கனவுக் கொட்டகை

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

யாழினி அத்தன்


ஆதவன் கண்ணயர்வில்
படரத் துடிக்கும்
மாலைப் பொழுது.

பறவைகளின் கீச்சுக்கள்
ஓய்ந்தப் பின்
சிறகைவிரிக்கும் இரவுகள்.

கனவுக் கொட்டகையின்
மெல்ல மேலே
உயரும் தங்கத்திரை.

திரையில் தோன்றும்
நாயகனாக நான்
காசேதும் வாங்காமல்.

சொந்த நடிப்பை
மனதார ரசிப்பேன்
காசேதும் கொடுக்காமல்.

நாட்டியம் ஆடும்
நடன மங்கையாக
கண்மூடிய கருவிழிகள்.

பாட்டுப் பாடும்
குயில் பாடகியாக
இறுக்கமான உதடுகள்.

பகல்கள் சேர்த்த
நிராசைகள் அரங்கேறும்
இன்பமாய் இரவினிலே.

உதறிய காதலியோடு
காவியம் பாடலாம்
ஒன்றாகக் கைகோர்த்து.

சண்டையிட்ட எதிரியோடு
இலக்கியம் பேசலாம்
சாவகாசமாக மரத்தடியில்.

பிறக்காத குழந்தையோடு
மணல்வீடு கட்டி
இடிக்கலாம் கடற்கரையில்.

சுருள்சுருளான தொடரினூடே
இடைவேளை போடவரும்
காலைக் கதிரவன்.

தூக்கம் கலைந்தபின்
ஏங்கித் தவிப்பேன்
நிசமில்லாத நிழலுக்காக.

இல்லையேல்,

நிராசை மூட்டையை
நெஞ்சினிலே தூக்கிச்
சுமக்க வலுவேது?


p.d.ramesh@gmail.com

Series Navigation

யாழினி அத்தன்

யாழினி அத்தன்