கர்ணனின் மனைவி யார் ?

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

சுகுமாரன்


*

கடந்த நான்கு ஆண்டுகளாக நான் திருவனந்தபுரம் வாசி.பிறந்து நாற்பதாண்டு களுக்கு மேலாக வளர்ந்து வாழ்ந்த தமிழ்ச் சூழலிலிருந்து வயிற்றுப்பாடு காரணமாக விலகி வாழ்வதில் கணிசமான இழப்புகளை உணர்கிறேன். எழுத்தாளன் என்ற நிலையில் முதன்மையாக நான் உணரும் இழப்புகள் இரண்டு.தமிழ் இலக்கிய உலகுடனான சமகாலத் தொடர்புகள் அறுபட்டுப் போவது ஒன்று.வாசிக்கவோ சந்தேக நிவர்த்திக்காக உடனே புரட்டிப் பார்க்கவோ புத்தகங்களை வைத்துக் கொள்ள முடியாமற் போவது மற்றது.சம்பாதிக்கிற காசையெல்லாம் புத்தகங்களாக வாங்கி அடுக்கினால் போகிற திசைக்கெல்லாம் சட்டிபானையைத் தூக்கிப் போவது போல புத்தகங்களையும் சுமந்து போவது அசாத்தியம் என்கிற மனைவியின் எச்சரிக்கை பெரும்பாலும் நியாயம் என்று அனுபவம் கற்பித்திருக்கிறது.

ஒரு காவியப்பெயரை உறுதி செய்து கொள்வதற்கான மேற்கோள் நூல் கைவசம் இல்லாத குறையால் மனதில் வெகுகாலம் இழைத்து வைத்திருந்த ஒரு கவிதைக்காக அலைக்கழிந்திருக்கிறேன். ‘வாழ்நிலம் ‘ என்ற எனது தொகுப்பிலுள்ள ‘வென்றிலன் என்றபோதும்… ‘ கவிதையின் குரல் மகா பாரத பாத்திரமான கர்ணனுடையது. மரணத்துக்கு முன் தனது இருப்பின் நியாயத்தை, வாழ்க்கையின் துயரத்தை மனைவியிடம் ஒப்புதல் வாக்குமூலம் தருவதாக கவிதைத் தருணம்.கர்ணனுக்கு மனைவியும் மகனுமுண்டு.மகாபாரதம் வாசித்துத் தெரிந்து கொண்ட தகவல்.சரி, அந்தப் பெண்ணின் பெயர் என்ன ? நானறிந்த மகாபாரதக் கதைவடிவங்களும் ஆய்வுகளும் மெளனம் சாதித்தன.

கைவசமிருந்த தமிழ்ப் புத்தகங்களில் கர்ணனின் மனைவியைத் தேடினேன். கர்ண பத்தினி,கர்ணன் மனைவி என்ற அடைமொழிகளைத் தவிர அந்தப் பெண் சொந்தப் பெயரில் அடையாளப்படுத்தப்படவே இல்லை.எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வியாசர் படைத்த பெண்மணிகள் ‘ நூலில் தட்டுப்படக்கூடும்.ஆனால் புத்தகம் அகப்படவில்லை.திருவனந்தபுரத்திலுள்ள ஓரிரு தமிழறிஞகளிடமும் மதப் பிரமுகர்களையும் விசாரித்துப் பார்த்தேன்.அவர்களுக்கும் அவள் அநாமதேயள். கர்ணன் மனைவி என்று பொதுவாக எழுதினால் வியாசர் வந்து வழக்குத் தொடரப் போகிறாரா என்று மறுகேள்வி.காலத்தின் கண்ணுக்கெட்டாத அக்கரையிலிருந்து பெயரற்ற பெண்ணின் கேலிச்சிரிப்பு என்னை வந்து சீண்டிக்கொண்டிருந்தது.

மகா பாரத சந்தர்ப்பங்களை ஆதாரமாக்கி எழுதப்பட்ட படைப்புகள் மலையாள இலக்கியத்தில் அதிகம்.இலக்கிய விமரிசகரான குட்டி கிருஷ்ணமாராரின் ‘பாரத பர்யடனம் ‘ (பாரதப் பயணம்), முன்னோடி பத்திரிகையாளரும் சீர்திருத்தவாதியுமான சி.வி.குஞ்ஞுராமனின் ‘வியாச பாரதம் ‘ ஆகியவை நம்பகமான அறிமுகங்கள். பி.கே.பாலகிருஷ்ணனின் ‘இனி ஞான் உறங்ஙட்டே ‘ (இனி நான் உறங்குகிறேன்) எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘ரண்டாம் ஊழம் ‘ (இரண்டாவது வாய்ப்பு) வி.டி.நந்தகுமாரின் ‘என்டெ கர்ணன் ‘ இந்திராவின் ‘ஹஸ்தினாபுரத்தின்டெ வது ‘ (அஸ்தினாபுரத்தின் மணமகள்)ஆகியவை மகா பாரத பாத்திரங்களை சமகால கண்ணோட்டத்தில் மறுவார்ப்புச் செய்து எழுதப்பட்ட நாவல்கள். இவை தவிர மலையாளிகளின் இல்லங்களில் பாராயணம் செய்யப்படுகிற எழுத்தச்சனின் ‘அத்யாத்ம மஹாபாரதம் ‘.உபரியாக மராத்தி,ஹிந்தி,வங்காளி மொழிகளில் புகழ்பெற்ற பாரதப் புனைகதைகளின் மலையாள மொழியாக்கங்கள்.இத்தனை நூல்களும் கர்ணனின் மனைவியை அறிந்தும் அறிவிக்காமலிருந்தன.

