கம்பரும் ஷெல்லியும் (அல்லது) மருத்துமலையும் தோட்டத்துச் செடியும்

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

முனைவர் மு. பழனியப்பன்


இலக்கியம் உலக மக்களை ஒன்றிணைக்க வல்லது. அது மொழி என்ற எல்லையைக் கடந்து மனித உள்ளங்களை இணைக்க வல்லது. வாழும் மனிதர்களுக்கு வாழ்ந்த மனிதர்கள் சொல்லிச் சென்ற பாடங்கள் இலக்கியங்கள். இந்தப் பாடங்கள் உலக மனிதர்களுக்குப் பொதுவானவை. அவ்வகையில் வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி போன்ற தமிழ்க் கவிஞர்களின் எண்ணங்கள் உலக மக்களை நோக்கியவை. அவை தமிழ் என்ற மொழி எல்லையைத் தாண்டி உலக மக்களை அடைகின்றபோது அவை பொதுமை பெறுகின்றன. புதுமை பெறுகின்றன. உலக ஒருமை பெறுகின்றன. அது போல ஒவ்வொரு மொழி சார்ந்த படைப்பாளர்களும் உலகு சார்ந்த எண்ணம் உடையவர்களாக உள்ளனர். மில்டன், ஷெல்லி என்று ஆங்கில மொழி சார்ந்த இலக்கியப் படைப்பாளர்களையும் இவ்வழியில் காண இயலும்.

ஷெல்லி என்ற ஆங்கில மொழிக் கவிஞர் இன்பியல் துறைசார்ந்த படைப்புகள் படைத்ததில் முக்கிய இடம் வகிப்பவர். இவர் இங்கிலாந்தில் நடைபெற்ற அரசியல் அமைப்பு முறைகளைத் தன் படைப்புகளி¢ல் கேள்விக்கு உள்ளாக்கியவர். இதன் காரணமாகவே அந்த அரசியலுக்கு உட்பட்டு இங்கிலாந்தில் வாழமுடியாதவராகி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டே ஆங்கில இலக்கியங்களைச் செம்மையாகப் படைத்தார். வறுமை வந்துற்றபோதும் ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத அவரின் குணம் இறுதிவரை அவரை ஒரு புரட்சியாளராகவே வாழ வைத்தது. இவர் பல நாடகங்களையும், பல கவிதைகளையும் பதினெட்டாம் நூற்றாண்டு அளவி¢ல் படைத்தார். இதன் வாயிலாக ஆங்கில இலக்கியத்தின் முக்கியப் புள்ளியாக விளங்கினார்.

இவரின் பல எண்ணங்கள் தமிழ்க் கவிஞர்களின் எண்ணங்களோடு ஒத்துப்போகின்றன. இவர் எழுதிய இளவரசி மாப் என்ற படைப்பில் இடம்பெறும் ‘’ இறப்பு என்பது எவ்வளவு அழகானது. இறப்பும் அதன் சகோதரனும் ஆன தூக்கமும்’’ ( How wonderful death. Death and his brother sleep( QUEEN MAB 1-2) ) என்ற வரிகள் திருவள்ளுவரின் ‘’உறங்குவது போலும் சாக்காடு’’ என்ற குறளடியோடு (339) ஒன்றிணைந்து போகின்றது.
‘’நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் ’’ என்ற பாரதியின் பாடலடி அப்படியே இவரின் ‘’ நிலமும், கடலும், காற்றும் எங்களின் இனிமையான உடன்பிறப்புகள் ’’ ( Earth Occan Air beloved brotherhood (ALASTOR OR THE SPRIT OF SOLITUDE (15))) என்பதோடு அப்படியே ஒத்துப்போகின்றது.

இது போலவே கம்பரின் கவிதை அனுபவங்களோடு இவரின் பல எண்ணங்கள் ஒத்துப்போகின்றன. ஷெல்லி என்ற ஆங்கில இலக்கியக் கவிஞர் அவரின் மொழி எல்லையைக் கடந்து நிற்கும் போது உலக இலக்கியத்தின் ஓர் உறுப்பினராக அவர் விளங்குகிறார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும் கவிஞர்கள் வாழ்ந்த காலங்கள் முன் பின்னாக விளங்கினாலும்¢ அவர்களின் படைப்பு மனங்களில் உறையும் முன்னேற்ற எண்ணங்கள் ஒருமைப் பட்டவை என்பதும் இதன் வாயிலாகத் தெரிய வருகிறது.

