதித்த எல்லா அறிஞர்களிடமும் இந்த இயல்பை காணலாம். என் கேரள நண்பர் ஒருவர் பகுத்தறிவு பற்றி ரஸ்ஸல் சொன்ன 200 க்கும் மேற்பட்ட வரையறைகளை தொகுத்து சிறு நூலாக கொண்டுவந்துள்ளார்.அதாவது அடிப்படைகளை வரையறை செய்வது சாத்தியமல்ல என்பது ஒரு புதிய விஷயமல்ல .ஆனால் முந்தைய கால சிந்தனையாளர்கள் அப்படி வரையறை செய்ய முயல்வதும் , சொந்தமாக ஒரு வரையறையைதருவதும் தத்துவவாதிகளின் கடமை என்று எண்ணினார்கள்.அவர்கள் செய்த எல்லா வரையறைகளும் அவர்கள் உருவாக்கிய சொற்களனுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியவை. அந்த அளவில் கூட அவை மிக பொதுப்படையானவையாக இருப்பதை நாம் காணலாம் .மிக கறாரான வரையறைகளை முன் வைப்பவர்கள் பிஷப் பெர்க்லி போன்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தத்துவ வாதிகளே .

ஆகவே கலாச்சாரம் போன்ற அடிப்படைகளை ஒரு விவாத தளத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொதுவாக உருவகித்துக் கொள்வதே ஏற்புடையது . ஆரம்பத்திலிருந்தே இப்படி பார்க்கலாம் .மிருகங்களுக்கு கலாச்சாரமில்லை.மனிதர்களுக்கு உண்டு . மனிதர்களுக்கும் மிருகங்களுக்கு இடையேயான முக்கியமான வித்தியாசம் அறிவு தொகுக்கப்படுவதும் கைமாறப்படுவதுமே.மிருகங்களின் அனுபவம் அனிச்சையுணர்வாக [instinct] மாறி அவற்றை அறியாமல் மட்டுமே கைமாறப்பட முடியும். மனிதர்களில் தலைமுறை தொடராக அறிவும் , அகப்பிரக்ஞையும் உள்ளுணர்வும் , கைமாறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன.அதாவது மனிதப்பிரக்ஞை மட்டுமே தொடர்ந்து வளர்கிறது. இந்த தொடர்ச்சியை நிகழ்த்துவது முக்கியமாக மொழி .இந்த தொடர்ச்சியின் விளைவாகவே மானுட அறிவு ,மானுட பிரக்ஞை , மானுட அகம் என்று நாம் இன்று சொல்லும் பேரமைப்பு கால ஓட்டத்தில் உருவாகியுள்ளது. ஒரு மனிதனில் பிரக்ஞை அல்லது தன்னுணர்வு உருவாகி வரும்போதே அவனுக்கு ஒட்டுமொத்த மானுடப் பிரக்ஞையின் ஓர் அலகு வந்து சேர்ந்துவிடுகிறது எனும் கருத்துக்கள் இன்று வலுவாக உள்ளன. மானுட நனவிலியை ஒட்டுமொத்தமாக மனித குலத்துக்கு முழுக்க சொந்தமானதாக யுங் பார்த்தார் என நாம் அறிவோம்.

இந்த அம்சமே கலாச்சாரம் என நாம் கூறுவதன் அடிப்படைகளை அமைக்கிறது என்பதிலிருந்தே நாம் தொடங்க வேண்டும்.இவற்றிலிருந்து பிரித்து கலாசாரம் என்றால் என்ன என்று பார்க்க முடியாது. உண்மையில் மொழி /கூட்டு நனவிலி [collective unconscious ] ,கலாச்சாரம் என்றெல்லாம் நாம் சொல்லும் அக அமைப்புகளிடையே கறாரான வேறுபாடு ஏதும் இல்லை.மொழியே இத்தொடர்ச்சியை நடத்துகிறது என்பதனால் மொழியும் கலாசாரமும் வேறல்ல என்று சொல்லும் நவீன சிந்தனையாளர்கள் பலருண்டு . [மொழிக்கு அப்பால் ஏதுமில்லை என்பது அந்த பிரபல சூத்திரவாக்கியம் ] ஆனால் நான் மனத்தின் படிமக் கட்டமைப்பு மொழிக்கு அதீதமானது என்று எண்ணுகிறேன்.அதுவும் கலாச்சாரத்தின் அங்கமென்பதால் மொழியே கலாச்சாரமென்று கூற தயங்குகிறேன்.

ஆகவேதான் நான் என் முதல் கட்டுரையில் அந்த பொது வரையறையை அளித்தேன் . எது முந்தைய தலைமுறையிலிருந்து வந்து சேர்கிறதோ அது பாரம்பரியம் . எது தலைமுறை தலைமுறையாக கைமாறப்படும் சாரமோ அது கலாச்சாரம் . பாரம்பரியம் அடுத்த தலைமுறை வரைக்கும் தான். கலாசாரம் என்பது ஒரு தொடர்ச்சி . அதாவது கலாச்சாரத்தில் நம் மூதாதையர் சேமிப்புடன் நாம் சொந்தமாக அடைந்தவையும் , நம்மால் மாற்றியமைக்கப்பட்டவையும் அடங்கும் . நமக்கு வந்து சேர்ந்தவைக்கும் நம்மால் கைமாறப்படுபவைக்கும் இடையேயான ஒரு சரடினையே நாம் கலாச்சாரம் என்று சொல்கிறோம்.