புத்தக சகாயம் பயனில்லை. விவரமறிந்தவர்களைத் தொந்தரவு செய்ய தீர்மானித்தேன். ஒரு பெயருக்காக கவிதை எழுதப் படாமல் போகிறது என்பதைவிட துக்கமாக இருந்தது மாபெரும் காவியப்பரப்பில் ஒரு பெண்ணை அகதியாக அலையவிட்ட செயல். பெயரைத் தெரிந்து கொண்டு நேசத்துடன் அழைத்தால் அவளுடைய இருப்பு முழுமையாகிவிடும் என்று மனதில் பதைப்பு.

மலையாளமொழி விற்பன்னரும் ஆட்டக்கதைகளை ஆய்வு செய்து பதிப்பித்தவருமான பன்மன ராமச்சந்திரன் நாயரைத் தொடர்பு கொண்டேன். அந்த பழுத்த அறிஞரின் கவனத்திலும் கர்ணனின் மனைவிக்குப் பெயரில்லை.நண்பரும் மலையாளப் பேராசிரியரும் கவிஞருமான தேசமங்கலம் ராமகிருஷ்ணனிடம் என்னுடைய பதைப்புக்குப் பரிகாரம் இருக்கக் கூடுமென்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. ஆனால் ஊகமாக அவர் தெரிவித்த தகவல் தேடலைத் தொடரத் தூண்டியது. கர்ணனை மையப் பாத்திரமாகக்கொண்டு எழுதப்பட்ட மராத்தி நாவல் ஒன்றை வாசித்திருப்பதாகவும் கர்ணனின் மனைவி அதில் முக்கிய பாத்திரமாக இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.அவருக்கும் அந்தப் பெண்ணின் பெயர் நினைவில்லை.

தேசமங்கலம் குறிப்பிட்ட நாவல் மராத்தி எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய ‘மிருத்யுஞ்சயா ‘. டாக்டர்.பி.கே.சந்திரன், டாக்டர்.டி.ஆர்.ஜெயஸ்ரீ ஆகியோர் ‘கர்ணன் ‘ என்ற பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு ஞானபீடத்தின் மூர்த்தி தேவி விருது பெற்ற மூலநூல் பத்துக்கு மேலும் பிறமொழி ஆக்கங்கள் சுமார் ஐந்தும் பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. வி.எஸ்.காண்டேகரின் ‘யயாதி ‘க்குப் பிறகு பரவலான வாசக கவனத்துக்குள்ளான மகாபாரதப் படைப்பு இது. யயாதி நாவலின் அதே கட்டமைப்பில்தான் கர்ணனும் புனையப்பட்டிருக்கிறது.கர்ணன் உட்பட ஆறு பாத்திரங்கள் தன்வரலாற்றை சொல்லும் போக்கில் நாவல் உருவாகியிருக்கிறது.

சாவந்தின் படைப்பு என் தேடலுக்கு உதவியாக முன்வைத்த தகவல்கள் பொருட் படுத்தத் தகுந்தவை.கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவன்.அவனது வளர்ப்புப் பெற்றோரான அதிரதனும் ராதையும் அவனுக்கு சூட்டிய பெயர்- வசுக்ஷேனன். இதையெல்லாம் உள் வாங்கிய பின்பு சாவந்தின் நாவல் வெளிப் படுத்திய தகவல் என்னைத் துள்ளியெழச் செய்தது.கர்ணனுக்கு மனைவியல்ல; மனைவியருண்டு.இருவர்.வ்ருஷாலி,சுப்ரியை.ஒன்றல்ல மூன்று புத்திரர்கள்-வ்ருஷாலி யின் மைந்தர்களான வ்ருஷசேனன்,வ்ருஷகேதன்.சுப்ரியையின் புதல்வன் சுசேனன்.

இந்த இரு பெண்களில் நான் தேடியலைந்தது யாரை ? சுப்ரியை நாவலாசிரியரின் கற்பனையில் பிறந்தவள் என்று நம்புவதே உவப்பாக இருக்கிறது. வடமொழிக் கவிஞனான பாஸனின் கவிதை நாடகம் ‘கர்ணபாரம் ‘ ஒரு மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. என்னுடைய கவிதையில் வ்ருஷாலிக்குத்தான் இடம். மானுடப் பிறவியின் தர்மசங்கடத்தை வெளிப்படுத்தும் பெரும் கதையில்/ கவிதையில் பொருந்தக்கூடிய பெயர் அதுமட்டுமே என்று மனம் பிடிவாதமாக நம்புவதுதான் காரணம். கவிதையில் ‘வ்ருஷாலி ‘ என்று விளித்துத்தான் கர்ணன் தனது வாழ்வின் கடைசி முறையீட்டைச் செய்கிறான்.

மகா பாரதத்தின் இலக்கிய மேன்மையாகச் சொல்லப்படும் வாசகம் ஒன்று உண்டு. ‘இதிலுள்ளது வேறு பல இடங்களிலும் இருக்கலாம்.ஆனால் இதில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது ‘. சூத புத்திரனாக காவியப் பரப்பில் உதாசீனம் செய்யப் பட்டவனின் மனைவி பெயரற்றவளாக விடப்பட்டது ஏன் ? என்ற கேள்விக்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சுகுமாரன் 16 07 2004

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்