கம்பர், ஷெல்லி என்ற கவிஞருக்கு ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் முந்தையவர். இருப்பினும் இருவரிடமும் ஒற்றுமைப் பட்ட பல எண்ணங்கள் இருக்கின்றன. கம்பர் ஓர் ஒப்பற்ற நெடுங்காப்பியத்தை எழுதியவர். ஏறக்குறைய ஷெல்லி அதற்கு ஈடாக எண்¢ணிக்கை அளவில் பல்வேறு தலைப்பிலான கவிதைகளைப் படைத்தவர். இருவருக்கும் இடைய உள்ள ஆழ்ந்திருக்கும் கவிஉளம் ஒன்றாய் நன்றாய் இருப்பது புதுமையாய் இருக்கிறது. அதில் ஒருசில பகுதிகளை இந்தக் கட்டுரை விவரிக்கின்றன.

வாழ்க்கை முறையில் இருகவிஞர்களும் ஓர் ஒற்றுமை உண்டு. அரசியல் அதிகாரத்திற்கு இருவரும் அடிபணிந்தவர்கள் இல்லை. ஷெல்லி இங்கிலாந்தின் ஆட்சி அதிகாரத்திற்கு அடங்கவில்லை. கம்பர் சோழப் பேரரசின் ஆட்சி¢ அதிகாரத்திற்கு இறங்கி வரவில்லை. கம்பர் தன் மகனான அம்பிகாபதியின் இறப்பில் சோகத்தைக் கண்டவர். ஷெல்லி தன் முதல் மனைவி வாயிலாகப் பிறந்த மகனுடன் வாழ இயலாத இயல்பிற்குத் தள்ளப்பட்டார். இந்த அளவில் இந்த இருகவிஞர்களுக்கும் வாழ்க்கைச் சூழல் ஒத்துப் போயுள்ளது. இதன் வெளிப்பாடு இருவரின் கவிதைகளிலும் காணப்படுகின்றன.

கம்பரின் காப்பியம் திருடப்பட்ட ஒன்றால் ஏற்பட்ட விளைவு, துயரம் பற்றியது. அது போல ஷெல்லியின் ’’புரோமித்தஸ் அன்பவுண்டு ’’ ( PROMETEUS UNBOUND) என்ற படைப்பில் புரோமித்தஸ் என்பவன் தீயைத் திருடுகிறான். அதன்மூலம் பல இன்னல்களை அனுபவிக்கிறான். இந்த இரண்டும் கருப்பொருள் அளவில் ஏறக்குறைய ஒரே அமைப்பின.

இவை தவிர இவ்விருவரின் கவிதைகள் பல இடங்களில் அப்படியே அச்சுக்கு அச்சசாகப் பொருந்தி வருகின்றன. கம்பர் மருத்துமலையை அனுமன் கொண்டு வந்த சூழலில் அந்த மலையில் உள்ள மருந்துச் செடி மூலமாக பலரும் உயிர் பெற்று எழுந்ததைப் பின்வருமாறு பாடுகிறார்.

காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்
ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினர்
கூற்றினை வென்று தம் உருவும் கூடினர் (மருத்துமலைப் படலம் 99)

கழன்றன நெடுங்கணை கரந்த புண் கடுத்து
அழன்றில குளிர்ந்தன அங்கம் செங்கண்கள்
சுழன்றன உலகு எல்லாம் தொழுவ தொங்கலின்
குழன்றன பூங்குஞ்சியான் உணர்வு கூடினான் (மருத்துமலைப் படலம் 102)

என்ற இந்தப் பாடல் அப்படியே பின்வரும் ஷெல்லியின் ‘’நுண்ணிய உணர்வு மிக்க ஒரு செடி’’ ( THE SENSITIVE PLANT) என்ற பாடலின் அடிகளோடு ஒத்துச் செல்லுகிறது.
‘’ஒரு நுண்ணிய உணர்வு மிக்க ஒரு செடி தோட்டத்தில் வளர்ந்தது
அதனை இளங்காற்று தன் வெள்ளிய பனித்துளிகளால் வளர்த்தது
அந்த நுண்ணியச் செடி தன் பரந்த விசிறி போன்ற இலைகளை
வெளிச்சத்தை நோக்கி விரித்தது
இரவின் முத்தங்கள் அதனைத் தொட்டபோது அந்த இலைகள் மூடிக்கொண்டன’‘1
( THE SENSITIVE PLANT first para )
என்று தொடங்கும் இந்தப் பாடல்

