கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு!

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

பசுபதி


நெய்மணம் வீசிடும் பொங்கலில் கல்லின்
. . நெருடல் சுவையைக் கெடுப்பதுபோல்
தைமகள் வீசும் எழில்தனில் முள்ளெனத்
. . தைக்கும் குறையொன்று கண்டதுண்டோ ? (1)

பொங்கலைத் தந்த தைத் திங்கள் சிரித்ததும்
. . பூவையர் வாழ்வில் வழிபிறக்கும் !
மங்கையின் தந்தைதம் வாழ்வில் குவித்திட்ட
. . வங்கிப் பணத்தில் குழிபிறக்கும் ! (2)

கைமாறும் சீதனம் கன்னிகைத் தைக்கொரு
. . கண்ணூ றெனவே தெரியலையோ ?
தைமாதக் கல்யாணம் ஒன்றில் கரும்பதன்
. . சக்கை நடப்பதைப் பார்த்ததுண்டோ ? (3)

பெண்வாழ்வு பொங்கிடும் தைமாதம்; பெண்களைப்
. . பெற்றவர் வீடோ அடைமானம் !
புண்ணிது தைமகள் கோல எழில்தனில் ;
. . பொங்க லினிக்குமோ பெற்றவர்க்கு ? (4)

பூவை முகர்ந்திடப் பூக்கொடி வெட்டியே
. . போடும் கொடுமையைப் பார்த்ததுண்டோ ?
பாவைதந் தைவர தட்சிணை நல்கும்
. . பணப்பசு என்றே கறப்பதுவோ ? (5)

வீட்டு மருமகள் தீபமென்பார்; வெள்ளி
. . விளக்குகள் சீதனம் கேட்டிடுவார்;
பாட்டுகள் பாடப்பெண் தேடிடுவார்; பெற்றோர்
. . படுகின்ற பாட்டை மறந்திடுவார் ! (6)

கற்றோர் பரிசம் கொடுப்பது நீக்கிக்
. . கரும்பென வாழ்ந்திடக் கும்மியடி !
பெற்றோர் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
. . பேசிக் களிப்போடு கும்மியடி ! (7)

****

Series Navigation