எவையெவை அப்படி கைமாறப்படுகின்றன ? 1] நம்பிக்கைகள் ,பழக்க வழக்கங்கள் ,சடங்குகள் போன்ற வாழ்க்கைக் கூறுகள் 2] விதிமுறைகள் ,நீதிகள் ,அறங்கள் போன்ற விழுமியங்கள் 3]மொழி . அதாவது அக மொழி என்ற பெரும் குறியீட்டமைப்பும் , புறமொழி என்ற சொற்கள் மற்றும் இலக்கணமும் சொற்களுமடங்கிய வடிவமும் . வரலாறு ,இலக்கியம் ,பல்வேறுவகையான அறிவுத்தளங்கள் அனைத்துமே மொழியில் அடக்கம் 3] அகப் படிமங்களினாலான நனவிலி என்ற பெரும் தொகுப்பு . கலைகள் ஆக்கி ரசிக்கப்படுவதன் பின்னணித் திரை இதுவே . இவற்றில் எல்லாமே அடங்கிய ஒன்றே நாம் பொதுவாக கலாச்சாரம் என்று சொல்வது . நடைமுறையில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சார்ந்து நமது வரையறையை அல்லது புரிதலை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் வரையறை செய்ய முயலும்போது முழுமையாக வரையறுக்காவிட்டால் முக்கியமானதளங்களை தவறாக புரிந்துகொண்டு விடுவோம்.

கலாச்சாரச் செயல்பாடு என்பதை இரண்டு வகையாக பிரித்து கொள்ளலாம். மரபில் இருந்து வந்து சேர்வதை பேணி கைமாறுவது முதல்வகை . மாற்றுவது ,மறு ஆக்கம் செய்வது ,புதிதாக உருவாக்குவது இரண்டாம் வகை . முதல் வகை கொள்கையளவில் மட்டுமே சாத்தியம் .நடைமுறையில் எவரும் தன்னிடம் வந்து சேர்வதை சிறிதளவாவது மறுபரிசீலனையும் மறு ஆக்கமும் செய்யாமலிருப்பது இல்லை . இரண்டு செயல்பாடும் கலாச்சார செயல்பாடேயாகும் .அப்பரிசீலனைக்கு அடிப்படையாக ஆவது வாழ்க்கை . கலாச்சாரம் என்றால் என்னவென்றால் மூதாதையரின் அனுபவ சாரங்களுடன் நம் ஒவ்வொருவரின் அனுபவங்களின் சாரங்களும் அடுத்த தலைமுறைக்காக சேமிக்கப்படும் ஒரு அமைப்பு.

வாழ்க்கையே அதன் அடிப்படைகளை உருவாக்குகிறது என்று சொல்லும்போது கண்டிப்பாக லெளகீக வாழ்வு , அதன் பொருளியல் அடிப்படைகள் அங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை எவரும் மறுப்பது இல்லை . ஆனால் அது மட்டுமே என்பது மானுட மனத்தைன் இயக்கத்தை மிகவும் எளிமைப்படுத்தி விடும் . அத்தகைய எளிமைப்படுத்தல் செயல்முறைகளுக்கு அடிப்படையாக ஆகும்போதுதான் மாவோ போல்பாட் முதலியோர் உருவாக்கிய அழிவுகள் ஏற்படுகின்றன.வாழ்க்கைகூறுகள் ,விழுமியங்கள் ஆகியவற்றில் பொருளியல் அடிப்படைகளின் பங்கு அதிகம் .மொழியில் ,ஆழ்படிமங்களில் அதன் பங்கு மிக மறைமுகமானது , மிக நுட்பமானது.

எப்படி எல்லாவற்றையும் பொருளியல் அடிப்படையில் வலிந்து விளக்கி விடலாமோ அப்படியே எல்லாவற்றையும் வெறுமே உள்ளுணர்வின் வெளிப்பாடு அல்லது அறிய முடியாத அதீத சக்தி ஒன்றின் இச்சை என்றும் விளக்கி விடலாம் .இவ்விரு தரப்புகளும் எப்போதும் உள்ளவை .ஐரோப்பிய தத்துவ சிந்தனையில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கு பொருள்முதல் வாதம் கருத்து முதல்வாதம் என்ற இரு தரப்புகளும் ஒருபோதும் வலுவிழந்து போனதில்லை என்று அறிவார்கள் . [சமீபகால பின் நவீனத்துவ சிந்தனையின் விளைவாக இங்கு காலாவதியான / தோற்கடிக்கப்பட்ட தத்துவவாதிகளாக மார்க்ஸியர்களால் கூறப்பட்ட காண்ட் ஹெகல் போன்றோர் புது வடிவம் எடுத்துள்ளதை நாம் அறிவோம்] ஆகவே இன்றைய நவீன வாசகன் ஒற்றைப்படையாக ஒரு தரப்பை மூர்க்கமாக ஏற்க மாட்டான் என்றே எண்ணுகிறேன்.