‘’அன்பிற்காகவும், அழகிற்காகவும் பெருமகி¢ழ்ச்சிக்காகவும் வளரும் இந்தச் செடியால்
இறப்பு இல்லை, மாற்றம் இல்லை,
அது எங்களின் உடலுறுப்புகளை நீட்சி அடையச் செய்கின்றது
அது எங்களின் வெளிச்சமற்ற பகுதிகளை வெளிச்சம் பரவச் செய்தது’’2
( THE SENSITIVE PLANT last para )
என்று நிறைவடைகிறது. மூன்று பகுதிளாக நீளும் ஷெல்லியின் இந்தப் பாடல் தரும் பொருள், உணர்ச்சி ஆகியன கம்பரின் மேற்காண் பாடலில் புதைந்து கிடப்பதை உணரமுடியும்.

ஷெல்லியின் மருந்துச் செடி தோட்டத்தில் முளைத்தது. கம்பரின் மருந்துச்செடி தூரத்துக்கு எட்டாத நீல மலைக்கு அப்பால் முளைத்தது. ஆனால் இரண்டும் இறப்பை நீக்கின. கூற்றத்தை ஓட்டின. புண்களை ஆற்றின. உடைந்த உறுப்புகளை வளர்த்தன. மகிழ்ச்சியைப் பெருக்கின. வலிமையைப் பெருக்கின. அழகைக் கூட்டின.

தோட்டமாய் இருந்தால் என்ன? மருத்துமலையாய் இருந்தால் என்ன? அது இங்கிலாந்தில் வளர்ந்தால் என்ன? இமயமலையின் அடிவாரத்தில் வளர்ந்தால் என்ன? அது தரும் கனி உலக மக்களை உய்விக்க வேண்டும். மகிழ்விக்க வேண்டும். அந்த வகையில் கம்பரின் எண்ணமும் ஷெல்லியின் உள்ளமும் இணைந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகின்றது. இதன்வழியாய் உலகத்து மக்களின் துயர் துடைக்க ஓர் எண்ணம் உதயமாகியுள்ளது. இறப்பைப் போக்கி மகிழ்வைத் தரும் செடியை இரு கவிஞர்களும் கற்பனை செய்துள்ளனர். அந்தச் செடி கற்பனை மட்டுமல்ல, கனவு மட்டுமல்ல மெய்யாக வேண்டும், நனவாக வேண்டும் என்பது இருகவிஞர்களின் எண்ணம்

இவ்வகையில் ஷெல்லியின் தோட்டமும் கம்பரின் மருந்துமலையும் இன்னமும் இருந்து மக்களை இலக்கியத்தால் ஒன்றிணைத்து உய்வித்து வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி. அவ்வகையில் நாமும் நம் தோட்டத்தில் மருந்து¢ச செடியை நடுவோம், காப்போம், பயன் பெறுவோம். இவ்விரு கவிஞர்களுக்கும் இது போன்று பல ஒப்புமைகள் இருந்தாலும் இங்கு பக்க எல்லை கருதி மருந்திற்கு ஒன்று மட்டும் காட்டப்பட்டது. இன்னமும் ஒற்றுமை காண்போம். உயர்வோம்.
பயன் பட்ட நூல்கள்
1. கம்பராமாயணம் (மூலம்), கம்பன் கழகம், சென்னை, மு.ப 1976.
2. THOMAS HUTCHINSON( E)., THE COMPLETE POETICAL WORKS OF PERCY BYSSHE SHELLY, LONDON OXFORD UNIVERSITY PRESS, Reprinted in 1960

1 A SENSITIVE Plant in a garden grew
And the young winds fed it with silver dew
And it opened its fan like leaves to the light
And closed them beneath the kisses of night

2 For Love and Beauty and Delight
There is no Death nor change their might
Exceeds our organs which endure
No light being themselves obscure
——————————————-

தமிழ் விரிவுரையாளர்,
மா மன்னர் கல்லூரி(த),
புதுக்கோட்டை

Series Navigation