வாழ்க்கைக் கூறுகள் , விழுமியங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு செய்யும் ஒருவர் கலாச்சார செயல்பாடு ஆற்றுவதாக நாம் எளிதாக நம்புகிறோம் . மொழியில் நுட்பமான ஒரு மாற்றத்தை உருவாக்குகின்றவனின் கலாச்சார பங்களிப்பு எளிதாக கவனத்துக்கு வருவது இல்லை . இசையில் ,ஓவியத்தில் உள்ள கலாச்சார பங்களிப்பு மதிப்பிட முடிவதாக இல்லை . மனத்தின் படிம அமைப்பில் ஒரு மாற்றத்தை கொண்டுவருபவன் மிக அடிப்படையான ஒரு நிலைமாற்றத்தை அத்தனை தளத்திலும் கொண்டுவர முடியலாம் . ஒரு புரட்சியாளன் செய்யும் கலாச்சாரப் பணிக்கும் ஒரு நுண்கலைவல்லுநன் செய்யும் கலாச்சார பணிக்கும் இடையே அளவில் வேறுபாடு ஏதும் இலை. பிரஞ்சுப்புரட்சி மூலம் உருவான மொத்த ஐரோப்பிய மறுமலர்ச்சியும் மொசார்த்தின் சிருஷ்டியே என்று கூறப்படுவதுண்டு . நாட்டார் இசை , செவ்வியல்இசை ,ஜிப்சி இசை என பலவற்றை இணைத்து ஐரோப்பிய இசை ஒன்றை அவர் அமைத்தது நவ ஐரோப்பா என்ற கருத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக அமைந்தது என்கிறார்கள் . சொல் புதிதில் பிரேம் எழுதிய ‘ ‘கனவில் பெய்த மழை பற்றிய இசைக்குறிப்புகள் ‘ ‘ என்ற முக்கியமான குறுநாவல் இதைப் பற்றிப் பேசும் படைப்பு . என்னிடம் வந்து சேர்வது ஒரு நுண்மையான அமைப்பு . அதில் எப்பகுதியை நான் மேம்படுத்தினாலும் , துல்லியப்படுத்தினாலும் அது என் கலாச்சாரப்பணியேயாகும் . கலாச்சாரப் பங்களிப்பை சமகால விளைவுகளை வைத்தோ , எதிர்வினைகளை வைத்தோ மூர்க்கமாக அளவிட முயல்வது ஆபத்து . அது கலைகளை ஒடுக்க முயலும் போக்குக்கே வழிவகுக்கும்.

எல்லா காலத்திலும் கலைகளில் கருத்துக்களை தேடும் தரப்பு இருந்துள்ளது .ஆரம்பத்தில் மதவாதிகள் .இப்போது அரசியல் சித்தாந்திகள் . கலை கருத்தியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் அது கருத்தியல் மட்டுமல்ல . உண்மையில் மிக பழைய ஒரு விஷயம் இது .சோவியத்கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தபோது பலதளங்களில் இது விவாதிக்கப்பட்டது .ஓர் உதாரணம் சொல்லலாம் .ஜோசஃப் ப்ராட்ஸ்கி ஸ்டாலினிஸ்டுக்களால் விசாரணை செய்யப்பட்ட போது எழுந்த பிரச்சினையே இதுதான் .கலாச்சாரத்துக்கு ,சமூக முன்னேற்றத்துக்கு அவரது பங்களிப்பு என்ன என்று மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது . ‘ ‘ நான் கவிதை எழுதுகிறேன்.. ‘ ‘ என்று அவர் பதில் சொன்னார் . [The trial of an young poet ] அவரை சோம்பேறி என்று கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பிய நீதிபதிகளின் மனநிலையையே கலாச்சார செயல்பாடுகளின் உடனடி பயன்பாடு பற்றி பேசும் போது நாமும் பலசமயம் கொள்கிறோம். அந்த வினாவுக்கு பதிலளிக்கும் முகமாகவே மொழியியலும் குறியியலும் பெரும் விவாதங்களை நிகழ்த்தின .அதற்கு பிறகும் அவற்றை சற்றும் கருத்தில் கொள்ளாமல் பலசமயம் இங்கு வ்ினாக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலான கலாச்சாரம் என்பது ஒரு இலட்சியப் புள்ளி .எதிர்காலத்தில் உள்ள ஒன்று. அது ஓர் இலட்சியவாத கருத்தாக இருந்தாலும் அது இல்லாமல் கலை இலக்கியம் சிந்தனை எதுவுமே சாத்தியமாவது இல்லை.

Series Navigation